கரோனா: இந்தியாவில் தனிநபர் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது ஏன்?

கரோனா வைரஸ் நோயால் இந்தியாவில் தனிநபர் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 

2008 - 09 ஆம் ஆண்டில் உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி அடைந்த போது, உலக நாடுகள் எல்லாம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தன. 

 வல்லரசு நாடுகளெல்லாம் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியடைந்து, மீள முடியாத் துயரத்தில் ஆழ்ந்தன.  பல நாடுகளில் வங்கிகள் பலவும் திவால் ஆகின. 

வல்லரசு நாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவில் வங்கிகளில் கடன் வழங்கி வீடு வாங்கியவர்களால்  தவணைத் தொகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் வங்கிகளில் கடன் பெற்று வீடு வாங்கியவர்கள் தங்களுக்கு வீடு வேண்டாம் என்றனர்.
அதனால்,  வங்கிகள் அந்த வீடுகளைக் கையகப்படுத்தி ஏலம் விட்டன.  ஏலத்தில் வீடுகள் வாங்க யாரும் முன்வரவில்லை.   கையகப்படுத்திய வீடுகளை விற்க முடியாமல் வங்கிகள் தடுமாறின. இதனால், வங்கியில்  முதலீடு செய்தவர்களுக்கு வங்கிகள் பணம் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. அமெரிக்காவில் வங்கிகள் திவால் ஆவதைத் தவிர்க்க அந்த நாட்டு மத்திய வங்கியான அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி, நலிவுற்ற வங்கிகளுக்கு நிதி உதவி வழங்கியது. 

 அத்துடன், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தவர்களுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டது.   தானியங்கி வாகன நிறுவனங்கள் (automobiles), தாங்கள் உற்பத்தி செய்த வாகனங்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்தன. 
 வாகனங்களை வாங்குவதற்கு ஆள் இல்லாததால், எவ்வளவுதான் விலை குறைத்தும் வாகனங்கள் விற்பனை ஆகவில்லை. வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியைக் குறைத்தன.  
இதுபோன்று பல்வேறு உற்பத்தி நிறுவனங்களும் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகின.  அதனால், அங்கு பணிபுரிந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்தனர். 
இவை மட்டுமல்லாது, காப்பீட்டு நிறுவனங்களும் கடும் நஷ்டத்திற்கு ஆளாகின. 

 இதன் தொடர்ச்சியாக பங்குசந்தையில் பங்குகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்ததால், பங்குசந்தையில் முதலீடு செய்தவர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகினர்.  இதன் விளைவாக, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். அதனால், தங்கத்தின் விலை கிடுகிடு என்று உயர்ந்தது. 
அத்துடன், அத்தியாயப் பொருட்கள் விலையும் உயர்ந்தது. அத்தியாயப் பொருட்கள் மீதான வரியைக் குறைக்க வேண்டிய கட்டாயம் அரசுகளுக்கு ஏற்பட்டது.  

தொழில்துறை வீழ்ச்சியின் காரணமாக, பெரும்பாலான நாடுகளில் அரசுக்கு வரும் வரி வருவாய் பெருமளவு குறைந்தது. இதனால்,  அரசு இயந்திரத்தை இயக்குவதில் பல நாடுகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் பெரும்பாலான நாடுகள் தவித்தன.   
2008-09 ஆம் ஆண்டில் பெரும்பாலான நாடுகளின் பொருளாதார நிலை இப்படித்தான் இருந்தது.

ஆனால், அப்பொழுது இந்தியப் பொருளாதாரத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.  இந்திய அரசும், இந்த மக்களும் இயல்பாக இயங்கிக் கொண்டு இருந்தார்கள்.

பொதுவாக, நாடுகளுக்கிடையே போர், உலகப் போர் போன்ற சூழ்நிலைகளில் தான் இது போன்ற பொருளாதார நெருக்கடி ஏற்படுவது வழக்கம்.

ஆனால், 2008 -09 ஆண்டுகளில் அப்படி எந்த போர் சூழலும் இல்லை. இருந்தாலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதற்குக் காரணம், உலகமயமாக்கல் கொள்கையில் ஏற்பட்ட குளறுபடிதான். 

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் தவித்தபோது, இந்திய அரசு இயல்பாக இயங்கிக் கொண்டு இருப்பதைக் கண்டு உலகநாடுகள் ஆச்சரியம் அடைந்தன.
    
இந்திய தொழில் நிறுவனங்கள் இயல்பாக இயங்கிக் கொண்டு இருந்தன. பங்குச்சந்தை அவ்வப்போது ஏற்ற இறக்கத்தோடு இருந்தாலும் ஓரளவுக்கு நிலையாக இருந்தது.
மத்திய, மாநில அரசுகள் தங்களுடைய ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கின.
உலக நாடுகள் எல்லாம் பொருளாதார சிக்கலில் இருந்தபொழுது, இந்தியப் பொருளாதாரம்  பெரிய அளவில் பாதிப்பு அடையாமல் தப்பித்தது எப்படி? 

 மற்ற நாட்டு மக்களின் வாழ்க்கை முறைக்கும், இந்திய மக்களின் வாழ்க்கை முறைக்கும் உள்ள வேறுபாடுதான் இதற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டது.  
எந்த ஒரு நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்திய மக்கள் சேமிப்புப் பழக்கத்தை காலம் காலமாக கடைபிடித்து வந்துள்ளனர்.  இதுவே, பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இந்தியாவையும், இந்திய மக்களையும் காத்தது.

கிராமங்களில் பெண்கள், குடும்பத் தலைவர்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் பணத்தை சேமிப்பது  வழக்கம். சிறுவர்களும் முதியவர்களும் தங்களால் முடிந்த சேமிப்பை வைத்திருந்தார்கள். உழைக்கும் நடுத்தர வயதினரும் அவ்வப்போது ஏதாவது ஒரு வகையில் சேமிப்பை வைத்து இருந்தார்கள்.  

அத்துடன் மக்களின் சேமிப்பு, பணமாக (liquid money) மட்டும் இல்லாமல், வங்கிகளிலும் சேமிப்பு வைத்து இருந்தார்கள்.  பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியில் சேமிப்புக்கு பல ஊக்கம் அளிக்கும் திட்டங்கள் வகுத்து நடைமுறைப்படுத்தப்பட்டது. பள்ளிகளில் சஞ்சாயிகா திட்டம் என்னும் சிறுசேமிப்புத்  திட்டத்தை நடைமுறைப்படுத்தி, மாணவர்களிடையே சேமிப்புப் பழக்கம் உருவாக்கப்பட்டது.
 அது மட்டுமல்லாது, மாதாந்திர தொடர் வைப்புத் திட்டம் (RD), மக்களிடையே பரவலாகக்கப்பட்டது.  இந்தத் திட்டத்தை நடைமுறை படுத்தும் முகவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வந்தது. சிறுசேமிப்பு துறை சிறப்பாக இயங்கி வந்தது.  இவ்வாறு, பல்வேறு முறைகளில், பல்வேறு வகையாக இந்திய மக்கள் தங்களால் ஆன தொகையை சேமிப்பாக வைத்து இருந்தார்கள். 
 ஓராண்டுக்கு எந்த வருமானமும் இல்லை என்னும் ஒரு நிலைமை ஏற்பட்டாலும், அதனைச் சமாளிக்கும் நிலையில் இந்திய மக்கள்  இருந்தார்கள்.  அதனால்தான், உலக நாடுகளில்  பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த போது,  இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி அடையாமல் தப்பித்தது.  இந்திய மக்களின் தனிநபர் பொருளாதாரமும் பாதிப்புக்கு ஆளாகவில்லை.

 12 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்பொழுது கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உலக நாடுகள் பெரிதும் பாதித்துள்ளன. 
நோய் தொற்று தொடங்கி சில மாதங்கள் கூட ஆகாத நிலையில்,  உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இங்கிலாந்தில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். வீட்டு உரிமையாளர்கள் வாடகை கொடுக்க முடியாத வாடகைதாரர்களுக்கு 'பாலியல் வாடகைத் திட்டம்' உருவாக்கியுள்ளனர்.   இத்திட்டம் பற்றி வரும் புகார்களை விரைந்து விசாரணை நடத்துமாறு அந்த நாட்டு தலைமை வழக்கறிஞர் உத்தரவிட்டுள்ளார் என்பதை படிக்கும்போது, அந்த நாட்டு மக்களின் பொருளாதாரம் எவ்வளவு மோசமடைந்து இருக்கும் என்று தெரிகிறது.

  இந்தியாவிலும் தற்பொழுது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  அதனால்தான், வீட்டு உரிமையாளர்கள் இரண்டு மாதங்களுக்கு வீட்டு வாடகை கேட்டு தொந்தரவு செய்ய கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. 

 'உலக நாடுகளைப் போல இந்தியாவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும்'  என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

 இந்தியாவில் மக்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைக்குச் செல்லாமல் வீட்டினுள்ளே அடைந்து இருக்கிறார்கள். இவர்கள் வருமானம் இழந்தனர்.  இந்த நிலை இன்னும் சில மாதங்கள் நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டால்,   'பல கோடி இந்திய மக்கள் ஒரு வேளை உணவுக்குகூட வழி இல்லாமல் கஷ்டப்படுவார்கள்' என்று ஊடகங்கள் அச்சம் தெரிவிக்கின்றன.   'வைரஸ் நோயால் இறக்கும் மக்களின் எண்ணிக்கையை விட, பட்டினியால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்' என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

2008 -09  உலகப் பொருளாதார நெருக்கடியை எளிதாக சமாளித்த இந்திய மக்கள், ஒன்றிரண்டு மாத வருவாய் இழப்பை சமாளிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.  ஏன் இந்த நிலை என்று பார்ப்போம்.

 2008 - 09 உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியில் இருந்த போது, இந்திய மக்களிடையே சேமிப்புத் தொகை அதிக அளவில் இருந்ததால், நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து தப்பித்தது.    மக்களும் பெரிய அளவில் பாதிப்பு அடையவில்லை. ஆனால், இன்றைக்கு மக்களிடையே சேமிப்புப் பழக்கம் இல்லாமல் போய்விட்டது. அதனால், இந்திய அரசின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதனால்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் குறைக்கப்பட்டது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு தொகை நிறுத்தப்பட்டது.  மத்திய, மாநில அரசுகள் அரசு ஊழியர்களின் ஊதியத்தை குறைத்து வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பட்டு நிதி மடை மாற்றம் செய்யப்பட்டது.

இந்திய மக்களின் தனிநபர் பொருளாதாரமும் கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. மக்களால் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை. நிதி நிறுவனங்கள் மூலம் வீடு, வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் முதலியன வாங்கிய மக்களால் கடனுக்கு தவணைத் தொகை செலுத்த முடியவில்லை. வங்கிகளில் நகைக் கடன், தனிநபர் கடன் வாங்கியவர்கள் வட்டி கட்ட முடியவில்லை. இவர்களால்  விரும்பிய உணவைக் கூட உட்கொள்ள முடியவில்லை.
இதற்கெல்லாம் காரணம், இந்திய மக்களின்  பண்பாட்டைச் சிதைந்த உலகளாவிய பொருளாதாரக் கொள்கை தான்.  இந்திய மக்கள் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமை ஆக்கப்பட்டு விட்டார்கள். 

சிறுசேமிப்பு ஏஜென்டுகள் வீடு தேடி வந்து சிறுசேமிப்புத் தொகை வசூல் செய்த காலம் மாறி, கடன் கொடுக்கும் நிறுவன ஏஜென்ட்கள் வீடு தேடி வந்து கடன் கொடுக்க ஆரம்பித்தார்கள். இப்படி மக்களிடையே இருந்த சேமிப்புப் பழக்கம் குறைக்கப்பட்டது.  அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி, அவர்களுக்கு பணமாகவோ, பெருளாகவோ கடன் கொடுத்து, மாதாந்திர தவணையாக வசூல் செய்யும் நிலை உருவாக்கப்பட்டது. 
 முன்பெல்லாம் மக்கள் சிறுக சிறுக பணத்தைச் சேர்த்து வீட்டையோ,  வீட்டு உபயோகப் பொருட்களையோ,  வாகனத்தையோ வாங்கினார்கள். ஆனால்,  இன்றைக்கு பொருளோ, வாகனமோ எந்த முன்தொகையும் இல்லாமல் மக்களுக்கு கொடுக்கப்பட்டு,  பிறகு மாதாமாதம் தவணைத் தொகை வசூலிக்கப்படுகிறது.  இது தொழில் மற்றும் நிதி நிறுவனங்கள் செய்த வேலை என்றால், வங்கிகள் வேறு விதமாக மக்களை திசை திருப்பின.

 வங்கி ஊழியர்கள் மக்களிடம் 'பணத்தை வங்கியில் முதலீடு செய்யுங்கள்' என்று கேட்டு பிரச்சாரம் செய்த காலம் மாறி, அவர்களுக்கு கடன் அட்டைகளை கொடுத்து, 'வங்கிக் கணக்கில் பணம் இல்லையென்றாலும் பணத்தை வங்கியில் இருந்து எடுக்கும்' கிரிடிட் கார்டு கலாச்சாரத்தை உருவாக்கினார்கள்.   

இந்திய மக்கள் எப்பொழுதும் சேமிப்பில் பணம் வைத்திருந்த நிலை மாறி, இன்று எப்பொழுதும் ஏதோ ஒரு வங்கி, வீட்டு வசதி நிறுவனம்,  நுகர்பொருள் நிறுவனம்,  ரியல் எஸ்டேட் என்று ஏதாவதொரு  நிறுவனத்திடம் கடன் வைத்துக்கொண்டு கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.

 இப்படி, இந்திய மக்களில் பெரும்பாலானோர் ஏதோ ஒரு நிறுவனத்தில் தாங்கள் பெற்ற கடனுக்கு மாதத் தவணைத் தொகை செலுத்தும் நிலை உருவாகி விட்டதால்,  தற்பொழுது கரோனா வைரஸ் நோய் ஏற்படுத்தியுள்ள வருமான இழப்பால் இவர்களின்  பொருளாதாரத்தில்  சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு நாட்கள் நீட்டிக்கப்பட்டால் நிலைமை மேலும் சிக்கலாகும். 
கரோனாவுக்குப் பிந்தைய வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்று சொல்லமுடியாது.

ஒரு பக்கம் மத்திய, மாநில அரசுகளின் நிதி நெருக்கடி, மற்றொரு பக்கம் மக்களின் தனிநபர் பொருளாதார நெருக்கடி. இதிலிருந்து நாடும், மக்களும் மீள்வது பெரும் சவாலாக இருக்கும்.

இதிலிருந்து இந்திய மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், 'சேமிப்புப் பழக்கத்தை மீண்டும் தொடங்குவதுடன், கடன் வாங்கும் பழக்கத்தைக் குறைக்க வேண்டும்' என்பதாகும். இல்லையேல், எதிர்காலத்தில் இதைவிடப் பெரிய பொருளாதார சிக்கலுக்கு இந்திய மக்கள் ஆளாகக் கூடும்.  
எச்சரிக்கை.

Comments