பொது நூலக தினம் - மே 22.
அறிவானத சமூகத்தை உருவாக்கும் பொது நூலகங்கள். (ராஜா ராம்மோகன் ராய் பிறந்த நாளான மே 22 இந்தியா முழுவதும் பொது நூலக தினம் கொண்டாடப்படுகிறது) உலகிலுள்ள லட்சக்கணக்கான உயிரினங்களில் மனிதன் மட்டுமே தனக்குத் தேவையான கருவிகளை உருவாக்கி வசதியாக வாழ்ந்து வருகிறான். ஏனைய உயிரினங்கள் தாங்கள் தோன்றியபோது எப்படி வாழ்ந்தனவோ, அப்படியே இன்றும் வாழ்ந்து வருகின்றன. காடுகளிலும் மலைகளிலும், விலங்குகளோடு விலங்காக வாழ்ந்துவந்த மனிதர்கள், தகவல்களைப் பரிமாறிக்கொள்ள மொழியைக் கண்டு பிடித்து, வாழ்க்கை அனுபவங்களை வாய்மொழியாக அடுத்த தலைமுறைக்குச் சொல்லி வந்தனர். அடுத்தடுத்து வந்த தலைமுறை மனிதர்கள், முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களை, தற்காலத்துக்கு ஏற்ப மேம்படுத்தி வந்ததால், மனித சமூகம் நாகரிக சமூகமாக மாறியது. மனிதர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களைக் கல்வெட்டுகள், பாறை ஓவியங்கள், தோல்கள், சுட்ட களிமண் தகடுகள், ஓலைச் சுவடிகள், உலோகத் தகடுகள் போன்றவற்றில் பதிவு செய்து வந்தனர். காகிதம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, புத்தகங்கள் மனிதர்களின் அறிவை மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றுகின்றன. கல்வி மற்றும் அறிவை வளர்க்கவும், உலக...