நகைச்சுவைத் தொடர்: 8. சும்மா.
![]() |
| Saravanan. C |
சும்மா என்கின்ற தமிழ்ச் சொல் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. சும்மா என்கின்ற சொல்லுக்கு ஒன்றுமில்லை என்பது பொதுவான பொருள். சும்மா என்கின்ற சொல், இடத்திற்கு இடம் பொருள் வேறுபடுகிறது.
இந்த வாரம் எதைப்பற்றி எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நண்பர் ஒருவர் வந்து, “என்ன, சும்மா உட்காந்துனு இருக்கிறீங்க?” என்றார்.
எனக்கு உடனே ஒரு யோசனை வந்தது, சும்மா என்கின்ற சொல்லை வைத்து கட்டுரை எழுதினால் என்ன என்று?
“சும்மாவைப் பற்றி எழுதினால் யார் படிப்பார்கள்?” என்னுள் கேள்வி எழுந்தது.
“சும்மா சும்மா அதையே நினைத்துக் கொண்டு இருந்தால் எப்படி? துணிந்து எதையாவது எழுதுவோம்” என்று முடிவு செய்தேன். இனி, கட்டுரைக்கு வருகிறேன்.
சும்மா என்கின்ற தமிழ்ச் சொல் புதிய சொல் அன்று. அச்சொல்லை பண்டைக் காலத்திலேயே தமிழர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, அருணகிரி நாதர் அருளிய கந்தரலங்காரம் என்னும் நூலில், “திருமுருகப் பெருமானின் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளைக் காவலாகக் கொண்டு அவற்றை மவுனமாகச் சிந்தித்தவாறு சும்மா இருத்தல் சிறந்ததோர் ஆன்மிக நெறி” - என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவஆ கமசித்ர வேலா யுதன்வெட்சி பூத்தண்டைப்
பாதார விந்தம் அரணாக அல்லும் பகலும்இல்லாச்
சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துச்சும் மாஇருக்கப்
போதாய் இனிமன மேதெரி யாதஒரு பூதர்க்குமே
- (கந்தரலங்காரம், திருப்பாடல் 17)
சரி, சும்மா என்கின்ற சொல்லை நாம் எவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறோம்?
சும்மா இருக்க மாட்டியா? (அமைதியாக - quiet)
சும்மா வெச்சிக்கோ. (இலவசமாக - free of cost)
சும்மா சொன்னான். (பொய் - lie)
பழைய டி.வி. சும்மா தான் இருக்குது (பயனற்று - - without use)
சும்மா சும்மா தொந்தரவு பண்ணாதே (அடிக்கடி - very often)
கணவர் சும்மாதான் இருக்கிறார். (வேலையில்லாமல் - idle)
சும்மா சொல்லக்கூடாது, நல்லாவே பாடினாள். (உண்மையில் - in fact)
சும்மா, நோண்டினே இருக்கிறான். (எப்போதும் - always)
சும்மா பாத்துட்டு போலாம்னு வந்தேன். (தற்செயலாக - just)
குழந்தைகள் இருக்கும் வீட்டுக்கு சும்மா போகக்கூடாது. (ஒன்றுமில்லாமல் - bare)
பாம்பு, பாம்பு - என்று சும்மா சொன்னேன். (விளையாட்டிற்கு - just for fun)
அடுப்பில் ஒன்னுமில்லை. சும்மாத்தான் இருக்குது. (காலியாக - empty)
இப்படிச் சும்மா என்கின்ற தமிழ்ச் சொல் இடத்திற்கு இடம் வேறுபட்டு பொருள் தருகிறது.
என்னுடைய பழைய அனுபவம் ஒன்றைச் சொல்கிறேன்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள், பள்ளி மாணவர்கள் சிலர் என்னைப் பார்க்க வந்தனர்.
“சார், நீங்க சும்மாத்தானே இருக்கிறீங்க, எங்க ஸ்கூல் ஆண்டு விழாவுக்கு நாடகம் ஒன்று எழுதிக்கொடுங்கள்” என்றனர்.
நான் சும்மா இருக்கிறது சின்னப் பசங்கவரைக்கும் தெரிந்திருக்கிறது. என் நேரம் அப்படி? என்று என்னை நானே நொந்துக்கொண்டேன்.
“நாளை காலை வந்து நாடகத்தை வாங்கிச் செல்லுங்கள்” என்றேன் ஜம்பமாக.
நீண்ட நேர யோசனை. எந்தக் கதையும் மனதில் தோன்றவில்லை. நாடகம் எழுதிக் கொடுக்கவில்லை என்றால் மாணவர்கள் என்னைக் கேவலமாகப் பார்ப்பார்கள். இஃது என்ன கொடுமை? சும்மா இருந்ததுக்குத் தண்டனையா? “சன்னியாசி, சம்சாரி ஆனது இப்படிதானா?” என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
திடீரென்று ஒரு யோசனை வந்தது.
சும்மா என்று ஒருவனுக்குப் பெயர் வைத்தால் எப்படி இருக்கும்? - இதுதான் என் கற்பனை.
இதோ நாடகம்:
இடம்: சகாயம் பாத்திரக் கடை.
பாத்திரக் கடைக்காரரின் ஐந்து வயது மகள், தன் தந்தைக்கு மதிய உணவு எடுத்து வந்து கொடுக்கிறாள். கடையைப் பார்த்துக் கொள்ளுமாறு தன் மகளிடம் கூறிவிட்டு, கடையின் உள் அறையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் கடைக்காரர். அப்பொழுது கடைக்கு வரும் நபர், “அப்பா எங்கே?” என்றார்.
“உள் அறையில் சாப்பிடுகிறார். அப்பாவை உங்களுக்குத் தெரியுமா?” என்கிறாள் சிறுமி.
“தெரியும்”, என்கிறார் வந்தவர்.
“உங்க பேர்? ”
“என் பேர் சும்மா...” என்று இழுக்கிறார் வந்தவர்.
வந்தவர் அண்டா ஒன்றை எடுக்கிறார்.
“அப்பா, அண்டாவை எடுக்கிறாங்க” என்கிறாள் சிறுமி.
“யாரும்மா? ”
“சும்மா..., அப்பா”.
வந்தவர் பித்தளைக் குடம் ஒன்றையும் எடுக்கிறார்.
“அப்பா, குடத்தையும் எடுக்கிறாங்க”.
“யாரும்மா?”
“சும்மாப்பா..”
வந்தவர் பணம் கொடுக்காமல் அண்டாவையும் குடத்தையும் எடுத்துச் செல்கிறார்.
“அப்பா, அண்டாவையும் குடத்தையும் எடுத்துனு போறாங்க” என்கிறாள் சிறுமி பதற்றமாக.
“யாரும்மா?”
“சும்மாப்பா...”
கடைக்காரர் சாப்பிட்டு வெளியே வருகிறார்.
“இங்க இருந்த அண்டாவையும் குடத்தையும் காணோமே?” என்கிறார்.
“அவர்தான் எடுத்துனு போனார்”.
“யாரும்மா”.
“அவர்தான், சும்மாப்பா”.
“என்ன, சும்மா சும்மா, சும்மானு செல்லினு இருக்கிற? அவர் பேர் என்னனு கேட்கலயா?” என்றார் கடைக்காரர்.
“உங்க பேர் என்னனு கேட்டேன். என் பேர் சும்மா என்று சொன்னார்” என்றாள் சிறுமி.
இதுதான் நாடகம்.
அடுத்தநாள் வந்த மாணவர்களிடம் நாடகத்தைக் கொடுத்து எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தேன்.
“சார், நாடகத்துக்குப் பிரைஸ் கிடைக்குமா?” என்றான் ஒருவன்.
“கிடைக்கும்னு, நம்புடா” என்றேன்.
“கிடைக்கிலனா?” என்று எதிர்மறையாகக் கேட்டான் வேறு ஒருவன்.
“கிடைக்கிலனா, சார் வாங்கிக் கொடுப்பார்டா” என்று என்னை உசுப்பேற்றிவிட்டான் இன்னொருவன்.
“பிரைசுக்கு பதிலா, வேற எதுனா கிடைச்சா?” என்று திருவிளையாடல் பாணியில் கேட்டான் இன்னொருவன்.
“டே, போங்கடா, போங்க.., என்ன கொலைக்காரனாக்கிடாதிங்க” என்று துரத்தினேன். எல்லோரும் ஓடிவிட்டார்கள்.
ஆண்டுவிழா நாளும் வந்தது. “நம் நாடகத்திற்கு யாரும் கைத்தட்டவில்லை என்றால், நாமாவது கைத்தட்டுவோம்” என்று ஓர் ஓரமாக நின்று கொண்டிருந்தேன். நான் எழுதிக்கொடுத்த நாடகம் வந்தது. மாணவர்கள் சிறப்பாக நடித்தார்கள். நாடகம் முழுவதும் ஒரே சிரிப்பலை. நாடகம் முடிந்ததும் அனைவரும் கைத்தட்டினர். கைத்தட்டச் செற்ற நான், கைத்தட்ட மறந்து, கைத்தட்டியவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

Comments