ஒரு நூலகரின் டைரிக் குறிப்புகள்: 6. என்னைப்பற்றி இயக்குநரிடம் போட்டுக்கொடுத்த திரு.ஜெகதீசன் - புதியதாகச் சங்கம் தொடங்கியது - மாநிலப் பொதுச் செயலாளராகத் தேர்வு.
சேலம் மாவட்டத்தில் நான் பணிபுரிந்தபோது நடைபெற்ற இன்னொரு சம்பவத்தைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
சேலம் மாவட்ட நூலக அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளராகப் பணிபுரிந்து வந்த திரு. ஹரிநாராயணனுக்கும், பெண் நூலகர் ஒருவருக்கும் ஏதோ பிரச்சனை இருந்திருக்கிறது. அந்தப் பெண் நூலகர் திரு.ஹரிநாராயணன் மீது இயக்குநருக்குப் புகார் அனுப்பிவிட்டது. இயக்குநர் சேலம் வந்தபோது நேரடியாக இருவரையும் அழைத்து விசாரித்தார். அப்பொழுது அந்தப் பெண் நூலகர் திரு.ஹரிநாராயணன் தன்னிடம் பாலியல் ரீதியாக இரட்டைப் பொருள்படும்படியாகப் பேசுவதாக இயக்குநரிடம் வாக்குமூலம் கொடுத்தார்.
அப்பொழுது நான் அயோத்தியாப்பட்டணத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். சேலம் மாவட்ட மைய நூலகத்தில் பணிபுரிந்துவந்த திரு. தீ.சண்முகம் மேற்படி விசாரணை பற்றி எனக்குத் தொலைப்பேசியில் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “அந்த நூலகர் இயக்குநருக்குப் புகார் செய்யாமல் பிரச்சனையைப் பேசித் தீர்த்திருக்க வேண்டும். நம்மிடம் சொல்லியிருந்தால் நாமாது பேசித் தீர்த்திருக்கலாம். அவசரப்பட்டுப் புகார் செய்துவிட்டார். அந்த நூலகர் நம் சங்கத்தில் இருப்பதால் திரு.ஹரிநாராயணன் நம் மீது வருத்தத்தில் இருக்கிறார்” என்றார்.
சில நாட்கள் கழித்துத் திரு.தீ.சண்முகத்தைப் பார்க்க சேலம் மாவட்ட மைய நூலகம் சென்றேன். நானும் சண்முகமும் மைய நூலகத்தின் பின்பகுதியில் இருக்கும் மரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருந்தோம்.
அப்பொழுது என்னைப் பார்த்த திரு.ஹரிநாராயணன் என்னிடம் வந்து பேசினார். “என்னை இந்த மாவட்டத்திலிருந்து மாத்தறதுக்கு உங்கள் சங்கத்துக்காரர் எல்லாம் சேர்ந்து இப்படி வேலை செய்யறீங்ளே, இது உங்களுக்கே நல்லா இருக்கா?” என்று கோபமாகக் கேட்டார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் சொன்னேன், “உங்களுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லையே, நான் எதற்கு உங்களுக்கு எதிராகச் செயல்பட வேண்டும். அந்த நூலகரை நான் இது வரை நேரில் பார்த்ததுகூட இல்லை. நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்” என்றேன்.
“எந்த மாவட்டத்துக்குப் போட்டாலும் போய் வேலை செய்யத் தயாரா இருக்கிறேன். ஊட்டிக்குப் பேட்டாகூடப் போகிறேன். அங்க எங்கள் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள்” என்று சொல்லிக்கொண்டு வேகமாகத் திரும்பிச்சென்றார்.
நான் கூப்பிட்டேன். அவர் திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டார். அதற்குமேல் நான் என்ன சொன்னாலும் அவர் கேட்கப் போவதில்லை என்று உணர்ந்தேன். அதனால், அதற்குமேல் அவரைச் சமாதானம் செய்யவில்லை.
இந்தச் சம்பவம் என்னை மிகவும் வருத்தமடையச் செய்தது. யாரோ செய்த செயல், பழி என்மீது விழுந்தது.
இச்சம்பவம் நடந்த சில வாரங்களுக்குப் பிறகு ஒரு வேலையாகச் சென்னை சென்றேன். இயக்குநரைப் பார்க்க திரு. எம்.ஜி.செல்வம் சென்றார். அவருடன் நானும் சென்றேன்.
திரு.எம்.ஜி.செல்வமும் இயக்குநரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது, இயக்குநர் என்னிடம் திரு.ஹரிநாராயணன் மீதான புகார் பற்றிக் கேட்டார்.
“நான் விசாரித்த வகையில் ஹரிநாராயணன் மீதான புகாரில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களுக்குள் முன்விரோதம் இருப்பதால் அந்த நூலகர் பாலியல் புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது. ஹரியிடம் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிக் கோப்பை முடித்துவிடுங்கள்” என்றேன்.
“இல்லை. அவருக்கு டிரான்ஸ்பர் போட முடிவுசெய்து விட்டேன். எந்த மாவட்டத்துக்குப் போடலாம் என்றுதான் யோசிக்கிறேன்” என்றார் இயக்குநர்.
“பாலியல் புகார் மீதும், ஜாதிரீதியான புகார் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுப்பது, பொய்யான புகார் அளிப்பவர்களை ஊக்கப்படுத்துவதாக ஆகிவிடும் என்பது என் கருத்து. அவருக்கு மாறுதல் வழங்குவது என்று தாங்கள் முடிவுசெய்திருந்தால் அவருக்கு ஊட்டிக்கு மாறுதல் வழங்குங்கள். அங்கு அவரது உறவினர்கள் இருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்திருந்தார்” என்றேன்.
அடுத்த ஒரு வாரத்தில் திரு.ஹரிநாராயணனுக்கு ஊட்டிக்குப் பணிமாறுதல் ஆணை வந்ததாகக் கேள்விப்பட்டேன்.
ஒருநாள் திரு.ஹரிநாராயணன் எனக்குப் போன் போட்டு, “எனக்கு டிரான்ஸ்பர் போட்டுட்டாங்க. உங்களுக்குத் தெரியுமா?” என்றார்.
“கேள்வி பட்டேன். உங்கள் மீதான புகாரிலிருந்து உங்களை விடுவிக்குமாறு இயக்குநரிடம் பேசினேன். உங்களுக்கு டிரான்ஸ்பர் போடுவது என்று அவர் ஏற்கெனவே முடிவுசெய்துவிட்டதாகக் கூறினார். அதனால், என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை” என்றேன்.
“நான் சேலத்தில் குடியிருக்கிறேன். எனக்கு ஊட்டிக்கா டிரான்ஸ்பர் போடறது? நாமக்கல் அல்லது ஈரோட்டுக்கு டிரான்ஸ்பர் போடக்கூடாதா?” என்றார்.
அவரது வார்த்தை எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்பொழுது அவரிடம் நான் சொன்னேன், “ஊட்டியில் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். ஊட்டிக்கு டிரான்ஸ்பர் போட்டாலும் போகத்தயாராக இருக்கிறேன் என்று நீங்கத்தானே சொன்னிங்க, மறந்துட்டீங்களா? உங்களுக்கு நல்லது செய்யனும்னுதான் உங்களுக்கு ஊட்டிக்கு டிரான்ஸ்பர் போடச்சொன்னேன்” என்றேன்.
“கோபத்தில் அப்ப நான் சும்மா சொன்னேன்” என்றார். இவரது இந்த வார்த்தை எனக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது.
“நாமக்கல் அல்லது ஈரோடு போட்டுக்கொடுக்குமாறு இயக்குநரிடம் கேளுங்கள்” என்றேன்.
“அதற்குத்தான் சென்னைக்குப் பேருந்தில் போய்க்கொண்டிருக்கிறேன். உங்களால் வரமுடியுமா?” என்றார்.
“திடீரென்று சொன்னால் எப்படி வரமுடியும்? இயக்குநரைப் பார்த்து மனு கொடுத்து, உங்கள் கஷ்டத்தைச் சொல்லுங்கள். இயக்குநரிடம் பேசுமாறு தலைவர் திரு.எம்.ஜி.செல்வம் அவர்களுக்கு நான் போன் போட்டுச் சொல்கிறேன்” என்றேன்.
இதனைத்தொடர்ந்து திரு.ஹரிநாராயணனுக்கு ஈரோடு மாவட்ட நூலக அலுவலகத்திற்குப் பணிமாறுதல் வழங்கப்பட்டதாகக் கேள்விப்பட்டேன்.
என்னைப்பற்றி இயக்குநரிடம் போட்டுக்கொடுத்த திரு.ஜெகதீசன்:
இதனிடையே தருமபுரி மாவட்ட மைய நூலகத்தின் இணைப்புக் கட்டடத் திறப்பு விழா 14.2.2009 அன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு இரண்டு வரவேற்பு டிஜிட்டல் பேனர்களை வைத்தேன். பள்ளிக் கல்வித்துறைச் செயலர் திரு.குற்றாலிங்கம், பொது நூலக இயக்குநர் திரு.வே.இரமணி, ஏழெட்டு மாவட்ட நூலக அலுவலர்கள், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பணிபுரிந்த நூலகர்கள் கலந்து கொண்டனர்.
விழா தருமபுரி மைய நூலகம் அருகில் உள்ள செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளைக் காண இயக்குநர் தனியாக வந்து மேடையைச் சுற்றிப் பார்த்தார். இயக்குநர் அருகில் சென்று வணக்கம் தெரிவித்தேன்.
“என்ன, நீ ரவுடித்தனம் பண்றியாமே?” என்றார் இயக்குநர்.
“யார் சார், சொன்னது?” என்று கேட்டேன்.
“ஜெகதீசன்தான் சொன்னான்” என்றார் இயக்குநர்.
அதற்குமேல் நான் எதுவும் பேசவில்லை. அங்கேயே நின்று விட்டேன். இயக்குநர் மேடை ஏறிச் சுற்றிப் பார்த்தார். நான் திரும்பி வந்து அரங்கில் உட்கார்ந்து விட்டேன். நான் இயக்குநரை அடிக்கடி சந்திப்பது திரு. ஜெகதீசனுக்குப் பிடிக்கவில்லை. அவர் செய்யும் முறைகேடுகளை இயக்குநரிடம் சொல்லிவிடுவேன் என்று அவருக்குப் பயம். அதனால் இயக்குநருக்கும் எனக்கும் பிரச்சனை உருவாக்கத் திரு.ஜெகதீசன் சூழ்ச்சி செய்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன்.
தருமபுரி மாவட்டத்தில் திரு.ஜெகதீசன் செய்யாத முறைகேடே இல்லை. நூலகர்கள் திரு.பி.பிரபாகரன், திரு.மாதையன் ஆகிய இருவரையும் தற்காலிகப் பணிநீக்கம் செய்துவிட்டு, அந்த இடங்கள் காலிப் பணியிடங்களாகக் காண்பித்து, அந்த இடங்களுக்கு வெளிமாவட்டத்தில் பணிபுரிந்து வந்த அவருக்கு வேண்டிய நூலகர்களுக்குப் பணிமாறுதல் வாங்கிக்கொடுத்தார்.
தருமபுரி மைய நூலகத்தில் இரண்டாம் நிலை நூலகராகப் பணிபுரிந்து வந்த திரு. குப்புசாமி, inefficient,
irregular என்று இயக்குநருக்கு அறிக்கை அனுப்பி, அவரைச் சேலம் மாவட்டத்திற்கு அனுப்பி விட்டு, அந்த மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டாம் நிலை நூலகருக்குத் தருமபுரி மைய நூலகத்திற்கு பணிமாறுதல் வாங்கிக்கொடுத்தார். இப்படி இவர் நூலகர்களை மாற்றியதில் பெருந்தொகை வாங்கியதாக மாவட்டம் முழுவதும் பேசப்பட்டது.
அத்துடன் மைய நூலக வளாகத்தில் இருந்த சந்தன மரம் உள்ளிட்ட பல மரங்களை வனத்துறை அனுமதி இல்லாமல் வெட்டி விற்றதாகக் கூறப்பட்டது. எல்லா நூலகங்களுக்கும் நான்கைந்து ஆண்டுகளுக்குத் தேவையான பதிவேடுகளை ஒரே நேரத்தில் விநியோகம் செய்தார். இதிலும் பெருந்தொகை கைமாறியதாகப் பேசப்பட்டது.
1:1 என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஊர்ப்புற நூலகர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கையால் பணி ஆணை வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அழைத்துச் சென்று, மாலை வரை அவர்களிடம் பேரம் பேசி, பேரம் படியாததால் பணி நியமன உத்தரவை ரத்து செய்து மீண்டும் நேர்முகத்தேர்வு நடத்தியது.
இவ்வளவு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான திரு. ஜெகதீசன் என்னைப் பற்றி இயக்குநரிடம் தவறான தகவல்களைச் சொன்னது என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
அவர் செய்த முறைகேடுகள் எல்லாம் எனக்குத் தெரியும். இருந்தாலும் ஒரு நாளும் நான் இயக்குநரிடம் அவரைப் பற்றி எதையும் சொன்னதில்லை. அப்படிச் சொல்ல வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இருந்ததில்லை. இருந்தாலும், அவர் என்னைப்பற்றி இல்லாத ஒன்றைச் சொன்னது என்னை மிகவும் ஆத்திரப்படுத்தியது. விழா அரங்கில் என்னால் உட்கார முடியவில்லை. விழா தொடங்கிய சிறிது நேரத்தில் வெளியே வந்துவிட்டேன். என்னைத் தொடர்ந்து வெளியே வந்த நண்பர் திரு.முனிராஜ் விசாரித்தார். நடந்ததைச் சொன்னேன்.
திரு.எம்.முனிராஜ் சொன்னார், “திரு.ஜெகதீசன் செய்த முறைகேடுகளுக்கு அளவே இல்லை. அவர் செய்த முறைகேடுகளை எல்லாம் அவ்வப்போது இயக்குநரிடம் சொல்லியிருக்க வேண்டும். நாம் சொல்லாமல் விட்டது நம் தவறு” என்று வருத்தப்பட்டார்.
விழா முடியும் முன்பே நானும் திரு.முனிராஜ÷ம் மாவட்ட மைய நூலக வளாகம் வந்துவிட்டோம். திரு.ஜெகதீசன் வந்ததும் “இயக்குநரிடம் என்ன சொன்னீர்” என்று கேட்க வேண்டும் என்று நின்று கொண்டிருந்தேன். அருகில் திரு.முனிராஜ் நின்று கொண்டிருந்தார்.
விழா முடிந்ததும் முதன்மைச் செயலரும், இயக்குநரும் ஓய்வு இல்லத்திற்கு காரில் சென்று விட்டனர். திரு.ஜெகதீசன் வேகவேகமாக நடந்து வந்து மைய நூலக வளாகத்தில் நுழைந்தார். அவரைப் பார்த்ததும் எனக்குக் கோபம் அதிகமானது.
“யோ, ஜெகதீசா, நில்லுயா” என்றேன்.
“என்ன, மரியாதை இல்லாம பேசற?” என்றார்.
“நீ ஒரு அயோக்கியப் பையல், உனக்கு எதுக்குயா மரியாதை? என்னைப் பத்தி டைரக்டரிடம் என்னயா சொன்ன?” என்றேன்.
“நான் உன்னைப் பத்தி ஒன்னுமே சொல்லலயே” என்றார்.
“நான் ஏதோ ரவுடித்தனம் பண்றதாச் சொன்னியாமே” என்றேன்.
“யார் சொன்னது?” என்றார் திரு.ஜெகதீசன்.
“டைரக்டர்தான் சொன்னார்” என்றேன்.
“நீ பொய் சொல்லறே” என்றார்.
“நீ பொய் சொல்றயா? நான் பொய் சொல்றேனானு டைரக்டர் கிட்டயே போய் கேக்கலாம், வா” என்று அவர் கையைப் பிடித்து காம்பவுண்டுக்கு வெளியே இழுத்து வந்தேன்.
மாவட்ட நூலக அலுவலர்கள் திரு.மாதேஸ்வரனும், திரு.மணிகண்டனும் வந்து என் கையை விலக்கி திரு.ஜெகசீசன் கையைப் பிடித்து அழைத்துச் சென்றனர். நானும் திட்டிக்கொண்டே அவர்கள் பின்னால் சென்றேன்.
அப்பொழுது அங்குத் திருமதி கோகிலவாணி, திரு.ஜெ.கார்த்திகேயன், திரு.எம்.கார்த்திகேயன், திரு.பெ.இராஜேந்திரன், திரு.சி.இராஜேந்திரன், திரு.தங்கவேல், திருமதி தனலட்சுமி உள்ளிட்டோரும் இருந்தனர்.
நூலகர்கள் பலரும் என்னைத் தடுத்து நிறுத்திச் சமாதானப்படுத்தினர். சில நிமிடங்களுக்குப் பிறகு திரு.முனிராஜ் வந்தார்.
“நீ என்னோடுதானே இருந்தே? அதற்குள் எங்க போயிட்ட?” என்று கேட்டேன்.
“இங்கேதான் இருந்தேன், நீ ஆரம்பித்ததும் தொலைவில் சென்றுவிட்டேன். அருகில் இருந்திருந்தால், ஏன் தடுக்கல? என்று மற்றவர்கள் என்னைக் கேட்பார்கள். அதனால்தான், நீ ஆரம்பித்ததும் ஒன்றும் தெரியாதமாதிரி ஒதுங்கிக் கொண்டேன். அவருக்கு இதுவும் வேண்டும், இதற்கு மேலும் வேண்டும்” என்றார்.
புதியதாகச் சங்கம் தொடங்கியது:
2008 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு பொதுநூலகத் துறை பணியாளர் கழகம் (சி.டி)யில் இருந்தோம். அச்சங்கம் அ.தி.மு.க.கட்சியின் துணை அமைப்பு போலச் செயல்பட்டு வந்ததால், ஊழியர் நலனுக்குப் போராட முடியவில்லை. அதனால், புதியதாக நூலகர்களுக்கான சங்கம் ஒன்று தொடங்குவது என்று முடிவு செய்தோம்.
திரு.எம்.ஜி.செல்வம் அவர்கள் நிறுவனர் தலைவராக இருந்து சங்கத்தைத் தொடங்கி வைத்தார். சென்னை புரசைவாக்கம் டவுடன் ஹாலில் தமிழ்நாடு பொது நூலகத் துறை அலுவலர் சங்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
மாநிலப் பொதுச் செயலாளராகத் தேர்வு:
பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் 11.12.2009 அன்று தருமபுரி ஐ.எம்.ஏ. ஹாலில் நடத்தினோம். அதற்கான ஏற்பாடுகளை நான் முன்னின்று செய்தேன். அப்பொதுக்குழுக் கூட்டத்தில் சென்னையைச் சேர்ந்த திரு.ஜி.வெங்கடேசன் மாநிலத் தலைவராகவும், நான் மாநிலப் பொதுச் செயலாளராகவும், சேலத்தைச் சேர்ந்த திரு.டி.தியாகராஜன் மாநிலப் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். இக் கூட்டத்திற்கு மாநிலம் முழுவதுமிருந்து நூலக நண்பர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர். (தொடரும்...)

Comments