தென்கரைக் கோட்டையின் தொன்மை பாதுகாப்படுமா?

தென்கரைக் கோட்டையின் தொன்மை பாதுகாப்படுமா?
(கண்ணியம் மாத இதழ் டிசம்பர் 2011, 
தருமபுரி மாவட்டச் சிறப்பிதழில் வெளிவந்த  எனது கட்டுரை)

தருமபுரி மாவட்டத்தில் ஏராளமான தரைக் கோட்டைகளும், மலைக் கோட்டைகளும் இருந்திருக்கின்றன.  
மலைக் கோட்டைகள் கற்களால் அமைக்கப்பட்டதால் நீண்ட நாட்கள் அழியாமல் இருக்கின்றன.  ஆனால், தரைக் கோட்டைகள் பெரும்பாலும் மண்ணால் கட்டப்பட்டவை. சுற்றுச் சுவரின் வாயில் பகுதி மட்டும் கற்களைக் கொண்டு அமைக்கப் பட்டவை.  உரிய பராமரிப்பு இல்லாமல் போனதாலும், அருகாமையில் வசிப்போரின் ஆக்கரிமிப்புகளாலும் தரைக் கோட்டைகள் அழிந்து போயின.  எஞ்சி இருப்பவை அதியமான் கோட்டையும், தென்கரைக் கோட்டையும் மட்டுமே.
தருமபுரியிலிருந்து தென்கிழக்கே கடத்தூர் வழியாக சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ளது தென்கரைக் கோட்டை.  இக்கோட்டை அருகில் ஜலகண்டீஸ்வரர் ஆறு உள்ளது.  இவ்வாற்றிற்கு வடக்கே வடகரை என்னும் ஊர் உள்ளது. இவ்வாற்றிற்குத் தெற்கே இக்கோட்டை அமைந்துள்ளதால் இது தென்கரைக் கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
கி.பி. 1652 ஆம் ஆண்டு வரை இக்கோட்டை பீஜ்பூர் சுல்தான்களின் வசம் இருத்தது.  கி.பி. 1652 க்குப் பிறகு கர்ணல் உட் என்பவர் கைக்கு மாறியது.  12.2.1768 இல் ஐதர் அலியின் கைக்குச் சிக்கியது. திப்பு, மன்றோ ஆகியோர்களின் காலத்தில்கூட இவ்வூர் முக்கிய நகரமாகத் திகழ்ந்தது. பழைய ஆவணங்களில் தென்கரைக்கோட்டை தாலுகா என்றே இருப்பதை காணமுடிகிறது.
முழுவதும் மண்ணால் அமைக்கப்பட்ட மதில் சுவர் அரணாகக் கொண்டது இக்கோட்டை. மதில் சுவர் சுமார் 20 அடி உயரமும், இதன் அகலம் கீழ் பகுதி 20 அடியும், மேற்பகுதி 10 அடியாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது.  
இம்மதில் சுவரைச் சுற்றி அகழி அமைக்கப் பட்டுள்ளது. இவ்வகழியில் தற்பொழுது மண் தூர்ந்துள்ளதால் இதன் உண்மையான ஆழம் மற்றும் அகலம் அறிய முடியவில்லை.  இருப்பினும், இதன் ஆழம் சுமார் 15 அடியாகவும்,  அகலம் 20 அடியாகவும் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இக்கோட்டைக்குத் தெற்கே ஏரி ஒன்று பெரியதாக உள்ளது.  இந்த ஏரியிலிருந்துதான் அகழிக்குக் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டுவந்ததாக சொல்லப்படுகிறது.
இக்கோட்டையின் நுழைவு வாயில் கிழக்குப் பக்கத்தில் உள்ளது. நுழைவு வாயிலில் நுழைந்ததும் எதிர் கொள்வது விநாயகர் சிலை.  இவ்விநாயகருக்கு எதிரில் ஓர் அனுமன் சிலை வைத்திருக்கிறார்கள். இக்கோட்டைக்கு வருவோர் முதலில் விநாயகரைத் தரிசித்துவிட்டுத்தான் உள்ளே சென்றிருக்கக்கூடும்.
நூழைவு வாயில் நேராக அமைக்கப்படவில்லை.  நுழைவு வாயிலிலிருந்து கோட்டைக்குச் செல்லும் வழி வளைந்து, வளைந்து செல்கிறது. எதிரிகள் எளிதில் கோட்டையினுள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இவ்வாறு பாதை வளைவுகள் கொண்டதாக அமைக்கப் பட்டிருக்கிறது. 
மூன்று வளைவுகளைத் தாண்டிச் சென்றால் பெரிய மைதானம் காட்சி அளிக்கிறது.  இம்மைதானத்தில்தான் கல்யாண ராமன் கோயில், சிவன் கோயில், திரௌபதி அம்மன் கோயில், சித்தர் கோயில், அரசவை, இராணி குளிக்கும் குளம்,  குதிரை லாயம், தானியம் சேமித்து வைக்கும் களஞ்சியம் முதலியன இடம் பெற்றுள்ளன.
சைவக் கோயிலும்(சிவன் ஆலயம்), வைணவக் கோயிலும் (கல்யாணராமன் ஆலயம்) அருகருகே அமைந்துள்ளது இக்கோட்டையின் சிறப்பம்சமாகும். 
கல்யாணராமன் கோயிலில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், பலிப் பீடம், கொடிக் கம்பம் முதலியன உள்ளன.
மகா மண்டபத்தின் முன்புறத்தின் வடக்கு மற்றும் தெற்குப் பக்கங்களில் குதிரை வீரர்களின் சிற்பங்கள் கண்ணைக் கவரும் வகையில் வடிக்கப்பட்டுள்ளன.
மகா மண்டபம் முழுவதும் கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.  இதில் பல இசைத் தூண்களும் காணப்படுகின்றன.  இத்தூண்களில் மன்னர்களின் திருவுருவச் சிற்பங்கள் செதுக்கப்பட்டடுள்ளன.  முறுக்கிய மீசை கொண்ட இவர்களது இடையில் குறு வாளும், தலைப் பாகையும் அணிந்து கம்பீரமான தோற்றத்தில் இறைவனை வணங்குவது போன்றசிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
இக்கோயிலில் நவகண்டம் ஒன்றும் காணப்படுகிறது.  தன் தலையைத் தானே கொய்யும் வழக்கத்தின் அடிப்படையில் அமைந்தது நவகண்டம்.  அத்தகு வழக்கத்தைக் காட்டும் சிற்பங்களும் உள்ளன.  
மண்டபத்தின் வெளிப்புறத்தில் நான்கு பக்கங்களிலும்  அமைந்துள்ள தூண்களில் புலியைக் குத்தும் குதிரை வீரன் சிற்பங்கள் உள்ளன. கருவறையில் இராமர் கல்யாண கோலத்தில் சீதையுடன் காட்சியளிக்கிறார்.
கல்யாணராமன் கோயிலுக்கு வடக்கே ஒரு சிவன் கோயில் உள்ளது.  இக்கோயில் கருவறையில் ஒரு பெரிய சிவலிங்கம் காணப்படுகிறது.    இக்கோயில் மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடுகள் அதிகம் இல்லை யென்றாலும், மேற்கூரையில் மீன், காமதேனு, பாம்பு முதலான உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
இராமன் கோயிலுக்குத் தெற்கே மதில் சுவரின் அருகில் ஒரு பிரமாண்டமான தானிய சேமிப்புக் கிடங்கு உள்ளது. இக்களஞ்சியம் சுமார் 80 அடி நீளமும் 40 அடி அகலமும் 40 அடி உயரமும் கொண்டதாக இருக்கிறது.  இது பத்தடி உயரத்திற்குக் கருங்கல்லாலும் அதற்கு மேல் செங்கல் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றாலும் கட்டப்பட்டுள்ளது. செங்கல் மற்றும் சுண்ணாம்பைக் கொண்டு மேற்கூரை வளைவாக அமைக்கப்பட்டிருகிறது.  இக் களஞ்சியத்தின் மேற்கூரை முழுவதும் இடிந்து விழுந்து விட்டதால் நாற்புறமும் சுவர்கள் மட்டும் ஓங்கி நிற்கின்றன.  சமார் 600 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமை வாய்ந்ததாக இக்கட்டடம் உள்ளது.
சிவன் கோயிலுக்கு வடக்கே மதில் சுவரின் அருகில் ஒரு குளம் அமைந்துள்ளது.  இக்குளம் சுமார் 30 அடி ஆழம் உடையதாக இருக்கிறது. குளத்தின் சுற்றுச்சுவர்கள் கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளன.  பாம்பு, மீன் முதலான அழகிய சிற்பங்கள் குளத்தின் படிக்கற்களில் செதுக்கப்பட்டுள்ளன.  
கல்யாணராமன் கோயிலுக்கும், சிவன் கோயிலுக்கும்  நடுவில் அரண்மனை உள்ளது. ஆனால், தற்பொழுது அதன் பெரும்பகுதி பாழடைந்து விட்டன. செங்கற்களால் அமைக்கப்பட்ட பெரிய பெரிய தூண்களுடன் கூடிய கூடம் மட்டும் காணப்படுகிறது.  இதில் அண்மைக் காலம் வரை ஊஞ்சல் இருந்ததாகக் கூறப்படுகிறது.  
அரண்மனைக்குப் பின்புறம் குதிரை லாயம் ஒன்று கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.  இக்குதிரை லாயத்தின் தூண்கள் அடிப்பக்கம் சிறியதாகவும் மேற்பகுதி பெரியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அரசனின் குதிரைகள்  பராமரிக்கப்பட்டிருக்கின்றன.  இக்குதிரை லாயத்தின் வாசற்படி வடக்கு நோக்கி இருந்தாலும், உள்ளிருந்து நான்கு பக்கமும் செல்லும் வகையில் நான்கு புறமும் பெரிய திறப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.  
தென்கரைக் கோட்டையில் திரௌபதி அம்மன் கோயில் ஒன்று இருக்கிறது.  அது சிவன் கோயிலின் பின்புறம் அமைந்துள்ளது. ஆனால், அது பழுதடைந்து பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதன் கருவறையில் மூன்று அம்மன் சிலைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
இக்கோட்டையில் மற்றொரு மிகச் சிறிய கோயில்  உள்ளது.  ஒரு சிறிய தாமரைக் குளத்தின் நடுவில் அக்கோயில் அமைந்திருக்கிறது.  அக்கோயிலும், குளமும் சுமார் 15 அடி விட்டம் மட்டுமே உடையதாக இருக்கிறது.   ஒரு சிலை மட்டும் வைக்கும் அளவில் கோபுர வடிவில் அக்கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. கோயில் கருவறையில் உள்ள சிலை அபிசேகம் செய்யும்போது வெளியேறும் தண்ணீர் கோயிலைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சுண்ணாம்புக் கலவையால் அமைக்கப்பட்ட குளத்தில் விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் இருந்த சிலை திருடப்பட்டு விட்டதால் இது என்ன கோயில் என்று அறிய முடியவில்லை.
நம் கலாச்சாரத்தின் தொன்மையாகத் திகழும் தென்கரைக் கோட்டை பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று.  இதில் உள்ள கோயில்களில் சனிக்கிழமைகளில் மட்டும் வழிபாடு நடைபெறுவதால் ஓரளவு பராமரிக்கப்படுகின்றன.  ஆனால், மற்றவரலாற்றுச் சின்னங்களான களஞ்சியம், கோட்டை மதில்சுவர், அகழி, குதிரை லாயம், திரௌபதி அம்மன் கோயில் முதலானவை பராமரிப்பு இல்லாததால் அவை அழிந்து அதன் சுவடுகள்கூட தெரியாமல் போகும் நிலையில் உள்ளன.
எதிர்காலச் சந்ததியினர் கடந்த கால வரலாற்றைத் தெரிந்து கொள்ள நமது வரலாற்றுச் சின்னங்களைக் காப்பது நமது கடமை.  தொல்லியல் துறையும், ஊராட்சி மன்றமும், உள்ளூர் மக்களும் இதில் கவனம் செலுத்தி தென்கரைக்கோட்டையின் வரலாற்றைக் காக்க வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.


Comments