மகாகவி பாரதியாருக்கு உரிய கௌரவம் கிடைக்காமல் போனது ஏன்?
(அன்பு பாலம் - ஜனவரி 2011 பொங்கல் சிறப்பிதழில் வெளிவந்த எனது கட்டுரை)
மகாகவி பாரதியாரைப் போன்ற மிகப்பெரிய கவிஞரும் சமூக சீர்திருத்தவாதியும், சுதந்திரப் போராட்ட வீரரும் பாரதத்தில் பிறந்ததில்லை. இலக்கியம், சுதந்திரப் போராட்டம், தீண்டாமை ஒழிப்பு, சமூக சீர்திருத்தம் ஆகியவற்றிற்காக அவர் ஆற்றியுள்ள மிகப்பெரிய பங்களிப்பை எவரும் மறந்துவிட முடியாது.
அப்படி இருந்தும் அவருக்குக் கிடைக்க வேண்டிய பேரும் புகழும் கிடைத்ததா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவர் ஒரு பார்ப்பனர் குடும்பத்தில் பிறந்தவர் என்பதாலும் அவருடைய படைப்புகள் ஆங்கிலத்திலும், பிறமொழிகளிலும் மொழி பெயர்க்கப்படாததாலும் தான் அவருக்குக் கிடைக்க வேண்டிய கௌரவம் கிடைக்காமல் போய்விட்டது.
வங்க மொழியில் சிறந்த கவிஞராகக் கருதப்படும் இரவீந்திரநாத் தாகூரின் படைப்புகளுக்காக அவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்தியர் ஒருவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது மகிழ்ச்சியான ஒன்றுதான். அதே நேரத்தில் பாரதியாரின் படைப்புகள் தாகூரின் படைப்புகளுக்கு எவ்வகையிலும் தாழ்வானவையல்ல.
தாகூரின் படைப்புகள் எல்லாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் பிரபலப் படுத்தப்பட்டது. அதனால்தான் தாகூருக்கு நோபல் பரிசு கிடைக்கப்பெற்றது.
ஆனால், பாரதியாரின் படைப்புகள் அக்காலத்தில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படவில்லை. ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் உள்பட பல மொழிகளை நன்கு அறிந்திருந்த பாரதியார் தம்முடைய எல்லாப் படைப்புகளையும் தமிழிலேயே எழுதியுள்ளார். அத்துடன் வெளிவராமல் போன படைப்புகளும் உண்டு.
இந்திய விடுதலைக்காகத் தம்மையும் தம் குடும்பத்தையும் அர்பணித்துக் கொண்டவர். வ.உ.சிதம்பரம் பிள்ளையுடன் இணைந்து விடுதலைக்காகப் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு பலமுறை சிறை சென்றவர். தம்முடைய கவிதைகள் மூலமும், பத்திரிகைகள் மூலமும் நாட்டு மக்களிடையே சுதந்திரப் போராட்டத்துக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இவரது கவிதைகளுக்கு இணையாகத் தமிழில் கவிதைகள் இன்றுவரை எவரும் எழுதியதில்லை. கதை, கவிதை, கட்டுரை எனத் தமிழ் இலக்கியத்தின் அத்தனைக் கூறுகளையும் படைத்துள்ளார். வசனக் கவிதைகளை முதன் முதலாக எழுதியவர் பாரதியார்தான். இவர் தொடங்கி வைத்த வசன கவிதைகள் தாம் இன்று புதுக்கவிதைகளாக எழுதப்படுகின்றன.
பாரதியாரின் படைப்புகள் அவரது காலத்தில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படாததுதான் மிகவும் துரதிஷ்ட வசமானது. அப்படி அவரது படைப்புகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தால் அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
பாரதியார் தம்முடைய படைப்புகள் மூலம் புரட்சிக் கருத்துக்களை மக்கள் மனத்தில் விதைத்தார். இந்திய விடுதலைக்கு மட்டுமல்லாது, பெண் விடுதலைக்காகவும் பாடுபட்டவர். கணவனுடன் மனைவி வெளியில் செல்லக்கூடாது என்றும், கணவனுக்கு நிகராக மனைவி உட்காரக் கூடாது என்றும் இருந்த காலத்தில், தம் மனைவியைத் தம்முடன் வெளியில் அழைத்துச் சென்றார். அதுமட்டுமல்லாது, மனைவியை உட்கார வைத்துப் புகைப்படம் எடுத்த முதல் பிராமணர் பாரதியார்தான். இப்படிப் பெண்களும் ஆண்களுக்கு நிகராக மதிக்கப்பட வேண்டும் என்று பாடுபட்டவர். அத்துடன் விதவைகள் மறுமணத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்.
பார்ப்பனர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த அந்தக்காலம், பார்ப்பனர்களுக்குச் சமமாக மற்ற இனத்தவரும் மதிக்கப்பட வேண்டும் என்று போராடினார். அதனால் தம் உற்றார் உறவினர்களிடத்திலும் தம் இனத்தவர்களிடத்திலும் விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டார்.
இவரது குடும்பத்தை இவரது உற்றார் உறவினர் மற்றும் இவரது இனத்தவர் ஒதுக்கி வைத்தபோதிலும், தீண்டாமை ஒழிப்புக்காகத் தான் எடுத்த முடிவிலிருந்து பின் வாங்காதவர்.
ஒரு நாய் தன் குட்டிக்குப் பால் கொடுக்கிறதென்றால், அது ஒரு சாதாரண செய்தி. ஆனால், ஒரு நாய் ஒரு பூனைக் குட்டிக்குப் பால் கொடுக்கிறது என்றால் அது ஒரு சிறப்புச் செய்தி ஆகிறது அல்லவா? அதுபோலத்தான், பெண்ணாகப் பிறந்தவர் பெண் விடுதலைக்காகப் போராடுகிறார் என்பதும், தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்த ஒருவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடுகிறார் என்பதும் சாதாரண செய்தி. அது அவரது கடமை.
பெண் உரிமைக்காகப் போராடும் ஆண்களும், தீண்டாமை ஒழிப்புக்காகப் போராடும் தாழ்த்தப்பட்டோர் அல்லாதவரும்தான் மிகப்பெரிய தியாகிகள், சமூகச் சீர்த்திருத்தவாதிகள். அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். பார்ப்பன இனத்தில் பிறந்த பாரதியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, தீண்டாமைக்கு எதிராகப் போராடினார் என்றால் அது எவ்வளவு பெரிய செய்தி. அதனை எவ்வாறெல்லாம் போற்றப்பட வேண்டும்.
இப்படி பெண் உரிமைக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் தன் வாழ்நாளையே தியாகம் செய்து கொண்ட ஒரு பிராமணனை மறந்துவிட்டு, அவருக்கு உரிய மரியாதை செலுத்தாமல் போனதுதான் நாம் செய்த, செய்யும் மிகப்பெரிய குற்றமாகும்.
பெண் உரிமைக்காவும், தாழ்த்தப்பட்டோரின் உரிமைக்காவும் போராடிய பாரதியார் விட்டுச் சென்ற பணியைத்தான் சமூக சீர்திருத்தமாகத் தந்தைப் பெரியார் தொடர்ந்தார். அதன் பின்னர் தமிழகத்தில் தோன்றி வலுவடைந்த திராவிட இயக்கங்கள் தாழ்த்தப்பட்டோருக்குச் சம உரிமை என்ற நிலை மாறி, பார்ப்பனர்களுக்கு எதிரான நிலையை எடுத்தனர். அதன் விளைவாகத்தான், பாரதியாரை ஒரு பார்ப்பனராகவே மக்கள் பார்க்க வேண்டியதாயிற்று.
பாரதியாரின் படைப்புகளுக்கு இணையாக இதுவரை எந்த ஒரு கவிஞரும் எந்த ஒரு படைப்பையும் படைக்கப்படாத நிலையில் பாரதியாருக்கு உரிய மரியாதை தமிழக மக்களால் வழங்கப்படவில்லை. சுதந்திரப் போராட்டத்திற்காகவும், பெண் விடுதலைக்காவும், தீண்டாமை ஒழிப்புக்காகவும் தம் வாழ்நாளை அர்பணித்துக் கொண்ட பாரதியாரின் சேவைகள் எல்லாம் அவர் பார்ப்பனராகப் பிறந்துவிட்ட காரணத்தால், பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரத்தால் மறைக்கப்பட்டுவிட்டன என்பது தான் உண்மை.
வானளாவிய கவிஞராகக் கருதப்படும் திருவள்ளுவர் எந்த இனத்தவர் என்று யாருக்கும் தெரியாது. அவருடைய உருவம் எப்படி இருந்தது என்றுகூட எவருக்கும் தெரியாது. ஆனால், அவரின் முற்போக்கான சிந்தனையால்தான் அவருடைய உருவம் கம்பீரமாக வடிக்கப்படுகிறது.
அதே திருவள்ளுவர், ஒரு பிராமணர் என்று அறியப்பட்டிருந்தால், அவருக்கும் அவருடைய திருக்குறளுக்கும் இன்று உள்ள அளவு, இவ்வளவு பெரிய மரியாதை கிடைத்திருக்காது என்பதுதான் எதார்த்தமான உண்மை.

Comments