அது என்ன இரகசியம்? - சிறுகதை

(அன்பு பாலம் ஜøன் 2011 
இதழில் வெளிவந்த எனது சிறுகதை)

     காலை ஆறு மணியிலிருந்து பத்து மணி வரைதான் விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. அதற்குள் கரும்புத் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சிவிட வேண்டும் என்று தண்ணீர் செல்லும் வாய்க்காலில் உடைப்பு ஏற்படுகிறதா என்று கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் முத்து.  
      அவன் மனைவி முனியம்மா வேகமாக நடந்து வருவதைப் பார்த்தான். பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் கண்ணம்மாவைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டுப் பத்து மணிக்குத்தான் முத்துவுக்கு உணவு எடுத்து வருவது வழக்கம்.  ஆனால், இன்று ‘சீக்கிரமாக வருகிறாளே, என்னவோ  தெரியவில்லையே?’ என்று அவள் வரும் திசை நோக்கி நடந்தான் முத்து.
          “என்ன முனியம்மா? என்ன ஆச்சி?” என்றான்.
    அக்கம்பக்கம் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு ஆரம்பித்தாள்:  “ஏங்க, நான் சாப்பாடு செஞ்சினு இருந்தேனா. கண்ணம்மா கூட படிக்கற கோவிந்தசாமி பையன் சைக்கிள்ள வந்து கதவு ஓரமா நின்னு சைகை பண்ணினான். உள்ள இருந்த கண்ணம்மா வெளிய போய் அவன்கிட்ட இருந்து ஒரு பேப்பர் வாங்கினு வந்து அவ பையில இருந்த ஜாமிண்டரி பாக்ஸ்ல வெச்சிக்கினா.  நான் பார்த்தும் பாக்காத மாதிரி இருந்துட்டேன்.  என்ன ஏதுன்னு எங்கிட்ட அவ ஒன்னுமே சொல்லலிங்க.  ஒரே பொண்ணுனு  நீங்க கொடுக்கற செல்லம்தான் இப்படி அவ கெட்டுப் போறா.  அவ ஸ்கூலுக்குப் போறதை  உடனே நிறுத்துங்க” என்று படபடப்பாக பேசி முடித்தாள் முனியம்மாள். 
        “சரி, சரி, அவசரப்படாதே முனி. முழுசா தெரியாம எதையும் பேசக் கூடாது.  பாவம் நல்ல பொண்ணு, நல்லாப் படிக்கறா.  நல்லாப் படிக்க வெச்சி பெரிய ஆளா ஆக்கணும்னு இருக்கேன்.  அவசரப்படாதே இரு”
        “இன்னும் என்னங்க ஆகணும்.  இப்படி மனசு வேற பக்கமா போச்சினா எப்படி படிப்பு வரும்? எப்படி பெரிய ஆளா ஆவா?”
          “சரி, சரி, என்ன கொடுத்தான்னு நீயாவது கேக்கக் கூடாதா?”
          “நான் கேட்டுத்தான் அவ சொல்லணுமா? அவளா சொல்லக் கூடாதா? அவ எப்படிங்க சொல்லுவா? சொல்றமாதிரி இருந்தாத்தானே சொல்லுவா?  அதனாலத்தான் அந்தக் கன்றாவியை இரகசியமா பையில வெச்சிக்கிட்டா”.
   “அப்படி என்னதான் எழுதியிருக்கிறான்னு  நீயாவது படிச்சிப் பாத்திருக்கக்கூடாதா?”
          “எனக்குப் படிக்கத் தெரிஞ்சிருந்தா நான் ஏன் இவ்வளவு தூரம் ஓடி வறேன். அவள அங்கயே தூக்கிப்போட்டு மிதிச்சிருப்பேனே” என்றாள் கோபமாக.
        “சரி, சரி, கோபப்படாதே, சாயும்காலம் அவ வந்தா நான் பேசிக்கிறேன்.  நீயா எதுவும் கேக்காதே” என்றான் முத்து.
       “அவ பையில மதிய சாப்பாடு வைக்கற சாக்கில அந்த லட்டரை எடுத்து முந்தானையில முடிச்சிக்கிட்டேன்ங்க” என்று தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த முந்தானை முடிச்சை அவிழ்த்து அந்தக் கடிதத்தை அவனிடம் கொடுத்தாள்.
     எட்டாக மடித்து, முடிந்து வைத்திருந்த அந்தக் காகிதத்தைப் பிரித்து, எழுத்துக் கூட்டிப் படித்தான். கவிதை வடிவில் இருந்தது.  அவன் மூன்றாம் வகுப்போடு படிப்பை முடித்துவிட்டதால் கவிதையின் பொருள் முழுமையாகப் புரியவில்லை. ஓரளவு மட்டும் தெரிந்தது. ஒரு பெண்ணை வர்ணித்து எழுதப்பட்டிருந்தது.  இடையிடேயே மகள் கண்ணம்மா பெயர் இருந்தது.  
    அக்கவிதையைப் படித்து முடித்துவிட்டு, மனைவிக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாக இருந்தான் முத்து. 
       “நான் சந்தேகப்பட்டது சரியாப் போச்சுங்க. இதை வளர விடக்கூடாது. ஆரம்பத்தலேயே கிள்ளி எறியணும். உடனே அந்தப் பையனோட அப்பன்கிட்ட சொல்லி அந்தப் பையனைக் கண்டிச்சி வைக்கச் சொல்லுங்க” என்றாள் மனைவி.
        “சரி, சரி, இத வெளியில யாரிடமும் சொல்லிடாத.  நான் சாப்பிட்டுட்டுப் போய் அவங்கப்பனைப் பாத்துப் பேசிட்டு வறேன்” 
      காலை உணவை முடித்துவிட்டு, அந்தக் காகிதத்தைத் தன் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு அந்தப் பையனோட அப்பனைப் பார்க்கப் புறப்பட்டான்.
         “நம் மகள் இப்படி செய்திருப்பாளா? நம்பவே முடியவில்லையே? இதை எப்படி சமாளிப்பது? இது உணர்வுப் பூர்வமான பிரச்சனை. அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இது போன்ற சமயங்களில் நிதானமாகத்தான் முடிவு எடுக்க வேண்டும். அதுவும் பெண் பிள்ளை சம்பந்தப்பட்ட பிரச்சனை.  அந்தப் பையனோட அப்பன் ஒன்றும் தெரியாத ஆள் இல்லை. அவரும் நானும் மூன்றாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தவர்கள்.
         அவர் தொடர்ந்து படித்து வாத்தியாரா ஆயிட்டாரு.  அதுவும் உள்ளூர் தொடக்கப் பள்ளியிலேயே தலைமை ஆசிரியர் வேலை.  இதைப்போயி அவரிடம் எப்படி பேசுவது?  அவர் என்ன நினைப்பாரோ? பேசாமலும் இருக்க முடியாதே.  எப்படியோ அவரிடம் தனியா பேசி மற்றவர்களுக்குத் தெரியும் முன் இப்பிரச்சனையை முடித்துவிட வேண்டும்”  என்று பலவாறு சிந்தித்தவாறு அவ்வூர் தொடக்கப் பள்ளியை அடைந்தான் முத்து.  
        மாணவர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் இராமசாமி. என்னைப் பார்த்ததும் வெளியில் வந்து “என்னப்பா முத்து, பாத்து ரொம்ப நாள் ஆச்சி.  திடீர்னு இந்தப் பக்கம் வந்தினு இருக்க. ஏதாவது விசேஷமா?” என்றார்.
         “ஒன்னுமில்லை. உன்கிட்ட தனியா பேசணும்” என்றான் முத்து.
     உடனே மாணவர்களைப் படிக்கச் சொல்லிவிட்டு, அவனைத்  தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்துச் சென்றார்.
     நடந்த சம்பவத்தைச் சொல்லிவிட்டு அந்தக் காகிதத்தைக் கொடுப்பதா, அல்லது காகிதத்தைப் படிக்கச் சொல்லிவிட்டு நடந்த சம்பவத்தைச் சொல்வதா என்று யோசித்துக் கொட்டிருந்தான். 
        “என்னப்பா முத்து வந்த விசயம்” என்றார்.
தன் சட்டைப் பையிலிருந்த காகிதத்தை எடுத்துக் கொடுத்துப் படிக்கச் சொன்னான்.
          வாங்கிப் படித்த அவர்:  “ஆஹா, என்ன அருமையான கவிதை.  இப்படி ஒரு  கவிதையை இனி எவராலும் எழுத முடியாது.  என்ன எளிய நடை, என்ன ஒரு பொருள் செருக்கு.  இதைப் படித்துக் காட்டட்டுமா?” என்றார்.
    “என்ன சொல்வதென்றே தெரியவில்லை.  வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறாரே?   தந்தையிடம் தன் மகனைப் பற்றி  எப்படி புகார் தெரிவிப்பது” என்று தெரியாமல் அமைதியாக இருந்தான்.
       “ஒரு நிமிடம் இரு” என்று கூறிவிட்டு வகுப்பறைக்குச் சென்ற அவர் ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருத்தியை அழைத்து வந்தார்.
      “இந்தக் கவிதையைப் படிப்பதைவிட ராகம் போட்டுப் பாடக் கேட்டால் நன்றாக இருக்கும், இந்தாம்மா,  இந்தக் கவிதையை ராகம் போட்டுப் பாடு”  என்று அந்த காகிதத்தை அந்த குழந்தையிடம் கொடுத்தார்.
          இரண்டு பேருக்குத் தெரிந்தது, மூன்று பேருக்குத் தெரிந்து, இப்ப ஊருக்கே தெரியப் போகுதே என்று மனம் வருந்தி “பாட வேண்டாம்”  என்று சொல்வதற்குள் அக்குழந்தை ராகம் போட்டுப் பாடத் தொடங்கிவிட்டது:

வீணையடி நீயெனக்கு, மேவும்விரல் நானுனக்கு,
பூணும்வடம் நீயெனக்கு, புதுவயிரம் நானுனக்கு
காணுமிடந் தோறுநின்றன் கண்ணினொளி வீசுதடி!
மாணுடைய பேரரசே! வாழ்வுநிலை யே!கண்ணம்மா!

வானமழை நீயெனக்கு, வண்ணமயில் நானுனக்கு,
பானமடி நீயெனக்கு, பாண்டமடி நானுனக்கு
ஞானவொளி வீசுதடி, வண்ணமயில் நானுனக்கு
ஊனமறு நல்லழகே! ஊறுசுவை யே!கண்ணம்மா! 

காதலடி நீயெனக்கு, காந்தமடி நானுனக்கு
வேதமடி நீயெனக்கு, விந்தையடி நானுனக்கு
போதமுற்ற போதினிலே பொங்கிவரும் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயி ரே!கண்ணம்மா!
பாடி முடித்ததும் அக்குழந்தையை வகுப்பறைக்கு அனுப்பிவைத்த ஆசிரியர் கேட்டார்:
     “இன்னைக்குப் பாரதியார் பிறந்த நாள்.  ஹைஸ்கூல்ல பாட்டுப் போட்டி நடப்பதா என் பையன் சொன்னான். உங்கப் பொண்ணு இங்கப் படிக்கும்போதே நல்லாப் பாடுவா. அவ ஹைஸ்கூல்ல பாடினா முதல் பரிசு அவளுக்குத்தான் கிடைக்கும்னு இந்தக் கவிதையை அவ கிட்ட கொடுக்கச் சொன்னேன்.  எங்கப் பையன் வந்து கொடுக்கலயா?” என்றார்.
          அப்பொழுதுதான் அவனுக்குப் புரிந்தது.  அது பாரதியார் கவிதை என்று.
ஆசிரியரிடமிருந்த காகிதத்தை வாங்கிக்கொண்டு  ஹைஸ்கூலை நோக்கி ஓடினான் முத்து மகிழ்ச்சியோடு.
          முத்து எதற்காக வந்தான் என்று தெரியாமல் விழித்தார் ஆசிரியர்.

Comments