சொல் சிக்கனம் எங்கு தேவை?
(தமிழச்சி, 2010 அக்டோபர் இதழில் வெளிவந்த எனது கட்டுரை)
மற்றவர்களுக்குத் தகவல்களைத் தெரிவிக்கும்போதும், நம் எண்ணங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளும்போதும், சூழ்நிலை அறிந்து சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.
மேடையில் பேசும்போது சுருக்கமாக பேசி, சொல்லவேண்டிய கருத்தைத் தெளிவாக தெரிவிக்க வேண்டும். கேட்பவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காக சொல்ல வேண்டிய கருத்தை தேவையில்லாமல் விவரித்துக் கொண்டிருக்கக்கூடாது. அவ்வாறு பேசிக்கொண்டிருந்தால் அது கேட்பவர்களுக்கு சளிப்பை ஏற்படுத்திவிடும். இவர் எப்பொழுது முடிப்பார்? என்று நினைப்பார்கள்.
குறைந்த சொற்களைப் பயன்படுத்தி, பார்வையாளர்களைச் சிந்திக்க வைக்க வேண்டும். இன்னும் கொஞ்ச நேரம் பேசமாட்டாரா? என்கின்ற எதிர்பார்ப்பை உண்டாக்கும் அளவிற்கு சொல் சிக்கனம் தேவை.
இன்று தொலைபேசிக் கட்டணங்கள் வெகுவாகக் குறைந்து விட்டன. இதனால், தொலைபேசியில் பேசும் பலர் கால் மணிநேரம் ஆனாலும் பேசி முடிப்பதில்லை. பேசிக்கொண்டே இருப்பார்கள். எதிர் முனையில் இருப்பர் வாகனம் ஓட்டிக்கொண்டோ, வேறு முக்கியமான வேலையாகவோ இருக்கலாம்.
தொலைபேசியில் பேசுபவர்கள் எதிர் முனையில் இருப்பவர் என்ன பணியாக இருக்கிறார் என்பதை அறிந்து அதற்கேற்ப, சுருக்கமாகப் பேசி முடிக்க வேண்டும். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தால், அது இணைப்பு கிடைக்காமல் வேறு சிலர் அவதிப்படவும் காரணமாகிவிடும். உடல் நலனுக்கும் தீங்காகலாம்.
பொதுவாக, எல்லா அலுவலகங்களிலும் ஆபத்தான ஆசாமிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். போட்டுக் கொடுத்து பெயர் வாங்குவதுதான் இவர்கள் வேலை. இவர்களிடம் மனம் விட்டுப் பேசக் கூடாது. எப்படியாவது நம் வாயைக் கிளரி ஏதாவது சிக்கலில் மாட்டிவிடுவார்கள். இவர்களிடம் மிகமிக குறைவான சொற்களையே பயன்படுத்த வேண்டும். முடிந்தால் இவர்களிடம் பேசுவதைக்கூட தவிர்த்து விடலாம்.
அதேநேரத்தில், சொல் சிக்கனம் வேண்டும் என்பதற்காக சொல்ல வேண்டிய கருத்தை, சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் இருந்துவிடவும் கூடாது.
Comments