நகைச்சுவை தொடர்: 2. ஏமாற்றம்.
ஒரு நாள் அதிகாலை அலுவலகப் பணியாக, முதல் பேருந்தில் பயணமானேன். நான் அந்தப் பேருந்தில் இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டியிருந்தால், ஜன்னலோர இருக்கையாகப் பார்த்து அமர்ந்து கொண்டேன்.
அரை மணி நேரப் பயனத்திற்குப் பிறகு, இதற்கு மேல் ஒருவரையும் ஏற்ற முடியாது என்ற
அளவில் கூட்டம் இருந்தது.
நின்றிருந்தவர்களுள் கல்லூரி மாணவி ஒருத்தி கைக்குட்டையால் வாயை மூடியவாறு
சற்று ஒதுங்குமாறு சைகை காட்டினாள். நானோ
அலுவலகப் பணியாக வெளியூர் சென்று கொண்டிருந்தேன்.
என் மேலேயே வாந்தி எடுத்துவிடுவாளோ என்று பயந்து, அவசர அவரசமாக அவளை
உட்காரச் சொல்லிவிட்டு நான் நின்று கொண்டேன்.
என் இருக்கையில் உட்கார்ந்து கொண்ட அவள் வாந்தி எடுக்கவுமில்லை, அதற்கான அறிகுறியும்
தெரியவில்லை. அவளுக்காக நான் திறந்துவிட்ட
ஜன்னல் கண்ணாடியை மூடிவிட்டு கண் மூடி தூங்க ஆரம்பித்து விட்டாள். நான் அவளைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே
இருந்தேன். அவள் கடைசி வரை ஜன்னலைத்
திறக்கவுமில்லை, வாந்தி எடுக்கவுமில்லை. நிம்மதியாக
நல்ல தூக்கம் போட்டாள். அவளால் நான்
ஒன்றரை மணி நேரம் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டியதாயிற்று.
என்னைப் போல எத்தனைப் பேர் இவளிடம் ஏமார்ந்திருப்பார்களோ தெரியவில்லை.
மற்றொறு நாள், அலுவலகப் பணியிலிருந்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். மாலை நேரம் என்பதால் வழக்கமான கூட்டம்.
ஒரு குறிப்பிட்ட நிறுத்தத்தில் மூன்று இளம் பெண்கள் ஏறினார்கள். சிறிது
நேரத்தில் ஒருத்தி, “ஒரு பொண்ணு வாயும்
வயிறுமா இருக்குது. ஒருத்தரும் இடம் விட மாட்டாங்களா?” என்றாள். அதற்கு அந்த
குண்டான பெண் “வேண்டாம்டி, நான் நின்னுட்டே வரேன்” என்றாள். அவளுக்கு இரக்கப்பட்டு ஒருவரும் எழவில்லை. உடனே, நான் அப்பெண்ணிற்காக இருக்கையை விட்டு எழுந்து
அவளை அமரச் செய்தேன்.
ஒரு கர்ப்பிணிப் பெண்ணிற்காக எவரும் இருக்கையை விட்டு எழாதபோது, நான் மட்டும் அவளுக்காக
இருக்கையை விட்டு எழுந்து அவளை அமரச் செய்தது எனக்குப் பெருமையாக இருந்தது.
மூன்று நிறுத்தம் தாண்டி நான்காவது நிறுத்தத்தில் அவர்கள் இறங்கினார்கள். அப்பொழுது அந்தக் குண்டான பெண் சொன்னாள், “நான் குண்டா இருக்கிறதுகூட, நல்லதுபோல தெரியுதே?” என்றாள். அதற்கு இன்னொருத்தி “உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலனு நீயே சொல்லிட்டு வந்துறவியாட்டம் இருக்குதே?” என்றாள்.
அதைக் கேட்ட பலரும் வாய்விட்டுச் சிரித்தனர் என்னைத் தவிர. ஏனென்றால், அவர்களிடம் ஏமார்ந்தது
நான் மட்டும் தானே!
Comments