புத்தக காப்பகமா நூலகங்கள்?

(19.3.2018 அன்று தினத்தந்தியில் 
வெளிவந்த எனது கட்டுரை)


     இந்தியாவிலேயே முதன்முதலாக நூலகச் சட்டம் இயற்றிய மாநிலம் என்கின்ற பெருமை தமிழகத்தைச் சாரும். தமிழகத்தைச் சேர்ந்த இந்திய நூலகத்தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களின் பெரும் முயற்சியால் இச்சட்டம் இயற்றப்பட்டது. 
     இச்சட்டத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் தாங்கள் வசூல் செய்யும் சொத்து வரியில் பத்து சதவீதம் நூலக வரியாக வசூலித்து நூலகத்துறைக்குக் கொடுக்கின்றன. இந்நிதிதான் பொதுநூலகத்துறையின் முக்கிய வருவாயாகும்.
     தமிழகத்தில் பொது நூலகத்துறையின் கீழ் கன்னிமரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், 32 மாவட்ட மைய நூலகங்கள், 1926 கிளை நூலகங்கள், 1914 ஊர்ப்புற நூலகங்கள், 715 பகுதிநேர நூலகங்கள், 14 நடமாடும் நூலகங்கள் என்று 4603 நூலகங்கள் இயங்கி வருகின்றன.
      வாசகர்களுக்கு நூல்களை இரவலாக வழங்குவது, வாசகர்கள் கலந்தறிய விரும்பும் நூல்களை வழங்குவது, ஒலி ஒளி மூலம் வாசகர்களுக்கு தகவல்களை அளித்தல், பள்ளிகளுடன் இணைந்து நூலகச் சேவையை வழங்குவது, படித்த ஒவ்வொருவரையும் நூலக உறுப்பினராக ஊக்கப்படுத்துவது முதலான பணிகளை இந்நூலகங்கள் செய்து வருகின்றன.
    தமிழ்நாட்டில் நூலகத்துறைக்கு நல்ல கட்டமைப்பு இருந்தபோதிலும், அறிவுக் களஞ்சியங்களாகத் திகழும் நூலகங்களில் வாசகர் வருகையும் நூல்கள் பயன்பாடும் நாளுக்குநாள் குறைத்து வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. வாசகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நூலகங்களின் சேவைகள்  இல்லை என்கின்ற வாசகர்களின் குற்றச்சாட்டைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
    இன்று, தமிழகத்தில் உள்ள பொது நூலகங்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தைப்போல், வெறும் புத்தகங்களைப் பாதுகாக்கும் இடமாகத்தான் இருக்கின்றன. ஒரு வாசகர் கேட்கும் புத்தகம் நூலகத்தில் உள்ளதா, இல்லையா என்பதைத் தேடித்தான் சொல்ல முடியும் என்ற நிலையில்தான்  இருக்கிறோம்.
    மக்களின் வாழ்க்கை இயந்திரமயமாக மாறிவிட்டது. இதனால், எந்த ஒரு வாசகரும் நூலகத்திற்குச் சென்று தனக்குத் தேவையான புத்தகத்தைத் தேடி எடுத்துப் படிக்க நேரம் ஒதுக்குவதில்லை. நூலகத்திற்கு வரும் வாசகர்கள், இணையதளத்தில் சில நொடிகளில் கிடைக்கும் தகவல்களைப் போல, தனக்குத் தேவையான புத்தகம் தன் கைக்கு உடனே கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
     எல்லாத் துறைகளும் கணினிமயமாக்கப்பட்டு விட்டன. கணினிமயமாக்குவதில் மற்ற துறைகளைக் காட்டிலும் முன்னணியில் இருக்க வேண்டிய நூலகத்துறை அதைச் செய்யவில்லை.
  32 மாவட்ட மைய நூலகங்கள் மட்டும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான நூலகங்களுக்கு கணினிகள் வழங்கப்பட்டுப் பல ஆண்டுளுக்கு மேலாகியும் மென்பொருள் வழங்கப்படாததால், அக்கணினிகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. நூலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணினிகளுக்குத் தேவையான நூலக நிர்வாக மென்பொருள் வழங்கி  கணினிமயமாக்க  முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
   மாநிலத்தில் உள்ள அனைத்து நூலகங்களும் கணினிமயமாக்கப்பட்டு, அனைத்து நூலகங்களும் ஒரே வலைப்பின்னலில் இணைக்கப்பட்டால் வாசகர்கள் தங்களுக்குத் தேவையான நூல்களை எளிதில் பெற முடியும்.
   நூலகங்கள் புத்தகங்களையும், பத்திரிகைகளையும் வாசிக்கும் இடமாக மட்டும் இல்லாமல், தகவல் மையங்களாக மாற்ற வேண்டும்.  எந்த ஒரு தகவல் வேண்டி வாசகர் வந்தாலும், அந்தத் தகவலை உடனே வழங்கக்கூடிய நிலையில் நூலகச் சேவை மேம்படுத்தப்பட வேண்டும். நூலகங்களில் இணைய தள வசதிகள் ஏற்படுத்தி நூலகர்களுக்குத் தக்க பயிற்சி அளிப்பதன் மூலம் நூலகங்களைத் தகவல் மையங்களாக மாற்றமுடியும்.
   மாணவர்களை அதிக அளவில் நூலகத்தை பயன்படுத்தச் செய்ய வேண்டும். நூலகங்களில் அவ்வப்போது மாணவர்களுக்கான போட்டிகள் நடத்திப் பரிசு வழங்க ஏற்பாடு செய்யலாம். இப்போட்டிகளில் ஒவ்வொரு மாணவரும் ஏதாவது ஒரு போட்டியில் பங்குபெறுவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். புத்தகங்களின் பெருமைப் பற்றியும், புத்தக வாசிப்பின் அருமைப் பற்றியும், நூலகங்களின் தேவைப் பற்றியும் மாணவர்களிடம்  எடுத்துச்சொல்ல வேண்டும்.
    வேலைவாய்ப்பு தொடர்பான பத்திரிகைகள், சிறுவர் பத்திரிகைகள் மற்றும் உள்ளூர் சிற்றிதழ்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.  நூலகங்களில் அடிக்கடி விழாக்கள் எடுப்பதன் மூலம் பொது மக்களைப் பெருமளவில் நூலக இயக்கத்தில் பங்கேற்கச் செய்ய முடியும். நூலகச் சேவையை மேம்படுத்துவதன்மூலம், இளைஞர்கள் நூலகங்களுக்கு வருவதை அதிகரிக்க முடியும்.  இதனால், அவர்கள் சமூக சீர்கேடுகளில் ஈடுபடுவது வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது.
 நூலகத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 முதல் 20 வரை கொண்டாடப்படும் நூலக வார விழாவை சம்பிரதாய விழாவாக நடத்தாமல், அனைத்து நூலகங்களிலும் ஏழு நாட்களும் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து விழா நடத்த வேண்டும். இதன் மூலம் வாசகர்களிடம் நூலக விழிப்புணர்வு ஏற்படும். அதேபோல் உலகப்புத்தக தின விழா, நூலகர் தின விழா மற்றும் தேசிய விழாக்களை அனைத்து நூலகங்களிலும் கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும்.
          “பயன்படுத்தப்படாத புத்தகங்கள் வெறும் காகிதக் கட்டுகள் என்கிறது சீனப்பழமொழி.
ஆளுக்கு ஒரு நூல், நூலுக்கு ஒரு ஆள் என்பது இந்திய நூலகத் தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதனின் நூலக விதியாகும். அவரது நூலக விதிக்கு ஏற்ப நூலகங்களில் உள்ள ஒவ்வொரு நூலும் பயன்படுத்தப்படுகிறது என்கின்ற நிலையை உருவாக்க வேண்டும்.
   இன்றைய உயர் தொழில்நுட்பச் சூழலில் நூலகத்தின் ஒவ்வொரு செயல்பாடும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், நூலகர்கள் அதற்கேற்பத் தங்கள் தகுதியையும் திறன்களையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
நூலகர்கள் புத்தகங்களையும், தகவல்களையும் சேகரித்துப் பயனர்களுக்கு வழங்குபவராக மட்டும் இல்லாமல்வாசகர்களுக்குத் தகவல்களை மொழிபெயர்த்துத் தருபவராகவும் இருக்க வேண்டியுள்ளது.

  மொத்தத்தில், தமிழக அரசு பொது நூலகத்துறை நூலகங்கள் வாசகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பத் தங்கள் சேவைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

Comments