நகைச்சுவைத் தொடர்: 6. தொலைக்காட்சியா? தொல்லைக்காட்சியா?
C.Saravanan |
(தமிழச்சி, 2010 அக்டோபர்
இதழில் வெளிவந்த
எனது கட்டுரை)
ஒரு
காலத்தில் தொலைக்காட்சி என்பது நகர்ப்புற மக்களுக்கும், மேல்தட்டு
மக்களுக்குமானதாகக் கருதப்பட்டது. ஆனால், இன்று
தொலைக்காட்சி என்பது கீழ்தட்டு மக்களையும் சென்றடைந்திருக்கிறது.
முன்பெல்லாம்
தொலைகாட்சி நிகழ்ச்சிகளை மத்திய அரசு நிறுவனம் மட்டுமே வழங்கி வந்தது.
தொலைக்காட்சிப் பெட்டி வைத்திருப்வர்கள் அதற்கான லைசென்ஸ் தொகையும் செலுத்த
வேண்டிய நிலையும் இருந்தது. ஆனால், தற்பொழுது
அப்படியில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தனியார் நிறுவனங்களும் வழங்க அனுமதி
அளிக்கப்பட்டுவிட்டது. அதனால், நிகழ்ச்சி வழங்கும் நிறுவனங்களிடையே போட்டி
உருவாகியுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்கும் பொறுப்பு அரசிடம் இருந்த வரை
நிகழ்ச்சிகள் தரமாகவும், சமூக அக்கரையுடனும் இருந்தன. அது தனியார் வசம்
சென்றதிலிருந்து நிகழ்ச்சிகளின் தரத்தைக் காட்டிலும் அவர்களின் வியாபார உக்தியே
மேலோங்கி விட்டது. இதனால் மக்களின் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்கள்
ஏற்பட்டள்ளன.
மாற்றம்
என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவசியமே, ஆனால், அந்த
மாற்றம் முன்னேற்றமாக இருக்க வேண்டுமே தவிரப் பின்னடைவாக இருக்கக் கூடாது. இந்தத்
தொலைக் காட்சிகளின் ஆதிக்கத்தால் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பார்ப்போம்.
சில
மாதங்களுக்கு முன் கிராமத்தில் உள்ள நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்றிந்தேன்.
மாலை 7 மணி
இருக்கும் அவர் வீட்டுத் திண்ணைணில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது
அந்தத் தெருவில் சில பெண்கள் கூட்டமாக நின்று ஆக்ரோசமாக ஏதோ சண்டை போட்டுக்
கொண்டிருந்தார்கள். என்னவென்று நண்பரிடம் விசாரித்தேன்.
“கிராமங்களில்
இது போன்ற வாய்ச் சண்டை சர்வ சாதாரணமானது கண்டு கொள்ளாதே” என்றார்.
பயங்கரமாகத்
தடித்த வார்த்கைகளில் சண்டை போட்டுக்கொண்டிருந்த பெண்களை எவரும் சமாதானம் செய்து
வைக்காத நிலையில் திடீரெனக் கலைந்து சென்றனர். சுமார் அரை மணி நேரம்
ஆகியிருக்கும். மீண்டும் அதே இடத்தில் அந்தக் கும்பல் கூடி தகாத வார்த்தைகளில்
மீண்டும் சண்டை போட ஆரம்பித்தனர்.
“இதற்கு
மேல் நாம் இங்கு உட்கார முடியாது” என்று நண்பர் என்னை வேறு இடத்திற்கு அழைத்துச்
சென்றார். நான் அவரிடம் விசாரித்தேன்.
“இந்த
ஊரில் இடைவேளை விட்டுக் கூடச் சண்டை போடுவார்களா?” என்றேன்.
அதற்கு
அவர் சொன்னார்: “அவர்களுக்குள் ஏதோ பிரச்சைனை. சண்டை பொட்டுக்
கொண்டார்கள். அதற்குள் கோலங்கள் சீரியல் வந்துவிட்டது. அதைப் பார்க்க
போய்விட்டார்கள். அந்தச் சீரியல் முடிந்திருக்கும், இப்ப
வந்து சண்டை போடுகிறார்கள்” என்றார்.
“எந்த
அளவிற்கு இந்த மெகா தொடர்கள் கிராமப்புற பெண்களை ஆட்டிப் படைக்கின்றன என்று
பார்த்தாயா?” என்றார்.
மற்றொரு
சம்பவம்:
குடும்பப்
பிரச்சனை தொடப்பாக உறவினர் ஒருவர் வீட்டிற்குச் சென்று விவாதித்துவிட்டு வரும்படி
என் மனைவி என்னை அனுப்பி வைத்தார். நானும் மாலை 5 மணிக்கு
புறப்பட்டு, 7 மணிக்கு அவர் விடு போய்ச் சேர்ந்தேன்.
இரண்டு
மணி நேரத்தில் பேசி முடித்துவிட்டு 9 மணிக்குக்
கிளம்பினால் இரவு 11 மணிக்கு வீடு வந்து
சேர்ந்துவிடலாம் என்பது என் மனைவியின் கணக்கு.
நான்
போய்ச் சேர்ந்ததும் காப்பி வந்தது, குடித்தேன்.
அங்குக் குடும்பத் தலைவர் உள்ளிட்ட அனைவரும் தொலைக்காட்சிச் தொடரில்
மூழ்கியிருந்தார்கள். தொடர் அரை மணிநேரம் தானே, அது
முடிந்ததும் பேசலாம் என்றிருந்தேன்.
அந்தத்
தொடர் முடிந்து, அடுத்தத் தொடரும் ஆரம்பமாகிவிட்டது. அடுத்த அரை
மணி நேரமும் அவர்கள் தொடர் பார்ப்பதிலேயே கவனமாக இருந்தனர். நான் எதற்காக வந்தேன்
என்று கேட்கவும் இல்லை, அதைக் கேட்க அவர்களுக்கு நேரமும் இல்லை.
அவர்களுடைய கவனத்தைத் திருப்பி, வந்த வேலையை முடிக்கலாம் என்று எண்ணினேன்.
எப்படித் தொடங்குவது என்று தெரியவில்லை. விளம்பர இடைவேளை வந்தது. ஒருவழியாக
அவரிடம் பேச்சைச் தொடங்கினேன்.
எடுத்ததும்
நான் வந்த காரியத்தைச் சொல்லக்கூடாது என்று வேறு சில பொதுவான தகவல்களைப் பற்றிப் பேசலானேன்.
கொஞ்சம் செவிமடுத்துக் கேட்பதாகத் தெரிந்தது. அதற்குள் விளம்பரம் முடிந்து தொடர்
தொடர்ந்தது. அதற்கு மேல் நான் பேசுவது எதுவும் அவர் காதில் விழவில்லை என்பதை
உணர்ந்து பேச்சை நிறுத்தினேன். அரை மணி நேரத்தில் இந்தத் தொடர் முடிந்துவிடும்
அதற்குப் பிறகாவது சவகாசமாக நான் வந்த காரியத்தைப் பேசி முடித்துவிடுவது என்று
இருந்தேன்.
அந்தத்
தொடர் முடிந்ததும் “சாப்பிடலாம்” என்றார்.
வேறு வழியில்லாமல் “சரி” என்றேன்.
குடும்பத் தலைவி அவசர அவசரமாகச் சாப்பாட்டிற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
சாப்பிட்டுக்கொண்டேயாவது
பேசிவிடலாம் என்று நினைத்தேன். அதற்குள் அடுத்த நெடுந் தொடர் வந்துவிட்டது.
எபிசோடு 390
என்று
வந்தது. அப்பொழுதுதான் எனக்குத் தெரிந்தது அந்த நெடுந் தொடர் ஓராண்டுக்கும் மேலாக
ஓடிக் கெண்டு இருக்கிறதென்று.
சாப்பிடும்
தட்டுகளும் தண்ணீர் டம்ளர்களும் வந்தன. அடுத்து மண்ணெண்ணெய் திரி ஸ்டவ்வும்
ஹாலுக்கு வந்தது. இவை எதற்கு என்று யோசிப்பதற்குள் தோசை தட்டும், தோசை
மாவும் வந்தது.
தொலைக்காட்சியைப்
பார்த்துக் கொண்டே தோசை செய்து அனைவருக்கும் பரிமாரினார் குடும்பத்தலைவி. அவர்கள்
அனைவரின் கவனமும் தொலைக்காட்சித் தொடரிலேயே இருந்தது. என் கவலை யெல்லாம் வந்த வேலை
ஆகுமா? ஆகாதா? என்பதுதான்.
சில
தோசைகள் நன்றாகவும், சில தோசைகள் தீய்ந்தும் இருப்பதைக் கண்டேன்.
இவை ஏன் என்று உற்றுக் கவனித்தேன். விளம்பர இடைவேளையில் செய்யும் தோசை நன்றாகவும், சீரியலில்
குடும்பத்தலைவி மூழ்கியிருக்கும்போது செய்யும் தோசை தீய்ந்தும் இருப்பதைக் கண்டேன்.
யாருக்கு எத்தனை தோசை பரிமாரப்பட்டது என்பது யாருக்கும் தெரிந்திருக்காது.
சாம்பார் நன்றாக இருந்தது. சட்னிக்கு உப்பு கொஞ்சம்கூட இல்லை. அதைப்பற்றி யாரும்
சொல்லாதபோது நான் மட்டும் எப்படிச் சொல்வது என்று சட்ணியைத் தவிர்த்துவிட்டேன்.
குடும்பத் தலைவி உட்பட அனைவரும் சாப்பிட்டு எழும் பொழுது மணி எட்டே முக்கால். என்
மனைவியிடமிருந்து ஒரு மிஸ்டு கால் வந்தது, “பேசியது
போது, கிளம்புங்க” என்பதுதான்
அந்த மிஸ்டு காலுக்குப் பொருள் என்று உணர்ந்தேன்.
“சீரியலெல்லாம்
எப்பொழுது முடியும்” என்றேன்.
“12 மணி வரை ஓடும். ஆனா,
11 மணிக்கே படுத்துவிடுவோம்” என்று
வருத்தமாகச் சொன்னார்கள்.
இதற்கு
மேல் உட்கார்ந்திருப்பது தேவையற்றது என்று புறப்படத் தயாரானேன். எதைப்பேச வேண்டும்
என்று வந்தோமோ அதைத்தான் பேச முடியவிலை. சரி சாப்பாட்டைப் பற்றியாவது இரண்டு
வார்த்தை பேசிவிட்டுக் கிளம்பலாம் என்று ஆரம்பித்தேன்: “சாம்பார்
நன்றாக இருந்தது, ஆனா, சட்னிலதான்
ஏதோ குறைவாக இருந்தது” என்றேன்.
உடனே
அக்குடும்பத் தலைவி சட்னியை சுவைத்துப் பார்த்துவிட்டு, “அடடா, சட்னிக்கு
உப்பு போட மறந்துட்டேன்” என்று சிரித்தார்.
“எதற்காக
வந்தீர்கள்?” என்று கேட்பார்களா என்று அப்பொழுதும்
எதிர்பார்த்தேன்; ஏமாற்றமே. விடைபெற்றுக்கொண்டு
வெளியே வந்தபோது மணி ஒன்பது. மனைவியிடமிருந்து அழைப்பு வந்தது.
“கிளம்பிட்டேன்,
11 மணிக்குள் வந்துவிடுவேன், மற்றவை
நேரில்” என்றேன்.
Comments