ஒரு நூலகரின் டைரிக் குறிப்புகள்: 5.நூலகங்கள் தரம் உயர்த்தப்படும் என்று சொன்ன இயக்குநர் - ஊர்ப்புற நூலகர்கள் நியமன விதிமுறையை மாற்றச் செய்தேன்.
நூலகங்கள் தரம் உயர்த்தப்படும் என்று சொன்ன இயக்குநர் திரு.வே.இரமணி அவர்கள் - ஊர்ப்புற நூலகர் நியமன விதிமுறையை மாற்றச்செய்தேன்
சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாப்பட்டணம் கிளை நூலகத்தில் பணியில் சேர்ந்தேன். எனக்கு மிகவும் பிடித்த மாவட்டம் என்றால் அது சேலம் மாவட்டம்தான். நான் பணியில் சேர்ந்தபோது நூலகத்துறையில் அங்கு பணிபுரிந்த எல்லோரும் அன்பாகப் பழகினார்கள்.
திரு.தீ.சண்முகம் சேலம் மைய நூலகத்தில் பணிபுரிந்து வந்தார். அவரைப் பார்க்க மதிய உணவு இடைவேளையில் மைய நூலகம் செல்வேன். மைய நூலக முதல்நிலை நூலகர் திரு.சி.இரவீந்தரன் தன் அறைக்கு அழைத்துச் சென்று அன்பாக உபசரிப்பார்.
திரு.கருத்திருமன், திருமதி வசந்தமல்லிகா போன்றோர் மாற்றுச் சங்கத்தில் பொறுப்பில் இருந்தாலும் சங்கப் பாகுபாடு இல்லாமல் நல்ல மரியாதை கொடுத்தார்கள்.
பொதுவாக, நூலகத்துறையில் அமைச்சுப் பணியாளர்களுக்கும் நூலகர்களுக்கும் ஏதாவது பிரச்சனை இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனால், சேலம் மாவட்டத்தில் நான் பணிபுரிந்து வந்தவரை அப்படி எந்தப் பிரச்சனையும் இல்லை. மாவட்ட நூலக அலுவகத்தில் பணிபுரிந்த திரு. ஹரிநாராயணன், திரு.பாலு, திருமதி சாந்தி முதலான எல்லோரும் நல்ல நட்போடு பழகி வந்தனர். ஏதாவது வேலையாக மாவட்ட நூலக அலுவலகம் சென்றால், என்னை உட்காரவைத்து உடனே முடித்துக்கொடுப்பார்கள்.
நான் சேலம் மாவட்டத்தில் பணிபுரிந்தபோது நடைபெற்ற சில சம்பவங்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். நான் சேலம் மாவட்டத்தில் பணியில் சேர்ந்தபோது மாவட்ட நூலக அலுவலராக(பொறுப்பு) இருந்தவர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள். அவர் அதிகம் பேசமாட்டார். ஆனால், நல்ல செயல் திறன் உடையவர்.
அவருக்குப் பிறகு, திரு.மாதேஸ்வரன் மாவட்ட நூலக அலுவலராகப் பொறுப்பேற்றார். நீண்ட அனுபவம் உடையவர். எதை எப்படி அணுகவேண்டும் என்பதில் முதிர்ச்சி பெற்றவர். நூலகர்களை அரவணைத்துச் செல்வதில் வல்லவர்.
நான் அயோத்தியாப்பட்டணம் கிளை நூலகப் பொறுப்பை ஏற்றபோது, அங்குப் பணிபுரிந்து வந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த திரு.நேதாஜி, என்னிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டுத் தன் சொந்த மாவட்டத்திற்குச் சென்றார்.
அவரிடமிருந்து பதிவேடுகளை மட்டும் பெற்றுக்கொண்டு, நூல் சரிபார்ப்பை நானே பார்த்துக் கொள்வதாகக்கூறி அவரை உடனே அனுப்பி விட்டேன்.
நானே நூல் சரிபார்ப்புப் பணியை முடித்து, காணாமல் போன நூல்கள் பட்டியலை மாவட்ட நூலக அலுவலருக்கும், திரு.நேதாஜிக்கும் அனுப்பி வைத்தேன்.
அப்பொழுது இருப்பு சரிபார்ப்பு அலுவலராக இருந்தவர் திருமதி பத்மா. காணாமல் போன நூல்கள் பட்டியல் கொடுத்துப் பல மாதங்கள் ஆகியும் அதற்கான இழப்புத் தொகைக்கான ஆணை வரவில்லை. இது தொடர்பாகத் திருமதி பத்மாவைச் சந்தித்துக் கேட்டேன்.
கோப்பை எடுத்துப் பார்த்த திருமதி.பத்மா, “பயன்பாட்டுக் கழிவு போக ரூ.26 செலுத்தவேண்டி வருகிறது. அந்தத் தொகையைச் செலுத்தச் சொல்லுங்கள்” என்றார்.
“ரூ.26 தானே, நானே பணத்தைச் செலுத்திவிடுகிறேன். எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதற்குரிய தபாலை அனுப்புங்கள்” என்றேன்.
“அப்படி எல்லாம் தபால் அனுப்ப முடியாது. பணத்தைக் கட்டிவிட்டு இரசீது கொண்டு வந்தால், நூல் விலக்கல் ஆணை வாங்கித் தருகிறேன்” என்றார். “எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்று கடிதம் அனுப்பினால்தான் அந்தக் கடித எண்ணைக் குறிப்பிட்டு இரசீது போட முடியும்? எந்த விவரமும் இல்லாமல் எப்படி இரசீது போடுவது?” என்றேன்.
என்பேச்சை அவர் கேட்கவில்லை. பணம் கட்டிவிட்டு வரச் சொன்னார்.
அதற்குமேல் அவரிடம் பேசுவது பயனற்றது என்று வந்துவிட்டேன்.
இரண்டு மாதம் கழித்துத் திருவண்ணாமலையிலிருந்து திரு.நேதாஜி தொலைபேசியில் பேசினார்.
“நூல் இழப்புத் தொகையாக ரூ.26 செலுத்தச் சொல்லி சேலம் மாவட்ட நூலக அலுவலரிடமிருந்து கடிதம் வந்துள்ளது. ரூ.26 தானே, உங்களால் கட்ட முடியாதா?” என்று வருத்தப்பட்டார்.
“சம்பந்தப்பட்ட கிளை நூலகத்தில் பணிபுரியும் எனக்குத் தபால் அனுப்பாமல் உனக்கு எப்படி அனுப்பினார்கள்? இன்றே அலுவலகம் சென்று பார்க்கிறேன்” என்றேன்.
மதிய உணவு இடைவேளையில் மாவட்ட நூலக அலுவலகம் சென்று திருமதி. பத்மாவிடம் கேட்டேன்.
“சம்பந்தப்பட்ட நூலகத்திற்குத் தபால் அனுப்பாமல் நேதாஜிக்கு மட்டும் எப்படிப் தபால் அனுப்பினீர்கள்? ‘ரூ.26 தானே, நீங்கள் கட்டக்கூடாதா?’ என்று நேதாஜி என்மீது வருத்தப்படுகிறாரே” என்றேன்.
“நான் தெரிந்துதான் உங்களுக்குத் தபால் அனுப்பாமல், நேதாஜிக்கு மட்டும் அனுப்பினேன்” என்ற பத்மா, அயோத்தியாப்பட்டணம் கிளை நூலகத்திற்கான தபாலை நேரில் கொடுத்தார்.
“இந்தத் தபாலை எனக்கு அனுப்பாமல் ஏன் நேரில் கொடுக்கிறீர்கள்?” என்றேன்.
“பணம் செலுத்தி இரசீது வாங்கி வரச்சொன்னேன். நீங்க கேட்கல, அதனால்தான் நேதாஜிக்கு மட்டும் தபால் அனுப்பினேன், உங்களுக்கு அனுப்பல” என்றார். அவரது எண்ணத்தைப் புரிந்து கொண்டேன்.
“இந்தத் தபாலைத்தான் ஏற்கெனவே கேட்டேன். இப்பொழுது கொடுக்கறதை ஏற்கெனவே கொடுத்திருக்கலாமே? எங்களுக்குள் மன வருத்தத்தை உண்டாக்குவதால் உங்களுக்கு அப்படி என்ன சந்தோஷம்?” என்றேன்.
அவர் எதுவும் பேசவில்லை, அமைதியாக இருந்தார். கடிதத்தைப் பெற்றுக்கெண்டு ரூ.26 செலுத்திவிட்டு, நடந்ததை நேதாஜியிடம் கூறினேன்.
தணிக்கை:
சில மாதங்களுக்குப் பிறகு தணிக்கை வந்தது. பணப் பதிவேட்டைச் சரிபார்த்த தணிக்கையாளர், உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பத்திற்கான ஒரு ரூபாய் தவறுதலாகச் செலுத்தாமல் விடுபட்டதைக் கண்டுபிடித்துக் கேட்டார்.
“அது எனக்கு முன்பு பணிபுரிந்தவர் பணிக்காலம், அவர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாறுதலில் சென்று விட்டார்” என்றேன்.
ஒரு ரூபாய் விடுபட்ட விவரத்தைத் தணிக்கையாளர் தன் டைரியில் குறித்துக்கொண்டார்.
“இதை டைரியில் எதற்காகக் குறித்து வைத்துள்ளீர்கள்?” என்றேன்.
“தணிக்கைத் தடை எழுதி அவரிடம் அந்தத் தொகையை வசூலிக்க வேண்டும்” என்றார்.
“அந்த நூலகரிடம் ஒரு ரூபாய் வசூல் செய்ய, ஒரு தபால் டைப் செய்து ஐந்து ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி, திருவண்ணாமலை மாவட்ட நூலக அலுவலருக்கு அனுப்பி, அந்த மாவட்ட நூலக அலுவலர் சம்பந்தப்பட்ட நூலகருக்கு ஒரு தபால் தயார்செய்து அதற்கு ஐந்து ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி அனுப்ப வேண்டும். ஒரு ரூபாய் வசூல் செய்ய எத்தனை ரூபாய் செலவு செய்வது? அதற்கு அந்த ஒரு ரூபாயை தள்ளுபடி செய்துவிடலாமே?” என்றேன்.
“அப்படி எல்லாம் செய்ய முடியாதே”, என்றார்.
“விடுபட்ட அந்த ஒரு ரூபாயை நானே செலுத்தி விடுகிறேன்” என்றேன்.
அதற்குத் தணிக்கையாளர் ஒப்புக்கொண்டார். மைய நூலகத்தில் விடுபட்ட விவரத்தைக் குறிப்பிட்டு ஒரு ரூபாய் செலுத்தித் தணிக்கையாளரிடம் காண்பித்துத் தணிக்கையை முடித்தேன்.
நூலகங்கள் தரம் உயர்த்தப்படும் என்று சொன்ன இயக்குநர் திரு.வே.இரமணி அவர்கள்:
2008 ஜனவரி மாதம், பொங்கல் பண்டிகைக்கு இயக்குநர் திரு.வே.இரமணி அவர்கள் தருமபுரி வந்து, விருந்தினர் மாளிகையில் தங்கியிருப்பதாகத் திரு.முனிராஜ் தகவல் கொடுத்தார்.
கடலூர் மாவட்டத்திலிருந்து சேலம் மாவட்டத்திற்குப் பணிமாறுதல் வழங்கிய இயக்குநருக்கு நன்றி தெரிவிக்க தருமபுரி விருந்தினர் மாளிகைக்குச் சென்றேன். உடன் திரு.முனிராஜ÷ம் வந்தார். அன்று தருமபுரி மாவட்ட நூலக அலுவலராக(பொ) இருந்த திரு.ஜெகதீசன் விருந்தினர் மாளிகை முன்பு நின்றிருந்தார்.
“எதற்கு வந்தாய்?” என்று திரு.முனிராஜிடம் கேட்டார் திரு.ஜெகதீசன்.
“இயக்குநரைப் பார்க்க வந்தேன்” என்றார் திரு.முனிராஜ்.
“நூலகர்கள் எல்லாம் இயக்குநரைப் பார்க்க அனுமதிக்க முடியாது” என்றார். அதனால் திரு.முனிராஜ் பின்வாங்கினார். நான் மட்டும் சென்றேன். என்னையும் உள்ளே செல்ல அனுமதி மறுத்த ஜெகதீசன், “நீ யார்?” என்றார்.
இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சேலம் மாவட்டத்திற்கு மாறுதல் வேண்டி இயக்குநரைப் பார்க்க இயக்குநர் அலுவலகம் சென்றிருந்தேன். அப்பொழுது சேலம் மாவட்டத்தில் முதல்நிலை நூலகராக இருந்த திரு.ஜெகதீசனும் தருமபுரி மாவட்டத்திற்கு மாறுதல் கேட்டு இயக்குநர் அலுவலகம் வந்திருந்தார். இருவரும் அங்கு அறிமுகமாகிப் பேசிக்கொண்டிருந்தோம். அதற்குள் மறந்து விட்டாரா, அல்லது ஒன்றுமே தெரியாத மாதிரி நடித்தாரா என்று புரியவில்லை.
“நூலகத்துறையில் வேலை செய்கிறேன். எங்கள் துறை இயக்குநர் வந்திருக்கிறார். அவரைப் பார்க்க வேண்டும்”, என்றேன்.
“இயக்குநரைப் பார்க்க அனுமதி இல்லை” என்றார். எனக்குக் கோபம் வந்தது.
“நீங்கள் யார்? வாச்மேனா?” என்றேன்.
திரு.ஜெகதீசன் ஒதுங்கிக் கொண்டார். உள்ளே செல்லும்போது சேலத்திலிருந்து நண்பர் திரு.தீ.சண்முகம் தொலைபேசியில் அழைத்து “எல்லா மாவட்டத்திலும் போனஸ் கொடுத்துட்டாங்க, சேலம் மாவட்டத்தில் மட்டும் போனஸ் போடல, டீ.எல்.ஓ.வைக் கேட்டால் ஆபீஸ்ல யாருமில்லை என்கிறார். இயக்குநரைப் பார்க்கும்போது அவர் கவனத்திற்குக் கொண்டுபோ” என்றார்.
இயக்குநரைப் பார்த்து மாவட்ட மாறுதல் வழங்கி உதவியதற்கு நன்றி தெரிவித்தேன். 100 ஊர்ப்புற நூலகங்கள் கிளை நூலகங்களாகத் தரம் உயர்த்தி,
100 மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்கள் உருவாக்க அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு ஒப்புக் கொண்டதாக இயக்குநர் கூறினார்.
100 இல் 10 நூலகங்கள் தருமபுரி மாவட்டத்திற்கு இயக்குநர் கேட்டதாகவும், அதற்கு அமைச்சர் அவரது சொந்த மாவட்டமான விருதுநகர் மாவட்டத்திற்கும் கூடுதலாக ஒதுக்கச் சொன்னதால், தருமபுரி மாவட்டத்திற்கு ஐந்துக்குக் குறையாமல் தரம் உயர்த்தப்படும் என்றார். பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பிறகு அரசாணை வெளி வந்ததும் ஞாபகப்படுத்தச் சொன்னார்.
“12 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாம் நிலை நூலகர் பணியிடம் உருவாக்கப்படுகிறது. உங்கள் முயற்சிக்கு மிகுந்த நன்றி” என்றேன். “வேறு ஏதாவது தகவல் உண்டா?” என்றார்.
“நாளை முதல் 4 நாட்கள் பொங்கல் விடுமுறை. சில மாவட்டங்களில் போனஸ் கொடுக்கலனு சொல்லறாங்க” என்றேன்.
“எந்த மாவட்டம்?” என்றார்.
“சேலத்திலிருந்து போன் போட்டாங்க” என்றேன்.
இயக்குநர் அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டு இயக்குநர் பேசினார்.
“எல்லா மாவட்டங்களுக்கும் போன்போட்டு போனஸ் இன்னிக்கே கொடுக்கச் சொல்லுங்க, இல்லன்னா நடவடிக்கை எடுக்கப்படும்னு சொல்லுங்க” என்றார்.
வெளியே வந்து நடந்ததை நண்பர் திரு.முனிராஜிடம் கூறினேன்.
“நூலகங்களைத் தரம் உயர்த்த வேண்டும் என்ற எனது கோரிக்கை நிறைவேறுகிறது” என்று மகிழ்ச்சி தெரிவித்தார். அவரைவிடப் பலமடங்கு மகிழ்ச்சியில் இருந்த நான் அவரிடம் சொன்னேன்:
“ஓய்வு பெறுவதற்குள் தருமபுரி மாவட்டத்திற்கு மாறுதல் கிடைக்குமா, அல்லது வெளி மாவட்டத்திலேயே ஓய்வு பெற வேண்டுமா என்ற கவலையில் இருந்த எனக்கு இயக்குநரின் வார்த்தை மகிழ்ச்சி அளிக்கிறது. எப்படியும் இன்னும் ஆறு மாதங்களில் தருமபுரி மாவட்டத்திற்கு மாறுதலில் வந்துவிடுவேன்” என்றேன்.
நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது சேலத்திலிருந்து நண்பர் திரு. தீ.சண்முகம் தொலைபேசியில் அழைத்தார். இயக்குநர் அலுவலகத்திலிருந்து மாவட்ட நூலக அலுவலகத்திற்குத் தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அலுவலகத்தில் யாரும் இல்லாததால் என்ன செய்வது என்று மாவட்ட நூலக அலுவலர் திரு.பாலகிருஷ்ணன் தன்னிடம் கேட்டதாகவும் கூறினார்.
மேலும், நூலகர்கள் அனைவருக்குமான போனஸ் தொகையைத் தன் பெயருக்கே காசோலை எழுதிக் கொடுக்குமாறு மாவட்ட நூலக அலுவலரிடம் கேட்டதாகவும், அவரும் அப்படியே எழுதிக் கொடுத்திருப் பதாகவும் கூறினார்.
போனஸ் கிடைக்காது என்று இருந்த நூலகர்களுக்குத் திரு.தீ.சண்முகத்தின் முயற்சியால் போனஸ் கிடைத்தது மகிழ்ச்சியைத் தந்தது. இந்தச் சம்பவத்தின் மூலம் திரு.தீ.சண்முகம் சேலம் மாவட்ட நூலகர்கள் மத்தியில் பிரபலமானதாகச் சொன்னார்.
ஊர்ப்புற நூலகர் நியமன நேர்காணல் விதிமுறையை மாற்றச்செய்தேன்:
சில மாதங்களுக்குப்பிறகு, தமிழகத்தில் காலியாக உள்ள ஊர்ப்புற நூலகர் பணியிடங்கள் நிரப்புவதற்கான நடைமுறை தொடங்கியது. பல மாவட்டங்களில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேர்காணலுக்கான பட்டியல் பெறப்பட்டு, நேர்காணலுக்கு அழைப்பும் அனுப்பப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் திரு.சுந்தரம், திரு.சி.மாதையன் ஆகியோர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு வரவில்லை என்றனர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விசாரித்ததில் வயது வரம்பு வைத்துக் கேட்கப்பட்டதால் தங்களது பெயர் பட்டியலில் சேர்க்க முடியவில்லை என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சொல்லப்பட்டதாகவும் கூறினர். மேலும், சேலம் மாவட்ட நூலக அலுவலகத்தில் விசாரிக்குமாறு என்னிடம் சொன்னார்கள்.
நானும் சேலம் மாவட்ட நூலக அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த திருமதி சாந்தியிடம் விசாரித்தேன். இம் மாவட்டத்திலும் வயது வரம்பு வைத்துதான் பட்டியல் கோரப்பட்டதாகச் சொன்னார். இதை உறுதி செய்து கொள்ள ஆய்வாளராக இருந்த திரு. பாலகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டேன். அவரும் இதையே உறுதிப்படுத்தினார். பெரிய தவறு நடந்துவிட்டதை உணர்ந்த நான், உடனடியாக இயக்குநரைச் சந்திக்க முடிவு செய்தேன். இரவோடு இரவாகச் சென்னை சென்று, அடுத்தநாள் காலை இயக்குநர் அலுவலகம் சென்றடைந்தேன்.
“இன்று பார்வையாளர்கள் சந்திப்பு இல்லை. பார்வையாளர்கள் நாளை இயக்குநரைச் சந்திக்கலாம்” என்று எழுதி இயக்குநர் அறைக் கதவில் ஒட்டப்பட்டிருந்தது. முக்கிய தகவலாக இயக்குநரைச் பார்க்க வேண்டும் என்று நேர்முக உதவியாளரிடம் கேட்டேன்.
“பட்ஜெட் தொடர்பாக விவாதத்தில் இருக்கிறார்கள். யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று இயக்குநர் கூறியதால் எழுதி ஒட்டியிருக்கிறோம். நாளை வந்து பாருங்கள்” என்றார்.
ஓய்வு அறையில் அமைதியாக அமர்ந்திருந்தேன். வேறு எந்த வேலையும் இல்லாததால் அங்கேயே உட்கார்ந்து அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். இயக்குநர் அறையிலிருந்து ஒவ்வொருவராக வெளியே வந்தனர்.
சுமார் 3 மணிநேரத்திற்குப் பிறகு இயக்குநர் வெளியே வந்தார். நான் அதைக் கவனிக்கவில்லை. ஓய்வு அறையைத் தாண்டி சென்றபிறகுதான் இயக்குநர் என்று தெரிந்தது. ஓய்வு அறையை விட்டு வெளியே வரவில்லை. ஓய்வு அறையைக் கடந்து சென்ற இயக்குநர் திரும்பிவந்து, “என்ன?” என்று கேட்டார்.
வணக்கம் வைத்தேன்.
“வா”, என்று மீண்டும் இயக்குநர் அறைக்குச் சென்றார். நான் பின்தொடர்த்தேன்.
“ஊர்ப்புற நூலகர் நியமனத்திற்கு +2, சி.எல்.ஐ.எஸ். படித்த இட ஒதுக்கீடு உள்ள இனத்தவருக்கு வயது வரம்பு இல்லை. ஆனால், வயது வரம்பு வைத்து எல்லா மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பட்டியல் பெறப்பட்டுள்ளது. இதனால் படித்து வேலைக்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. உடனடியாக நடவடிக்கை எடுங்கள்” என்றேன்.
நான் சொன்னது இயக்குநருக்கு ஆச்சரியமாக இருந்தது.
“இதற்கு ஆதாரம் இருக்கிறதா?” என்றார்.
ஏற்கெனவே 1998 ஆம் ஆண்டு வேலைவாய்ப்புத் துறை ஆனணயர் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலருக்குக் கொடுத்த கடித நகலை இயக்குநரிடம் கொடுத்தேன்.
அதைப் படித்துப் பார்த்த இயக்குநர்:
“நீ சொல்றது சரிதான். இதைப்பத்தி இதுவரை எந்த டி.எல்.ஓ.வும் எங்கிட்ட பேசலயே” என்றார்.
“தயவு செய்து பரிசீலனை செய்யுங்கள். பலரும் பாதிக்கப்படுவார்கள்” என்றேன்.
“ஆனால், ஊர்புற நூலகர் நியமனத்துக்கான ஏற்பாடுகள் எல்லாம் முடிந்து விட்டதே” என்றார் இயக்குநர்.
அதற்குமேல் என்னால் எதுவும் பேசமுடியவில்லை, அமைதியாக இருந்தேன்.
“இந்தக் கடிதம் 10 வருஷத்துக்கு முன்னால் கொடுக்கப்பட்டது. இதேபோலப் புதியதாகக் கடிதம் வாங்கிவர முடியுமா?” என்றார் இயக்குநர்.
இயக்குநர் எனது கோரிக்கையைப் பரிசீலனை செய்கிறார் என்று புரிந்து கொண்டேன்.
“முயற்சி செய்கிறேன்” என்றேன்.
“நாளை காலை டீ.எல்.ஓ. மீட்டிங் இருக்கு. 3 மணிக்குமேல் வா” என்றார்.
அந்த நேரத்தில் கண்காணிப்பாளர் திருமதி. ரஜினி உள்ளே வந்தார்.
“ஏம்மா, இவர் கேக்கற கேள்விக்குப் பதில் சொல்லுமா” என்றார் இயக்குநர்.
“ஊர்ப்புற நூலகர் நியமனத்திற்கான வயது வரம்பு வைத்து மாவட்ட நூலக அலுவலர்களுக்குத் தபால் அனுப்பினீர்களா?” என்றேன்.
“ஆமாம். பட்டப்படிப்பு படித்திருந்தால் வயது வரம்பு இல்லை, ஆனால் +2 மட்டும் படித்திருந்தால் வயது வரம்பு உண்டு” என்றார் கண்காணிப்பாளர் திருமதி.ரஜினி.
“குறைந்தபட்சக் கல்வித் தகுதிக்கு மேல் கூடுதல் கல்வித் தகுதி இருந்தால், டி.என்.பி.எஸ்.சி. விதிமுறைப்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பு இல்லையே” என்றேன்.
“டிகிரி, சி.எல்.ஐ.எஸ். படித்தவர்களுக்கு வயது வரம்பில்லை. +2, சி.எல்.ஐ.எஸ். படித்தவர்களுக்கு வயது வரம்பு உண்டு” என்று சுருக்கமாகச் சொன்னார்.
“ஊர்ப்புற நூலகர்களுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி என்ன?” என்றேன்.
“+2, சி.எல்.ஐ.எஸ்” என்றார் கண்காணிப்பாளர் ரஜினி.
“இங்குதான் தவறு நடந்துவிட்டது” என்றேன்.
“என்ன சொல்றீங்க?” என்றார்.
“மூன்றாம் நிலை நூலகர்களுக்கான குறைந்தபட்சக் கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி., சி.எல்.ஐ.எஸ். என்று இருக்க, ஊர்ப்புற நூலகர்களுக்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதி +2, சி.எல்.ஐ.எஸ். என்று எப்படி வைத்தீர்கள்? மூன்றாம் நிலை நூலகர்களை விட ஊர்ப்புற நூலகர் பதவி உயர்வானதா?” என்றேன்.
இதற்கு மேல் கண்காணிப்பாளர் திருமதி.ரஜினியால் எதுவும் பேச முடியவில்லை. அவரது முகம் வாடிவிட்டது, அமைதியாக இருந்தார்.
“ஊர்ப்புற நூலகர் நியமனம் எந்த நிலையில் இருக்கிறது?” என்று இயக்குநர் கண்காணிப்பாளரிடம் கேட்டார்.
இரண்டு மாவட்டங்களில் நேர்காணல் முடிந்துவிட்ட தாகவும், சில மாவட்டங்களில் நேர்காணலுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் கண்காணிப்பாளர் கூறினார்.
இயக்குநர் என்னிடம் அடுத்தநாள் வருமாறு கூறினார்.
உடனே சென்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்புத் துறை ஆணையர் அலுவலகம் சென்று ஆணையரைச் சந்தித்து 10 ஆண்டுகளுக்கு முன்பு சேப்பாக்கத்தில் அலுவலகம் இருந்தபோது கொடுக்கப்பட்ட கடிதத்தைக் காண்பித்து:
“இன்றைக்கும் இது பொருந்துமா?” என்று கேட்டேன்.
“பொருந்தும்” என்றார் ஆணையர்.
இயக்குநருடனான சந்திப்பில் நடந்ததைக் கூறினேன்.
“புதியதாக இதுபோன்று கடிதம் வாங்கிவர முடியுமா என்று இயக்குநர் கேட்கிறார்” என்றேன்.
“இயக்குநர் முறையாகக் கடிதம் எழுதிக் கேட்டால் கொடுபோம். நீங்கள் தனி நபர். உங்களுக்கு எப்படி கொடுக்க முடியும்? தேவைப்பட்டால் இயக்குநரை என்னிடம் பேசச் சொல்லுங்கள்” என்று தொலைபேசி எண்ணைக் குறித்துக் கொடுத்தார்.
அடுத்தநாள் மாலை 4 மணிக்கு இயக்குநர் அலுவலகம் சென்று இயக்குநரைச் சந்தித்தேன்.
வேலைவாய்ப்பு ஆணையர் சொன்ன தகவலைச் சொன்னேன். அவர் எழுதிக் கொடுத்த தொலைபேசி எண்ணையும் இயக்குநரிடம் கொடுத்தேன்.
“நீ சொன்னது சரிதான்” என்றார் இயக்குநர்.
அனைத்து நேர்காணல்களையும் ரத்து செய்துவிட்டுப் புதியதாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்களிடம் பட்டியல் பெற்று நேர்காணல் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதாகக் கூறினார்.
எனது கோரிக்கையை ஏற்று நேர்காணல் விதிமுறையை மாற்றிய இயக்குநருக்கு நன்றி கூறிவிட்டு வந்தேன்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊர்ப்புற நூலகர் நியமனங்களில் 32,
35 வயதைக் கடந்தவர்கள்தான் அதிக அளவில் ஊர்ப்புற நூலகர்களாகப் பணியில் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவல் பணியில் சேர்ந்த அந்த ஊர்ப்புற நூலகர்களுக்கே தெரிய வாய்ப்பில்லை. (தொடரும்...)


Comments