கரோனா: பட்டினிச் சாவைத் தவிர்க்க...
"இந்தியாவில் இரண்டு இந்தியா இருக்கிறது" என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு.கபில் சிபல் கூறினார்.
"ஊரடங்கு நாட்களில் வீடுகளில் தங்கி, தொலைக்காட்சியிலும் அலைபேசியிலும் காட்சிகளைப் பார்த்துக்கொண்டும், சுவையான உணவுகளை சாப்பிட்டுக்கொண்டும் இருக்கிறவர்கள் ஒரு வகை இந்திய மக்கள்; சாலை ஓரங்களில் தங்கிக்கொண்டு, உண்ண உணவு இல்லாமல், யாராவது ஏதாவது கொடுப்பார்களா? என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறவர்கள் இன்னொரு வகை இந்தியர்கள்" என்றார் திரு. கபில் சிபல்.
'மத்திய பெண் அமைச்சர் ஒருவர் ஊரடங்கு நாளில் இணைய வழியில் பாட்டுப் போட்டி நடத்தியதை விமர்சனம் செய்யவே திரு. கபில் சிபல் இவ்வாறு குறிப்பிட்டார்' என்று பத்திரிகைகள் எழுதின.
அவர் சொன்னதை அரசியலாக மட்டும் பார்க்காமல், அதில் உள்ள உண்மை என்ன என்று சமூகப் பார்வையில் பார்க்க வேண்டும்.
திடீரென ஊரடங்கு அறிவிக்கப் பட்டதால் கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (stranded workers) சொந்த மாநிலத்துக்கு செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி விட்டார்கள்.
இவர்கள் உண்ண உணவு இல்லாமல், தங்க இடம் இல்லாமல் ஆங்காங்கே தவித்து வருகின்றனர். ஆங்காங்கு இருக்கும் தன்னார்வலர்கள் இவர்களுக்கு தங்களால் இயன்ற அளவு உதவிகளை செய்து வருகின்றனர்.
மேலும்சிலர், மாநில அரசுகள் ஏற்பாடு செய்துள்ள முகாம்களில் தங்கி இருக்கிறார்கள்.
இந்த மக்களின் எண்ணிக்கை 5 கோடி என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், இந்த எண்ணிக்கை இதைவிட பல மடங்கு கூடுதலாக இருக்கும் என்று ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
இந்த ஊரடங்குக் காலத்தில் மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றன. இந்த நிவாரண உதவிகள் அனைத்தும் முதலில் குறிப்பிட்ட முதலாவது இந்தியர்களுக்கேப் போய் சேருகின்றன.
ஆனால், இந்த இரண்டாவது இந்திய மக்களுக்கு (புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு) மத்திய, மாநில அரசுகளின் எந்த ஒரு நிவாரணமும் போய்ச் சேரவில்லை. சாலையோரங்களிலும், முகாம்களிலும் இருக்கின்ற இந்த மக்களின் வாழ்க்கை இன்று சொல்ல முடியாத அளவுக்கு துயரங்கள் நிறைந்த வாழ்க்கையாக இருக்கிறது.
இவர்கள் அனைவரும் பிழைப்புக்காக வேலை தேடி வெளி மாநிலங்களிலிருந்து வந்து தங்கி பணிபுரிபவர்கள். தங்கள் சொந்த மாநிலத்தில் வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் வேலைவாய்ப்பு கிடைக்கின்ற வேறு மாநிலங்களுக்குச் சென்று பணிபுரிபவர்கள். இவர்கள் சொற்ப ஊதியத்தில் பணி புரிகின்றனர். அத்துடன் இவர்கள் மற்றப் பணியாளர்களைக் காட்டிலும் கூடுதல் வேலை நேரம் பணி புரிகின்றனர்.
இந்த ஆதரவற்ற மக்கள், தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருக்கிறார்கள்.
இவர்களின் நிலை பற்றி மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்தாது மிகவும் வேதனையாக இருக்கிறது என்று எதிர்க்கட்சியினரும், சமூக ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும் கூறுகின்றனர். இவர்கள் உழைப்பாளிகள். அதனால் இவர்களால் வெளியில் கையேந்த முடியாமல் பட்டினியாக இருக்கிறார்கள். சிலரோ நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உணவுக்காக கையேந்து கின்றனர்.
இப்படி, இந்த நாட்டில் 5 சதவீதத்திற்கும் மேலான மக்கள் அகதிகளாக ஒரு வேளை உணவுக்கு கூட வழி இல்லாமல் கஷ்டப்படுவது இந்த நாட்டிற்கு மிகப்பெரிய அவமானம்.
இந்திய நாட்டைச் சுதந்திர நாடாக மாற்றுவது மட்டுமா காந்தி, நேரு போன்றவர்களின் திட்டம்? நம் நாடு பொருளாதாரத்தில் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதுதான் அந்த தலைவர்களின் கனவாக இருந்தது.
ஆனால், இன்றைக்கு இந்தியா சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியும் நாட்டில் உணவுக்காக கையேந்தும் மக்களைப் பார்ப்பது வேதனையாக இருக்கிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்த போது உணவு தானியங்கள் பற்றாக்குறை இருந்தது. ஆனால், இன்று அப்படியா இருக்கிறதா? விவசாயிகளிடமிருந்து மத்திய மாநில அரசுகள் ஆண்டு தோறும் பல லட்சம் டன் நெல், கோதுமை கொள்முதல் செய்கின்றன. மத்தியத் தொகுப்புக் கிடங்குகளில் அரிசி, கோதுமை வைக்க இடம் இல்லாததால் விவசாயிகளிடமிருந்து நெல், கோதுமை வாங்குவதை மாநில அரசுகள் குறைத்து வருகின்றன. திறந்த வெளி தானிய சேமிப்புக் கிடங்குகளில் நெல் மூட்டைகளை அடுக்கி, பிளாஸ்டிக் தாள் போட்டு மூடி வைக்கப்பட்டு உள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது. இன்றைக்கு மத்தியத் தொகுப்பில் மக்களின் தேவைக்கும் அதிகமாக அரிசி கோதுமை கையிருப்பு உள்ளது.
இந்தியப் பிரதமர் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். "நாட்டில் தேவைக்கு அதிகமாக இருப்பில் உள்ள அரிசியைக் கொண்டு எரிசாராயம் தயாரித்து, அதிலிருந்து sanitiser தயாரிக்கப்படும்" என்பது தான் அந்த அறிவிப்பு.
அரசின் இந்த முடிவுக்கு திரு. ராகுல் காந்தி கடும் கண்டனத்தைத் தெரிவித்து உள்ளார்.
"நாட்டில் பல கோடி மக்கள் ஒரு வேளைச் சோற்றுக்குக் கூட வழியில்லாமல் தவிக்கும் போது, அரிசியில் இருந்து எரிசாராயம் தயாரிப்பது ஏன்?" என்கின்ற கேள்வி நம் அனைவர் மனதிலும் எழுகிறது.
ஏழைகளுக்கு அரிசி கொடுக்காமல் அவர்களைப் பட்டினியால் சாகடிக்க வேண்டும் என்பது மத்திய, மாநில அரசுகளின் எண்ணமன்று. அவர்களுக்கு எதோ ஒரு வழியில் உதவ வேண்டும் என்றுதான் மத்திய, மாநில அரசுகள் நினைக்கின்றன.
ஆனால், அவர்களுக்கு எப்படி கொடுப்பது என்பது தான் பிரச்சினை. எல்லா நிவாரணங்களும் குடும்ப அட்டை மூலம்தான் வழங்கப்படுகின்றன. இவர்கள் கைகளில் குடும்ப அட்டையும் இல்லை; வேறு ஆவணங்களும் இல்லை. அதனால்தான் இவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்க முடியவில்லை.
இன்றையச் சமூகச் சூழலில் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு சென்று பணிபுரிய வேண்டியது தவிர்க்க முடியாதது.
எத்தனைத் தொழிலாளிகள் வெளி மாநிலங்களில் இருந்து வந்து பணிபுரிகிறார்கள்?
அவர்களில் எத்தனை பேர் திரும்பியிருக்கிறார்கள்? எத்தனை நாட்களுக்கு பணிபுரிவார்கள்? யார் யாரிடம் பணிபுரிகிறார்கள்? எந்த நிறுவனத்தில் எத்தனை பேர் பணிபுரிகிறார்கள்? அவர்களுக்கு என்ன ஊதியம் வழங்கப்படுகிறது? அவர்களுக்கான வருகைப்பதிவேடு, சம்பளப் பதிவேடு பராமரிக்கப்படுகிறதா? அவர்களுடைய ஆதார் அட்டை நகல், கைபேசி எண் போன்ற விவரங்கள் பராமரிக்கப்படுகிறதா? அவர்கள் தங்குவதற்கு போதுமான, சுகாதாரமான இடம் வழங்கப்பட்டு இருக்கிறதா?
இது போன்ற எந்தவொரு விவரத்தையும் மாநில அரசுகள் பராமரிப்பது இல்லை.
அதனால்தான் இந்த மக்களுக்கு மாநில அரசுகளால் எந்தவொரு நிவாரணமும் வழங்க முடியவில்லை.
எந்தவொரு புள்ளிவிபரமும் இல்லாமல் நிவாரணப் பொருட்களையோ, பணத்தையோ மாநில அரசுகளால் எப்படி வழங்க முடியும்?
ஒரு பக்கம் மத்திய தொகுப்பில் பல லட்சம் டன் அரிசி, கோதுமை புழுத்து வீணாகி வருகிறது.
மறுபக்கம் ஒரு வேளை உணவுக்கு கூட வழியில்லாமல் தவிக்கும் மக்கள்.
இந்த இரண்டுக்கும் இடையே உள்ள இடைவெளியை மத்திய, மாநில அரசுகள் குறைந்து, மத்தியத் தொகுப்பில் உள்ள அரிசியை எந்தக் கணக்கும் பார்க்காமல் இந்த ஏழை மக்களுக்கு உடனடியாக வழங்க மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவர்கள் மட்டுமல்லாது, நாட்டில் வறுமையில் வாழும் மக்கள் அனைவருக்கும் மத்தியத் தொகுப்பில் உள்ள 585 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை இலவசமாகவோ, மிகக்குறைந்த விலையிலோ வழங்க வேண்டும். இல்லையேல், இந்தியாவில் கரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையைவிட, பட்டினியால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்' என்னும் நிலைமை ஏற்பட்டு விடும்.
எச்சரிக்கை!

Comments