ஒரு நூலகரின் டைரிக் குறிப்புகள்: 10. அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகளைத் தொடங்கக் வேண்டும் என்ற எனது கோரிக்கையைத் தமிழக அரசு ஏற்று அரசாணை வெளியிட்டது.
அடுத்து என்ன தலைப்பில் கட்டுரை எழுதலாம் என்று யோசித்தேன். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாகக் குறைத்து வருவதைத் தடுக்க அரசு மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றித் தினமணிக்கு கட்டுரை ஒன்றை எழுதுவது என்று முடிவு செய்தேன்.
சில மாதங்களுக்கு முன்பு காரைக்குடியில் ஒரு தனியார் அமைப்பு கல்விக் கருத்தரங்கம் நடத்தியது. தத்தளிக்கும் தமிழகக் கல்வி என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கத்திற்குக் கட்டுரைகள் வரவேற்கப்படுவதாகச் செய்தித்தாளில் விளம்பரம் வந்தது. அதில் தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் கருத்தரங்கில் வாசிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தத்தளிக்கும் தமிழகக் கல்வி என்ற தலைப்பில் அரசுப் பள்ளிகளில் நிலைமை குறித்தும், அரசு மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்த நடவடிக்ககைள் குறித்து 15 பக்கங்கள் கொண்ட கட்டுரை ஒன்றை எழுதி அனுப்பினேன். அக்கட்டுரைக்குத் தேவையான பல்வேறு குறிப்புகளை அரசுப்பள்ளி ஆசிரியையாக இருக்கும் எனது மனைவி இரா.முத்துலட்சுமி கொடுத்தார்.
கருத்தரங்கில் வாசிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், கருத்தரங்கிற்கு எனக்கு அழைப்பு வரவில்லை அந்தக் கட்டுரையைச் சுருக்கி, காப்போம் அரசுப் பள்ளிகளை என்ற தலைப்பில் தினமணிக்கு அனுப்பினேன்.
11.9.2011 அன்று மாலை 4 மணிக்குச் சென்னை தினமணி அலுவலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. உடனடியாக என்னுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்றை மின்னஞ்சலில் அனுப்பும்படி கூறினார்கள். நானும் உடனே அனுப்பினேன். அடுத்தநாள் 12.09.2011 அன்று தினமணியில் புகைப்படத்துடன் கூடிய முதன்மைக் கட்டுரையாகக் காப்போம் அரசுப் பள்ளிகளை என்னும் எனது கட்டுரை வெளிவந்தது. கட்டுரையில் இறுதியில் பொதுச்செயலாளர், தமிழ்நாடு பொதுநூலகத்துறை அலுவலர் சங்கம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
2.09.2011 அன்று தினமணியில் வெளியான எனது கட்டுரை:
காப்போம் அரசுப் பள்ளிகளை!
அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு முட்டையுடன் சத்துணவு, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு இலவசச் சீருடைகள், இலவச நோட்டுப் புத்தகங்கள், இலவசப் பாட நூல்கள், தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விதிவிலக்கு, பதினோராம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டி, ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு இலவசப் பேருந்து வசதி, கல்வி உதவித் தொகை என எவ்வளவோ சலுகைகளை வழங்கியபோதிலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் என்னதான் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளைக் கொண்டு வந்தபோதிலும், ஆசிரியர்களுக்கு எவ்வளவுதான் பயிற்சிகள் வழங்கிக் கற்பித்த போதிலும்,
பெற்றோர்கள் எதையும் ஏற்கத் தயாராக இல்லை. அண்மைக்காலமாக அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாகக் குறைந்து வருவதே இதற்குச் சான்றாகும்.
பணம் கட்டிப் படித்தாலும் ஆங்கிலக் கல்வியே தேவை என்ற மாயை உருவாகி விட்டதால், நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களில்கூட மெட்ரிக் பள்ளிகளிலேயே தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதிலேயே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பெற்றோர்களின் ஆங்கில மோகத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் பள்ளிகள் கல்வியை வியாபாரமாக்கி மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன.
தமிழக மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்துப் பலப் போராட்டங்களை நடத்தி வந்த திராவிடக் கட்சிகள், ஆட்சியைப் பிடித்ததும் அரசுப் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவதை நிறுத்தினார்களே யொழிய, தனியார் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவதைத் தடுக்கவில்லை.
இன்றைக்கு எல்லாத் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் இந்தி ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. எந்த ஒரு பெற்றோரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. மாறாக, இந்தி கற்பிக்காத தனியார் பள்ளிகளைப் பெற்றோர் ஏற்றுக்கொள்வதில்லை. ‘தாய்மொழிக் கல்வி - தமிழ் வழிக்கல்வி’ என்று குரல் கொடுக்கும் திராவிடக் கட்சியினர் தங்கள் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் ஆங்கில வழிக்கல்வி வழங்கும் மெட்ரிகுலேசன் பள்ளிகளிலேயே படிக்க வைக்கின்றனர்.
நடுவண் அரசு எல்லா மாநிலங்களிலும் நவோதியா வித்யாலயா என்னும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை ஆரம்பித்தது. ஆனால், தமிழகத்தில் மாறிமாறி ஆட்சி செய்யும் திராவிடக் கட்சி அரசுகள் நவோதியா வித்யாலயாப் பள்ளிகள் தமிழகத்தில் தொடங்க அனுமதி அளிக்க மறுத்து வருகின்றன. அப்பள்ளிகளில் இந்தி ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுவதுதான் அப்பள்ளிகளைத் தொடங்க அனுமதி மறுப்பதற்குக் காரணம் ஆகும்.
இது போன்ற மக்கள் விரும்பாத கல்விக் கொள்கை உடைய ஆட்சியாளர்களையும், அரசியல்வாதிகளையும் நம்பாத பெற்றோர்கள் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.
பெற்றோர்களின் மனநிலையை நன்கு உணர்ந்த பெரும் பணக்காரர்களும், தொழிலதிபர்களும் கல்வியை வியாபாரமாக்கிப் பெரும் முதலீட்டில் பள்ளிகளைத் தொடங்கி விட்டனர். வானளாவிய கட்டடங்கள், அதிநவீன வசதிகள், கண்கவர் வாகனங்கள் என மக்களை மயக்கி பெருந்தொகை வசூல் செய்கின்றனர்.
எந்தப் பள்ளியில் படித்தாலும் ஒரே பாடத் திட்டம்தான், ஒரே பாடம்தான் என்ற உண்மை தெரியாத பெற்றோர்கள் தனியார் பள்ளிகள் கேட்கும் தொகையைக் கடன்பட்டாவது செலுத்துகின்றனர்.
இதன் விளைவாக, 200 மாணவர்கள் படித்த அரசுத் தொடக்கப் பள்ளிகளில் இன்றைக்கு 20 மாணவர்கள்கூட இல்லை. 100 மாணவர்கள் படித்த பள்ளிகளில் 10 மாணவர்கள்கூட இல்லை.
முன்பெல்லாம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குக் கற்பிப்பதற்குப் போதுமான நேரம் இருந்தது. ஆனால், இப்பொழுது அப்படி இல்லை. ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 20 நாட்கள் கட்டாயப் பயிற்சி அளிக்கப்படுகிறது. நடுவண் அரசு வழங்கும் நிதியை எப்படியாவது செலவு செய்தாக வேண்டும். இல்லையென்றால் நடுவண் அரசுக்கும், எதிர்க் கட்சியினருக்கும் பதில் சொல்லியாக வேண்டும் என்று இப்படித் தேவையில்லாத பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இதனால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்கும் நேரம் குறைந்துவிட்டது.
இன்றைக்குப் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகத்தான் உள்ளன. இந்நிலையில் மாதத்திற்கு 2,
3 முறை தலைமை ஆசிரியர்களுக்கு கூட்டம் நடத்தப்படுகிறது. இது இல்லாமல் மாதத்திற்கு இரண்டு முறையாவது ஏதாவது விவரம் கேட்டுத் தலைமை ஆசிரியர்கள் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்திற்கு வரவழைக்கப்படுகின்றனர். இதனால் இரண்டு ஆசிரியர்கள் வேலைசெய்யும் பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர்தான் 5 வகுப்புகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. அவரால் அத்தனை வகுப்புகளையும் பார்க்கத்தான் முடிகிறதே தவிர, எந்த வகுப்புக்கும் பாடம் நடத்த முடிவதில்லை.
தமிழகத்தைப் பொறுத்த வரையில் கல்வியில் அரசியல் புகுந்துவிட்டது. ஒரு கட்சி கொண்டுவரும் பாடத்திட்டத்தை மற்றொரு கட்சி ஆட்சிக்கு வந்தால் மாற்றி அமைக்கிறது. இனி வரும் காலங்களிலும் இது போன்ற சூழ்நிலைதான் நிலவும். இந்நிலை தொடர்ந்தால் இலட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும்.
இந்நிலையைப் போக்க தமிழ் மொழிப்பாடத்தைத் தவிர்த்து, மற்ற ஏனைய பாடங்களை மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தையே தமிழக அரசும் ஏற்று நடத்தலாம். ஆங்கில வழியில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அந்தப் பாடப் புத்தகங்களையே வழங்கி விடலாம். தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த பாடப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுக்கலாம். இதன் மூலம் கல்வியில் அரசியல் புகுதலைத் தவிர்க்கமுடியும். அத்துடன் கல்வியும் தரமானதாக இருக்கும்.
அத்துடன், எல்லா அரசுப் பள்ளிகளிலும் தமிழ் வழி வகுப்புகளுடன் ஆங்கில வழி வகுப்புகளும் நடத்தப்பட வேண்டும். ஆங்கில வழியில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். தற்பொழுது அரசுப் பள்ளிகளில் உள்ள ஆங்கில வழி வகுப்புகளில் படிக்கும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவர்களுக்கும் இலவசக் கல்வி வழங்க வேண்டும்.
எந்தப் பள்ளியில் படித்தாலும் ஒரே பாடத்திட்டம், ஒரே பாடநூல் என்பதைப் பெற்றோர்கள் உணரும்படியான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அதிகக் கட்டணம் செலுத்திப் படிக்கவைக்கும் பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளிலேயே தங்கள் குழந்தைகளைப் படிக்கவைப்பார்கள்.
எல்லாத் தொடக்கப் பள்ளிகளிலும் 5 ஆம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமில்லாத ஒரு விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம். இந்தி விரும்பாத பெற்றோர்களின் குழந்தைகளுக்கு இந்தி கற்பிக்கப்படுவதைத் தவிர்க்கவும் செய்யலாம். இதனால் இந்தி கற்க வேண்டும் என்பதற்காகவே தனியார் பள்ளிகளுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்பும் பெற்றேர்கள் அரசுப் பள்ளியிலேயே தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க வாய்ப்பாக அமையும்.
அரசுப் பள்ளிகளில் 5 வயது பூர்த்தியான குழந்தைகள்தான் முதலாம் வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர். ஆனால், எந்த ஒரு குழந்தையின் பெற்றோரும் தங்கள் குழந்தை 5 வயது பூர்த்தியாகும் வரை வீட்டில் வைத்திருக்க விரும்புவதில்லை. அதனால்தான் 3 வயதிலேயே தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்து விடுகின்றனர். தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிக்கும் குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு மாற்றுவதில்லை. தொடர்ந்து அந்தப் பள்ளியிலேயே முதலாம் வகுப்பில் சேர்த்துவிடுகின்றனர்.
தொடக்கப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கையை உயர்த்த எல்லாத் தொடக்கப் பள்ளிகளிலும் 3 வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு நர்சரி வகுப்புகளைத் தொடங்க வேண்டும். இவ்வகுப்புகளில் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்குக் கற்பிக்கப்படுவதுபோல அடிப்படைக் கல்வியை வழங்க வேண்டும். அல்லது ஏற்கெனவே நடைபெற்றுவரும் அங்கன்வாடி மையங்களைத் தொடக்கப் பள்ளிகளுடன் இணைத்து நர்சரி வகுப்புகளை நடத்தலாம்.
இதன்மூலம் நர்சரி வகுப்புகளில் உள்ள குழந்தைகள் அப்படியே தொடக்கப்பள்ளிகளில் முதலாம் வகுப்பில் சேர வாய்ப்பாக அமையும். முதலாம் வகுப்பில் சேர்ந்துவிட்ட குழந்தை வேறு எந்தத் தனியார் பள்ளிக்கும் செல்லாது. இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை உயரும்.
வேலை நாட்களில் ஆசிரியர்களுக்கு அவ்வப்போது பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதனைத் தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்குப் புரியும்படி கற்பிக்க, கடினமான பாடங்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கலாம். அப்படியே பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டிருந்தாலும் மாதத்திற்கு ஒரு நாள் சனிக்கிழமைகளில் மட்டும் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். கூடுதலான நாட்கள் பயிற்சி வழங்க வேண்டுமெனில் காலாண்டு, அரையாண்டு, மற்றும் முழு ஆண்டு விடுமுறைநாட்களில் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும்.
கற்பித்தல் பணி அல்லாத பல்வேறு பணிகளுக்கு ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு கூட்டங்கள், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, வாக்காளர் சேர்ப்பு, குடும்ப அட்டை சரிபார்ப்பு போன்ற கற்பித்தல் பணி அல்லாத பல வேலைகளுக்கு ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
அதே போல, பள்ளிக் குழந்தைகளைக் கொண்டு அவர்கள் வயதிற்குப் புரியாத விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்தப்படுகின்றன. போதைப் பொருள் ஒழிப்புப் பேரணி, எஸ்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணி, இரத்ததான விழிப்புணர்வுப் பேரணி போன்ற பேரணிகள் நடத்த குழந்தைகளை ஈடுபடுத்தி அவர்கள் கல்வி பயிலும் நேரத்தைக் குறைக்கக்கூடாது.
மாணவர்களுக்குக் கற்பிப்பதில் ஆசிரியர்களுக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும். மாணவர்களுக்கு எப்படி கற்பிப்பது என்று ஏற்கெனவே இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்று வந்தவர்களிடம் ‘இப்படித்தான் கற்பிக்கக் வேண்டும்’ என்று தற்பொழுது நிர்பந்தம் செய்யப்படுகிறது.
வகுப்பறைக்குள் மாணவர்கள் பாடப் புத்தகம் எடுத்து வரக்கூடாது என்றும், பல வகுப்பு மாணவர்களை ஒன்றாக உட்கார வைத்துக் கற்பிப்பிக்க வேண்டும் என்றும், அச்சிடப்பட்ட அட்டைகளைக் கொண்டுதான் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்படுகிறது.
இது போன்ற தேவையற்ற கெடுபிடிகளாலும், கற்பிப்பதில் ஆசிரியர்கள் ஆர்வம் இழக்கின்றனர். மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படாத வகையிலும், மாணவர்கள் ஆர்வமாகக் கற்கும் வகையிலும் ஆசிரியர்கள் கற்பிக்குமாறு அறிவுறுத்தினால் மட்டும் போதுமானது. அரசுப் பள்ளி ஆசிரியர்களால் தரமான மாணவர்களை உருவாக்க முடியும்.
இனியும் காலம்தாழ்த்தாமல் அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஐம்பது சதவிகித அரசுத் தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் நிலை உருவாகிவிடும்.
....................................................................................
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் உண்மை நிலைமை குறித்து, நூலகர் ஒருவர் சிறப்பாக எழுதியுள்ளார் என்று ஆசிரியர்கள் மத்தியில் பேசப்பட்டது. ஆசிரியர்கள் பலரும் என்னைத் தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்தனர்.
அக்கட்டுரையில் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தவும், மாணவர் சேர்க்கை குறைந்து வருவதைத் தடுக்கவும், அரசுக்குப் பல கோரிக்கைகளை வைத்திருந்தேன். அடுத்த சில மாதங்களில் மூன்று அரசாணைகள் வெளிவந்தன. 1. சோதனை அடிப்படையில் 100 தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளை (English medium) தொடங்குவது. 2. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மட்டும் சோதனை அடிப்படையில் மழலையர் வகுப்புகளைத் தொடங்குவது. 3. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தை ரத்து செய்வது.
தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால், அதற்கு அடுத்த ஆண்டு வாய்ப்புகள் உள்ள பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்பு தொடங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. இதனால், இன்று லட்சக்கணக்கான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் செலவில்லாமல் ஆங்கில வழியில் (English medium) படிக்கின்றனர். அத்துடன், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஆசிரியராகும் வாய்ப்பும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments