நூலகங்களின் சேவைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியம்

Saravanan.C

மாறிவரும் பரிமாணங்களில்
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை நூலகங்களின் சேவைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியம்
Need to improve the services of Tamil Nadu public libraries in changing dimensions

சுருக்கம் (Abstract):
வளர்ந்துவரும் இன்றைய உயர் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சூழலுக்கு ஏற்ப, பொது நூலகங்கள் தங்கள் மேலாண்மையையும், சேவைகளையும் மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  அந்த வகையில் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை நூலகங்களின் சேவைகளையும்,  அங்குப் பணிபுரியும் நூலகர்களின் பணிகளையும் மறுஆய்வு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
                இந்த ஆய்வறிக்கையின் சிறப்பம்சம் என்னவென்றால், வளர்ந்து வரும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பவும், வாசகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவும், தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் கீழ் இயங்கும் பொது நூலகங்களில் கொண்டுவரப்படவேண்டிய மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக விவாதிப்பதாகும்.
இன்றைய உயர் தொழில்நுட்ப உலகில், சவால்களைச் சமாளிக்க, நூலகச் சேவைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியம், அங்குப் பணிபுரியும் நூலகர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய தகுதிகள் மற்றும் திறன்களை இவ்வறிக்கை ஆலோசனைகளாக முன்வைக்கிறது. 
 Keywords: Public Libraries, Tamil Nadu.
முன்னுரை (Introduction):
இந்தியாவிலேயே முதன்முதலாக நூலகச் சட்டம் இயற்றிய மாநிலம் என்ற பெருமை தமிழகத்தைச் சாரும். தமிழகத்தைச் சேர்ந்த இந்திய நூலகத்தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களின் பெரும் முயற்சியால் இச்சட்டம் இயற்றப்பட்டது. 
இச்சட்டத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் தாங்கள் வசூல் செய்யும் சொத்து வரியில் பத்து சதவீதம் நூலக வரியாக வசூலித்து நூலகத்துறைக்குக் கொடுக்கின்றன. இந்நிதிதான் பொதுநூலகத்துறையின் முக்கிய வருவாயாகும்.
இதுவரை இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பாதி மாநிலங்களில் மட்டுமே நூலகச் சட்டம் இயற்றப்பட்டுள்ளன. இன்றும் பல மாநிலங்களில் நூலகச் சட்டம் இயற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு பொது நூலகங்கள் சட்டம் 1948 இன்படி தமிழகத்தில் பொது நூலகங்கள் தொடங்கப்பட்டன. தொடக்கத்தில் கல்வித்துறையின் கீழ் நூலகங்கள் செயல்பட்டு வந்தன. 1972 ஆம் ஆண்டு பொது நூலகத்துறை இயக்ககம் தொடங்கப்பட்ட பின் நூலகத்துறை தனித்துறையாகச் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பொது நூலகத்துறையின் கீழ் இயங்கி வரும் நூலகங்கள்:
(Libraries of the Public Libraries Department)
அட்டவணை 1
S.l.
நூலகங்கள்    Libraries
எண்ணிக்கை
1
கன்னிமரா பொது நூலகம்   (Connemara Public library)
1
2
அண்ணா நூற்றாண்டு நூலகம் (Anna Centenary library)
1
3
மாவட்ட மைய நூலகங்கள் (District Central library)
32
4
கிளை நூலகங்கள் (Branch libraries)
1926
5
ஊர்ப்புற நூலகங்கள் (Village libraries)
1914
6
பகுதிநேர நூலகங்கள் (Part time libraries)
715
7
நடமாடும் நூலகங்கள் (Mobile libraries)
14

மொத்தம் (total libraries)
4603
 (Source: www.tnpubliclibraries.gov.in)

பொது நூலகத்துறையின் சேவைகளும் திட்டங்களும் (Services and programmes of the Public Library Department):
Ø  வாசகர்களுக்கு நூல்களை இரவலாக வழங்குவது (Lending Service)
Ø  வாசகர்கள் கலந்தறிய விரும்பும் நூல்களை வழங்குவது (Reference Service)
Ø  வாசகர்களுக்கு ஒலி ஒளி மூலம் தகவல்களை அளித்தல் (Audio Video Services)
Ø  பள்ளிகளுடன் இணைந்து நூலகச் சேவையை வழங்குவது (Linkage of the Schools)
Ø  தேசிய கருத்தரங்குகள் / மாநாடுகள் நடத்துதல் (Conducting National Seminars/ Conferences)
Ø  நூலகப் பணியாளர்களுக்கு பயிற்சிகள் அளித்தல் (Training programmes to staff members)
Ø  கிராமப்புறங்களில் பகுதிநேர நூலகங்களையும், ஊர்ப்புற நூலகங்களையும் தொடங்குவது (Opening of part time Libraries/ Village libraries in rural areas)
Ø  புதிய புத்தகங்களை நூலகங்களுக்கு விநியோகம் செய்வது (Adding latest books to the libraries)
Ø  படித்த ஒவ்வொருவரையும் நூலக உறுப்பினராக ஊக்கப்படுத்துவது (Encouraging every educated person to become a member of the library)
Ø  நூலகங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துத்தருவது (Providing basic amenities to libraries)
Ø  புதிய தொழில்நுட்பங்களைப் அறிமுகப்படுத்தி நூலகங்களை நவீனமயமாக்குவது (Modernizing the libraries by introducing latest techniques)
Ø  புதிய நூலக கட்டிடங்கள் கட்டுதல் (Construction of new library buildings).

2016-17 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, 20 கோடி மக்கள் தொகை கொண்ட உத்ரப்பிரதேசத்தில் 75 பொது நூலகங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. அங்கு நூலகங்களுக்குச் செலவிடும் தொகை வெறும் ரூ.22 கோடி மட்டுமே. அதிலும் ஊதியம் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கே ரூ.20 கோடி செலவிடப்படுகிறது. (Source: Indian Express, New Delhi, May 31, 2017)
ஆனால், 6.78 கோடி மக்கள் தொகை உள்ள தமிழ்நாட்டில் 4603 பொது நூலகங்கள் இயங்கி வருகின்றன. இதே 2016-17 ஆம் நிதி ஆண்டு நூலகத்துறை பெறப்பட்ட நிதி ஆதாரங்கள்: நூலக வரி ரூ.74.57 கோடி, ராஜாராம் மோகன்ராய் நிதி ரூ.3 கோடி மற்றும் அரசு இணை மானியம் ரூ.3 கோடி ஆகும். (Source: School Education Department, Policy Note 2017-2018)

தமிழ்நாட்டில் நூலகத்துறைக்கு நல்ல கட்டமைப்பு இருந்தபோதிலும், அறிவுக் களஞ்சியங்களாகத் திகழும் நூலகங்களில் வாசகர் வருகையும் நூல்கள் பயன்பாடும் நாளுக்குநாள் குறைத்து வருகிறது என்பதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
வாசகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நூலகங்களின் சேவைகள்  இல்லை என்கின்ற வாசகர்களின் குற்றச்சாட்டை, ஆய்வுப் பொருளாக எடுத்துக்கொண்டு, வாசகர்களிடையே முறையான கேள்வித்தாள் (structured questionnaire) ஒன்றைக் கொடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வு முறை (Methodology):
       தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில், மாவட்டத்திற்கு 40 வாசகர்கள் என்று மொத்தம் 880 வாசகர்களிடம் கேள்வித்தாள் வழங்கி பதில்கள் பெறப்பட்டன. மாவட்ட மைய நூலகங்கள், முழுநேர கிளை நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் என்று அனைத்து வகை நூலகங்களுக்கும் வருகைதரும் வாசகர்களிடம் அந்தந்த நூலகங்களில் பணிபுரியும் நூலகர்கள் மூலம் கேள்வித்தாள் வழங்கி பதில்கள் பெறப்பட்டன.
இக்கேள்வித்தாளில் நூலகச் சேவைகள், கட்டமைப்புகள், நூலகர் வாசகர் உறவு, வேலை நேரம், கணினிமயமாக்கல், நூல்கள் மற்றம் பத்திரிகைகள் விவரம், அத்துடன் வாசகர்கள் எதிர்பார்க்கும் சேவைகளும் ஆலோசனைகளாகப் பெறப்பட்டன.
தரவுப் பகுப்பாய்வு (Data analysis):
வாசகர்களிடையே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் தரவுப் பகுப்பாய்வு செய்யப்பட்டது:
1). பாலினம் அடிப்படையில் கேள்வித்தாள் வழங்கப்பட்டது:
அட்டவணை 2
வ.எண்
இனம்
வாசகர் எண்ணிக்கை
சதவிகிதம்
1.
ஆண்கள்
546
62
2.
பெண்கள்
334
38

மொத்தம்
880
100

2). நூலகத்திற்கு வரும் நோக்கம்:
அட்டவணை  3
வ.எண்.
நூலகத்திற்கு வரும் நோக்கம்
வாசகர் எண்ணிக்கை
சதவிகிதம்
1
செய்தித்தாள் படிக்க
334
38
2
சஞ்சிகைகள் படிக்க
202
23
3
நூல் இரவல் பெற
185
21
4
நூல்கள் கலந்தறிய
150
17
5
இணைய சேவை
9
1

மொத்தம்
880
100

3). நூலகத்தில் தேவையான புத்தகங்களைத் தேடி எடுப்பது:  அட்டவணை  4
வ.எண்.
புத்தகங்களைத் தேடி எடுப்பது
வாசகர் எண்ணிக்கை
சதவிகிதம்
1
தானே தேடி எடுப்பது
554
63
2
நண்பர்கள் உதவியுடன்
132
15
3
நூலகர் உதவியுடன்
106
12
4
சக வாசகர்கள் உதவியுடன்
62
7
5
இதர உதவியுடன்
26
3

மொத்தம்
880
100

4). நூலகச் சேவை:
அட்டவணை  5
வ.எண்.
நூலகச் சேவை
வாசகர் எண்ணிக்கை
சதவிகிதம்
1
திருப்தியாக உள்ளது
132
15
2
ஓரளவு திருப்தியாக உள்ளது
308
35
3
திருப்தியாக இல்லை
440
50

மொத்தம்
880
100

5). நூலகச் சேவைகளை மேம்படுத்த வாசகர்கள் வழங்கும் ஆலோசனைகள்:
அட்டவணை  6
வ.
எண்
நூலகச் சேவைகளை மேம்படுத்த
வாசகர்கள் வழங்கும் ஆலோசனைகள்
வாசகர் எண்ணிக்கை
சதவிகிதம்
1
கணினி, இணையதள வசதி ஏற்படுத்துதல்
766
87
2
வேலை நேரத்தை மாற்றுதல்
598
68
3
நூலகர் வாசகர் உறவை மேம்படுத்துதல்
475
54
4
கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது
370
42
5
நூலகங்களைத் தரம் உயர்த்துதல்
352
40
6
பருவஇதழ்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்
308
35
7
புத்தகங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்
194
22
8
மற்றவை
79
9

நூலகச் சேவைகளை மேம்படுத்துவது தொடர்பான வாசகர்களின் ஆலோசனைகள் அட்டவணை 6 இல் குறிப்பிடப்பட்டுள்ளன. 87 %   வாசகர்கள் நூலகங்கள் கணினிமயமாக்குவதன் மூலம் நூலகச் சேவை தங்களுக்கு விரைவாகக் கிடைக்கும் என்பதால் நூலகங்களைக் கணினிமயமாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
68 % வாசகர்கள் கிராமப்புறங்களில் செயல்பட்டுவரும் ஊர்ப்புற நூலகங்களின் வேலை நேரங்கள் தங்களுக்கு வசதியாக இல்லை என்று குறிப்பிடுகின்றனர். அந்நூலகங்களின் வேலை நேரமான காலை 9 -12, மாலை 4 -6.30 என்பதை, காலை 10 முதல் மாலை 4 மணி வரை என்று மாற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
54 % வாசகர்கள் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய நூலகர்கள் போதிய ஒத்துழைப்பும், ஆலோசனைகளும் வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
42% வாசகர்கள் நூலகங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கருதுகின்றனர். 40% வாசகர்கள் நூலகப் பயன்பாடு அதிகம் உள்ள நூலகங்களைத் தரம் உயர்த்துவதன்மூலம் நூலகச் சேவை மேம்படும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
35 % வாசகர்கள் நூலகங்களுக்கு வாங்கப்படும் பருவ இதழ்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்றும், 22 % வாசகர்கள் புத்தகங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று எதிர்பார்கின்றனர்.
பரிந்துரைகள் (Recommendations):
பொது நூலகத்துறை நூலகங்களின் சேவைகளை மேம்படுத்த கீழ்காணும் பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன:
1.    இன்று, 32 மாவட்ட மைய நூலகங்கள் மட்டும் கணினி மயமாக்கப் பட்டுள்ளன. மாநிலத்தில் உள்ள அனைத்து நூலகங்களும் கணினிமயமாக்கப்பட்டு, அனைத்து நூலகங்களும் ஒரே வலைப்பின்னலில் இணைக்கப்பட வேண்டும்.
2.    நூற்றுக்கணக்கான நூலகங்களுக்கு கணினிகள் வழங்கப்பட்டுப் பல ஆண்டுளுக்கு மேலாகியும் மென்பொருள் வழங்கப்படாததால் அக்கணினிகள் பயன் படுத்தப்படாமல் பழுதாகி வருகின்றன. ஆகவே, நூலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணினிகளுக்குத் தேவையான நூலக நிர்வாக மென்பொருள் வழங்க வேண்டும்.
3.    புத்தகங்களையும், பத்திரிகைகளையும் வாசிக்கும் இடமாக மட்டும் இல்லாமல், நூலகங்களைத் தகவல் மையங்களாக மாற்ற வேண்டும்.  எந்த ஒரு தகவல் வேண்டி வாசகர் வந்தாலும், அந்தத் தகவலை உடனே வழங்கக்கூடிய நிலையில் நூலகச் சேவை மேம்படுத்தப்பட வேண்டும். நூலகங்களில் இணைய தள வசதிகள் ஏற்படுத்தி நூலகர்களுக்குத் தக்க பயிற்சி அளிப்பதன் மூலம் நூலகங்களைத் தகவல் மையங்களாக மாற்றமுடியும்.
4.    நூலகங்களில் அடிக்கடி விழாக்கள் எடுப்பதன் மூலம் பொது மக்களைப் பெருமளவில் நூலக இயக்கத்தில் பங்கேற்கச் செய்ய முடியும்.
5.    வேலைவாய்ப்பு தொடர்பான பத்திரிகைகள், சிறுவர் பத்திரிகைகள் மற்றும் உள்ளூர் சிற்றிதழ்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
6.    கிராமங்களில் இயங்கும் ஊர்ப்புற நூலகங்கள் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6.30 மணி வரையும் இயங்குகின்றன.  இந்த வேலை நேரம் வாசகர்களுக்கு வசதியானதாக இல்லை என்று பரவலாகச் சொல்லப்படுகிறது.  கிராமங்களில் அதிகாலையில் வேலைக்குச் செல்பவர்கள் பகல் 11 மணிக்குமேல்தான் வீட்டிற்கு வருகின்றனர். மீண்டும் மாலை 3 மணிக்கு மேல் வேலைக்குச் செல்கின்றனர். இந்நூலகங்களின் வேலை நேரத்தைக் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை என்று மாற்றினால் பகல் ஓய்வு நேரத்தில் அதிக அளவில் பொதுமக்கள் நுலகத்திற்கு வர முடியும். வெளியூர் வேலைக்குச் செல்பவர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நூலகங்களுக்கு வந்து படிக்க முடியும்.
7.    வருவாய்க் கோட்டத் தலைநகரங்களில் இயங்கும் நூலகங்கள் தரம் உயர்த்துவதற்கான அரசாணை வெளியாகி ஐந்தாண்டுகளுக்கு மேலாகியும் தரம் உயர்த்தப்படாமல் உள்ளன. அந்நூலகங்கள் விரைவில் தரம் உயர்த்த வேண்டும்.
8.    பொது நூலகத்துறை செய்திமடல் மாத இதழ் மீண்டும் வெளிவர ஆவனசெய்ய வேண்டும். நூலகத்துறை சார்பாகப் பொது நூலகத்துறை செய்திமடல் என்னும் மாத இதழ் வெளிவந்து கொண்டிருந்தது. அதன் மூலம் நூலகத்துறையின் செயல்பாடுகளை நூலகர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவராமல் இருக்கும் பொது நூலகத்துறை செய்திமடல் மாத இதழை மீண்டும் வெளியிட முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
9.    முழு நேர நூலகங்களாகத் தரம் உயர்த்தப்பட்ட நூலகங்களுக்கு முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நூலகர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

பொது நூலகத்துறை நூலகர்களுக்குச் சிலப் பரிந்துரைகள்:
1.       இன்றைய உயர் தொழில்நுட்பச் சூழலில் நூலகத்தின் ஒவ்வொரு செயல்பாடும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், நூலகர்கள் அதற்கேற்பத் தங்கள் தகுதியையும் திறன்களையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
2. நூலகர்கள் புத்தகங்களையும், தகவல்களையும் சேகரித்துப் பயனர்களுக்கு வழங்குபவராக மட்டும் இல்லாமல், பயனர்களுக்குத் தகவல்களை மொழிபெயர்த்துத் தருபவராகவும் இருக்க வேண்டியுள்ளது.
3.   நூலகர்கள் தன்னம்பிக்கையும் திறமையும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் திறமையாகவும் திறம்படவும் சவால்களைச் சமாளிக்க முடியும்.
4.   இன்று நூலகர்கள் தகவல்களை வழங்குபவர்களாக (information provider), இணைய வழி தகவல்களைப் பெற்று தருபவர்களாக (Net based service provider), தரவுதள மேம்பாட்டாளராக (Database developer), தகவல் மற்றும் சேவை ஆலோசகராக (Information and Service Consultant) இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதை உணர்ந்து அதற்கேற்ப திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
முடிவுரை:
நல்ல கட்டமைப்பும், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் நன்கு பயிற்சி பெற்ற பணியாளர்களும் இருக்கும் நிறுவனங்களால் மட்டுமே சிறந்த சேவை வழங்க முடியும்.
மாற்றம் என்பது பொதுவானது. அது எல்லாத் துறையிலும் நிகழக்கூடியது.  மக்கள் எவ்வளவு விரைவாக மாற்றத்தைப் புரிந்து கொள்கிறார்களோ, அவ்வளவு விரைவாக மாற்றத்தைக் கொண்டு வருவது அவசியமாகும். அவ்வாறு நிறுவனங்கள் மாற்றத்தை விரைவாகக் கொண்டு வரவில்லையெனில் அவை, தங்ளைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது.
இந்தச் சித்தாந்தம் நூலகத்துறைக்கும் பொருந்தும்.  நூலகங்கள் எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக இருக்க வேண்டும். விரல்நுனியில் கூகுள் (Google on your fingertip) என்ற நிலையில் இன்றைய நூலகங்கள் மாறிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசு பொது நூலகத்துறை நூலகங்களும் வாசகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பத் தங்கள் சேவைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதற்கேற்ப தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை நூலகங்களில் பணிபுரியும் நூலகர்கள் தங்களைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லை எனில், அவர்கள் தங்கள் பணியைத் தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்படலாம்.
References:
·         International Journal of Multidisciplinary Academic Research Vol. 1, Issue 1, May 2013.
·         www.tnpubliclibraries.gov.in.
·         Government of Tamil Nadu, School Education Department, Policy Note 2017-2018.
·         IJNGLT February,  Volume 3, Issue 1. 
·         Indian Express, New Delhi, Published: May 31, 2017 6:01 pm.

Comments