ஒருவர் எத்துறையில் சாதனைபுரிய முடியும்?
ஒவ்வொரு மனிதரும் பிறந்தோம், வாழ்ந்தோம் என்று இருக்கக் கூடாது. இவ்வுலகில் நாம் மனிதனாகப் பிறந்ததற்கு ஏதாவது ஒரு அடையாளத்தை விட்டுச்செல்ல வேண்டும்.
ஒவ்வொரு மனிதரிடமும் ஏதாவது ஒரு தனித்திறமை இருக்கிறது. அதை உரிய வகையில் பயன்படுத்த வேண்டும். “எனக்கு எந்தத் திறமையும் இல்லை” என்று எவரும் சொல்லிவிட முடியாது. சாதிக்க எந்தத் துறையை தேர்வு செய்வது என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கிறோம். அப்படி நாம் குழம்பத் தேவையில்லை.
நாம் அன்றாடம் செய்யும் பணியையே புதுமையாக, ஆக்கப்பூர்வமாக, திறம்படச் செய்தாலே அது சாதனையாகிவிடும். இப்படித்தான் பலரும் சாதனைபுரிந்து வருகின்றனர்.
சாதாரண சவரத் தொழிலாளிகூட உலக சாதனை செய்துள்ளதாக பத்ரிகைகளில் படித்திருக்கிறோம். அவர் செய்ததும் அவர் அன்றாடம் செய்யும் வேலையே. அவர் ஒரு மணி நேரத்தில் 150 பேருக்கு முகச்சவரம் (சேவிங்) செய்து சாதனை படைத்துள்ளார்.
ஓவியர் ஒருவர் அரை அரிசியில் இரண்டு ஓவியங்களை வரைந்து சாதனை படைத்துள்ளதாகப் படித்திருக்கிறோம். இப்படி பல சாதனையாளர்களின் சாதனைகளைப் பட்டியல் இடமுடியும். இவர்களெல்லாம் சாதனை செய்ய வேண்டும் என்று எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து படித்தது இல்லை.
சென்னை மாநிலக் கல்லூரியின் கணிதத்துறையில் சாதாரண உதவிப் பேராசிரியராக இருந்த எஸ்.ஆர். அரங்கநாதன் சென்னை பல்கலைக் கழகத்தில் நூலகராக நியமிக்கப்பட்டபோது, நூலகத்துறையைப் பற்றி ஒன்றும் தெரியாதவராகவும், இதில் ஆர்வம் இல்லாதவராகவும்தான் இருந்தார்.
ஆனால், அவர் நூலகத்துறைக்குத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு எவரும் செய்ய முடியாத அளவிற்கு உலக அளவில் அனைவரும் ஏற்கும் விதமாக கோலன் நூல் பகுப்பு முறை (colon
classification) என்னும் நூல் பகுப்பு முறையைக் கண்டுபிடித்தார். அவருடையக் கண்டுபிடிப்பு இன்றும் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இதனாலேயே, அவர் இந்திய நூலகத் தந்தை என்று போற்றப்படுகிறார்.
ஆர்வமே இல்லாதத் துறையிலும்கூட சாதிக்க முடியும் என்பதற்று எஸ்.ஆர். அரங்கநாதன் ஒரு நல்ல உதாரணம். இப்படி பல உதாரணங்களைக் கூறலாம்.
இவர்களெல்லாம் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து சாதனை புரியவில்லை. அவர்கள் அன்றாடம் செய்யும் பணியையே சிறப்பாகச் செய்து சாதனை படைத்துள்ளனர்.
ஆக, ஒவ்வொரு மனிதரும் தாங்கள் செய்யும் பணியையே சிறப்பாகச் செய்தால் சாதனை படைக்க முடியும். சாதனை புரிய வேண்டும் என்று எந்தத் துறையையும் தேடத் தேவையில்லை. சாதனை புரிய வயது எதுவும் தடையாக இருப்பதில்லை. சாதிக்க வேண்டும் என்கின்ற மிகுதியான செயல்முனைப்புடன், கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் போதும், எதையும் சாதிக்க முடியும்.
Comments