இனி எது வல்லரசு நாடு?
நான் தான் உலகின் பெரிய வல்லரசு என்று அமெரிக்காவும், சீனாவும் போட்டிப் போட்டுக் கொண்டு உலக மக்களை அச்சத்தில் வைத்துக் கொண்டு இருந்தன. பல நாடுகளை எவ்வாறு அடக்கி அடிமைகளாக வைத்து இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அடிபணியாத நாடுகளுக்கு எப்படி எல்லாம் பொருளாதார தடை விதித்தார்கள் என்பதை மறக்க முடியுமா?
சிலர் கடவுளைக் காட்டிலும், அறிவியல் தான் பெரியது என்று கூறிக் கொண்டு வந்தனர். ஆனால், இன்று கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி இந்த வல்லரசுகளை, அறிவியல் வல்லுனர்களை தலை குனிய வைத்துவிட்டதே?
ஆயுதப் படையைக் காட்டியும், நவீன கண்டுபிடிப்புகளைக் காட்டியும், வல்லரசு என்று உலக மக்களை அச்சுறுத்தி வந்த சீனா, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகள் இன்று கண்ணுக்குப் புலப்படாத ஒரு கிருமி முன்பு கைகட்டி, மண்டியிட்டு, "தயவு செய்து எங்களை வாழ" விடு என்று மன்றாடி வேண்டிக் கொண்டு இருக்கின்றனவே?
ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களின் மீது அணுகுண்டுகளை வீசி லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த அமெரிக்கா, அந்த மக்களின் துயரங்களை இன்றாவது உணர வேண்டும்.
அதேபோல, ஜாலியன் வாலாபாக்கில் ஒன்று கூடியிருந்த இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை துப்பாக்கி முனையில் சுட்டு, பல ஆயிரம் பேரை கொன்று குவித்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அந்த துயரத்தை இன்று நினைத்துப் பார்க்க வேண்டும்.
அதிகாரம் தான் பெரியது என்று எண்ணி, இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசு அந்த மக்கள் அனுபவித்த துயரத்தை இன்றாவது உணர வேண்டும்.
மகாத்மா காந்தியின் வேண்டுகோளை ஏற்காமல், லட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரின் அரசியல் வாரிசுகள், அந்த யூதர்கள் அனுபவித்த கொடுமைகளை இன்று உணர வேண்டும்.
உரிமைக்காக குரல் கொடுத்த சீன நாட்டு மாணவர்கள் ஆயிரக்கணக்கானோரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த சீன ஆட்சியாளர்கள் அந்த மாணவர்களின் பெற்றோர் பட்ட துன்பங்களை இன்றாவது எண்ணிப் பார்க்க வேண்டும். இப்படி எவ்வளவோ அக்கிரமங்கள் இருக்கின்றன.
ஆதிக்க சக்திகள் செய்த மனித உரிமை மீறல்கள் அனைத்தையும் திரும்பிப் பார்க்கும் நாள் இதுவாக இருக்கட்டும்.
இனியாவது, அந்தப் போக்கு மாற வேண்டும்.
புத்தன், இயேசு, காந்தி சொன்ன சத்தியமும், அகிம்சையும் உலகம் முழுவதும் பரவ வேண்டும்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று: நமக்கும் மேல் எதோ ஒன்று இருக்கிறது என்பதை.
அறிவியலை மட்டுமே நம்பிக்கொண்டு இருப்பவர்களும், ஆதிக்க வர்கத்தினரும், வல்லரசு என்று பெருமை பேசி வரும் ஆட்சியாளர்களும் இதை இன்றாவது உணர வேண்டும்.
எச். ஐ. வி. வைரஸ் உண்டாகி 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. அந்த வைரஸை ஒழிக்கவோ, மற்றொரு மனிதனுக்கு பரவாமல் இருப்பதற்கான ஒரு தடுப்பு மருந்தையோ இன்றுவரை வல்லரசுகள், அறிவியலின் உச்சத்தில் இருப்பவர்கள், அறிவியலுக்கு கடவுளும் கட்டுப்பட்டவர் என்று கூறிக் கொள்பவர்களால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை?
"கடவுள், கொரோனா வைரஸ் நோயிலிந்தது மக்களை ஏன் காப்பாற்ற முடியவில்லை?" என்று நாத்திகர்கள் சிலர் பேசி வருகிறார்கள். நான் கேட்கிறேன்: "எந்த மதக் கடவுளாவது பாம்பு, பூரான், தேள், பல்லி, ஓணான், நாய், போன்ற ஜீவராசிகளை வேக வைத்தோ, பச்சையாகவோ மக்களை தின்னச் சொல்கிறதா? கண்ணில் பட்ட எல்லா ஜீவராசிகளையும் கொன்று, தின்று வைரஸை நீங்கள் பரப்புவீர்கள். உங்களை எங்கள் கடவுள் காப்பாற்ற வேண்டுமா? இது வேடிக்கையான கேள்வி இல்லையா?" இதை மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும்.
நாத்திகம் பேசுபவர்கள் சிலர் தாங்கள் தான் அறிவாளி என்று இது போன்ற பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது போன்ற பதிவுகளை ஆய்வு செய்யாமல் forward செய்ய வேண்டாம் என்று நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன்.
சரி, "இனி யார் வல்லரசு?" என்ற கேள்வி எழுகிறது.
இனி, பணத்தாலும், ஆயுதத்தாலும் எவ்வளவு பெரிய வலிமை உள்ள நாடாக இருந்தாலும் வல்லரசு என்று ஏற்றுக் கொள்ள முடியாது.
வேளாண்மையாலும், மருத்துவத்திலும் எந்த ஒரு நாடு சிறந்தது விளங்குகிறதோ, அந்த நாடுதான் இனி வல்லரசு நாடாக இருக்கும் என்பதே என் கருத்து.
நன்றி.
- சி.சரவணன்.
Comments