இனி என்ன செய்ய வேண்டும்?
கண்ணுக்குப் புலப்படாத கொடிய வைரஸ் வல்லரசு நாடுகளையெல்லாம் தாக்கி, அவர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக ஆயிரம் பேர் இந்த நோய்க்கு இறக்கிறார்கள்.
இதைக் கண்ட உலக மக்கள் அனைவரும் இன்று அச்சத்தில் மூழ்கி இருக்கிறார்கள். உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து, மக்களை வீடுகளிலே இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றன.
இந்தியாவும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து மக்களை வீட்டிற்குள்ளே இருக்குமாறும், அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியில் வருமாறும், அப்படி வெளியில் வந்தாலும் கண்டிப்பாக சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறது.
சீன நாட்டில் தொடங்கிய வைரஸ் நோய், மெல்ல ஐரோப்பிய நாடுகளில் பரவி, அதிக அளவிலான உயிர் இழப்புகளை ஏற்படுத்தியது ஜனவரி, பிப்ரவரி மாதங்களில். அதைக் கண்ட சில நாடுகள் தங்கள் மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதையும், வெளிநாட்டுப் பயணிகளை உள்நாட்டில் அனுமதிப்பதிலும் கட்டுப்பாடுகளை விதித்தன.
ஆனால், உலகில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய நாடான இந்தியாவில் அப்படி ஒரு போர்க்கால நடவடிக்கைகளை உடனடியாக தொடங்கவில்லை.
ஜனவரி 18 அன்றிலிருந்தே வெளி நாடுகளில் இருந்து வருபவர்களை 15 நாட்கள் தனிமையில் இருக்குமாறு மத்தி அரசு அறிவுறுத்தியதாக சொல்லப் படுகிறது. வெளி நாட்டுப் பயணிகள் இந்தியாவில் நுழைய பிப்ரவரி மாதத்திலேயே தடை விதித்து இருக்கலாம்.
பிப்ரவரி 15ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை அரசு சொந்த செலவில் ஸ்டார் ஹோட்டல்களில் தங்க வைத்து கண்கானித்து இருந்தால், மத்திய அரசுக்கு ஓர் ஆயிரம் கோடி ரூபாய் செலவு ஆகியிருக்கும், அவ்வளவு தான்.
மற்றபடி, இதுபோன்ற ஊரடங்கு உத்தரவுக்கு அவசியம் ஏற்பட்டிருக்காது. இயல்பு வாழ்க்கையும் பாதிப்பு ஏற்படிருக்காது. பல லட்சம் கோடி ரூபாய் அரசுக்கும், மக்களுக்கும் இழப்பு ஏற்பட்டிருக்காது.
மார்ச் 22 ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு என்று மார்ச் 20 அன்று பிரதமர் அறிவித்துவிட்டார். அது சோதனை அடிப்படையிலான ஊரடங்கு உத்தரவு என்று சொல்லப்பட்டது. அதன் பொருள், வெகுவிரைவில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பதாகும். அதை பொது மக்களுக்கு புரிய வைக்க வில்லை. ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குக்குப் பிறகு எல்லாம் இயல்பாக நடைபெறும் என்றுதான் பொதுமக்கள் நினைத்தார்கள். அதற்கு அடுத்து இரண்டு நாள் கழித்து திடீரென்று 'நாளை இரவு முதல் ஏப்ரல் 15 வரை ஊரடங்கு உத்தரவு' என்று பிரதமர் அறிவித்து விட்டார்.
அதனால், வெளி மாவட்டங்களில் வேலைக்குச் சென்றவர்கள் வீடுகளுக்குப் போய் சேர சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள்.
வெளிமாநிலங்களில் இருந்து வந்து, ஆங்காங்கே வேலை செய்தவர்களின் நிலைமை இதைவிட மோசம். ஏற்கனவே, பெரும்பாலான மாநிலங்கள், தங்கள் மாநில எல்லைகளை மூடி விட்ட நிலையில், இந்த கூலித் தொழிலாளர்களால் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல முடியவில்லை. ரயில்களில் செல்லலாம் என்றாலும், ஏற்கனவே ரயில் சேவை நிறுத்தப்பட்டு விட்டது. அதனால், அவர்கள் ஆங்காங்கே தேங்கி விட்டார்கள்.
அவர்களை வேலைக்கு அமர்த்தியவர்கள் அவர்களுக்கு உணவுப் பொருட்களையாவது கொடுத்து, அந்தந்தப் பகுதியிலேயே சமைத்து உண்டு காலத்தைக் கடத்துமாறு செய்து இருக்க வேண்டும். ஆனால், அந்த மனிதாபிமான உணர்வு கூட இல்லாத நிறுவனத்தினர் அவர்களை வெளியேற்றி விட்டனர். அதனால்தான், ஊரடங்கு உத்தரவு அறிவித்த இரண்டாவது நாளன்று ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் சாலைகளில் பெருமளவில் வட மாநிலத் தொழிலாளர்கள் நின்றது.
டெல்லியில் 2 லட்சத்திற்கும் மேலான தினக்கூலித் தொழிலாளிகள் சாலைகளில் கூடினார்கள். இவர்கள் எல்லோரும் டெல்லியில் நடைபெறும் கட்டுமான மற்றும் வளர்ச்சி பணிகளில் ஈடுபடும் கூலித் தொழிலாளர்கள். இவர்களில் பெரும்பாலோர் உத்திர பிரதேசத்தில் இருந்து வந்து டெல்லியில் மாதக்கணக்கில் தங்கி வேலை செய்பவர்கள். இவர்கள் நிலைமையும் தமிழகத்தைப் போலவேதான். அதனால், அவர்களில் பலரும் உத்திரப் பிரதேசத்திற்கு சாலை வழியாக கூட்டம்கூட்டமாக நடக்கத் தொடங்கினர். இதைக்கண்டு நாடே அதிர்ச்சி அடைந்தது.
இது மட்டுமா? இது போன்று லட்சக்கணக்கான மக்கள் சொந்த நாட்டிலேயே இன்று அகதிகளாக தவித்து வருகிறார்கள். முகாம்களில் தங்கி இருப்பவர்களின் எண்ணிக்கை 75லட்சம் என்று மத்திய அமைச்சர் கூறினார். கணக்கில் வராதவர்கள் எத்தனை பேர் என்று யாருக்கும் தெரியாது.
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் தொடர்பு விசாரிக்கப்பட்டபோது, அவர்கள் டெல்லியில் நடைபெற்ற மத மாநாட்டில் கலந்து கொண்ட விவரம் தெரிய வந்தது.
இதில் வேதனையும், அதிர்ச்சியும் என்னவென்றால், அந்த மாநாட்டில் கலந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்குதான் அதிக அளவில் நோய்த்தொற்று உள்ளதாக தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளது.
நோய் தொற்று பரவ டெல்லி மத மாநாடும் ஒரு காரணம் என்று மாநிலங்கள் கண்டுபிடித்த பிறகுதான், தடையை மீறி மாநாடு நடைபெற்றதாக தில்லி காவல்துறையும், தில்லி முதல்வரும் ஒப்புக் கொண்டனர்.
நிலைமை தீவிரமடைந்த பிறகு தான், தில்லி காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்தது, அங்கு தங்கி இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை வெளியேற்றியது.
இனி யாரைக் குறைகூறியும் பயனில்லை. நடைபெற்றச் சம்பவங்கள் தற்செயலாக நடந்தனவாக மறந்து, "அடுத்து செய்ய வேண்டியது என்ன?" என்று சிந்தித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.
இன்றையச் சமூகச் சூழலில் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு சென்று பணிபுரிய வேண்டியது தவிர்க்க முடியாதது.
மாநில அரசாங்கங்கள் தங்கள் மாநில எல்லைக்குள் எத்தனை வெளிநாட்டினர் வந்து இருக்கிறார்கள்? அவர்கள் எதற்காக வந்தார்கள்? அவர்கள் வந்த வேலையை மட்டும் பார்க்கிறார்களா? சுற்றுலா விசா வாங்கிக்கொண்டு சமூக விரோத செயல்களில், அல்லது மத பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார்கள்? என்று மாநில அரசுகள் இனியாவது கண்காணிக்க வேண்டும்.
அதேபோல, எத்தனை தொழிலாளிகள் வெளி மாநிலங்களில் இருந்து வந்து பணிபுரிகிறார்கள்? அவர்களில் எத்தனை பேர் திரும்பியிருக்கிறார்கள்? எத்தனை நாட்களுக்கு பணிபுரிவார்கள்? யார் யாரிடம் பணிபுரிகிறார்கள்? எந்த நிறுவனத்தில் எத்தனை பேர் பணிபுரிகிறார்கள்? அவர்களுக்கு என்ன ஊதியம் வழங்கப்படுகிறது? அவர்களுக்கான வருகைப்பதிவேடு, சம்பளப் பதிவேடு பராமரிக்கப்படுகிறதா? அவர்களுடைய ஆதார் அட்டை நகல் பராமரிக்கப்படுகிறதா? அவர்கள் தங்குவதற்கு போதுமான, சுகாதாரமான இடம் வழங்கப்பட்டு இருக்கிறதா? இது போன்ற விவரங்களை மாநில அரசுகள் இனியாவது பராமரிக்க வேண்டும். இவையெல்லாம் சமூகச் சூழல் சரியான பிறகு செய்ய வேண்டியவை.
ஆனால், இன்றைக்கு நாம் அவசர அவசியமாக செய்ய வேண்டியது மக்களைக் காப்பாற்றுவதுதான். அதற்கு என்ன செய்தாக வேண்டும் என்று யோசித்து நல்ல முடிவுகளை உரிய நேரத்தில் எடுப்பது அவசியம்.
மாநிலம் விட்டு மாநிலம் வந்து பணிபுரிந்த கூலித் தொழிலாளர்களுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் உணவு அளித்து ஆதரவு தருவதாக செய்திகள் வருகின்றன. தன்னார்வலர்களால் எத்தனை நாட்கள்தான் உதவி செய்ய முடியும்? அவர்களுக்குத் தொய்வு ஏற்பட்டால் அதையும் விட்டுவிட்டு வீட்டில் முடங்கி விடுவார்கள்.
ஆகவே, உடனடியாக மாநில அரசுகள் வெளிமாநிலங்களில் இருந்து வந்து ஆங்காங்கே தங்கி விட்டு உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு அரசு ஊழியர்களைக் கொண்டு உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
நோய் சமூகத் தொற்றாக மாறுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவை கடுமையாக்க வேண்டும்.
அதே நேரத்தில் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், காய்கறிகள் அவர்களது இல்லங்கள் தேடி வர மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் தெருவிலே கிடைக்கும் பொழுது, பொது மக்கள் வெளியில் நடமாட வேண்டிய அவசியம் இருக்காது.
அடுத்து, போதுமான பரிசோதனை மையங்கள் இல்லை என்று கூறப்படும் செய்தியை கவனத்தில் கொண்டு அதிக எண்ணிக்கையிலான பரிசோதனை மையங்களை அமைக்க வேண்டும். அதற்குத் தேவையான பயிற்சி பெற்ற ஊழியர்களை உடனடியாக பணியமர்த்த வேண்டும்.
பள்ளிகளையும், கல்லூரிகளையும் மருத்துவமனைகளாக அமைப்பதற்காக அரசு நடவடிக்கை எடுத்து வந்துள்ளனர். இந்த இடங்களில் பணிபுரிவதற்கான ஆட்களுக்கு மாநில அரசு என்ன செய்யப் போகின்றன? 'ஏதோ தற்காலிக ஊழியர்களை தினக்கூலி அடிப்படையில் நியமித்து சமாளித்து விடலாம்' என்றும் 'சூழ்நிலை சரியான பிறகு இவர்களை வீட்டுக்கு அனுப்பிவிடலாம்' என்றும் மாநில அரசு எண்ணிவிடக் கூடாது.
இது ஒரு கொடிய நோய் என்று அனைவருக்கும் தெரியும். மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பும் உள்ளது. அப்படி ஒரு சம்பவம் ஒன்றிரண்டு ஏற்பட்டால், தற்காலிகப் பணியாளர்கள் உயிருக்கு அஞ்சி ஒரே நாளில் பலரும் வெளியேறிவிடலாம். அரசு ஊழியர்களைப் போல், தற்காலிக ஊழியர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்க முடியாது.
மேலும், 4, 5 நோயாளிக்கு ஒரு பணியாளராக இருக்க வேண்டும். அதுவும் மூன்று ஷிப்ட்டுகளில் 24 மணி நேரமும் பணிபுரிய வேண்டிய கட்டாயம் உள்ளது. அதுவே, மாநில அரசு போதுமான பணியாளர்களை உடனடியாக முழு ஊதியத்துடன் பணியமர்த்த வேண்டும். இவர்கள் சேவைகள் தொடந்து தேவைப் படலாம். . ஏனென்றால், இதைவிட கொடிய நோய் மீண்டும் வராது என்று யாரும் உத்தரவாதம் கொடுக்க முடியாது. பல லட்சம் கோடி ரூபாய்களை இன்று செலவு செய்யும் அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் சிக்கனம் பார்ப்பதோ, பணியாளர் நியமிப்பதில் சிக்கனம் பார்ப்பதோ கூடாது.
இந்தியா மருத்துவத்தில் சிறந்த நாடாக விளங்க, உடனடியாக போதுமான பணியாளர்களை நியமிக்க வேண்டும். இன்றைய நவீன தொழில்நுட்ப காலத்தில் 24 மணி நேரத்தில் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெற்று, அடுத்த 24 மணி நேரத்தில் அவர்கள் தகுதியின் அடிப்படையில், இனசுழற்சி அடிப்படையிலும் பணி ஆணை அவர்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்ப முடியும்.
இனிவரும் காலங்களில் பணத்தாலும், ஆயுதங்களாலும், எண்ணெய் வளங்களாலும் உயர்ந்து இருக்கும் நாட்டை வல்லரசு என்று கூறிக் கொள்ள முடியாது. விவசாயத்திலும், சுகாதாரத்திலும் எந்த ஒரு நாடு சிறந்தது விளங்குகிறதோ, அந்த நாடுதான் இனி வல்லரசு நாடாக இருக்கும். அந்தவகையில் இந்தியா வல்லரசு நாடாக மாறும் நாள் கண்ணுக்கு எட்டிய தூரத்தில்தான் இருக்கிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
நூலகர் சி. சரவணன்,
கடத்தூர் அஞ்சல்
தருமபுரி மாவட்டம்.
9442265816
8668192839.

Comments
Harrah's 거제 출장샵 Cherokee Casino Resort has announced that it has selected an enterprise 삼척 출장안마 deal worth $1.7 billion to provide 거제 출장샵 $1 군산 출장마사지 billion of casino equipment and 경주 출장안마