என்று தணியும் இந்த நூலகர்களின் ஏக்கம்
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பொது நூலகத்துறையில் பணிபுரியும் நூலகர்களின் பணிப் பாதுகாப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் நூலகர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து அச்சத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் பொது நூலகங்கள் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 1948 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்நன. 1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை பள்ளிக் கல்வித்துறையிலிருந்து பிரிக்கப்பட்டது. நூலகர்கள் நூலக நிதியிலிருந்து ஊதியம் பெற்று வந்தனர்.
நூலக நிதியில் பற்றாக்குறை ஏற்படும் போது நூலகர்களுக்கு ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனை உணர்ந்த அன்றைய முதலமைச்சர் திரு.எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் 1.4.1982 முதல் நூலகர்களை அரசுப் பணியாளர்களாகக்கினார். அன்று முதல் மற்றத் துறைப் பணியாளர்களுக்கு உண்டான அனைத்து சலுகைகளும் நூலகர்களுக்குக் கிடைத்து வந்தன. நூலகர்களுக்கும் மற்ற துறைப்பணியாளர்களைப் போல பணிப் பாதுகாப்பு கிடைத்தது.
ஆனால், இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. 1996 ஆம் ஆண்டு வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் பெற்று வந்த மூன்றாம்நிலை நூலகர்களின் ஊதியம், ஐந்தாவது ஊதியக்குழுவில் இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியமாகக் குறைக்கப்பட்டது.
ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துறைப்படியும் இவர்கள் ஊதியம் இளநிலை உதவியாளர்களுக்கு இணையாகத்தான் இருந்தது.
அரசு ஊழியர் சங்கத்தின் போராட்டத்தைத் தொடர்ந்து பல்வேறுத்துறைப் பணியாளர்களின் ஊதியம் மாற்றி அமைக்கப்பட்டபோது இளநிலை உதவியாளர்களுக்கும், அவர்களுக்கு இணையாக ஊதியம் பெற்று வந்த பதிவரை உதவியாளர், அனுப்புகை உதவியாளர், தொலைபேசி இயக்குபவர்கள், காவலர்கள், அனைத்துத் துறைகளிலும் பணிபுரியும் ஓட்டுநர்கள் முதலியோருக்கும் தர ஊதியம் ரூ.400 உயர்த்தப்பட்டது.
ஆனால், இவர்களுக்கு இணையாக ஊதியம் பெற்றுவந்த மூன்றாம் நிலை நூலகர்களுக்கு மட்டும் தர ஊதியம் ரூ.400 உயர்த்தப்படவில்லை.
பத்தாம் வகுப்புத் தேர்ச்சி என்ற கல்வித்தகுதியில் பணியில் சேர்ந்தவர்கள் எல்லாம் அதிகமான ஊதியம் பெறும்போது, +2 உடன் நூலக அறிவியலில் சான்றிதழ் படிப்பு என்ற கல்வித் தகுதியுடன் பணிக்கு வந்த நூலகர்களின் ஊதியம் மட்டும் உயர்த்தப்படவில்லை.
இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் பெற்று வந்த மூன்றாம் நிலை நூலகர்களின் ஊதியம் இப்படி படிப்படியாகக் குறைந்து தற்பொழுது இளநிலை உதவியாளர்களைவிடக் குறைவானது என்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.
அது மட்டுமல்ல. எம்.எல்.ஐ.எஸ். படித்த நூலகர்களுக்குத் தற்பொழுது ஓர் ஊக்க ஊதியம் மட்டும் வழங்கப்படுகிறது. பி.எல்.ஐ.எல். படித்தவர்களுக்கு எந்த ஒரு ஊக்க ஊதியமும் வழங்கப்படுவதில்லை.
பி.எட். படித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு இரண்டு ஊக்க ஊதியம் வழங்குவதுபோல, பி.எல்.ஐ.எஸ். படித்த நூலகர்களுக்கும் இரண்டு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்ற நூலகர்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்றுவரை ஏற்கப்படவில்லை.
பொது நூலகத்துறையில் உள்ள 703 நூலகங்கள் அரசு நிதி நூலகங்கள் என்றும், 906 நூலகங்கள் மாவட்ட நூலக ஆணைக்குழு நிதி நூலகங்கள் என்றும் வகைப்படுத்தி, அரசாணை நிலை எண் 133, பள்ளிக் கல்வித்துறை, நாள்: 12.07.2005 இல் ஆணையிடப்பட்டுள்ளது.
பொது நூலகத்துறையில் உள்ள 1590 மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்களில் 716 பணியிடங்களுக்கு மட்டுமே அரசு நிதியில் ஊதியம் வழங்கப்படுகிறது. மீதம் உள்ள 874 பணியிடங்களுக்கு நூலக நிதி மற்றும் சில்லரைச் செலவின நிதியிலிருந்து ஊதியம் வழங்கப்படுகிறது.
அரசு நிதி நூலகங்களில் பணிபுரியும் நூலகர்களுக்கு அரசு நிதியிலும், நூலக நிதி நூலகங்களில் பணிபுரியும் நூலகர்களுக்கு நூலக நிதியிலும் ஊதியம் வழங்கப்படுகிறது.
இது மட்டுமல்லாது, புதியதாகத் தோற்றுவிக்கப்பட்ட 310 மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்களில் பணியமர்த்தப்பட்ட நூலகர்களுக்கு மாவட்ட நூலக ஆணைக்குழு நிதியிலிருந்து தினக்கூலிப் பணியாளர்களைப்போல், எந்தப் பிடித்தமும் இல்லாமல் ஊதியம் வழங்கப்படுகிறது.
மருத்துவக் காப்பீடு, குடும்ப நல நிதி, பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் போன்ற எந்த ஒரு பணியாளர் நலத் திட்டத்திலும் இவர்கள் உட்படுத்தப்படாததால் இவர்களின் பணிப் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளது.
தமிழகத்தில் 1914 ஊர்ப்புற நூலகங்கள் உள்ளன. இந்நூலகங்கள் காலை 9.00 மணி முதல் பகல் 12.30 வரையிலும், மாலை 4.00 மணி முதல் 6.30 வரையிலும் செயல்படுகின்றன.
இந்நூலகங்களில் பணிபுரியும் ஊர்ப்புற நூலகர்களுக்கு 2500 + 500 என்ற ஊதிய விகிதத்தில் மாதம் ரூ.5000க்கும் குறைவான ஊதியம்தான் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அலுவலக உதவியாளர் ஊதியத்தில் பாதியைவிட குறைவானது.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திலும், மருத்துவக்காப்பீடு திட்டத்திலும் இவர்கள் சேர்க்கப்படவில்லை. இவர்களுக்கு பதிவரை எழுத்தர் ஊதியமாவது கொடுக்கக்கூடாதா என்று கேட்டால், இவர்கள் சத்துணவு அமைப்பாளர்களைப்போல் பகுதி நேரப் பணியாளர்கள், அதனால்தான் இந்த ஊதியம் வழங்கப்படுகிறது என்கிறது பொது நூலகத்துறை.
காலை 9.00 மணிக்கு நூலகத்தைத் திறந்து, மாலை 6.30 மணிவரை நூலகத்தில் பணிபுரிபவர்கள் பகுதிநேரப் பணியாளர்களா? இன்றைய விலைவாசியில் இவ்வளவு குறைவான ஊதியத்தில் எப்படி ஒரு குடும்பத்தை நடத்த முடியும்?
இதுமட்டுமல்ல, பொது நூலகத்துறையில் 715 பகுதி நேர நூலகங்கள் உள்ளன. இந்நூலகங்கள் காலை 8.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை செயல்படுகின்றன. இந்நூலகங்களில் பணிபுரியும் பகுதி நேர நூலகர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மாதம் ரூ. 945 மட்டும். இவர்களில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டவர்களும் அடங்குவர். இந்த ஊதியத்தில் எப்படி பணிபுரியமுடியும்?
நூலகர்களில் வேலை நேரத்தை எடுத்துக் கொண்டாலும் முரண்பாடுதான். மற்ற துறைப் பணியாளர்களுக்கு சனி, ஞாயிறு விடுமுறை. ஆனால், நூலகர்களுக்கு வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் வார விடுமுறை.
இருக்கும் அந்த ஒரு நாள் வார விடுமுறையில் பணியாளர் கூட்டம், நூலகங்களுக்குப் புதிய நூல்கள் எடுத்துச்செல்வது, தணிக்கை போன்ற பணிகளால் அந்த ஒரு நாள் விடுமுறையும் பறிபோகிறது.
வார விடுமுறையை ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்ற வேண்டும் என்ற நூலகர்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு எந்தப் பயனும் இல்லை. மற்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாவதால் அவர்கள் நூலகங்களுக்கு வருவதற்கு வசதியாக ஞாயிற்றுக் கிழமை நூலகங்கள் செயல்பட வேண்டும் என்கிறது அரசு.
அந்தக் கருத்து ஒரு வகையில் சரியானதாக இருக்கலாம். ஆனால், வேலை நேரத்தையாவது மாற்றலாமே. வெளியூர் வேலைக்குச் செல்பவர்கள் சனி, ஞாயிறு நாட்களில் நூலகத்திற்கு வருகிறார்கள். உள்ளூரில் இருப்பவர்கள் எல்லா நாட்களிலிலும் வருகிறார்கள். உள்ளூரில் இருப்பவர்கள் பெரும்பாலும் காலை 11 மணிக்கு மேல்தான் நூலகத்திற்கு வருகிறார்கள். பகல் 12, 12.30 மணிக்கு நூலகம் மூடப்படுவதை வாசகர்கள் விரும்புவதில்லை.
பகல் 12 மணி முதல் மாலை 4.00 மணி வரை நூலகத்தை மூடிவிட்டு உள்ளே நூலகர் உட்கார்ந்திருப்பதால் யாருக்கு என்ன பயன்? அதேபோல மாலை 5.00 மணிக்கு மேல் நூலகத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை குறைவுதானே.
அதனால் கிராமப்புறங்களில் உள்ள நூலகங்களின் வேலை நேரத்தை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை என்று மாற்ற வேண்டும் என்று கோரிக்கையும் பரிசீலிக்கப்படவில்லை.
பொது நூலகத்துறையின் மூலம் கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடங்கப்பட்டபோது, அந்நூலகத்திற்குப் பணிமாறுதல் கிடைக்கும் என்ற கனவோடு அங்கு சென்று நூலகர்கள் பலர் அல்லும் பகலும் வேலைசெய்தனர்.
ஆனால், அந்நூலகத்திற்கு நூலகர்கள் நியமிக்கப்பட்டபோது, பொது நூலகத்துறையில் பணிபுரியும் நூலகர்கள் எவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 99 நூலகர்கள் அந்நூலகத்திற்குத் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. தேர்வு எழுதியாவது அந்நூலகத்திற்குச் சென்றுவிடலாம் என்று எண்ணிய நூலகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது வயது வரம்பு.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர்களுக்கான தேர்வுகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படுவதில்லை. ஆனால், அதே ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய நூலகர்களுக்கான தேர்வுக்கு மட்டும் வயது வரம்பு 35 என்று நிர்ணயிக்கப்பட்டது ஏன் என்று தெரியவில்லை. இதனால், பொது நூலகத்துறையில் பணிபுரியும் நூலகர் எவருராலும் அத்தேர்வு எழுத முடியாமல் போயிற்று.
நூல் இழப்புத் தொதை என்பது நூலகர்களுக்குப் பெரிய பிரச்சனை. நூலகங்களில் காணாமல் போகும் நூல்களுக்கான தொகையை நூலகர்கள்தான் செலுத்த வேண்டும். இன்றுள்ள அரசாணையின்படி ஆயிரம் நூல்கள் பயன்பாட்டிற்கு மூன்று நூல்கள் பயன்பாட்டுக் கழிவு என்று கணக்கிடப்படுகிறது. நூல்களின் விலை வெகுவாக உயர்ந்து விட்டது. அதனால், இழப்பு நூல்களுக்கு நூலகர்கள் செலுத்தும் தொகையும் அதிகரித்து விட்டது.
கிராமங்களில் உள்ள நூலகங்களில் பணிபுரியும் நூலகர்கள் ஆண்டுக்கு சாராசரியாக இரண்டாயிரம் ரூபாயும், நகரப் பகுதிகளில் பணிபுரியும் நூலகர்கள் குறைந்த பட்சம் ஐயாயிரம் ரூபாயும் நூல் இழப்புத் தொகையாக செலுத்த வேண்டியுள்ளது.
நூலகர் பணியிடம் காலியாக உள்ள நூலகத்தை அருகில் உள்ள நூலகத்தில் பணிபுரியும் நூலகர்தான் ஒரு தினக்கூலிப் பணியாளரை நியமித்து அந்த நூலகத்தை இயக்க வேண்டும். அந்த தினக்கூலிப் பணியாளர் பணிபுரியும் காலத்தில் அந்நூலகத்தில் ஏற்படும் நூல் இழப்புக்குச் சம்பத்தப்பட்ட பொறுப்பு நூலகர்தான் தொகை செலுத்த வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் நூலகர்களுக்கு கூடுதல் பொறுப்புக்காக படி எதுவும் வழங்கப்படுவதில்லை.
மிகக்குறைந்த ஊதியம் பெறும் நூலகர்கள் இப்படி யார் யாரோ எடுத்துச்செல்லும் நூல்களுக்கு பணம் கட்ட வேண்டியுள்ளது.
அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு நிகரானவர்கள் நூலகர்கள். அவர்கள் தங்கள் பணிக்குப் பாதுகாப்பு இல்லை என்ற அச்சத்தில் உள்ளனர். அவர்களது அச்சத்தைப் போக்கி அவர்கள் மன நிறைவோடு மக்களுக்கு சேவைபுரிவதற்கான சூழலை அரசு எடுக்கும் என்று நம்புவோமாக!

Comments