இந்திய நூலகத் தந்தை எஸ்.ஆர். ரங்கநாதன்.
Article published in Dinamani all editions on 12.8.2011
First Published : 12 Aug 2011 02:04:29 AM IST
"இந்திய நூலகத் தந்தை' எஸ்.ஆர். ரங்கநாதன்
By சி. சரவணன்,
பொது நூலகத்துறை அலுவலர் சங்க மாநிலப் பொதுச் செயலர்
சீர்காழி அருகே உள்ள வேதாந்தபுரம் கிராமத்தில் பிறந்த டாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதன் நூலகத் துறைக்கு ஆற்றியுள்ள சிறப்புமிக்க பங்களிப்புக்காக அவருடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 12-ம் நாளை நூலகர் தினமாக மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.
1892-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் நாள் ராமாமிர்த்த அய்யருக்கும் சீதாலட்சுமி அம்மையாருக்கும் புதல்வராகப் பிறந்த ரங்கநாதன், 1921-ல் கணிதத் துறை உதவிப் பேராசிரியராகச் சென்னை மாநிலக் கல்லூரியில் தமது பணியைத் தொடங்கினார்.
1924-ல் சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் நூலகராக நியமிக்கப்பட்டார். இவரே, சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் நூலகர் ஆவார். நூலகர் பணி இவருக்கு விருப்பமில்லாத பணியாக இருந்தபோதிலும், நூலகத் துறைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இங்கிலாந்து சென்று நூலக அறிவியலில் பயிற்சி பெற்றார்.
நூல்களைப் பொருள் வாரியாகப் பிரித்து அடுக்குவதற்காகக் "கோலன் பகுப்பு முறை' என்னும் பகுப்பு முறையைக் கண்டுபிடித்தார். ரங்கநாதனால் ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்ட கோலன் பகுப்பு முறை, நூலகத் துறையைச் சார்ந்த பல மேனாட்டு அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டது. அதுவரை கையாளப்பட்டுவந்த பகுப்பு முறையைக் காட்டிலும் கோலன் பகுப்பு முறை மாறுபட்டதாகவும் தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருந்தது.
கோலன் பகுப்பு முறை பல்வேறு வகைப்பட்ட பொருள்களில் எழுதப்பட்ட நூல்களைப் பிரித்து, நூலகத்தில் அந்தந்தப் பொருளுக்குரிய நூல்களை அந்தந்த இடத்தில் வைக்க வசதியாக இருந்தது. இப் பகுப்பு முறை நூலகத்துக்கு வரும் வாசகர்கள் தாம் விரும்பும் பொருள் பற்றிய நூல்களை எளிதில் எடுத்துப் படிக்கவும், படித்து முடித்த பின் அந்தந்த நூலுக்குரிய இடத்தில் நூலகர் அடுக்கி வைக்கவும், நூற்றொகை தயாரிக்கவும் பெரிதும் உதவியாக இருந்தது. ÷எஸ்.ஆர். ரங்கநாதனின் கண்டுபிடிப்பான கோலன் பகுப்பு முறையில் நூலகப் பொருள் பட்டி தயாரிப்பதும், அதனை நூலகர்களும், வாசகர்களும் பயன்படுத்துவதும் எளிதாகும். தமிழக அரசின் பொது நூலகத் துறை நூலகங்களில் இப்பகுப்பு முறையில்தான் நூல்கள் பொருள் வாரியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
÷இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் உள்ள நூலகங்கள் இக் கோலன் பகுப்பு முறையைத்தான் இன்றும் பயன்படுத்துகின்றன.÷நூலகப் பொருள் பட்டி சீரிய முறையில் அமைய சங்கிலி சுட்டு முறை நூலகத் துறைக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
÷கோலன் பகுப்பு முறை, சங்கிலி சுட்டுமுறை பற்றி பல நூல்களை எழுதியதோடு, எண்ணிலடங்கா ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். 1939-ல் நூலக மாதிரிச் சட்டத்தை இயற்றினார். இவருடைய முயற்சியால்தான் 1948-ல் சென்னை பொது நூலகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி உள்ளாட்சி நிறுவனங்கள் வசூல் செய்யும் சொத்து வரியில் 10 சதவீதம் நூலகத் துறைக்கு வழங்கப்படுகிறது.
÷பின்பு, பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நூலகராகவும், தில்லி நூலகத் துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.
ரஷியா, கிழக்கு ஜெர்மனி, பிரிட்டன் என பல நாடுகளுக்குச் சென்று நூலகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.
÷புதுதில்லியில் உள்ள நூலகத் தரக் குழுவின் தலைவராகவும் இருந்தார். நூலக அறிவியல் தொடர்பான இதழின் பதிப்பாசிரியராகவும், டி.ஆர்.டி.சி. நூலக ஆராய்ச்சியின் சிறப்பாசிரியராகவும் பணிபுரிந்தார்.
பல்வேறு நாடுகளில் நூலகத் தலைவராகவும் கெüரவத் தலைவராகவும் பணியாற்றினார். 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.÷நூலகத் துறைக்கு ஆற்றியுள்ள அளப்பரிய பங்களிப்புக்காக எஸ்.ஆர். ரங்கநாதன் "இந்திய நூலகத் தந்தை' என்று போற்றப்படுகிறார். ஆனால், தமிழ்நாட்டில் பிறந்து, உலக அளவில் மேதையாகப் போற்றப்பட்ட எஸ்.ஆர். ரங்கநாதனுக்குத் தமிழ்நாட்டில் உரிய கெüரவம் கிடைக்காமல் போனதுதான் கசப்பான உண்மை.
÷ஆண்டுதோறும் நவம்பர் 14 முதல் 20 வரை கொண்டாடப்படும் நூலக வார விழாக்களில் சிறப்பாகப் பணிபுரியும் நூலகர்களுக்கு வழங்கப்படும் "நல்நூலகர் விருதை' எஸ்.ஆர். ரங்கநாதன் பெயரில் வழங்க வேண்டும் என்ற நூலகர்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்றுவரை ஏற்கப்படவில்லை. இனியாவது நூலகர்களுக்கு வழங்கப்படும் விருதை "எஸ்.ஆர். ரங்கநாதன் நல்நூலகர் விருது' என்று வழங்க வேண்டும்.
÷தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் சென்னை கோட்டூர்புரத்தில் கட்டப்பட உள்ளது என்ற அறிவிப்பு வெளியானதும், அந்நூலகத்துக்கு இந்திய நூலகத் தந்தை எஸ்.ஆர். ரங்கநாதனின் பெயர்தான் வைக்கப்படும் என்று நூலகத் துறையில் பணிபுரியும் ஒவ்வொருவரும் எதிர்பார்த்தனர். ஆனால், எஸ்.ஆர். ரங்கநாதன் பெயர் வைக்க வேண்டும் என்று அன்றைய ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை சொல்ல சரியான ஆள் அன்று இல்லாமல் போனதுதான் வருத்தமான செய்தி.
÷கடந்த ஆட்சியாளர்கள் கொண்டுவந்த சட்டங்களும், திட்டங்களும் மறுபரிசீலனை செய்யப்பட்டு வரும் இவ்வேளையில், சென்னை கோட்டூர்புரம் நூலகத்துக்கு இந்திய நூலகத் தந்தை எஸ்.ஆர். ரங்கநாதனின் பெயர் வைக்கப்படுமா என்பதுதான் ஆயிரக்கணக்கான நூலகர்களின் எதிர்பார்ப்பு. நூலகர் தினம் கொண்டாடும் இந்நாளிலாவது நூலகர்களின் விருப்பம் நிறைவேறும் என்று நம்புவோம்!
(இன்று நூலகர் தினம்)
-------------------------------------------------------------------------------
கருத்து மிகவும் அருமை, மிகவும் உதவியாக இருந்தது. நா. வசந்தகுமார். லைப்ரரியன்/நூலகர் யாதவர் கல்லூரி மதுரை
By வசந்தகுமார்.நா
8/12/2011 1:30:00 PM
Comments