நகைச்சுவைத் தொடர்: 9.கட்டுரைப் போட்டி
| Saravanan chinnandi |
பொது நூலகத்துறை சார்பாக
மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி மாநில அளவில் கடந்த மாதம் நடத்தப்பட்டது.
கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு: ‘என்னைச் செதுக்கிய நூல்கள்’ என்பதாகும். ‘இந்தத்
தலைப்பில் நம்மாலே கட்டுரை எழுத முடியாதே, மாணவர்கள் எப்படி எழுதுவார்கள்?’ என்று
நினைத்தேன்.
இருந்தாலும் பள்ளிக்குச்
சென்று மாணவர்களிடம் அறிவிப்போம். மாணவர்கள் கட்டுரை எழுதிக் கொடுத்தால் அதை
வாங்கி அனுப்புவோம் என்று முடிவு செய்து அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்குச்
சென்று அறிவித்தேன். அப்பள்ளி நான் படித்த பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுரைப் போட்டி என்று
அறிவித்ததும் உற்சாகமானார்கள் மாணவர்கள். தலைப்பைச் சொன்ன உடன் மாணவர்களுக்குள்
சலசலப்பு. சலசலப்புக்குக் காரணம் என்ன என்று எனக்குப் புரிந்தது. கட்டுரை எழுத
விரும்பும் மாணவர்கள் தங்கள் வகுப்பு ஆசிரியர்களிடம் பெயர்களைப் பதிவு செய்து
கொள்ளுமாறு கூறிவிட்டு வந்துவிட்டேன்.
இரண்டு நாள் கழித்துப்
பள்ளிக்குச் சென்று கட்டுரைப் போட்டிக்குப் பதிவு செய்தவர்கள் பட்டியலைக்
கேட்டேன். “இந்தத்
தலைப்பில் மாணவர்களால் சொந்தமாகக் கட்டுரை எழுத முடியவில்லை. இது தேர்வு நேரம்
என்பதால் ஆசிரியர்களுக்கு வேலைப்பளு அதிகமாக உள்ளது. அதனால், ஆசிரியர்களாலும்
கட்டுரை எழுதிக் கொடுக்க முடியவில்லை. நீங்கள் கட்டுரை எழுதிக் கொடுத்தால்
மாணவர்கள் அதைப் படித்து எழுதுவார்கள்” என்று என்னிடம் சொல்லப்பட்டது.
இந்தத் தலைப்பில் நான்
கட்டுரை எழுத வேண்டும் என்றால் குறைந்தது ஐந்து புத்தங்களையாவது முழுமையாகப்
படிக்க வேண்டும். அதற்கு இரண்டு, மூன்று நாட்கள் தேவைப்படும். இரண்டு நாட்களில் போட்டி
நடத்தப்பட வேண்டும். அதனால், ‘முயற்சி செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டு
வந்துவிட்டேன்.
கட்டுரைப் போட்டி நடத்த
முடியாமல் போனது எனக்கு மிகுந்த வருத்தம். இதனால் என்னுள் பல கேள்விகள் எழுந்தன. “இந்தத்
தலைப்பில் எத்தனை மாணவர்களால் சொந்தமாகக் கட்டுரை எழுத முடியுமா? இந்த
வயதில் மாணவர்கள் எத்தனை நூல்களைப் படித்திருப்பார்கள்? புத்தகங்களோடே
இருக்கும் நூலகர்களிடம் இந்தத் தலைப்பைக் கொடுத்து கட்டுரை எழுதச் சொன்னால் எத்தனை
நூலகர்களால், எத்தனை
மாவட்ட நூலக அலுவலர்களால் எழுத முடியும்? பல ஆண்டுகளாகப் பல
பத்திரிகைகளில் எதை எதையோ எழுதி வரும் என்னாலே இந்தத் தலைப்பில் உடனடியாகக்
கட்டுரை எழுத முடியவில்லையே? நிலைமை இப்படி இருக்க, இது போன்ற தலைப்பு
மாணவர்களுக்குத் தேவையா? மாணவர் நிலைமை உணர்ந்து தலைப்புக் கொடுத்திருந்தால் அதிக
அளவிலான மாணவர்கள் கலந்து கொண்டிருக்க மாட்டார்களா?” என்று என்னை நானே
கேட்டுக்கொண்டேன்.
இந்நேரத்தில் என்
பள்ளிப் பருவத்தில் நான் முதன் முதலாக எழுதிய கட்டுரை ஞாபகத்திற்கு வந்தது. அந்தச்
சுவாரிசமான தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
அப்பொழுது நான் ஆறாம்
வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். பள்ளி ஆண்டு விழாவுக்குக் கட்டுரைப் போட்டி
அறிவிக்கப்பட்டது. தலைப்பு - ‘என்னைக் கவர்ந்த நூல்’.
நான் படித்த பள்ளியிலேயே
எனது தந்தையார் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். கட்டுரைப் போட்டியில் கலந்து
கொள்ளுமாறு என்னிடம் கூறினார். அஃது அவர் எனக்குப் போட்ட உத்தரவு. அவர் சொல்வது
செய்யவில்லை என்னால் அடி விழும். அவர் ஏதாவது எழுதிக்கொடுப்பார் என்று
எதிர்பார்த்து ஏமார்ந்தேன்.
சட்டை கிழிந்து போனால், புதியதாகச்
சட்டை வாங்கிக் கொடுக்குமாறு கேட்கும் தைரியம்கூட எனக்கு அப்போது இல்லை. கிழிந்த
சட்டையைப் போட்டுக்கொண்டு அவர் கண்ணில் படும்படி நடப்பேன். அதைப் பார்த்து புதிய
சட்டை தைத்துக் கொடுப்பார். அப்படி வளர்ந்ததால், கட்டுரை எழுதிக்கொடுக்குமாறு
அவரிடம் கேட்கும் தைரியம் எனக்கு இல்லை.
எப்படியாவது கட்டுரை
எழுதிவிடுவது என்று முடிவு செய்து, கட்டுரைத் தலைப்பை ஒரு
முறைக்குப் பல முறை படித்துப் பார்த்தேன். தலைப்பு: ‘என்னைக்
கவர்ந்த நூல்’. அந்த
வயதில் எனக்குத் தெரிந்தது எல்லாம் பூ கட்டும் வெள்ளை நூலும், பட்டம்
விடும் வண்ண நூலும்தான். “நூலைப் பற்றி எப்படிக் கட்டுரை எழுதுவது?” என்று
நண்பர்களிடம் கேட்டேன். “நூல் என்றால் நீ நினைக்கும் நூல் இல்லை, நூல்
என்றால் புத்தகம் என்று அர்த்தம், புத்தகத்தைப் பற்றி எழுது” என்றனர்.
எங்கள் வீட்டில் பெரிய
மரப்பெட்டி ஒன்று இருந்தது. அதில்தான் புத்தகங்களைப் போட்டு மூடி வைப்போம்.
வெளியில் வைத்தால் எலி கடித்துவிடும். எலி புத்தகத்தைக் கடித்துவிட்டல் எலிக்கு
அடி விழாது, எங்களுக்குத்தான்
அடி விழும். அதனால், எல்லாப் புத்தகங்களையும் பெட்டியில் போட்டு மூடி வைப்போம்.
பெட்டியில் உள்ள
புத்தகங்களில் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதைப்பற்றி எழுதலாம் என்று பெட்டியை
திறக்கச் சென்றேன். பெட்டி சந்திலிருந்து ஓர் எலி ஓடி ஒளிந்தது. எலி பெட்டியில்
நுழைந்து புத்தகங்களைக் கடித்து விட்டதா என்று பரபரப்பாகப் பார்த்தேன். பெட்டி
மூடப்பட்டிருந்தது. நிம்மதி அடைந்தேன். எல்லாப் புத்தகங்களையும் வெளியில் எடுத்து
வைத்துவிட்டு ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்த்து உள்ளே வைத்தேன்.
எல்லாப் புத்தகங்களும்
என் உடன் பிறந்தவர்களது பாடப் புத்தகங்கள். கல்வி ஆண்டு முடிந்தால் புத்தகங்களை
எடைக்குப் போட மாட்டோம். அப்படியே எல்லாப் புத்தகங்களையும் பத்திரமாக வைப்போம்.
பாட புத்தகங்களைத் தவிர வேறு எந்தப் புத்தகமும் அப்பெட்டியில் இல்லை.
ஒவ்வொரு புத்தகமாகப்
புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒன்றாம் வகுப்புத் தமிழ் புத்தகம் எளிதாக
இருந்தது. அதைப்பற்றிக் கட்டுரை எழுதுவது என்று முடிவு செய்து தாள் ஒன்றை எடுத்து
எழுதினேன். நான்கு வரிக்கு மேல் எழுத முடியவில்லை.
அதை வைத்துவிட்டு
மூன்றாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தை எடுத்தேன். அந்தக் காலத்தில் மூன்றாம்
வகுப்பில் இருந்துதான் ஆங்கிலம் சொல்லித் தருவார்கள். அதுதான் ஆங்கில மொழிப்
பாடப்புத்தகத்தின் முதல் புத்தகம் என்பதால் அதைப்பற்றிக் கட்டுரை எழுத ஆரம்பித்தேன்.
அதுவும் ஒரு பத்திக்கு மேல் எழுத முடியவில்லை. புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன்.
ஐந்தாம் வகுப்பு
கணக்குப் புத்தகத்தை எடுத்து, அதைப்பற்றி எழுதலாம் என்று புரட்டிப் பார்த்தேன்.
திடீரென்று மகிழ்ச்சி. ஏனெனில் உள்ளே ஒரு சிறிய புத்தகம் இருந்தது. அதுதான் ‘கண்ணன்
எண்சுவடி’ என்கின்ற
வாய்பாடு. வாய்பாட்டைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தேன். என்னுள் பல எண்ணங்கள்
தோன்றின. பாட புத்தகங்களைத் தாண்டி நான் படித்த புத்தகம் எதுவென்றால் அது
வாய்பாடாகத்தான் இருக்கும்.
‘என்னைக் கவர்ந்த நூல் - கண்ணன் எண்சுவடி’ என்ற தலைப்பில் கட்டுரை எழுத
ஆரம்பித்தேன். அரை மணி நேரத்தில் கட்டுரை எழுதி முடித்துவிட்டேன். இதோ அந்தக்
கட்டுரை:
முன்னுரை: நான் பல
நூல்களைப் படித்திருக்கிறேன். இருந்தாலும், என்னைக் கவர்ந்த நூல் கண்ணன்
எண் சுவடி ஆகும். கண்ணன் எண் சுவடியைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பொருள்: என்னைக் கவர்ந்த
நூல் கண்ணன் எண் சுவடி. காரணம் நான் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறக் காரணமாக
இருப்பது கண்ணன் எண் சுவடியாகும். காலாண்டு தேர்வில் கணக்குப் பாடத்தில் 55
மதிப்பெண் எடுத்தேன். வாய்பாடு நன்றாகப் படித்து மனப்பாடம் செய்தால் கணக்குப்
பாடத்தில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்று எனது கணக்கு ஆசிரியர் கூறியதால்
வாய்பாட்டை நன்றாகப் படித்து மனப்பாடம் செய்தேன். அதனால், அரையாண்டுத்
தேர்வில் கணக்குப் பாடத்தில் 85 மதிப்பெண் பெற்றேன்.
ஆங்கில எழுத்துகள் அழகாக
இல்லை என்று எனது ஆங்கில ஆசிரியர் கூறிவந்தார். கண்ணன் எண்சுவடியில் ஆங்கில
எழுத்துகளை எவ்வாறு எழுதுவது என்று இருக்கிறது. அதைப் பார்த்துப் பயிற்சி
எடுத்துக் கொண்டேன். இப்பொழுது ஆங்கிலம் நன்றாக எழுதுவதாக ஆங்கில ஆசிரியர்
கூறுகிறார். காலாண்டுத் தேர்வில் 62 மதிப்பெண் வாங்கிய நான் அரையாண்டுத் தேர்வில்
89 மதிப்பெண் பெற முடிந்ததற்குக் காரணம் கண்ணன் எண் சுவடிதான்.
இவை மட்டுமல்ல. தமிழ்
நாட்டில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன? இந்தியாவில் எத்தனை மாநிலங்கள்
உள்ளன? அதன்
தலைநகரங்கள் என்ன? எண்களுக்குச் சரியான ரோமன் எழுத்துகள் என்ன? இவை
போன்ற பொது அறிவு செய்திகள் எல்லாம் கண்ணன் எண்சுவடியில் நான் படித்து என் பொது
அறிவை வளர்த்துக் கொண்டேன். கடந்த மாதம் நடைபெற்ற விநாடி வினா நிகழ்ச்சியில்
எனக்குப் பரிசு கிடைக்கக் காரணம் கண்ணன் எண்சுவடிதான். இவ்வாறு என்
முன்னேற்றத்திற்குக் காரணமாக இருக்கும் கண்ணன் எண்சுவடி என்னைக் கவர்ந்த நூல்
என்பதில் பெருமை அடைகிறேன்.
நன்றியுரை: மாணவர்கள்
பெரிய பெரிய நூல்களைப் படிப்பதைவிட மிகச் சிறிய நூலான கண்ணன் எண்சுவடியைப்
படிப்பதன் மூலம் அவர்கள் தங்கள் கல்வி அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் என்பதில்
ஐயமில்லை.
அக்கட்டுரைக்குப் பரிசு
கிடைக்காது என்று நினைத்தேன். ஆனால், அக்கட்டுரைக்கு இரண்டாம் பரிசு
கிடைத்தது.
Comments