நகைச்சுவைத் தொடர்: 5. நவீன கழிவறை வசதியா? அவதியா?
நவீன
வசதிகளுடன் கூடிய வீடுகளை இதுநாள்வரை நகர்ப் புறங்களில்தான் பார்த்து வந்தோம்.
தற்போது நகர்ப்புறங்களை மிஞ்சும் வகையில் கிராமப்புறங்களில் நவீன வசதிகளுடன்
கட்டப்படும் வீடுகளில் மேல்நாட்டு பாணியும் கடைபிடிக்கப்படுகிறது. மேலை நாட்டு
மக்களின் வாழ்க்கைச் சூழலுக்கும் நம் நாட்டு மக்களின் வாழ்க்கைச் சூழலுக்கும்
எவ்வளவோ வேறுபாடுகள் உள்ளன. இதனை மனதில் கொண்டுதான் மேலைநாட்டு பாணியைக் கடைபிடிக்க
வேண்டும். அவர்கள் கடைபிடிக்கும் பாணி நமக்கு ஒத்துவருமா அல்லது தேவைதானா என்று
உணர்ந்து செயல்பட வேண்டும்.
மேலை
நாட்டுக் கழிவறைகள் நம் இல்லங்களில் இன்று ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இன்றைக்குக்
கட்டப்படும் பெரும்பாலான வீடுகளில் நின்றநிலையில் உள்ள கழிப்பிடங்களை (Standing Toilets) பார்க்க
முடிகிறது. இது வயோதிகர்களும் முதியோர்களும் பயன்படுத்துவதற்கு வசதியாக மேலை
நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இதுவே இன்று நவீன கழிப்பிடம் (Modern
Toilet) என்ற பெயரில் கிராமப்புறம் வரை பரவிவருகிறது. இந்த நின்றநிலையில் உள்ள
கழிப்பிடத்தை (Standing Toilet) முதன்
முதலில் பார்ப்பவர்கள் ஏதோ குப்பைத் தொட்டி என்றுதான் நினைத்து விடுவார்கள்.
நானும் அப்படித்தான் நினைத்தேன்.
இந்த நவீன
கழிப்பிடங்கள் நமக்கு வசதியா அல்லது தொல்லையா என்று அதனைப் பயன்படுத்துபவர்களைக் கேட்டால்தான்
தெரியும்.
இது போன்ற
நவீன கழிப்பிடங்களை, குறிப்பாகப்
பொது இடங்களில் அமைக்கும் போது, அதனை மக்கள்
எளிதாகப் பயன்படுத்த வசதியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அதைப் பயன்படுத்துவதே
ஒரு பிரச்சனையாகிவிடும்.
இப்படிதான்
ஒரு கிராமத்தான் பொதுக் கழிப்பிடத்திற்குச் சென்றானாம். அங்கு நின்ற நிலையில்
இருந்த நவீன கழிப்பிடம் இருந்தது. அங்கு வாளிக்கோ டப்பாவுக்கோ வேலை இல்லை.
எல்லாவற்றிற்கும் ஸ்விட்ச்தான். அவரசத்திற்கு டாய்லெட்டைப் பயன் படுத்தியவன்
தண்ணீர் தொட்டியோ, வாளியோ, டப்பாவே எதுவும் இல்லாததால் அதிர்ச்சியடைந்தான்.
தண்ணீர் வரும் குழாயை பயன்படுத்தவும் தெரியவில்லை.
பிறகென்ன
கையைத் துடைக்க மாட்டப் பட்டிருந்த பேப்பர் ரோலை கிழித்துத் துடைத்துவிட்டு அதைப்
போட குப்பைத் தொட்டியை தேடியிருக்கிறான். குப்பைத் தொட்டியும் இல்லை, ஜன்னலும் இல்லை. மேலே பார்த்திருக்கிறான். உயரத்தில்
ஒரு ஜன்னல் மட்டுமே இருந்தது. அதில் வீசியிருக்கிறான். அங்கு எக்சாஸ்ட் போன்
ஓடுவது அவனுக்குத் தெரியவில்லை. அவன் போட்ட பேப்பர் சுக்குநூறாகக் கிழிந்து
கழிவறைக்கு வெளியே நின்றிருந்தவர்கள் மீது விழுந்ததாம்.
இச்சப்பவத்தை
நானே கற்பனையாகச் சொல்லவில்லை. அண்மையில் நடைபெற்றமுழு சுகாதார விழிப்புணர்வு
முகாமை தொடங்கிவைத்த முக்கியப் பிரமுகர் பேசியது. கழிப்பிடங்கள் நவீன முறையில்
அமைத்தால் மட்டும் போதாது, அனைத்துத்
தரப்பினரும் எளிதாகப் பயன்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இச்சம்பவத்தை அவர் குறிப்பிட்டார்.
சில
மாதங்களுக்கு முன்பு ஊட்டியில் நடைபெற்ற ஒரு கூட்டத்திற்கு நானும் சில நண்பர்களும்
சென்றிருந்தோம். கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நண்பர்கள் எங்களுக்காகக்
கூட்டுறவு விருந்தினர் மாளிகையில் பல அறைகளைப் பதிவு செய்திருந்தார்கள். இரவு
பத்து மணியளவில் அங்குச் சென்று தங்கினோம்.
காலை எழுந்து
அனைவரும் கூட்டத்திற்குச் செல்ல தயாரானோம். பக்கத்து அறையில் தங்கியருந்த நண்பர்
ஒருவர் என்னிடம் வந்து, அவர்
தங்கியிருந்த அறையில் டாய்லெட் உயரமாக இருப்பதாகவும், அதைப் பயன்படுத்துவது சிரமமாக உள்ளதாகவும், சாதாரண டாய்லெட் உள்ள அறைக்கு அழைத்துச்
செல்லுமாறும் கூறினார். நானும் ஒவ்வொரு அறையாகச் சென்று பார்த்தேன். எல்லா
அறைகளிலும் ஸ்டேன்டிங் டாய்லட்தான் இருந்தது. “ஒரு நாள்தானே
அட்ஜஸ்ட் செய்துக்கொள்” என்றேன்.
அதற்கு அவர், “அதெல்லாம் முடியாது என்னைப் பஸ்டான்டிற்காவது
கூட்டினுபோ” என்றார்.
அரைக் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பேருந்து நிலைய கட்டணக் கழிப்பிடத்திற்கு நடந்தே
சென்றோம்.
கழிவறையிலிருந்து
வெளியே வந்த நண்பர் “இதுக்கு அதுவே மேல்” என்றார்.
மீண்டும்
அரைக் கிலோ மீட்டர் நடந்தே வந்தோம். நான் முதன் முதலாகப் பார்த்த ஸ்டேண்டிங்
டாய்லெட்டையும் அதை நான் பயன்படுத்த சிரமப்பட்டதைப் பற்றியும் அவரிடம் கூறினேன்.
அதைக்கேட்ட அவர் விழுந்து விழுந்து சிரித்தார்.
இதோ என் பழைய
அனுபவம்:
20
ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் மதுரை சென்றிருந்தேன். அங்குள்ள பயணியர் மாளிகையில்
அறை எடுத்துத் தங்கினேன். ஒரு வீடு போலவே பல அறைகள் இருந்தன. குளியலறையும்
விசாலமாக இருந்தது. இரவு பத்து மணிக்குமேல் நான் சென்றிருந்ததால் உடனே
தூங்கிவிட்டேன்.
காலையில்
எழுந்து பார்த்தால் கழிப்பிடம் இல்லை. உடனே பணியாளரை வரவழைத்து “கழிப்பிடம்
இல்லையா?” என்று கேட்டேன். அவர் குளியலறைக்கு அழைத்துச் சென்று பீங்கானாலான உயரமான
தொட்டி ஒன்றைக் காண்பித்து “இதுதான் கழிப்பிடம்” என்றார். அதற்குமேல் அவரிடம் பேசினால் ஒன்றும் தெரியாத கிராமத்தான் என்று
எண்ணி விடுவார் என்று நினைத்து அவரை அனுப்பிவிட்டேன்.
நின்றநிலையில்
உள்ள கழிப்பிடத்தை நான் பார்த்தது அதுதான் முதல்முறை. அதனை எவ்வாறு பயன்படுத்துவது
என்று தெரியவில்லை. அதைப் பயன்படுத்துவது தொடர்பான புத்தகம் ஏதாவது உள்ளதா என்று
அறையைச் சுற்றிப் பார்த்தேன். எதுவும் இல்லை. ஒரு
டப்பா தண்ணீர் ஊற்றிப் பார்த்தேன். தண்ணீர் போகவில்லை, அப்படியே இருந்தது. வெறுப்படைந்து கட்டிலில்
படுத்துவிட்டேன்.
திடீரென ஒரு
யோசனை வந்தது. ஒரு வாளி தண்ணீர் ஊற்றி பார்த்தாலென்ன என்று. உடனே வந்து ஒரு வாளி
நிறையத் தண்ணீர் ஊற்றினேன். ஒரு டப்பா தண்ணீரைத் தவிர எல்லாம் போய்விட்டது. சரி
இனி டாய்லெட்டை பயன்படுத்திவிடலாம் என்று முடிவு செய்தேன். அதன்மீது ஏறி உட்கார
முயற்சி செய்தேன், முடியவில்லை.
சாதாரண டாய்லெட்டில் பாதம் வைப்பதற்கு இடம் இருக்கும், இதற்குப் பாதம் வைப்பதற்கு இடம் இல்லை.
மீண்டும்
எல்லா அறைகளையும் சுற்றிப் பார்த்தேன். இரண்டு ஸ்டூல்கள் தென்பட்டன. இரண்டு
ஸ்டூல்களையும் டாய்லெட் அருகே வைத்துப் பார்த்தேன். சரியாக இருந்தது. சாதாரண
டாய்லெட் போலப் பயன்படுத்தினேன். இதற்காக நான் எடுத்துக்கொண்ட நேரம் முக்கால்
மணிக்கு மேல் இருக்கும்.
அன்றிலிருந்து
இன்று வரை வெளியூர் சென்று லாட்ஜ்களில் தங்கும்போது முதலில் பார்ப்பது
டாய்லெட்டைத்தான். நின்றநிலை டாய்லெட் இருந்தால் அந்த அறையை எடுப்பதில்லை.
சரி, இதுபோன்ற டாய்லெட்களைப் பெரியவர்களே பயன்படுத்த
சிரமப் படும்போது சிறுவர்களும் குழந்தைகளும் எப்படித்தான் பயன்படுத்து கிறார்களோ
என்று தெரியவில்லை!

Comments