பழந்தமிழ் இலக்கியங்களை எளிமைப் படுத்துவோம்.

கட்டுரை:

பழந்தமிழ் இலக்கியங்களை எளிமைப் படுத்துவோம்.
(அல்லது)
பழந்தமிழ்ச் செய்யுள்களை அச்சிடும் இரண்டு அடுக்கு முறை

பழந்தமிழ் இலக்கியச் செய்யுள்களைப் படிக்க வேண்டும் என்னும் ஆர்வத்துடன் படிக்க முயல்பவர்களால், சில செய்யுள்களின் முதல் வரியைக் கூட படித்து, பொருள்  உணர்ந்துகொள்ள முடிவதில்லை. அசை - சீர் முறையில் உள்ள  செய்யுள் வரிகளை, படிக்கும் முறை தெரியாமல் திணறுகின்றனர். 
“எண்ணெழுத் திகழேல்” என்னும் இரண்டு சீர்களைக்கூட, நம்மால் படித்துப் புரிந்துகொள்ள முடிவதில்லை. “திகழேல்” என்பதற்கு அகரமுதலியில் பொருள் தேடி ஓய்கிறோம். “எண் எழுத்து இகழேல்” என்று சொல்பிரித்து இருந்தால், செய்யுளும் புரிகிறது, பொருளும் புரிகிறது.
அசை - சீர்களை, சொற்களாகப் பிரித்துப் படிக்க முடிந்தால்தான் ஒரு செய்யுளை, இன்னொரு முறை படித்து  ஓரளவு புரிந்துகொள்ளும் விருப்பம் ஏற்படும். பொருள் தெரியாத வார்த்தைகளுக்கு அகரமுதலி பார்த்துப் பொருள் தெரிந்து கொள்ளலாம் என்னும் எண்ணம் ஏற்படும். ஆனால், சொற்களாகப் பிரித்து படிக்கத் தெரியாததால், பழைய தமிழ் இலக்கியச் செய்யுள் நூல்களைத் தொட நாம் அஞ்சுகிறோம்.
பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் செய்யுள் வடிவமே. அதிலும் பெரும்பாலானவை பக்தி இலக்கியங்களே. 
கவிதை எழுத வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் செய்யுள்களைப் படிக்க முயல்கின்றனர். செய்யுள்களைப் படித்துப் புரிந்துகொள்ள முடியாததால், புதுக் கவிதை எழுத ஆரம்பித்துவிடுகின்றனர். 
பழைய இலங்கியங்களைப் படிக்காமல், புதிய இலக்கிய வடிவம் என்று கூறிக்கொண்டு, புதுக் கவிதைகளைப் படைப்பதால் என்ன பயன்?
தமிழ் இலக்கியம் பாடத்தை முதன்மைப் பாடமாக எடுத்து உயர்கல்வி படிப்பவர்களேகூட தமிழ் இலக்கிய நூல்களைப் படிப்பதில்லை. படித்துப் பொருள் அறிந்து கொள்ள முடியாதது ஒரு காரணமாக இருக்கலாம். அவர்கள் தங்களுக்கான பாட திட்டத்தில் உள்ள செய்யுள்களை மட்டுமே படிக்கின்றனர். அதற்கும் உரைநூல் தேடுகின்றனர். தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால் அதையும் தொடுவதில்லை. 
பதவி உயர்வுக்காகவும், ஊக்க ஊதியத்திற்காகவும் தமிழ்  இலக்கியம் பாடப்பிரிவு படித்துப் பட்டம் பெற்ற ஆசிரியர்களைப் பற்றி சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. நூறு தமிழாசிரியர்கள் இருக்கும் நகரில் நடைபெறும் இலக்கியக் கூட்டங்களில், ஐந்து தமிழாசிரியர்கள்கூட கலந்துகொள்வதில்லை. 
பழந்தமிழ் இலக்கியத்தின் அருமை, பெருமை பற்றி முன்னோர் உரைநடை நூல்களில் மேற்கோள் காட்டி எழுதி வைத்திருக்கிறார்கள். அதைத்தான் திரும்பத் திரும்பப் பேசி வருகிறோம். 
“நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி” என்கிறார்கள். நாலடியாரையும், திருக்குறளையும் எத்தனை பேர் படித்திருக்கிறார்கள்? “திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்” என்கிறார்கள். எத்தனை பேர் திருப்புகழைப் படித்து பொருள் அறிந்திருக்கிறார்கள்? “திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்கிறார்கள். திருவாசகத்தை எத்தனை பேர் முழுமையாகப் படித்திருக்கிறார்கள்? 1330 திருக்குறள் ஒப்பிப்பதாகப் பெருமை பேசுகிறார்கள். அவர்களுக்கு எத்தனைத் திருக்குறளுக்கு பொருள் தெரியும்? 
மேடைப் பேச்சுகளிலும், கட்டுரைகளிலும் இவைபோன்ற சொற்றொடர்கள் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இச்சொற்றொடர்களைப் பயன்படுத்துபவர்களில் எத்தனை பேர்  உண்மையில் படித்திருப்பார்கள்?
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள தமிழர்களாகிய நம்மாலே பழந்தமிழ் இலக்கியங்களைப் படித்து, புரிந்துகொள்ள முடியாமல், தயங்கி நிற்பதற்குக் காரணம் என்ன? 
உரைநடையின் வளர்ச்சி ஒரு காரணமாக இருக்கலாம். நமது கல்விமுறையும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. தேர்வுக்கு படிக்கும் பள்ளி மாணவர்களில் பெரும்பாலோர் உரைநடையை நன்கு படித்துக்கொண்டு, செய்யுளை விட்டுவிடுவதை நாம் பார்க்கிறோம்.  நம்மில் பலரும் அப்படித்தானே படித்தோம். 
 தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் (பொ.நூ.வெ) வரிசை எண். 001 / 2017 இல் வெளியிட்டுள்ள நூல் முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம். இதன் உரையாசிரியர் திரு. எஸ்.பொன்னுசாமிப் பிள்ளை. சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம் 1936 ஆம் ஆண்டு வெளியிட்ட இந்நூல் தற்பொழுது மறுபதிப்பாகப் பாடநூல் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 
 இந்த அறநெறிச்சாரம் புதிய பதிப்பில் உள்ள ஒவ்வொரு செய்யுளும் இரண்டு விதமாக, இரண்டு அடுக்கு முறையில் அச்சாகி உள்ளது.     முதலில்,  அசை - சீர் வரிசையில் யாப்பிலக்கண முறையில் செய்யுள் இருக்கிறது. அடுத்து அதே செய்யுள் சொல் பிரிக்கப்பட்டு எளிதாகப் படிக்கும் முறையில் உள்ளது. அதற்கு முழு சொற்பொருள் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், ஒவ்வொரு செய்யுளையும் ஆர்வத்துடன் படித்துப் பொருள் புரிந்து கொள்ள முடிகிறது. கருத்துகளை எளிதில் நினைவில் நிறுத்திக் கொள்ளவும் முடிகிறது. இது ஒரு நல்ல முயற்சி. இது அனைவரும் பின்பற்ற வேண்டிய பயனுள்ள முயற்சி. 

எடுத்துக்காட்டாக: பாடல் 141. அடக்கம் அனைத்தையும் தரும்

தன்னைத்தன் நெஞ்சங் கரியாகத் தானடங்கின்
பின்னைத்தான் எய்தா நலனில்லை – தன்னைக்
குடிகெடுக்குந் தீநெஞ்சின் குற்றேவல் செய்தல்
பிடிபடுக்கப் பட்ட களிறு.

தன்னைத் தன் நெஞ்சம் கரியாகத் தான் அடங்கின்
பின்னைத் தான் எய்தா நலன் இல்லை, தன்னைக்
குடி கெடுக்கும் தீ நெஞ்சின் குற்று ஏவல் செய்தல் -
பிடி படுக்கப் பட்ட களிறு.

பழந்தமிழ்ச்  செய்யுள் நூல்கள் யாவற்றையும் இந்த முறையிலேயே  இனி அச்சிடப் பதிப்பகத்தார்கள் முன்வர வேண்டும். இதன்மூலம் செய்யுள்களைப் படிக்க முயல்வோரின் நேரமும், முயற்சியும் வீணாகாது. தமிழ் இலக்கியத்தைப் படிக்க விரும்பும் ஒவ்வொருவரும் நூலை முழுமையாகப் படித்துப் பயன்பெறமுடியும்.
பள்ளிப் பாடநூல்களிலும் தமிழ் இலக்கியச் செய்யுள்களை இவ்வாறு இரண்டு அடுக்கு முறையில் அச்சிட்டால் மாணவர்களுக்கு எளிதாகப் புரியும். ஆகவே, தமிழ்நாடு அரசு புதிய பாட நூல்களை அச்சிட உள்ள இவ்வேளையில் பாடநூல் தொடர்புடைய உயர் அலுவலர்கள் இந்தக் கருத்தைக் கவனமுடன் சீர்தூக்கி, ஆய்வுசெய்து செயல்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

Comments

Anonymous said…
உண்மை ஐயா