எதைப் படிக்க வேண்டும்?
| Saravanan. C |
(தமிழச்சி, 2010 ஜøலை இதழில் வெளிவந்த எனது கட்டுரை)
நாள்தோறும் புற்றீசல்கள் போல் நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நூலகங்களில் ஆயிரக்கணக்கில் நூல்கள் சேர்ந்து கொண்டிருக்கின்றன. இன்று இலக்கியம் அபரிதமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. எது சிறந்த இலக்கியம்? எதைப் படிக்க வேண்டும்? என்கின்ற கேள்வி எழுகிறது.
“உன்னுடைய இலக்கியத்தை
குறைந்தது ஒன்பதாண்டுகளுக்கு மக்கள் முன் வை, அதன்பிறகும்
மக்கள் அதனை விரும்பிப் படிப்பார்களேயானால், அது
சிரஞ்சீவி இலக்கியம் ஆகும்” என்று அறிஞர் ஒருவர் கூறுகிறார். அப்படியெனில், பழந்தமிழ் இலக்கியங்கள் யாவும் சிரஞ்சீவி இலக்கியங்களே.
“வாழ்க்கை முறையை
எடுத்துக் காட்டுவதுதான் இலக்கியம்” என்று ஆங்கில அறிஞர் அட்சன் கூறியிருக்கிறார்.
தன்னுடைய நோய் எது? அதற்கு ஏற்ற மருந்து எது? என்று
மருத்துவரை நாடிச் சென்று அவர் ஆலேசனையின்படி மருந்து உண்டால்தான் அது பயன் தரும். அதைப்போல, அறிஞர் பெருமக்களின் ஆலேசனையின்படி நூல்களைப் படித்தால்தான் கல்வி
பயன் தரும்.
“நூலின் பெயரைக் கண்ட மாத்திரத்தில் மட்டும் அதனைப் படிக்கத் தொடங்கக்
கூடாது” என்று பேராசிரியர் ரஸ்கின் சொல்கிறார்.
படிக்கத்தக்கவை எவை? என்று அறிஞர்கள் பெருமக்கள் தங்கள் கருத்துக்களை
சொல்லியிருக்கிறார்கள். பிரான்சிஸ் பேக்கன் என்பவர் “ஒரு சில நூல்கள்
படிக்கத்தக்கவை - ஒரு சில நூல்கள் அனுபவிக்கத்தக்கவை” என்கின்றார்.
இன்றைய சூழ்நிலையில்
ஒரு சில நூல்கள் பார்க்கத்தக்கவை என்றுகூட சொல்லலாம். பிராபன்சிஸ் பேக்கன்
காலத்தில் இப்படிப் “பார்க்கத்தக்கவை” (பார்த்து
ஒதுக்கத்தக்கவை) நூல்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை.
இன்று வரும்
இலக்கியங்கள் இந்த நிலையில்தான் இருக்கின்றன. நச்சுக் கருத்துக்கள் மிக எளிதாக
பரப்பப்படுகின்றன.
சீன அறிஞர் கன்பூசியஸ்
அறத்தைத் “தென்றல்” என்றும் மறத்தை “வாடை” என்றும் கூறுகிறார். உடல் நலத்திற்கு ஏற்றது தென்றல், உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பது வாடை.
அறம் இன்பம் தரும், மறம் துன்பம் தரும். இத்தகைய அற உணச்ச்சியை ஊட்டும் இலக்கியங்கள்தான்
இன்று தேவை.
திருவள்ளுவர் நமக்கு கொடுத்த ஆணை “கற்பவை கற்க”. படிக் வேண்டியதை படியுங்கள் என்கிறார். இதனை நாம் கடைபிடிக்க
வேண்டும்.
புதிய இலக்கியங்கள்
எவ்வளவோ தோன்றலாம். ஆனால், அறத்தைக்
கற்பிக்கும் பழந்தமிழ் இலக்கியங்கள் படிப்பாரற்றுக் கிடக்க, புதிதாக இலக்கியங்களைப் படைப்பதால் என்ன பயன்?
ஆக, நல்ல
இலக்கிய நூல்களை தேர்வு, செய்து செம்மையாக கற்று, கற்றவாறு வாழ்ந்து எல்லா நலன்களும் அடைவோமாக.
Comments