வட்டார மொழிப் படைப்புகளை ஏற்றுக்கொண்ட நாம் ஆங்கில வார்த்தை உச்சரிப்புகளுக்கு (pronounciation) முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

 
Saravanan.C.

         
    ஆங்கிலம் நம் தாய்மொழி அன்று. இஃது ஓர் அந்நிய மொழி. தமிழக மாணவர்களுக்கு, குறிப்பாக, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் என்றாலே கசப்புதான். அதுவும் அவர்கள் சிரமப்பட்டுப் படிக்கும் ஆங்கில வார்த்தைகளை இப்படி உச்சரிக்காதே, அப்படி உச்சரிக்காதே என்று சொல்வது நியாயமா?
   பொதுவாக, சிறுவர்களாகட்டும் பெரியவர்களாகட்டும் எழுத்துக்களைக் கூட்டி (spelling)ல் உள்ளவாறு உச்சரிப்பதுதான் வழக்கம். அதுதான் எளிது.
    பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் கற்கும்போது, எழுத்துக்களைக் கூட்டி அப்படியே படித்துவிட்டுப் போக அனுமதிக்கப்பட வேண்டும். விதி விலக்கான வார்த்தைகளை மட்டும் பட்டியிலிட்டு (உதாரணமாக: knife, kneel, palm, column) மாணவர்களிடம் கொடுத்துவிட்டு மற்ற எல்லா வார்த்தைகளையும் spelling-ல் உள்ளவாறு படிக்க அனுமதிக்க வேண்டும். இதைத் தவிர்த்து, ஆங்கில அகராதியை எடுத்துக்கொண்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள உச்சரிப்புக் குறிப்புகளை (phonetic symbols) சுட்டிக்காட்டி உச்சரிப்பு கற்றுக் கொடுப்பதும், பாடத்தின் இறுதியில் சில வார்த்தைகளைக் கொடுத்து, அதனை உச்சரிக்கப் பயிற்சி கொடுப்பதும் அவசியமா?
     இவ்வாறு ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்க நிர்பந்தப்படுத்துவது மாணவர்கள் மத்தியில் ஆங்கிலம் கற்கும் ஆர்வம் குறையக் காரணமாகிவிடுகிறது.
       தமிழ் மொழி பேசும் தமிழ்நாடு, இந்திய அளவில் சிறிய நிலப்பரப்பு. அதுவே உலக அளவில் அதன் பரப்பளவு மிகமிகச் சிறியதாகும். அப்படிப்பட்ட மிகச்சிறிய நிலப்பரப்பில் பேசப்படும் தமிழ் மொழி ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு விதமாக உச்சரிக்கப்படுகிறது. சென்னையில் பேசப்படும் தமிழையும், திருநெல்வேலியில் பேசப்படும் தமிழையும், கோவையில் பேசப்படும் தமிழையும் ஒப்பிட்டுப்பார்த்தால் தமிழ் மொழி எவ்வாறெல்லாம் பேசப்படுகிறது என்று தெரியும். மிகக் குறுகிய நிலப்பரப்பாக உள்ள தமிழகத்தில் பேசப்படும் தமிழில் எத்தனை வேறுபாடு?
      இது பேச்சு வழக்குதான் என்று விட்டு விடலாம். ஆனால், இன்றைக்கு வட்டார மொழி இலக்கியம் என்கின்ற பெயரில் சிறுகதைகளும் புதினங்களும் எழுதப்படுகின்றன. இவை மட்டுமல்ல. தற்போது வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள்கூட வட்டார மொழிகளிலேயே இருக்கின்றன.
    வட்டார மொழி இலக்கியங்களை ஏற்றுக்கொண்ட நாம், உலகம் முழுவதும் பேசப்படும் ஆங்கில மொழியில் உள்ள வார்த்தைகளை மட்டும் இப்பத்தான் உச்சரிக்க வேண்டும் என்று சொல்வது வேடிக்கையாக இல்லையா?
      அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இங்கிலாந்து ஆங்கிலத்திற்கும் எவ்வளவோ வேறுபாடு இருக்கும்போது, நம் குழந்தைகளுக்கு மட்டும் phonetics பாடம் வைத்து ஆங்கிலத்தை இப்படித்தான் உச்சரிக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்து, குழந்தைகளின் ஆங்கிலம் கற்கும் ஆர்வத்தைக் குறைக்க வேண்டுமா என்பது என் ஆதங்கம்.                                 

Comments