ஒரு நூலகரின் டைரிக் குறிப்புகள்: 8. ஊர்ப்புற நூலகர்களுக்குச் சிறப்புக் காலமுறை ஊதியம் பெற்றுத் தந்தது:

அமைச்சர் தங்கம் தென்னரசு இல்லத்தில். உடன் எம்.ஜி.செல்வம்

முனைவர்
.அறிவொளி அவர்கள் இயக்குநராகப் பொறுப்பேற்பு:
  பொது நூலகத்துறை இயக்குநராக இருந்த திரு.வே.இரமணி அவர்கள் 30.3.2009 அன்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து முனைவர் .அறிவொளி அவர்கள் 01.04.2009 அன்று பொது நூலகத்துறை இயக்குநராகப் பொறுப்பேற்றார். பொது நூலகத்துறை அலுவலர் சங்கம் சார்பாக மாநில, மாவட்ட நிர்வாகிகள் இயக்குநரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம்.
  இயக்குநர் முனைவர் .அறிவொளி அவர்கள் நூலகர் குரல் பத்திரிகையை மாவட்ட நூலக ஆணைக்குழு மூலம் நூலகங்களுக்கு விநியோகம் செய்ய அனுமதி அளித்தார். இதன் மூலம் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான நூலகங்களுக்கு நூலகர் குரல் சென்றடைந்ததுஇதன் மூலம் சங்கத்தின் செயல்பாடுகளை மட்டுமல்லாது நூலகத்துறை முன்னேற்றங்கள் பற்றி மாநிலம் முழுவதும் உள்ள நூலகர்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.
 இயக்குநர் முனைவர் .அறிவொளி அவர்கள் நூலகத் துறையை நவீனமயமாக்குவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்நூலகங்களைக் கணினிமயமாக்குவது, நூலகர்களுக்குப் பயிற்சி அளிப்பது என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
 பொது நூலகத்துறை இணையதளத்தைப் புதுப்பித்து, அரசாணைகள், நூலகர்கள் பணி மூப்புப் பட்டியல், பதிப்பக முகவரிகள், நூல் தேர்வு நடைமுறைகள் என்று நூலகத்துறை சார்ந்த எல்லா விவரங்களையும் அவ்வப்போது பதிவேற்றம் செய்தார்.
 மாணவர்கள் நூலகங்களை அதிக அளவில் பயன்படுத்திக்கொள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகளை பல்வேறு நிலைகளில் நூலகங்களில் நடத்திப் பரிசு வழங்கினார். நூலகங்களுக்கு அதிக நாட்கள் வரும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்தார்.
 அது மட்டுமல்லாது ஆசிரியர்களும் வாசிப்புப் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் நூலகங்களில் உறுப்பினராகச் சேரவேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஊர்ப்புற நூலகர்களுக்குச் சிறப்புக் காலமுறை ஊதியம் பெற்றுத் தந்தது:
  ஊர்ப்புற நூலகர்களுக்கு ரூ.1500 மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதை உயர்த்தித் தருமாறு இயக்குநர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் என்று தொடர்ந்து பொது நூலகத்துறை அலுவலர் சங்கம் சார்பாக மனு அளித்து வலியுறுத்தி வந்தோம். எந்த முன்னேற்றமும் தெரியவில்லை.       
  புதிய முயற்சியாக, பெண் நூலகர்களைத் திரட்டிப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரைச் சந்திப்பது என்று முடிவு செய்தோம். பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெண் நூலகர்களை வரவழைத்து 22.6.2009 அன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களைச் சந்தித்தோம்.
  இதில் கோவை மாவட்டத்திலிருந்து ஊர்ப்புற நூலகர்களைக் கோவை மாவட்டத் தலைவர் திரு.தா.இளங்கோவன் தலைமையேற்றுத் தனியாகப் பேருந்து வைத்து அழைத்து வந்தார்திருவண்ணாமலையிலிருந்து ஊர்ப்புற நூலகர்களைத் திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் திரு.சுகுந்த் தனியாக வேன் வைத்து அழைத்து வந்தார். அத்துடன் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஊர்ப்புற நூலகர்களை அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் அழைத்து வந்தனர்.
  சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் அமைச்சரைச் சந்தித்து மனு அளித்தோம். அமைச்சரைப் பார்க்க நூற்றுக்கும் மேற்பட்ட நூலகர்கள் வந்திருப்பதாகத் திரு. எம்.ஜி.செல்வம் கூறினார்.
  உடனே அமைச்சர் வெளியே வந்து நூலகர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். ஊர்ப்புற நூலகர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம் ரூ.1500 என்பது மிக்குறைந்த தொகை என்பதால் அந்த ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பெண் நூலகர்கள் ஒற்றைக் கோரிக்கை வைத்தனர்.
 பதிலளித்துப் பேசிய அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு, அக்கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, ஊதிய உயர்வுக்கான அறிவிப்பை எதிர்வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்பதாக உறுதியளித்தார். அத்துடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டுப் போகச் சொல்லி ரூ.10,000 வழங்கினார் அமைச்சர்.
 அமைச்சர் உறுதிமொழி அளித்தது போல, பட்ஜெட் கூட்டத்தொடரில் ஊர்ப்புற நூலகக்ளுக்கான தொகுப்பூதியம், சிறப்புக் காலமுறை ஊதியமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.
 பிறகு பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அமைச்சரைச் சந்தித்து நன்றி கூறினோம்.

245 ஊர்ப்புற நூலகர்களுக்கு மூன்றாம் நிலை நூலகர்களாகப் பதவி உயர்வு:
 பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களுடன் பொது நூலகத்துறை இயக்குநர் முனைவர் . அறிவொளி அவர்களுக்கு நல்ல நட்புறவு இருந்தது. அது நூலகத்துறை வளர்ச்சிக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்தது. இயக்குநர் அவர்களின் பரிந்துரையின்படி 245 ஊர்ப்புற நூலகர்களுக்கு மூன்றாம் நிலை நூலகர்களாகப் பதவி உயர்வு (அரசாணை (நிலை) எண் 102, நாள் 15.04.2010) வழங்கினார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.
 மேலும், 100 பகுதிநேர நூலகங்களை ஊர்ப்புற நூலகங்களாகத் தரம் உயர்த்தி, பகுதிநேர நூலகர்களுக்கு ஊர்ப்புற நூலகர்களாகப் பதவி உயர்வு வழங்கினார்.
 மேலும், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த திரு..உதயச்சந்திரன், இயக்குநர் முனைவர் .அறிவொளி ஆகிய இருவரது முயற்சியில் 2012 ஆம் ஆண்டு ஈரோட்டில் ஒன்றரை கோடி ரூபாயில் செலவில் டிஜிட்டல் நூலகம் தொடங்கப்பட்டது
 மாவட்ட ஆட்சியர் தனது விருப்ப நிதியில் 50 இலட்சம் ஒதுக்கினார். மீதி ஒரு கோடி ரூபாய் நூலக நிதி ஒதுக்கப்பட்டு நூலகம் தொடங்கப்பட்டது.
 இயக்குநர் முனைவர் .அறிவொளி அவர்கள் வருவாய்க் கோட்ட தலைமை இடங்களில் இயங்கிவரும் நூலகங்களை வருவாய்க் கோட்ட நூலகங்கள் (RDCL) என்று தரம் உயர்த்தி அரசாணை பெற்றுத்தந்தார். ஆனால், என்ன காரணமோ இன்றும் அந்த அரசாணை நடைமுறைப் படுத்தப்படவில்லை.

பணி மூப்பில் மூத்தவரை அரசு நிதி நூலகங்களில் நியமிக்கக் ஆணை பெற்றுத்தந்தது:
  பொது நூலகத்துறையில் நூலகம் அரசு நிதி நூலங்கம், மாவட்ட நூலக ஆணைக்குழு நூலகம், சில்லரைச் செலவின நுலகம் என்று வகைப்படுத்தி நூலகர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. அரசு நிதி நூலகங்களில் பணிபுரியும் நூலகர்களுக்கு அனைத்து பிடித்தங்களுடன் ஊதியம் வழங்கப்படுகிறது.
 ஆனால், சில்லரைச் செலவினத்தில் ஊதியம் வழங்கும் நூலகங்களில் பணிபுரியம் நூலகர்களுக்கு எந்த பிடித்தமும் இல்லாமல் ஊதியம் வழங்கப்படுகிறது. அரசு நிதி நூலகப் பணியிடம் காலியாகும்போது பணி மூப்பில் மூத்தவருக்கு அப்பணியிடம் வழங்கப்பட வேண்டும். ஆனால், சில மாவட்டங்களில் பணி மூப்பில் இயையவர்களுக்கு அரசு நிதி நூலகங்களில் மாறுதல் வழங்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருந்தன.
  குறிப்பாக, புதுக்கோடை மாவட்டத்தில் பணிமூப்பில் இருந்த திருமதி ஜாய்கெஸ்சியா என்பவருக்கு அரசு நிதிப் பணியிடம் வழங்கப்படாமல், அவரைவிட பணிமூப்பில் இளையவர் ஒருவருக்கு அப்பணியிடம் மாவட்ட நூலக அலுவலர் திருமதி.கோகிலவாணி வழங்கியதாகச் சொல்லப்பட்டது. அந்த மாவட்டத் தலைவர் திரு. சாமிநாதன் தலைமையில் சங்க நிர்வாகிகள் எத்தனையோ முறை முறையிட்டும் மாவட்ட நூலக அலுவலர் மாற்றிக் கொடுக்கவில்லை.
 தருமபுரி மாவட்டத்தில் பணிமூப்பில் மூத்தவரான திருமதி .தமிழ்ச்செல்விக்கு வழங்கப்பட வேண்டிய அரசு நிதிப் பணியிடத்தில், அவரைவிட பணிமூப்பில் இளையவரான வேறு ஒரு நூலகருக்கு மாவட்ட நூலக அலுவலர் திருமதி விஜயலட்சுமி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
  அதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணி மூப்பில் மூத்தவரான திரு.மாரியப்பனுக்கு வழங்கப்பட வேண்டிய அரசு நிதிப் பணியிடத்தில், வேறு ஒரு நூலகரை மாவட்ட நூலக மாவட்ட நூலக அலுவலர் திரு.மணிகண்டன் நியமித்ததாக திரு.மாரியப்பன் எங்களிடம் முறையிட்டார்.
  இவ்வாறு பல மாவட்டங்களிலிருந்து பல புகார்கள் எங்களுக்கு வந்தன. நாங்களும் மாவட்ட நூலக அலுவலர்களிடம் பேசினோம். எந்தப் பயனும் இல்லை.
 ஒருநாள் மாநில துணைத் தலைவர் திரு.எஸ்.எம்.இரமேஷ், திரு. மாரியப்பனுடன் எங்களுடைய வீட்டுக்கு வந்து, “பணிமூப்பில் மூத்தவர்களுக்கு அரசு நிதிப் பணியிடம் வழங்கப்படாமல், இளைவர்களுக்கு பல மாவட்டங்களில் அரசுநிதிப் பணியிடங்கள் வழங்கப்படுவதால், நூலகர்களிடையே பிரச்சனை வருகிறது. அது தொடர்பாக இயக்குநரைச் சந்தித்து பொதுவான ஆணை  பெற்றாக வேண்டும்என்றார்.
 இது தொடர்பாக நிறுவனர் தலைவர் திரு.எம்.ஜி. செல்வம், மாநிலத் தலைவர் திரு.ஜி.வெங்கடேசன், தலைமை நிலையச் செயலர் என்.செல்வம் ஆகியோருக்குத் தகவல் கொடுத்துவிட்டு, 29.08.2011 அன்று சென்னை சென்றோம்.
 எங்களுடன் திரு.தீ.சண்முகம், புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் திரு. சாமிநாதன், பாதிக்கப்பட் நூலகர்கள் ஆகியோர் வந்திருந்தனர்இயக்குநர் முனைவர் .அறிவொளி அவர்களைச் சந்தித்து இது தொடர்பாகப் பேசினோம். பல மாவட்டங்களிலிருந்து தொடர்ந்து இது போன்ற புகார்கள் வருவதால் பொதுவான ஆணை ஒன்றை வழங்குமாறு கேட்டோம். பணிமூப்பில் மூத்தவர்தாம் அரசு நிதிப் பணியிடத்தில் நியமிக்கப்பட வேண்டும் என்று அன்றே உத்தரவு ஒன்றைப்போட்டு, அதன் நகலைக் கையில் கொடுத்தார் இயக்குநர் (..எண்.8260 / 1/ 2011, நாள்: 29.08.2011).          
  இயக்குநர் அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்தோம். அங்கு கிருஷ்ணகிரி மாவட்ட நூலக அலுவலர் திரு.மணிகண்டன் இருந்தார். அவரிடம் இந்த தகவலைச் சொன்னோம். திரு.மாரியப்பனுக்கு அரசு நிதிப் பணியிடத்திற்கு மாற்றித் தருவதாகச் சொன்னார். அடுத்த இரண்டு நாட்களில் அவ்வாறே மாற்றிக் கொடுத்தார். இந்த உத்தரவை வைத்துப் பல மாட்டங்களில் பாதிக்கப்பட்ட நூலகர்கள் உரிய பணியிடங்களைப் பெற்றனர்.

நூலகப் பயன்பாடு மென்பொருளை மாற்றச் சொன்னது:
  பொது நூலகத்துறை நூலகங்களில் ஆட்டோலிப் என்னும் மென்பொருள் பணம் செலுத்தித் தனியாரிடமிருந்து வாங்கிப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால், நூலகங்களில் உள்ள கணினியில் பழுது ஏற்பட்டால், ஆட்டோலிப் நிறுவனத்தினர் வந்து பழுது பார்க்கும் வரை கணினியை இயக்க முடிவதில்லை. அத்துடன் பணமும் செலவு செய்ய வேண்டியுள்ளது.
 இதற்கெல்லாம் தீர்வாக, நூலக நிர்வாகம் தொடர்பான வேறு எத்தனையோ இலவச மென்பொருள்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை நூலகங்களில் பயன்படுத்த ஏற்பாடு செய்யுமாறு இயக்குநரிடம் பொது நூலகத்துறை அலுவலர் சங்கம் சார்பாகக் கோரிக்கை வைக்கப்பட்டது.
 இதனை வலியுறுத்தி நூலகர் குரல் பத்திரிகையிலும் நூலகச் சேவையை மேம்படுத்துவது காலத்தின் கட்டாயம் என்ற தலைப்பில் விரிவான கட்டுரை ஒன்றை நான் எழுதினேன்.

 எங்களது கோரிக்கையைப் பரிசீலனை செய்த இயக்குநர், தென்னிந்தியாவில் பரவலாகப் பயன் படுத்தப்படும் இலவச மென்பொருளான கோஹா மென்பொருளை நூலகங்களில் பயன்படுத்த ஏற்பாடு செய்தார். இன்றும் நூலகங்களில் கோஹா மென்பொருள் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது

Comments