ஒரு நூலகரின் டைரிக் குறிப்புகள்: 7. நூலகர் குரல் உதயமானது.
ஏற்கெனவே 2007 ஆம் ஆண்டுத் திரு எம்.ஜி.செல்வம் அவர்களைச் சந்தித்து, “நூலகர் குரல் என்ற தலைப்பில் ஒரு பத்திரிகை நடத்தலாம் என்று விரும்புகிறேன். நான் பணியில் இருப்பதால் என் பெயரில் பத்திரிகை நடத்துவதில் சிக்கல் உள்ளது. ஓய்வு பெற்ற மாவட்ட நூலக அலுவலர் திரு.வே.மு. ரத்தினம் அவர்களைச் சந்தித்து, அவர் பெயரில் பத்திரிகை நடத்த ஒப்புதல் கேட்டேன். அவர் மறுத்து விட்டார். உங்கள் பெயரில் பத்திரிகை நடத்தலாம் என்று இருக்கிறேன்” என்றேன்.
அதற்கு அவர், “ஏற்கெனவே சங்கம் சார்பாக அரசு அலுவலர் இதயக்குரல் என்னும் பத்திரிகை வெளிவருகிறது. அது இருக்கும்போது தனியாகப் பத்திரிகை நடத்துவது தேவையற்றது. கட்டுரை ஏதாவது கொடு, அதில் போட சொல்கிறேன்” என்றார். நான் எதிர்பார்த்தது நடக்காததால், பத்திரிகை நடத்தும் முயற்சியைக் கொஞ்ச நாட்களுக்குத் தள்ளி வைத்திருந்தேன்.
தருமபுரி பொதுக்குழுக் கூட்டம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், திரு.எம்.ஜி.செல்வம் ஒருநாள் தொலைப்பேசியில் அழைத்து, நான் ஏற்கெனவே சொல்லியிருந்த நூலகர் குரல் தொடர்பாகப் பேச சென்னை வருமாறு அழைத்தார்.
சென்னை சென்று திரு.எம்.ஜி.செல்வத்தைச் சந்தித்தேன். உடன் நண்பர்கள் திரு.முனிராஜ், திரு.சண்முகம் வந்திருந்தனர்.
“தனியாகச் சங்கம் தொடங்கப்பட்டுவிட்டது. சங்கச் செய்திகளைப் பற்றி மற்ற நூலகர்கள் தெரிந்துகொள்ளப் பத்திரிகை ஒன்று தொடங்கலாம். ஏற்கெனவே, நீ சொன்ன நூலகர் குரல் தலைப்பிலேயே பதிவு செய்து பத்திரிகை நடத்தலாம்” என்றார் திரு.எம்.ஜி.செல்வம்.
சென்னையில் பதிவு செய்து பத்திரிகை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு திரு.எம்.ஜி.செல்வம் அவர்களிடம் கூறினோம். பத்திரிகை சந்தா தொடர்பாக மற்ற மாவட்டங்களுக்கு நாங்கள் தொடர்பு கொண்டு பேசுவதாகக் கூறிவிட்டு வந்தோம்.
சில மாதங்களில் நூலகர் குரல் பதிவு செய்யப்பட்டு, டிசம்பர் 2009 இல் முதல் பத்திரிகை வெளிவந்தது. பத்திரிகை மாநிலம் முழுவதும் அனுப்பப்பட்டது.
சங்கச் செயல்பாடு மட்டுமல்லாது, நூலகத்துறை செய்திகள், மாவட்ட நூலக அலுவலர்கள் நூலகர்களுக்கு நல்லது செய்தால் பாராட்டுகளும், நூலகர் நலனுக்கு எதிராகச் செயல்பட்டால் விமர்சனங்களும் நூலகர்குரலில் வெளிவந்தது.
நான் நூலகர் குரலில் தொடர்ச்சியாகக் கட்டுரைகளை எழுதி வந்தேன். எனது கட்டுரைகள் நூலகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. பல மாவட்டங்களிலிருந்து நூலகர்கள் என்னைத் தொடர்புகொண்டு தங்கள் மாவட்டப் பிரச்சனைகளைப் பற்றியும் எழுதச் சொன்னார்கள்.
தருமபுரி மாவட்டத்திற்குப் பணி மாறுதல்:
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் 100 ஊர்ப்புற நூலகங்கள் கிளை நூலகங்களாகத் தரம் உயர்த்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் அறிவித்தார். இன்னும் சில மாதங்களில் தருமபுரி மாவட்டத்திற்கு எனக்கு மாறுதல் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை வந்தது.
நூலகங்கள் தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு அரசாணையாக விரைவில் வெளிவர சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்து வலியுறுத்துமாறு திரு.எம்.ஜி.செல்வம் அவர்களிடம் கூறி வந்தேன். அவரும் அடிக்கடி இயக்குநர் அலுவலகம், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் அலுவலகம் சென்று அரசாணை விரைவில் வெளிவர ஏற்பாடுகளைச் செய்துவந்தார்.
சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரி மாவட்டத்திற்கு மாறுதல் வேண்டி, சேலம் மாவட்ட நூலக அலுவலர் மூலம் இயக்குநர் அவர்களுக்கு விண்ணப்பித்தேன்.
19.11.2008 அன்று 100 ஊர்ப்புற நூலகங்கள் கிளை நூலகங்களாகத் தரம் உயர்த்தப்படும் என்று அரசாணை வெளிவந்தது. உடனடியாக இயக்குநரை வந்து பார்க்குமாறும் திரு.எம்.ஜி.செல்வம் தொலைப்பேசியில் எனக்குத் தகவல் கொடுத்தார்.
அந்த வாரம் வெள்ளிக்கிழமை நானும் நண்பர் திரு.தீ.சண்முகமும் இயக்குநரைச் சந்தித்து மாவட்ட மாறுதல் கோரினோம். இயக்குநர் மாறுதல் வழங்குவதாகக் கூறினார்.
ஒரு வாரம் எதிர்பார்த்தோம், மாறுதல் ஆணை வரவில்லை. மீண்டும் இயக்குநர் அலுவலகம் சென்று இயக்குநரைச் சந்தித்துப் பணிமாறுதல் ஆணை இன்னும் வரவில்லை என்றேன். “டிரான்ஸ்பர் ஆர்டர் போடச்சொல்லி ஒரு வாரம் ஆச்சே. ஏன் போடல? சூப்பிரண்டன்டைக் கூப்பிடு” என்றார் இயக்குநர்.
கண்காணிப்பாளர் திருமதி.ரஜினியிடம் மாவட்ட மாறுதல் பற்றிக் கேட்டேன்.
“தரம் உயர்த்தப்பட்ட கிளை நூலகங்களில் எந்தப் பிடித்தமும் இல்லாமல் ஊதியம் வழங்கப்படும். அதற்குச் சம்மதம் என்றால் எழுதிக் கொடுங்கள்” என்றார்.
எப்படியோ மாவட்டத்திற்குள் வந்தால் போதும் என்று அவர் சொன்னவாறே எழுதிக்கொடுத்தேன். உடனே பணி மாறுதலுக்கான ஆணை தயார் ஆனது. இயக்குநரின் கையொப்பம் பெற்று அன்றே அஞ்சலில் அனுப்பினார் கண்காணிப்பாளர்.
சேலம் மாவட்ட நூலக அலுவலரைச் சந்தித்து, சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரி மாவட்டத்திற்குப் பணிமாறுதல் ஆணைப் பெற்று, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அ.புதுப்பட்டி கிளை நூலகத்தில் பணியில் சேர்ந்தேன்.
மேலும், இயக்குநர் இரமணி அவர்கள் வருவாய் வட்டத் தலைமை இடங்களில் உள்ள 210 கிளை நூலகங்களைக் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் முழுநேர நூலகங்களாகத் தரம் உயர்த்தித் தந்தார்.
நூலகங்கள் தரம் உயர்த்தப்பட்டதற்கு நன்றி தெரிவித்தது:
நூலகங்கள் தரம் உயர்த்தப்பட்டதற்குச் சங்கம் சார்பாகத் திரு.எம்.ஜி.செல்வம் தலைமையில் இயக்குநரைச் சந்தித்து நன்றி கூறினோம். இயக்குநரோ பெருந்தன்மையாக நன்றியை அமைச்சருக்குச் சொல்லுங்கள் என்றார்.
அன்றே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களைச் சந்தித்துப் பல ஆண்டுகளாகத் தரம் உயர்த்தப்படாமல் இருத்த நூலகங்கள் தரம் உயர்த்தப்பட்டதற்கு நன்றி கூறினோம்.
நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு சங்கம் சார்பாக இயக்குநரைச் சந்தித்து முந்தைய ஆண்டைப்போல நடப்பு ஆண்டும் 100 ஊர்ப்புற நூலகங்களைத் தரம் உயர்த்தித் தருமாறு கோரினோம்.
ஆனால், இயக்குநர் 200 நூலகங்கள் தரம் உயர்த்த அமைச்சரிடம் பேசியிருப்பதாகக் கூறினார். அது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்தது. இயக்குநர் திரு. இரமணி கூறியது போலவே 200 ஊர்ப்புற நூலகங்கள் கிளை நூலகங்களாகத் தரம் உயர்த்தப்பட்டன.
மேலும், இயக்குநர் திரு.வே.இரமணி அவர்கள் மண்டல அளவில் நூலக வளர்ச்சி மாநாடுகளை நடத்தினார். இதன் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பிலான தளவாடங்கள் மற்றும் புரவலர் தொகை பெறப்பட்டது. இதனால் அடிப்படை வசதி இல்லாமல் இருந்த நூலகங்கள் தன்னிறைவு பெற்றன.
2009 ஆம் ஆண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அடிக்கல் நூட்டுவிழா இயக்குநர் திரு.வே.இரமணி அவர்கள் பணிக்காலத்தில்தான் நடை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
2009 பிப்ரவரி மாதத்தில் 200 ஊர்ப்புற நூலகர்களுக்கு மூன்றாம்நிலை நூலகர் பதவி உயர்வு வழங்கினார்.
இவ்வாறு, அதிக அளவிலான நூலகங்கள் தரம் உயர்த்தப்பட்டதும், அதிக எண்ணிக்கையிலான நூலகர்களுக்குப் பதவி உயர்வு வழங்கியதும் வேறு எந்த இயக்குநர் பணிக் காலத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமல்லாது பல ஆண்டுகளாக நூலகர்கள் மீது நிலுவையில் வைக்கப் பட்டிருந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் இயக்குநர் திரு.வே.இரமணி அவர்கள் விரைந்து முடித்துக் கொடுத்து அடுத்தப் பதவி உயர்வுக்கு வழிவகைச் செய்தார்.
திரு.வே.இரமணி இயக்குநராக இருந்த காலத்தைப் பொது நூலகத்துறையின் பொற்காலம் என்றால் அது மிகையாகாது

Comments