Skip to main content
நகைச்சுவைத் தொடர்: 3. சந்தேகம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள், அலுவலகப் பணியாகப் பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு 9.30 மணிக்குள் அலுவலகம் சென்றடைய வேண்டும். பல
மணிநேர பயணம் என்பதாலும் அலுவலகத்திற்கு உரிய நேரத்தில் சென்றடைய வேண்டும்
என்பதாலும் களைப்பாகவும் பரபரப்பாகவும் இருந்தேன்.
காலை 9 மணி அளவில்
இளம் பெண் ஒருத்தி என் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். சிறிது நேரத்தில்
என்னிடம் பேச ஆரம்பித்தாள்.
“என் கணவர் ஆஸ்பிடலில் வேலை செய்கிறார். அவரிடம் பேச வேண்டும். அவருக்கு ஒரு
மிஸ்டு கால் போடுங்க, அவர் கூப்பிடுவார்” என்றாள்.
அவள் கூறிய எண்ணுக்கு மிஸ்டு கால் போட்டேன். சிறிது நேரத்தில் அவரிடமிருந்து
அழைப்பு வந்தது.
“பஸ் ஏறிட்டேன். இன்னும் அரை மணி நேரத்தில் வந்துடுவேன்” என்று சொல்லிவிட்டு என்னிடம் போனை
கொடுத்துவிட்டாள்.
பிறகு நான் என் அலுவலகம் சென்று பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அரை மணி
நேரம் கழித்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
“சார், உங்க போன்ல இருந்து பேசின
அந்தப் பொம்பள இன்னும் வரல, அங்க இருக்குதா?” என்றான்.
அதற்கு “நான் என் ஆபீஸ்
பக்கத்திலயே இறங்கிட்டேன், அந்த அம்மா பஸ்டாண்டுல இறங்கியிருக்கும், பஸ் ஸ்டாண்டல சுற்றிப்பாருங்க” என்று கூறினேன்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் அவனிடமிருந்து அழைப்பு வந்தது.
“சார், நீங்க யார்? எந்த ஆபீஸ்ல வேலை செய்யறீங்க?” என்று கேட்டான்.
பொறுமையாகப் பதில் சொல்லி விட்டு, “எதுக்குக் கேக்கறீங்க?” என்றேன்.
“அந்தப் பொம்பள இன்னும் வரல”
என்றான்.
“எனக்குத் தெரியாது. ஏன் என்னைத் தொந்தரவு செய்யறீங்க” என்றேன்.
அதற்கு அவன் “சரி, அந்தப் பொம்பளைக்கும், உங்களுக்கும் எவ்வளவு நாளா பழக்கம்” என்றான்.
இதைக் கேட்டவுடன் எனக்குச் சிரிப்பும் வந்தது, கோபமும் வந்தது. என்ன சொல்வதென்று தெரியவில்லை. என் எதிரில் பத்துக்கும்
மேற்பட்டோர் அமர்ந்திருந்தனர். நான் தனியாக இருந்திருந்தால் என் பதிலைக் கேட்டு
அவன் அதிர்த்து போயிருப்பான். நானோ “போனை வைங்க!” என்று கூறியவாறு இணைப்பைத் துண்டித்துவிட்டேன்.
Comments