ஊர்ப்புற நூலகர்களுக்கு பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளர் சி.சரவணன் எழுதும் திறந்த மடல்.


நூலக நண்பர்களுக்கு வணக்கம்.
நான் 1998 இல் ஊர்ப்புற நூலகராகப் பணியில் சேர்ந்து பல்வேறு சட்ட மற்றும் இயக்கப் போராட்டங்களுக்குப்பிறகு, மூன்றாம்நிலை நூலகராகப் பதவி உயர்வு பெற்று, பல மாவட்டங்களில் பணிபுரிந்து, தற்பொழுது தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிளை நூலகத்தில் மூன்றாம்நிலை நூலகராகப் பணிபுரிந்து வருகிறேன்.
எந்த ஒரு நூலகர் சங்கமும் வேண்டாம் என்று இருந்த என்னை, மாவட்ட நூலக அலுவலர்கள் என்னைப் பல வகைகளில் துன்புறுத்தியதன் காரணமாக நூலகர் சங்கத்தில் சேர்ந்தேன் என்பதைப் பற்றியும், என்னுடைய விவேகமான சங்கச் செயல்பாட்டின் காரணமாக மாநிலப் பொதுச்செயலாளர் என்னும் மிகப் பெரிய பொறுப்புள்ள பதவி என்னைத் தேடி வந்தது என்பதைப் பற்றியும், அந்தப் பொறுப்பில் இருந்து, நூலகர் நலனுக்கும், நூலகத்துறை வளர்ச்சிக்கும் நான் ஆற்றியப் பணிகள் பற்றிய விவரங்களை என்னுடைய வலைப்பூவில் ஒரு நூலகரின் டைரிக்குறிப்புகள் என்னும் தலைப்பில் தொடர் கட்டுரைகளாக எழுதி வருகிறேன். இந்தக் கட்டுரைகளை உங்களில் பலரும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
ஒரு சங்கத்தை வழிநடத்துவது என்பது எவ்வளவு சிரமமான பணி என்பதை நான் பொதுச் செயலாளராக இருந்த 7 ஆண்டுகளில் அனுபவித்து உணர்ந்துள்ளேன்.
2000 ஆம் ஆண்டுக்கு முன்பு ஊர்ப்புற நூலகர்களாக இருந்த எங்களை எந்த நூலகர் சங்கமும் அடிப்படை உறுப்பினராகக்கூட சேர்த்துக் கொள்ளவில்லை. அப்பொழுதுதான் ஊர்ப்புற நூலகர்களுக்கு என்று தனியாக சங்கம் தொடங்கினோம். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 525 பேர் மூன்றாம்நிலை நூலகர்களாகப் பதவி உயர்வு பெற்றோம். மூன்றாம் நிலை நூலகர்களாகப் பதவி உயர்வு பெற்றபிறகு, ஊர்ப்புற நூலகர் சங்கத்தைக் கலைத்துவிட்டு இதர சங்கங்களில் ஐக்கியமானோம்.
தற்பொழுது நிலைமை அப்படி இல்லை. எல்லாச் சங்கத்திலும் ஊர்ப்புற நூலகர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். மாவட்ட, மாநிலப் பொறுப்புகளும் கொடுக்கப்படுகின்றன.
பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக நான் இருந்தபோது, ஊர்ப்புற நூலகர்களுக்கு மாவட்ட மற்றும் மாநிலப் பொறுப்புகளில் முக்கிய பொறுப்புகளைக் கொடுத்து வந்தேன். அத்துடன் நூலகப் பணியாளர் கூட்டுறவுச் சங்கங்களிலும் ஊர்ப்புற நூலகர்களுக்கு பொறுப்புகளைக் கொடுத்து வந்தேன். அந்த நிலை தற்பொழுதும் தொடர்கிறது.
இது மட்டுமல்லரூ.1500 சம்பளம் வாங்கிவந்த ஊர்ப்புற நூலகர்களுக்கு சிறப்புக் காலமுறை ஊதியம் வாங்கிகொடுத்ததும் நாங்கள்தான். அதற்காக நாங்கள் எடுத்த முயற்சிகள் என்னென்ன என்று பழைய ஊர்ப்புற நூலகர்களைக் கேட்டுப் பாருங்கள். ஊர்ப்புற நூலகர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. அவர்களுக்கு தற்செயல் விடுப்பு வாங்கிக் கொடுக்க நாங்கள் எடுத்த முயற்சியும், உழைப்பும் எங்களுக்குத்தான் தெரியும்.
இதைவிட முக்கியமானது, ஊர்ப்புற நூலகர் நியமனம் தொடர்பான நடைமுறையை மாற்றச் செய்தது. 32, 35 என்று வயது வரம்பு வைத்துப் பல மாவட்டங்களில் ஊர்ப்புற நூலகர்களுக்கான நியமனத்துக்கான நேர்காணல் முடிந்துவிட்ட பிறகுதான் அந்தத் தகவல் எனக்குத் தெரியவந்தது.
உடனடியாக இயக்குநரைச் சந்தித்து ஊர்ப்புற நூலகர் நியமன நேர்காணல்களை ரத்து செய்துவிட்டு வயது வரம்பில்லாமல் நியமனம் செய்யச் சொன்னேன். இயக்குநரும் நடந்து முடிந்த நேர்காணல்களை ரத்து செய்துவிட்டு வயது வரம்பில்லாமல் ஊர்ப்புற நூலகர்களை நியமனம் செய்தார். இந்தத் தகவல் எல்லாம் ஒரு நூலகரின் டைரிக்குறிப்பு 5 இல் விரிவாகப் பதிவு செய்துள்ளேன். மீண்டும் அதைப் படித்துப் பாருங்கள்.
அன்றைக்கு நான் எடுத்த முயற்சியின் காரணத்தால்தான் உங்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இன்று ஊர்ப்புற நூலகர்களாக இருக்கிறீர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இது உண்மையா, இல்லையா என்று அன்றைக்கு மாவட்ட நூலக அலுவலர்களாக இருந்தவர்களிடமும், இயக்குநர் அலுவலகத்திலும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
இவை மட்டுமா? ஊர்ப்புற நூலகர்களுக்கு மருத்துவ விடுப்பு, பிரசவ விடுப்பு, உள்ளிட்ட அனைத்து விடுப்புச் சலுகைகளும் வழங்கவேண்டும் என்று இயக்குநர் அவர்களிடம் கோரிக்கை வைத்தோம். அதற்குரிய அரசாணைகளை வழங்கக்சொன்னார். அதையும் செய்துள்ளோம். விரைவில் அந்த அறிவிப்பும் வெளிவரும் என்று நம்புகிறேன்.
ஊர்ப்புற நூலகர்களுக்கு வழங்கப்படும் சிறப்புக்காலமுறை ஊதியம் இன்றைய விலைவாசியில் போதுமானதாக இல்லை என்பதால் அவர்களுக்கு முறûயான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
ஊர்ப்புற நூலகர்களை நான்காம் நிலை நூலகர்கள் என்று அறிவித்து அவர்களுக்கு பதிவுரு எழுத்தர் ஊதியம் வழங்க வேண்டும் என்று முதன் முதலில் கோரிக்கை வைத்தது தருமபுரியில் நடைபெற்ற பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில்தான்.
அத்தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட இயக்குநர் அரசுக்குப் பரிந்துரையும் செய்தார். தலைமைச் செயலகத்தில் அந்தக் கோப்பின் போக்கைக் கண்காணித்து வந்தோம். கோரிக்கை நிறைவேறும்நிலையில் இருந்தது. இதனை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிலர், ஊர்ப்புற நூலகர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் பல மாவட்டங்களில் தீவிரமாகப் பணம் வசூல் செய்ய ஆரம்பித்தனர்.
இந்தத் தகவல் அரசுக்குத் தெரிய வந்தது. ஊர்ப்புற நூலகர்களை  நாம்காம் நிலை நூலகர்களாக அறிவித்து முறையான காலமுறை ஊதியம் வழங்கும் கோப்பு இயக்குநர் அலுவலகத்திற்குத் திருப்பப்பட்டது. சில ஊர்ப்புற நூலகர்களின் செயல்பாட்டால் ஒட்டுமொத்த ஊர்ப்புற நூலகர்களின் நலன் பாதிக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.
சில ஊர்ப்புற நூலகர்கள், ஊர்ப்புற நூலகர்கள் கூட்டமைப்பு என்ற தலைப்பில் மற்ற சங்கங்களின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த ஊர்ப்புற நூலகர்களுக்கு இவர்கள்தான் ஏகபோக பிரதிநிதி என்று தங்களை விளம்பரப் படுத்திக்கொள்கின்றனர்.
எங்களிடம் வசூல் செய்வதுதான் இவர்கள் வேலை என்றும், இவர்களால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் ஊர்ப்புற நூலகர்கள் பலரும் என்னிடம் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
ஊர்ப்புற நூலகர்களின் நலனில் மற்ற சங்கங்கள் அக்கரைக் காட்டுவதில்லை என்று, ஊர்ப்புற நூலகர்கள் கூட்டமைப்பு என்ற தலைப்பில் சிலர் முகநூலில் பதிவு செய்வது வருவதையும் நான் பார்க்கிறேன். இது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.
மற்ற சங்கங்கள் எப்படியோ, அதைப்பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், நான் 7 ஆண்டுகள் பொதுச் செயலாளராக இருந்த பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தையும் சேர்த்து சில ஊர்ப்புற நூலகர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் குறை கூறுவதைப் பார்க்கிறேன்.
ஊர்ப்புற நூலகர் கூட்டமைப்பு என்ற பெயரில் சங்கம் நடத்துபவர்கள் இது வரை எவ்வளவு வசூல் செய்தார்கள், ஊர்ப்புற நூலகர்களுக்கு என்னென்ன செய்து கொடுத்தார்கள் என்று இவர்களிடம் நீங்கள் கேட்டதுண்டா?
இந்த ஊர்ப்புற நூலகர்களுக்கு எப்படியாவது முறையான காலமுறை ஊதியம் பெற்றுத்தரவேண்டும் என்று நான் யோசித்து அதற்கான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். தற்பொழுது நான் சங்கத்தில் எந்தப் பொறுப்பில் இல்லாத போதிலும், சங்க நிர்வாகிகளுக்கு அவ்வப்போது உரிய ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்.
பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் 8.6.2018 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில், ஊர்ப்புற நூலகர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட நூலக அலுவலர் அலுவலகங்கள் எதிரில் இம்மாதக் கடைசி வாரத்தில் பொருந்திள் முறையீடு நடத்துவது என்றும், øலை இரண்டாவது வாரத்தில் மாநில அளவில் இயக்குநர் அலுவலகம் எதிரில் பெருந்திறள் முறையீடு நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றுமாறு மாநில, மாவட்ட நிர்வாகிகளிடம் கடந்த ஒரு மாதமாக நான் பேசி வந்தேன். அவர்களும் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 பெருந்திறள் முறையீடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எவ்வாறு சிறப்பாக நடத்துவது தொடர்பாக நாங்கள் விவாதித்து வரும் நிலையில், நேற்று ஊர்ப்புற நூலகர் கூட்டமைப்பு நிர்வாகிகள் அவசர அவசரமாக இரண்டே நாள் இடைவெளியில் 8.6.2018 அன்று மாவட்ட நூலக அலுவலர் அலுவலகங்கள் எதிரில் பெருந்திறள் முறையீடு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் நோக்கம்தான் என்ன? நாங்கள் ஊர்ப்புற நூலகர்களுக்குப் போராடுவது இவர்களுக்குப் பிடிக்கவில்லையா? ஊர்ப்புற நூலகர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் இத்தனை ஆண்டுகளாக உங்களுக்கு என்ன செய்தார்கள்?
நூலகர்களுக்குத் தரஊதியம் உயர்த்தித்தர வேண்டும் என்று சென்னையில் மாநில அளவில் உண்ணாவிரதம் நடத்தினோம். அதே நாளில் மாற்றுச் சங்கத்தினர் சேலத்தில் போட்டி உண்ணாவிரதம் இருந்து தர ஊதியம் வருவதைத் கெடுத்தனர். அவர்களைப்போலவே ஊர்ப்புற நூலகர் கூட்டமைப்பு நிர்வாகிகள் குறுக்கு சால் ஓட்டுகின்றனரே? இதுதான் நூலகர் நலனா?
ஊர்ப்புற நூலகர்களுக்கும் மற்ற நூலகர்களுக்கும் என்னென்ன செய்தோம் என்று பட்டியலிட நாங்கள் தயாராக இருக்கிறோம். நாங்கள் என்ன செய்தோம் என்பதை ஒரு நூலகரின் டைரிக்குறிப்பு தொடரில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன். இன்னும் பல பதிவுகள் விரைவில் வர உள்ளன. தொடர்ந்து படித்தால் நீங்களே புரிந்துகொள்வீர்கள், நூலகர் நலனுக்கு யார் போராடுகிறார்கள் என்று.
31 மாவட்டங்களில் ஊர்ப்புற நூலகர் கூட்டமைப்புக்கு அமைப்பு இருப்பதாகப் பதிவு செய்கிறார்கள். அமைப்பை உருவாக்குவது எவ்வளவு சிரமமானது என்று எனக்கு நன்கு தெரியும். இந்த ஒற்றுமையைப் பாராட்டுகிறேன்.
சரியான தலைமை இல்லாமல் போயிற்று என்பதுதான் எனது ஆதங்கம். நல்லத் தலைமைக்கு முதலில் துறை சார்ந்த அறிவும் அனுபவமும் அவசியம்.
ஒற்றுமையாக ஒரே அணியில் எல்லோரும் இருக்கிறோம் என்று முகநூலிலும் வாட்ஸ்ஆப்பிலும் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தால் மட்டும் நமது கோரிக்கையை அரசு நிறைவேற்றிவிடாது.
தெருவில் இறங்கிப் போராடுபவனையே ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதில்லை. நிலைமை இப்படி இருக்க, முகநூலில் கோரிக்கைகளை வைப்பதையும், .சி. அறையில் கூட்டம் நடத்துவதையும் யார்தான் கண்டுகொள்வார்கள்?
சரியான கேப்டன் இல்லாத கப்பலைப்போல ஊர்ப்புற நூலகர் கூட்டமைப்பு இருக்கிறதே என்பதுதான் என்னுடைய ஒரே ஆதங்கம். இவ்வளவு கூட்டம் என்னிடம் இருந்திருந்தால் எல்லாவற்றையும் சாதித்திருப்பேன்.
ஊர்ப்புற நூலக நண்பர்களே, உங்களுக்கு எனது பணிவான வேண்டுகோள். ஒன்று தெருவில் இறங்கிப் போராடுங்கள், அல்லது உங்களுக்காகப் போராடுபவர்கள் பின்னால் நின்று வேடிக்கை பாருங்கள்.
எங்களிடம் வாருங்கள் என்று நான் கூப்பிடுவதாக நினைக்க வேண்டாம். ஒவ்வொரு நாளையும் நீங்கள் இழந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை மட்டும் மனதில் நிறுத்துங்கள். நன்றி.
சி.சரவணன். 9442265816

Comments

அய்யா உங்கள் கருத்துக்களை
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
தனபால்-சேலம் மாவட்டம்
9025353567
6379954143
ootyguide said…
நான் தின கூலியாக 12வருசம் பணியாற்றி தற்போது கொரணா காரணமாக ஆட் குறைப்பு செய்து விட்டார்கள். திக்கு தெரியாமல் வெளியே உள்ளேன்.9843141471

Anonymous said…
ஐயா வணக்கம் இந்த அறிக்கையில் ஒரு வெளிப்படுத்த தன்மையை அறிக்கையாகவே இல்லை என்பதை நான் உணர்கிறேன் தங்களை பொதுச் செயலாளர் பதவி தேடி வந்தது என்பதை தெரிவித்து இருக்கிறீர்கள் அந்த பொதுச்செயலாளர் பதவியை யார் உங்களை பரிந்துரை செய்தது 525 நூலகர்கள் மூன்றாம் நிலை நூலாக பதிவு ஏற்பற்றும் அது தானாகவே பெறவில்லை பலவகையில் போராட்டங்களை நடத்தி தான் அதைப் பெற்று இருக்கிறோம் சட்ட ரீதியாகவும் கூட என்பதையெல்லாம் தெளிவாக நீங்கள் எடுத்துரைக்கவில்லை பொது நூலகத்துறை அரசு ஊழியர் சங்கம் தோன்ற காரணம் என்ன அதன் வளர்ச்சி என்ன அதன் பங்களிப்பு என்ன சென்னையில் ஊர் புற நூலகர்கள் நலனுக்காக டிபிஐ வளாகத்தில் போராட்டத்தை முன்வைத்த நோக்கம் என்ன இது எதனால் முன்னெடுத்தீர்கள் என்பது போன்ற இதில் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள் முடிவு செய்தார்கள் என்பதை போன்ற விளக்கங்களில் நீங்கள் பதிவு செய்யவில்லை உங்களைப் பற்றியும் உங்களுடைய பெருமை பற்றியும் இந்த பதிவில் சுட்டிக்காட்டிருப்பது தங்களை புகழ்ச்சிக்கு உள்ளாக்குவது போன்று தெரிகிறது