யார் நல்ல நண்பன்?

Saravanan. C


  இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொள்பவனை நல்ல நண்பன் என்கிறோம்.  ஆனால், நல்ல நண்பனுக்கு அழகு அது மட்டுமா?
   ஒருவன் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டி அவனை நல்வழிக்கு இட்டுச் செல்பவனே நல்ல நண்பன்.
    ஆனால், இன்று அப்படிப்பட்ட நல்ல நண்பர்களைப் பார்க்க முடிகிறதா? அது சாத்தியமா?
  தான் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டுபவனை எவரும் நண்பனாகவே ஏற்றுக் கொள்வதில்லை. 
    “நான் செய்வதைத் தவறு என்று சொல்கின்றாயே, நீயெல்லாம் ஒரு நண்பனா? என்றல்லவா கேட்கிறார்கள்.
  தான் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டாமல், அதற்கு நியாயம் பேசுபவர்களைத்தான் நல்ல நண்பன் என்று பலரும் கொண்டாடுகின்றனர்.
    அதனால்தான், ஒருவர் தவறான பாதையில் சென்றாலும், அவருடன் உள்ள நண்பர்கள் அவரது குறைகளையும் தவறுகளையும் சுட்டிக் காட்டுவதில்லை.  நல்லது சொல்லப்போய் ஏன் கெட்டப் பெயர் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று ஒதுங்கிக் கொள்கிறனர். 
   எல்லாம் முடிந்த பிறகுதான் சொல்லுவார்கள், அடடா, நீயாவது சொல்லியிருக்கக் கூடாதா? என்று.  ஆனால், எவர் சொல்வதையும் கேட்கும் மனநிலையில் அன்று அவன் இல்லை என்பதுதான் உண்மை.
  இதைப்போலதான் எந்த ஒரு அலுவலகத்திலும் கீழ்நிலைப் பணியாளர்களின் கருத்துக்களை எந்த ஒரு உயர் அலுவலரும் ஏற்றுக் கொள்வதில்லை.  காரணம், அது அவருக்கு கௌரவப் பிரச்சனை.
    அரசுத் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்பவர்கள் கீழ் மட்டப் பணியாளர்கள்தான்.  அவர்களுக்குத்தான் தெரியும்  திட்டத்தின் பயன் எந்த அளவிற்கு சம்மந்தப்பட்ட பயனாளிகளைச் சென்றடைகிறது என்று. ஆனால், கீழ்மட்டப் பணியாளர்களின் குரலுக்கு எந்த ஒரு மதிப்பும் இல்லை.  பலகோடி ரூபாய் செலவு செய்துவிட்டு, பல திட்டங்கள் பாதியிலேயே நிறுத்தப்படுவது இதனால்தான். 
   அந்தக் காலத்தில் அரசனுக்கு உற்ற அறிவுரை வழங்கத்தான் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள். அமைச்சர்களும் அரசனுக்கு அவ்வப்போது நல்ல பல ஆலோசனைகளை வழங்கி வந்தனர். அதனால் நல்லாட்சி நடைபெற்றது.
    ஆனால், இன்றைய அமைச்சர்கள் அப்படி இருக்கிறார்களா? அப்படி இருக்கவும் முடியுமா? அப்படி இருந்தால் அடுத்தநாள் அவர் பதவியில் இருப்பாரா?
   ஆனால், ஒரு நடுநிலையான பத்திரிக்கை அப்படி இல்லை.  ஆட்சியாளர்கள் கொண்டு வரும்  நல்ல திட்டங்களைப் பாராட்டவும், அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டவும் தயங்குவதில்லை.  ஆக, நடுநிலையான பத்திரிகைகள்தான் ஆட்சியாளர்களுக்கு நல்ல நண்பர்கள்.
   பத்திரிகைகள் சுட்டிக்காட்டும் தவறுகளைத் திருத்திக் கொள்ளாத ஆட்சியாளர்களாளும், கீழ்மட்ட பணியாளர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத உயர் அதிகாரிகளாலும் சிறந்த நிர்வாகத்தை அளிக்க முடியாது என்பதுதான் எதார்த்தமான உண்மை.

(தமிழச்சி, 2010 அக்டோபர் இதழில் வெளிவந்த எனது கட்டுரை)

Comments