நூலகர்களுக்கும் அமைச்சுச் பணியாளர்களுக்கும் அப்படி என்ன பிரச்சனை?

C.Saravanan at ACL. 



  தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை பணியாளர்களிடையே கடந்த சில நாட்களாகப் பேசப்படுவது பணிமாறுதல் தொடர்பான செய்தி.
  மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஓர் இடத்தில் பணிபுரிந்து வரும் அமைச்சுப் பணியாளர்களைப் பணிமாறுதல் செய்ய வேண்டும் என்று நூலகர் சங்கம் ஒன்று இயக்குநருக்குக் கோரிக்கை வைத்ததாகச் சொல்லப்படுகிறது. (நான் சார்ந்துள்ள பொது நூலகத்துறை அலுவலர் சங்கம் அல்ல).
  இதனால் கொதிப்படைந்த அமைச்சுப் பணியாளர் சங்கம், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஓர் இடத்தில் பணிபுரிந்து வரும் முதல் நிலை நூலகர்கள், இரண்டாம் நிலை நூலகர்கள், ஆய்வாளர்கள், இருப்பு சரிபார்ப்பு அலுவலர்கள் ஆகியோரையும் பணிமாறுதல் செய்ய வேண்டும் என்று இயக்குநருக்குக் கோரிக்கை வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்.
  சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான செய்திகளும், அது தொடர்பான கருத்துகளும் உலா வருவதைக் காண முடிகிறது.

என் மனதில் தோன்றும் சில கேள்விகள்:
1.         புகார் அளித்த நூலகர் சங்க நிர்வாகிகளுக்கும், ஒரு சில அமைச்சுப் பணியாளர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனையை, ஒட்டுமொத்த நூலகர்களுக்கும் அமைச்சுப் பணியாளர்களுக்குமான பிரச்சனையாக திசை திருப்புவது ஏன்?
2.         அமைச்சுப் பணியாளர் யாராவது தவறு செய்வதாக இந்த நூலகர் சங்கம் கருதினால், அவர்கள் மீது புகார் அளித்து, அவர்களுக்கு உரியத் தண்டனை பெற்றுத் தர வேண்டியதுதானே?
3.         மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஓரிடத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு ஒட்டுமொத்தமாகப் பணிமாறுதல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஓரிடத்தில் பணிபுரியும் நூலகர்களுக்கும் பணிமாறுதல் வழங்க வேண்டும் என்று அமைச்சுப் பணியாளர்கள் கோரிக்கை வைக்கமாட்டார்களா என்று ஏன் யோசிக்க வில்லை?
4.         சில நூலகர்களுக்கும், சில அமைச்சுப் பணியாளர்களுக்கும்  இடையே இருக்கும் பிரச்சனையால், ஒன்றும் அறியாத நூலகர்களையும், அமைச்சுப் பணியாளர்களையும் பலிகடா ஆக்குவது நியாயமா?
5.         அவ்வாறு பணிமாறுதல் வழங்கப்பட்டால் அமைச்சுப் பணியாளர்களைக் காட்டிலும் அதிக அளவில் பாதிக்கப்படுவது நூலகர்கள்தான் என்பதைப் புகார் அளித்த சங்க நிர்வாகிகள் ஏன் உணரவில்லை?
6.         கண்காணிப்பாளர்களும் அமைச்சுப் பணியர்ளர்களும் சில மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்திவருவது உண்மைதான். ஆனால், பல மாவட்டங்களில் நூலகர்களே நூலகர்கள்மீது ஆதிக்கம் செலுத்துகிறார்களே, இதனால் நூலகர்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது இவர்களுக்குத் தெரியாதா?
7.         பல மாவட்ட மைய நூலகங்களில், சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டாம் நிலை நூலகர்களாக இருப்பவர்கள், வெளி மாவட்டத்தில் இருந்து வந்து பணிபுரியும் முதல் நிலை நூலகர், கண்காணிப்பாளர், மாவட்ட நூலக அலுவலர் ஆகியோர்மீது ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அமைச்சுப் பணியாளர் சங்கத்தினர் இவர்கள் மீது புகார் அளித்து, இவர்களுக்கு மாவட்ட மாறுதல் வாங்கித்தரலாம். அதைவிடுத்து ஒட்டுமொத்தமாக மூன்று ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் முதல்நிலை, இரண்டாம்நிலை நூலகர்களுக்குப் பணிமாறுதல் வழங்க வேண்டும் என்று கோருவது ஏற்புடையதில்லை.


  நீறு பூத்த நெருப்பு போல இருந்த அமைச்சுப் பணியாளர் - நூலகர் உறவை, ஊதி பெரிது படுத்துவது பலருக்குக் கொண்டாட்டமாக உள்ளது. இதில் அவர்கள் குளிர் காய ஆரம்பித்துவிட்டார்கள். 
 இரு தரப்பும் தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை பேசித் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் மூன்றாம் தரப்பினரை வைத்தாவது பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. இல்லையேல் ஒன்றும் அறியாத அப்பாவி நூலகர்களின் சாபத்துக்கு ஆளாவார்கள்.

Comments