எதிரும் புதிரும் - நூலகர்களும் அமைச்சுப் பணியாளர்களும்


 மாவட்ட நூலக அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர்களும் நூலகர்களும் ஒற்றுமையாக இருந்து புரிகின்றனர்களா? இந்தக்  கேள்விக்கு, ஆம், என்று எந்த ஒரு மாவட்டத்தில் இருந்தும் பதில் வராது. இது இன்று நேற்றல்ல. 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே இப்படிப்பட்ட நிலைமைதான் பொது நூலகத் துறையில் நிலவுகிறது.
  நூலகர்களும் அரசு ஊழியர்கள்தான், அமைச்சுப் பணியாளர்களும் அரசு ஊழியர்கள்தான். இவ்விருவரும் ஒரேதுறையில்தான் பணி புரிகின்றனர். அப்படி இருந்தும் அவர்கள் எதிரும் புதிருமாக இருப்பது ஏன்? இவர்கள் ஒற்றுமையாக இருந்து பணிபுரிந்தால் நூலகத் துறை மென்மேலும் வளராதா? இது இவர்களுக்குத் தெரியாதா?
 நூலகர்களுக்கும் அமைச்சுப் பணியாளர்களுக்கும் அப்படி என்னதான் பிரச்சனை ஏற்படுகிறது? ஒருவர் உரிமையில் மற்றவர் தேவையில்லாமல் தலையிடுவதும், அவரவருக்கு உரிய மரியாதையைக் கொடுக்காமல் போவதும், தான்தான் பெரியவன் என்கின்ற அகங்காரமும்தான் பிரச்சனைகளுக்கு காரணம்.
  பொதுவாக, அமைச்சுப் பணியாளர்கள் எல்லா மாவட்டங்களிலும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், நூலகர்கள் எந்த ஒரு மாவட்டத்திலும் ஒற்றுமையாக இருப்பதில்லை. அரசு ஊழியர்களிடையே பல சங்கங்கள் இருக்கலாம். எல்லாச் சங்கங்களின் நோக்கமும் பணியாளர்களின் நலன்தான். ஆனால், பொது நூலகத் துறையில் உள்ள நூலகர் சங்கங்கள் இதற்கு விதிவிலக்கு. இதனை அமைச்சு பணியாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
  ஒரு நூலகருக்கும், அமைச்சு பணியாளருக்கும் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், அந்த நூலகர் எந்தச் சங்கத்தில் இருக்கின்றார் என்று பார்த்து, வேறு சங்க நிர்வாகிகளைத் தூண்டிவிட்டு, அதனை அமைச்சுப்பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், இந்த அமைச்சு பணியாளர்களால் தனக்கோ, தன் சங்க உறுப்பினர்களுக்கோ, நாளை இது போன்ற பிரச்சனை வராதா என்று நூலகர்கள் யோசிப்பதில்லை. அமைச்சு பணியாளர்களோடு சேர்ந்து ஆட்டம் போடுவார்கள்.
  ஊதிய நிலுவைத் தொகை, ஒப்படைப்பு விடுப்புத் தொகை, ஊதிய உயர்வு நிலுவைத் தொகை, ஊக்க ஊதியம், பி.எஃப் முன்பணம் போன்ற நூலகர்களுக்கு பணப் பயன் தரும் கோப்பாக இருந்தால் மாதக்கணக்கில், ஏன் ஆண்டுக் கணக்கில்கூட மாவட்ட நூலக அலுவலகத்தில் தேங்கி விடும். கேட்கும் போதெல்லாம் வேலைப்பளு அடுத்த வாரம் போட்டுத் தருகிறோம் என்பார்கள். மூன்று மாதம் கழித்து கேட்டாலும் இதே பதில்தான் வரும். ஆனால், நூலகர்கள் மீது ஏதேனும் புகார் வந்தால் போதும், அடுத்த 24 மணி நேரத்தில் விளக்கம் கேட்டு கடிதம் வரும். வேலைப்பளு காரணமாக இதை மாதக் கணக்கில் வைத்திருக்க மாட்டார்கள். இது போன்ற சூழ்நிலையில்தான் நூலகர்களுக்குக் கோபம் வருகிறது.
  அடுத்து, சில்லறைச் செலவினப் பட்டியல் போடுவதில் அவர்கள் செய்யும் கூத்துக்கு அளவே இல்லை. வேண்டியவர்களுக்கு என்றால் எது போட்டாலும் டிக் அடித்துவிடுவார்கள். ஆனால், வேண்டாதவர்கள் என்றால் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுப் பார்ப்பார்கள். ஆறு மாதத்திற்கு ஒரு பல்பு வாங்கினால்கூட அதைச் சுழிப்பார்கள். கேட்டால் முன் அனுமதி வாங்க வேண்டும் என்பார்கள். முன் அனுமதி கேட்டு எழுதினால் அனுமதி வர எத்தனை மாதம் ஆகுமோ? அது நூலகருக்கும் அமைச்சுப் பணியாளர்களுக்கும் உள்ள உறவைப் பொறுத்தது. அதுவரை இருட்டில்தான் இருக்க வேண்டும். வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சப்பைக் கட்டு கட்ட வேண்டியது நூலகர் பொறுப்பு.
  புதிய புத்தகங்கள் எடுத்து வந்த வண்டி வாடகைக்கு பில் வைத்தால், இவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு கை வைப்பார்கள். ஒரே எண்ணிக்கையிலான புத்தகங்களாக இருந்தாலும், அதிக தூரம் உள்ள நூலகத்திற்கு எவ்வளவு குறைவான தொகை போட்டாலும் அதிலும் குறைப்பார்கள். அதுவே தங்களுக்கு வேண்டியவர்களாக இருந்தால் குறைவான தூரமாக இருந்தாலும் அதிகமான தொகையாக இருந்தாலும் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.
மாவட்ட நூலக அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு எந்தெந்த வகையில் எவ்வளவு பணம் வருகிறது என்று நூலகர்களுக்குத் தெரியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். இதில் எந்த நூலகராவது (ஒரு மாவட்டத்தைத் தவிர) பங்கு கேட்கிறார்களா? ஆனால், நூலகர்கள் போடும் நியாயமான பில்லுக்குக்கூட ரூல்ஸ் அண்டு ரெகுலேசன் பேசுவார்கள்.
 மாவட்ட நூலக அலுவலகத்தில் பில் செச்ஷன் பார்க்கும் இளநிலை உதவியாளர் சரியாக வேலை செய்யவில்லையென்றால் அவரை வேறு பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்று எந்த ஒரு நூலகரும் கோருவதில்லை. யாரை எந்த இருக்கையில் உட்கார வைத்தால் வேலைச் சிறப்பாக நடைபெறும் என்பது அவர்கள் சம்பந்தப்பட்டது. அது அவர்கள் வேலை. இதில் எந்த நூலகரும் தலையிடுவதில்லை.
 அதேபோல, எந்த நூலகத்தில் எந்த நூலகரைப் போட்டால் நூலகம் சிறப்பாக நடைபெறும் என்று நூலகர்களுக்குத்தான் தெரியும். இதில் அமைச்சுப் பணியாளர்கள் தலையிட வேண்டிய அவசியமில்லை. ஆனால், நடப்பது என்ன? காலிப்பணியிடத்தை நிரப்பும்போதும், நூலகர்களுக்குப் பணிமாறுதல் வழங்கும்போதும் அமைச்சுப் பணியாளர்கள் தேவையில்லாமல் தலையிட்டு குழப்பம் விளைவிக்கின்றனர்.
பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள அமைச்சுப் பணிளாளர்கள் தாங்கள்தான் அதிகார மையம் என்று நினைக்கின்றார்கள். மாவட்ட நூலக அலுவலரும் தங்கள் இஷ்டப்படிதான் நடக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.
 வாசகர்கள் இல்லையென்றால் எப்படி நூலகர்களுக்கு வேலை இல்லையோ, அப்படித்தான் நூலகர்கள் இல்லையென்றால் அமைச்சுப் பண்யாளர்களுக்கு வேலை இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும்.
 பெரும்பாலான அமைச்சுப் பணியாளர்கள் கருணை அடிப்படையில் வேலைக்கு வந்தவர்கள். அவர்களுக்கு அரசுப் பணியின் அருமை தெரிய வாய்ப்பில்லை. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி வந்திருந்தால் தேர்வில் சேர்ச்சி பெறுவது எவ்வளவு கஷ்டம் என்று தெரிந்திருக்கும். அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலைக் கிடைக்குமோ? கிடைக்காதோ? என்று பல ஆண்டுகள் தாத்திருந்து வேலைக்கு வந்திருந்தால் அரசுப் பணியின் அருமை தெரிந்திருக்கும்.
  அரசுப் பணி என்பது அறப்பணி. அது அனைவருக்கும் கிடைக்காது. நம்மைவிடத் தகுதியும், திறமையும் உடைய லட்சக்கணக்கானோர் காத்திருக்க நமக்கு அரசுப்பணி கிடைத்திருக்கிறதென்றால் அரசுக்கு நாம் எவ்வாறெல்லாம் சேவை செய்ய முடியும் என்று எண்ணிப்பார்க்க வேண்டாமா?
  வாசகர்களுக்குச் சேவை செய்வதுதான் நூலகர்களுக்குப் பிரதான வேலை. அதற்கு அடுத்ததுதான் மற்ற ஏனைய அலுவலகப் பணிகள். அதுபோலத்தான் நூலகர்களுக்குச் சேவை செய்வதுதான் அமைச்சுப் பணியாகர்களின் பிரதான வேலை. அதற்கு அடுத்ததுதான் மற்ற அலுவலகப்பணிகள் என்பதை உணர்ந்து நூலகர்களின் தேவைகளை உரிய நேரத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அமைச்சுப் பணியாளர்கள் நூலகர்கள் ஒற்றுமை ஓங்கும். மாவட்ட நிர்வாகமும் சிறப்பாகச் செயல்படும்.
 இதற்கு இணக்கமான சூழ்நிலையை உருவாக்குவதில் மாவட்ட நூலக அலுவலர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. ஆனால், நூலகர்களையும் அமைச்சுப் பணியாளர்களையும் ஒருங்கிணைத்து நிர்வாகம் செய்யும் மாவட்ட நூலக அலுவலர்கள் இவர்களது ஒற்றுமையின் அவசியத்தை எடுத்துக் கூறுவதில்லை. இவர்கள் ஒற்றுமையாக இருந்து பணிபுரிந்தால் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக நடைபெறும் என்ற உண்மை அவர்களுக்குத் தெரித்திருந்தும் அவர்கள் கண்டு கொள்வதில்லை. யார் எப்படிப் போனால் நமக்கென்ன என்று நினைக்கிறார்களா? நூலகர்களும் அமைச்சுப் பணியாளர்களும் ஒற்றுமையாக இருந்தால் நமக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்று பயப்படுகிறார்களா?
 அல்லது இவர்கள் இருவரும் பிரச்சனையில் இருக்கும் வரை நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று நினைக்கிறார்களா? எந்த ஒரு பிரச்சனையென்றாலும் நியாயம் ஒரு பக்கம்தான் இருக்கும். அந்த நியாயத்தைச் சொல்லப்போய் மற்றொரு தரப்பின் விரோதத்திற்கு ஏன் ஆளாக வேண்டும் என்று ஒதுங்கி இருக்கிறார்களா? அது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.
  அமைச்சுப் பணியாளர்களுக்கும், நூலகர்களுக்கும் இடையே உள்ள தூரத்தைக் குறைக்க மாவட்ட நூலக அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நூலகர்களுக்கும் அமைச்சுப் பணியாளர்களுக்கும் இடையே ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக இரு தரப்பையும் அழைத்துப் பேசி சரி செய்ய வேண்டும். இருதரப்பையும் ஒருங்கிணைத்து நிர்வாகம் செய்தால் மட்டுமே மாவட்ட நிர்வாகம் சிறப்பாக இருக்கும்.
இது ஒரு புறம் இருக்க, நூலகர்களுக்கு எதிராகச் செயல்படும் சில நூலகர்கள் ஒவ்வொரு மாவட்டத்திம் உண்டு. சர்வீஸ் அண்டு சப்ளை செய்யும் இந்த நூலகர்கள் இருக்கும் வரை எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்காது. முதலில் இந்த நூலகர்கள் திருந்த வேண்டும். அல்லது இவர்களைத் திருத்த வேண்டும். அப்பொழுதுதான் மாவட்ட நூலக அலுவலர்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் பயனுள்ளதாக இருக்கும்.
  நூலகர்களும் அமைச்சுப் பணியாளர்களும் இரயில் வண்டியின் தண்டவாளங்கள் போல இணையாக இருந்து செயல்பட வேண்டும். ஒரு தண்டவாளம் உயரமாகவும், மற்றொன்று தாழ்வாகவும் இருந்தால் இரயில் தடம் புரண்டுவிடும். மாவட்ட நூலக ஆணைக்குழு என்னும் இரயில் தடம்புரளாமல் வேகமாகச் செல்லவேண்டுமானால் நூலர்களும் அமைச்சுப் பணியாளர்களும் இணையாக இருந்து செயல்பட வேண்டும்.
  எது எப்படி இருந்தாலும், மாவட்ட நிர்வாகத்தை ஒருங்கிணைத்து நடத்திச் செல்லும் மாவட்ட நூலக அலுவலர்கள்தான், நூலகர்கள் அமைச்சுப் பணியாளர்கள் ஒற்றுமைக்கு வழி வகை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நிர்வாகம் சுமூகமாகவும், சிறப்பாகவும் இருக்கும். இல்லையேல் நீறு பூத்த நெருப்புப் போலத்தான் இருக்கும்.

- இக்கட்டுரை ஜøலை 2011 நூலகர் குரல் மாத இதழில் வெளிவந்த எனது கட்டுரை. இன்றைய சூழலில் நூலகர்கள் இக்கட்டுரையைப் படிப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
சி.சரவணன், முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளர், பொது நூலகத்துறை அலுவலர் சங்கம்.

Comments