மாண்புமிகு மக்களே!


இன்று உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு மருத்துவர்களும், மருத்துவ, துப்புரவு பணியாளர்களும் கடவுள்களாகத் தெரிகிறார்கள்.
 பாரதப்பிரதமர் ஒருநாள் அடையாள ஊரடங்கு உத்தரவை அறிவித்தபோது, 'ஊரடங்கு நாளன்று மாலை 5 மணிக்கு நாட்டில் உள்ள அனைவரும் மருத்துவர்களின் சேவையைப் போற்றும் வகையில் அவர்களுக்கு கைதட்டி ஆரவாரம் செய்து நன்றியை தெரிவிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.  நாட்டில் பல பகுதிகளிலிருந்து இதுபோன்ற கைதட்டல் செய்திகள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் காண முடிந்தது.
  தமிழ்நாடு அரசு முதலமைச்சர், ஒருபடி மேலே சென்று, "மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் கடவுள்களைப் போன்றவர்கள்" என்று சட்டமன்றத்திலேயே பேசினார்.  
"வழிபாட்டுத் தளங்கள் எல்லாம் மூடப்பட்டு விட்டன; கடவுள்கள் எல்லோரும் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்கள்" என்று முகநூல் பதிவுகளில் பலர் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
 இந்த பதிவுக்கு இரண்டு பொருள் உண்டு.  ஒன்று, கடவுள்களை நம்புவர்களை விமர்சனம் செய்வது; மற்றொன்று, மருத்துவர்களை கடவுள்களாக பார்ப்பது. 
ஆக, உலகம் முழுவதும் பணிபுரியும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், அவர்களுக்கு உதவியாக இருக்கும் காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்கள் அனைவரும் இன்று மக்களுக்கு கடவுள்களாக தெரிகிறார்கள். 
காட்சி ஊடகம் ஒன்றில் நேற்று ஒரு செய்தி பார்த்தேன். அதில், துப்புரவுப் பணியாளர் ஒருவர் குப்பைகளை ஏற்றிக் கொண்டு தள்ளு வண்டியைத் தள்ளிக் கொண்டு செல்கிறார். மாடி வீடுகளில் இருக்கும் மக்கள் அவர் மீது மலர் தூவி ஆரவாரம் செய்கின்றனர். அவரோ அதைப் பொருட்படுத்தாமல் சென்று கொண்டு இருக்கிறார்.

 ஒருநாள் அடையாள ஊரடங்கு அன்று மாலை 5 மணிக்கு,  மருத்துவர்களுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்த காட்சியை வேடிக்கைப் பார்க்க எங்கள் பிள்ளைகள் மொட்டை மாடிக்குச் சென்றனர். 
மாடியிலிருந்து இறங்கிவந்த பிள்ளைகளிடம் கேட்டேன், "நீங்களும் கைதட்டினார்கள்?" என்று.
 "இல்லை" என்றனர்.
"ஏன்?" என்றேன்.
"இவர்களுக்கெல்லாம் மருத்துவர்கள் கடவுள்களாக இன்றுதான் தெரிகிறார்களா?" என்றார்கள்.
 இந்தக் கேள்வி என் நெஞ்சை உலுக்கியது. நான் இந்தப் பதிவைப் போடுவதற்கான கருப்பொருளே இந்தக் கேள்விதான்.
 எங்கள் குழந்தைகளுக்கு 'மருத்துவர்கள் கடவுளுக்கு இணையானவர்கள்' என்று ஏற்கனவே தெரிந்திருக்கிறது. அதனால், அவர்கள் மற்றவர்களைப் போல் கைத்தட்டி ஆரவாரம் செய்யவில்லை என்பதை புரிந்து கொண்டேன். 

 தமிழகத்தில் உள்ள 6 கோடிக்கும் மேலானோர் மட்டுமல்லாது இந்திய மக்கள் அனைவரும் இன்று வீடுகளில் முடங்கிக் கிடக்கிறோம். 
கண்ணுக்குப் புலப்படாத கொடிய வைரசுக்கு அஞ்சி, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள குழந்தைகளோடு கதவுகளை அடைத்துக்கொண்டு, "கடவுளே எங்களைக் காப்பாற்று" என்று வேண்டிக் கொண்டு இருக்கின்றோம்.

 ஆனால், மறுபுறம் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும், காவல் துறையினரும், உள்ளாட்சித் துறையினரும், வருவாய்த் துறையினரும், இரவுபகல் பாராமல், உண்ண உணவு கிடைக்காமல், குடிக்க சரியான தண்ணீர் கிடைக்காத நிலையிலும், ஓடியாடி வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
 யாருக்கெல்லாம் நோய் அறிகுறி இருக்கிறது? யாரெல்லாம் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்து இருக்கிறார்கள்? அவர்களை எல்லாம் அடையாளம் கண்டு, தக்க ஆலோசனை வழங்கி, அவர்களைத் தனிமையில் இருக்கக் கூறி, தினமும் சென்று அவர்களைக் கண்காணிக்கும் பணியை செய்து கொண்டு இருக்கிறார்கள். 

 இரண்டு நாட்களுக்கு முன்பு, கடத்தூர் பேரூராட்சியில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மூவர், வெளி மாநிலத்தில் இருந்து வந்த  ஒருவரின் முகவரியைத் தேடி அலைந்து கொண்டிருந்தனர். அவர்கள் என்னைப் பார்த்து, "சார், இதுதான் உங்கள் வீடா?" என்றனர். அவர்கள் எனக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள். வந்த வேலையைச்  சொன்னவர்கள். 
அவர்கள் தேடும்  நபர் பற்றி எனக்கும் சரியாகத் தெரியவில்லை. நான் அவர்களை வீட்டுக்குள் அழைக்கவும் இல்லை; அவர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர்கூட கொடுக்க வில்லை. அந்நியர்களை வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள் என்றும், அந்நியர் வீடுகளுக்கு செல்லாதீர்கள் என்றும் அரசாங்கம் கூறிவருவதால், என்னால் அவர்களை வீட்டின் உள்ளே அழைக்க முடியவில்லை.
 அவர்கள் சென்ற பிறகு தான் எனக்கு உறைத்தது,  வாசல்வரை வந்தவர்களை 'உள்ளே வாருங்கள்' என்று கூறாமல் போனது எவ்வளவு பெரிய அவமானம் என்று. 
 நான் அவர்களை அழைத்திருந்தாலும் அவர்கள் வீட்டினுள் வந்திருக்க மாட்டார்கள். ஆனால், 'அதையும் செய்யத் தவறி விட்டேனே' என்கின்ற மன உறுத்தல் எனக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது. 

இது மட்டுமா? 
இதைப் போல் எத்தனையோ ஆதங்கங்கள் என் உள்ளத்தை 
நீண்ட நாட்களாக ஆக்ரமித்துக் கொண்டு இருக்கின்றன.
அவற்றில் சிலவற்றை உங்கள் முன்பு கொட்ட  விரும்புகிறேன். 

கடந்த ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தத்தில் நான் 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கலந்துகொண்டேன். ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டம் செய்யும் அரசு ஊழியர்கள் மண்டபங்களில் அடைத்து வைத்து, மாலை 6,7 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.  ஒரு நாள் அவ்வாறு அடைத்துவைத்து, ஏகப்பட்ட கெடுபிடிகள் செய்யப்பட்டு  அவர்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டனர். குடிக்கும் குடிநீர் பாத்திரத்தை  
வெளியில் கொண்டு போய் வைத்து விட்டார்கள் காவலர்கள். தண்ணீர் குடிக்கச் செல்பவர்களை கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். கைதுக்கு பயந்து, நா வரண்ட போதிலும் தண்ணீர் குடிக்காமல் இரவு 10 மணி வரையிலும் அடைந்து கிடந்தோம்.   அப்பொழுது அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்ட அவமானங்களையும், வேதனைகளையும் உடனிருந்து நான் அனுபவித்தேன். அப்படிப்பட்ட ஒரு கொடூரமான நிலை வெள்ளையர் ஆட்சியிலும் இருந்திருக்காது என்று நினைத்தேன். இரவு 10 மணிக்கு மேல் அனைவரையும் வெளியேற்றினார்கள். அவர்களில் பெண்கள் அதிக அளவில் இருந்தனர். அன்றிரவு பேருந்து கிடைக்காமல் வீடு போய் சேர முடியாமல் பேருந்து நிலையங்களில் தவித்தவர்கள் ஏராளம்.  நல்லிரவு 12 மணி, ஒரு மணி என்று வீடு போய் சேர்ந்தவர்கள் ஏராளம். அதிகாலையில்தான் வீடு போய் சேர்ந்தவர்களும் உண்டு.
 அந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் அதிக அளவில் கலந்து கொண்டு துன்பங்களுக்கு ஆளானார்கள்தான், இன்று தங்கள் உயிரைத் துச்சமாக நினைத்து, மக்களுக்காக அல்லும் பகலும் பாடுபட்டு வரும் உள்ளாட்சித் துறை ஊழியர்களும், வருவாய் துறை ஊழியர்களும், சுகாதாரத்துறை செவிலியர்களும்.  

இவர்கள் கோரிக்கை தான் என்ன?  இவர்களுடைய ஊதியத்தில் 10% பிடித்துக்கொண்டு,  ஓய்வூதியம் வழங்குவதாக கூறிய அரசு, ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்காமல் இழுத்தடிப்பது தான்.  ஓய்வூதியம்தான் இவர்களது பிரதான கோரிக்கை. இவர்கள் ஊதிய உயர்வு கேட்கவில்லை.

மாண்புமிகு பொதுமக்களே, 
அன்று நீங்கள் அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடினீர்களே? 
 தூற்றிப் பேசினீர்களே?
 "இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதாதா? மேலும் சம்பளம் வேண்டுமாம்!" என்றெல்லாம் இவர்களைக் கேவலமாக பேசினீர்களே?
அந்த வார்த்தைகளைக் கேட்ட  என் காதுகள் இன்றும் வலிக்கின்றனவே?  
"அவர்கள் கோரிக்கை நியாயம்தான்" என்று உங்களில் ஒருவராவது சொன்னதுண்டா?

அது போகட்டும்.
 'வேலைப்பளு அதிகமாக இருக்கிறது; கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்' என்று போராடிய செவிலியர்களுக்கும், மருத்துவர்களுக்கும் ஏற்பட்ட அவமானங்களையும், கொடுமைகளையும் பார்த்து ரசித்தீர்களே?
 உங்களின் யாராவது "அவர்களது கோரிக்கையில் நியாயம் இருக்கிறது" என்று சொன்னீர்களா? 
அவர்களின் போராட்டத்தை வேடிக்கைப் பார்த்த நோயாளிகளில் ஒருவரும் மருத்துவர்களுக்கு ஆதரவாகவோ, செவிலியர்களுக்கு ஆதரவாகவோ குரல் கொடுக்கவில்லையே? 

உள்ளிருப்புப் போராட்டம் செய்த செவிலியர்கள் கழிவறைக்குச் செல்லமுடியாமல் கழிவறைகள் பூட்டி வைக்கப்பட்டனவே? 
 அப்பொழுதும் நீங்கள் அதை வேடிக்கைதான் பார்த்தீர்களே?

 போராடிய மருத்துவர்களுக்கு பல மாவட்டங்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டதே?  
அப்பொழுது, "மருத்துவர்களும், செவிலியர்களும் கடவுள்களை போன்றவர்கள், அவர்களை தண்டிக்கலாமா?" என்று உங்களில் ஒருவரிடம் இருந்துகூட கேள்வி எழவில்லையே?  

மாவட்ட மாறுதல் வழங்கப்பட்ட மருத்துவர்களுக்கு பழைய இடங்களில் பணியமர்த்துமாறு 
உயர்நீதிமன்றம் உத்தரவிடுவதற்குகூட ஓராண்டுக்கும் மேல் ஆனதே?
 இந்த இடைப்பட்ட காலத்தில் மன உளைச்சலில்  இறந்துபோன மருத்துவரின் குடும்பத்திற்கு நீங்கள் யாராவது ஆறுதல் கூறி இருக்கிறீர்களா?

 அரசு ஊழியர்கள் போராட்டம் என்றாலே,  "மக்கள் பாதிக்கிறார்கள்" என்று பொது நல வழக்கு போடுவதும் நீங்கள் தானே? 

தனியார் துறை ஊழியர்களைப் போற்றுவதும், அரசுத் துறை ஊழியர்களைத் தூற்றுவதும் நீங்கள் தானே?

மாண்புமிகு பொது மக்களே, 
நீங்கள் என்று வீடுகளில் பத்திரமாக இருக்கிறீர்கள். நீங்கள் போற்றும் தனியார் துறை ஊழியர்கள் இன்று எங்கே இருக்கிறீர்கள்?

அரசு ஊழியர்கள்தானே  இவ்வளவு துன்பங்களையும்  தாங்கிக் கொண்டு, ஓடியாடி உங்களுக்காக, இந்த நாட்டுக்காக,  தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாது, பாடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.   
அவர்களை நீங்கள் இன்று கடவுளுக்கு இணையான வர்கள்   
என்று சொல்கிறீர்கள்.

 அரசாங்கமும் மருத்துவ பணியாளர்களுக்கு இரண்டு மாத சம்பளம் கூடுதலாக கொடுக்கிறது.
 அவர்கள் 'எங்களுக்கு இரண்டு மாத ஊதியம் கொடுத்தால்தான் வேலை செய்வேன்' என்று கேட்டார்களா?
 அவர்கள் 'எங்களைப் பாராட்டி கைதட்டினால்தான் வேலை செய்வோம்' என்றார்களா?

காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு.கபில்சிபல்  அவர்கள் "இந்தியாவில் இன்று இரண்டு இந்தியாக்கள் உள்ளன"  என்று இன்று குறிப்பிட்டு இருக்கிறார்.
 'ஒன்று, வீடுகளில் கதவைத் தாளிட்டுக் கொண்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், கைபேசி காட்சிகளையும் பார்த்துக்கொண்டு, நல்ல உணவை உட்கொண்டு, காலத்தைக் கழிக்கும் ஓர் இந்தியா'.
இன்னொரு இந்தியா, 'வெளி மாநிலங்களில் வேலைக்குச் சென்று, ஊர் திரும்ப முடியாமல் உணவுக்கும், உடைக்கும், இருப்பிடத்துக்கும் வழியில்லாமல்  திறந்த வெளியில், கூடாரங்களில், கொட்டகைகளில் இருக்கும் ஏழைத் தொழிலாளர்கள்' என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

மக்களே, நீங்கள் அனைவரும் எந்த இந்தியாவில் இருக்கிறீர்கள் என்று உங்களுக்கே தெரியும்.  
உங்களைக் காட்டிலும், இந்த இரண்டாவது இந்தியாவில் இருக்கும் மக்களுக்குத்தான் இந்த அரசு ஊழியர்கள் படும் துன்பங்கள் நன்கு தெரியும். ஏனென்றால் அவர்கள் வீட்டுக்கு வெளியே இருக்கிறார்கள்.

மாண்புமிகு மக்களே, 
உங்களை நான்  வேண்டிக் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்று தான்.
  நீங்கள் மருத்துவர்களையும், செவிலியர்களையும், சுகாதாரப் பணியாளர்களையும், வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட அரசு ஊழியர்களை கடவுளாகப் பார்க்காதீர்கள், அவர்களைச் சக மனிதர்களாகப் பாருங்கள் போதும். 
நன்றி.
  • நூலகர் சி. சரவணன்.

Comments