ஒரு நூலகரின் டைரிக் குறிப்புகள்: 4. நூலகங்கள் தரம் உயர்த்தக் கோரிக்கை - ஒரே நாளில் 32 ஆயிரம் புத்தகங்களையும் சரிபார்த்தது:
![]() |
| நூலகர். திரு. பிரமோத் அவர்களின் கோரிக்கை ஒன்றினை நிறைவேற்றிக் கொடுத்ததற்கு அவர் எனக்கு நல்லாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் எம்.ஜி.எஸ். மற்றும் மாநில நிர்வாகிகள். |
முக்கிய தபால் கொடுப்பதற்காக ஒரு நாள் கடலூர் மாவட்ட நூலக அலுவலகம் சென்றிருந்தேன். “நீ சரியாக வேலைக்கு வருவதில்லை என்று புகார் வருகிறது. போய் ஒழுங்காக வேலை செய்” என்றார் மாவட்ட நூலக அலுவலர் திரு.சி.அசோகன்.
நான் புவனகிரியிலேயே
வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வேலை செய்து வந்தேன். வியாழன் மாலைதான் புறப்பட்டு
வருவேன். சனிக்கிழமை காலை நூலகத்திற்குச் சென்று விடுவேன். அப்படி இருந்தும்
திரு.சி.அசோகன் சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நூலகர்களில் ஒருவர்தான்
என்னைப் பற்றி அவரிடம் தவறாகச் சொல்லியிருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.
“வாசகர்கள்
புகார் தெரிவித்தார்களா? நூலகர்கள் புகார்
தெரிவித்தார்களா?” என்றேன்.
“யாரோ
ஒருவர். புகார் வந்திருக்கிறது, அவ்வளவுதான்” என்றார்.
“வாசகர்
புகார் தெரிவித்திருந்தால் அதற்குப் பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன். ஆனால், நூலகர்
புகார் தெரிவித்திருந்தால் அதற்கெல்லம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றேன்.
“சரி, நீ
நூலகத்துக்குப் போ” என்றார்.
நேராகப் புவனகிரி
நூலகத்திற்குச் சென்றேன்.
“ஏன்
உடனே வந்து விட்டீர்கள்?” என்று அப்ரண்டீசாக
பணிபுரிந்த திரு.இராஜராஜன் கேட்டார். நடந்ததைச் சொன்னேன்.
“எந்த
வாசகரும் உங்கள்மீது புகார் சொல்லி இருக்க மாட்டார்கள். யார் சொல்லியிருப்பார்கள்
என்று எனக்குத் தெரியும். ஒழுங்காக வேலைக்குச் செல்லாதவர்களுக்கு, ஒழுங்காக
வேலைக்குச் செல்பவர்களைக் கண்டால் கோபமாகத்தான் இருக்கும். இப்படி எல்லாம்
நடக்கும் என்று ஏற்கெனவே நினைத்தேன். அது நடந்துவிட்டது” என்றார்.
ஒரு வெள்ளைத்தாளை
எடுத்துப் பாதியாகக் கிழித்துக் கீழ்கண்டவாறு எழுதித் தகவல் பலகையில் ஒட்டினேன்.
புகார் மற்றும்
ஆலோசனைக்குக் கீழ்கண்ட முகவரிக்கு எழுதலாம்:
மாவட்ட நூலக அலுவலர்,
மாவட்ட நூலக அலுவலகம்,
சொரக்கல்பேட்டை,
12,ஏ, விக்லிமியர்
தெரு,
கடலூர் -607
001.
அத்துடன் 5
அஞ்சல் அட்டைகளையும் ஒரு நூலில் கட்டித் தகவல் பலகையில் மாட்டி வைத்தேன். புவனகிரி
நூலகத்திற்கு வரும் நூலகர்கள் அதைப் பார்த்து, மாவட்ட
நூலக அலுவலரிடம் என்மீது புகார் தெரிவித்த நூலகரிடம் சொல்லட்டும் என்று அவ்வாறு
செய்தேன்.
புகார் தெரிவித்த
வாசகர்:
புவனகிரி கிளை
நூலகத்தில் பழைய புத்தகங்கள் இருப்பு நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து
வந்தேன். இருப்பு நீக்கம் செய்ய வைத்திருந்த புத்தகங்களில் ஒரு புத்தகத்தைத்
தருமாறு ஓய்வுபெற்ற தபால் அலுவலர் கேட்டார். மாவட்ட நூலக அலுவலர் பார்வையிட்டுச்
சான்றிட்டப் பிறகு தருவதாகக் கூறினேன்.
வேறு ஒரு வாசகரும் அதே
புத்தகத்தைத் தருமாறு கேட்டார். ஓய்வுபெற்ற தபால் அலுவலர் அந்தப் புத்தகத்தை
ஏற்கெனவே கேட்டதாகவும், அவருக்குக் கொடுப்பதாக
உறுதியளித்து விட்டதாகவும் கூறினேன்.
ஐந்நூறுக்கும் மேற்பட்டப் புத்தகங்கள் உள்ளன என்றும், அதில்
எத்தனைப் புத்தகங்கள் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுமாறு அவரிடம் கூறினேன். அவர்
எதுவும் பேசாமல் சென்று விட்டார். சில
நாட்கள் கழித்து மீண்டும் வந்த அவர், குறிப்பிட்ட
அந்தப் புத்தகத்தைக் கொடுக்கவில்லையென்றால் மாவட்ட நூலக அலுவருக்குப் புகார்
அளிக்கப்போவதாகக் கூறினார்.
“புகார்
மற்றும் ஆலோசனைக்கு, என்று தகவல் பலகையில் மாவட்ட
நூலக அலுவலர் முகவரி எழுதி வைத்திருக்கிறேன். அங்கேயே அஞ்சல் அட்டைகள் மாட்டி
வைத்திருக்கிறேன். எடுத்துப் புகார் எழுதுங்கள்” என்று
பேனாவைக் கொடுத்தேன்.
“என்னிடமே
பேனா உள்ளது” என்று சொல்லிவிட்டுத் தகவல்
பலகையில் மாட்டி வைத்திருந்த அஞ்சல் அட்டை ஒன்றை எடுத்து மாவட்ட நூலக அலுவலர்
முகவரியை எழுதிச் சென்றார்.
மாவட்ட நூலக அலுவலருக்கு
நடந்த சம்பவத்தைச் சொல்லி, என் மீது புகார் வரும் என்ற
தகவலை முன்கூட்டியே கொடுத்து விட்டேன்.
10
நாட்கள் கழித்து மாவட்ட நூலக அலுவலரிடமிருந்து என் மீதான புகார்மீது விசாரணை என்று
நாள் குறிப்பிட்டுத் தபால் வந்தது.
சம்பந்தப்பட்ட புகார்தாரர் குறிப்பிட்ட நாளில் பகல் 12.30
மணிக்குப் புவனகிரி கிளை நூலகத்தில் நடைபெறும் விசாரணையில் கலந்து கொள்ள வேண்டும்
என்றும் எழுதப்பட்டிருந்தது. புகார் தொடர்பாக மாவட்ட நூலக அலுவலருக்கு
முன்கூட்டியே தகவல் கொடுத்தும், விசாரணை நடத்த வேண்டிய
அவசியம் என்ன? என்று எனக்கு குழப்பமாக
இருந்தது.
விசாரணை நாளும் வந்தது.
பகல் 12.15
மணிக்கு மாவட்ட நூலக அலுவலர் திரு.சி.அசோகன் புவனகிரி கிளை நூலகம் வந்தார். 12.30
மணிக்கு புகார்தாரர் அவருடைய நண்பர் ஒருவருடன் வந்தார்.
“நீங்கள்தான்
புகார் அனுப்பினீர்களா?” என்றார் மாவட்ட நூலக
அலுவலர்.
“ஆமாம்” என்றார்
புகார்தாரர்.
புகார் பற்றி
விசாரித்தார் மாவட்ட நூலக அலுவலர்.
புகார்தாரரின் கேள்விக்கு
நான்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், என்னை
எதுவும் பேசவிடாமல் மாவட்ட நூலக அலுவலரே புகார்தாரரின் கேள்விகள் அனைத்துக்கும்
பதிலளித்துக் கொண்டிருந்தார். பிரச்சனையே எனக்கும் வாசகருக்கும்தான். என்னிடம்
எதையும் கேட்காமல் மாவட்ட நூலக அலுவலரே புகார்தாரரிடம் என் சார்பாக வாக்குவாதம்
செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் இருவரையும் நானே சமாதானம் செய்ய
வேண்டியதாயிற்று. இருவரும் அமைதியானார்கள்.
“இவர்
இந்த நூலகத்திற்கு வந்தபிறகு நூலகம் எப்படி இருக்கிறது? முன்பு
எப்படி இருந்தது?” என்று கேட்டார் மாவட்ட
நூலக அலுவலர்.
“இவர்
வந்தபிறகு முன்பைவிட நூலகம் சிறப்பாகச் செயல்படுவதால், இவ்வாண்டு
பொங்கல் விழாவில் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவதாக ஏற்கெனவே முடிவு
செய்திருந்தோம். அதற்குள் இப்படி நடந்துவிட்டது. நடந்த சம்பவத்திற்கு வருத்தம்
தெரிவித்துக் கொள்கிறோம், புகாரைத் திரும்பப் பெறுவதாக
எழுதிக் கொடுக்கிறோம்” என்றார் புகார்தாரரின் நண்பர்.
வெள்ளைத்தாள் ஒன்றைக்
கொடுத்தேன். புகாரைத் திரும்பப் பெறுவதாக எழுதிக் கொடுத்தனர். திரு.இராஜராஜன்
குளிர்பானம் வாங்கி வந்து கொடுத்தார். அனைவருக்கும் குளிர்பானம் அருந்தினோம். நடந்ததை
மறந்து கைக்குலுக்கிச் சென்றனர்.
அவர்கள் சென்ற பிறகு
மாவட்ட நூலக அலுவலர் தகவல் பலகையில் உள்ள புகார் முகவரியையும், அங்கு
மாட்டி வைத்திருந்த அஞ்சல் அட்டைகளையும் தம் கைப்பட கிழித்துப்போட்டார்.
“புகார் பற்றி ஏற்கெனவே
உங்களிடம் சொல்லியும் விசாரணைக்குத் தபால் எப்படி அனுப்பினீர்கள்?” என்று
மாவட்ட நூலக அலுவலர் திரு.சி.அசோகனிடம் கேட்டேன்.
“அஞ்சல்
அட்டையில் புகார் வந்தது. கிழித்துப் போட்டுவிட்டேன். ஒரு வாரம் கழித்து ரிஜிஸ்டர்
தபாலில் புகார் வந்தது. அதனால்தான் விசாரணைக்குத் தபால் போட்டேன்” என்றார்.
அஞ்சல் அட்டையில் வந்த
புகாரை மாவட்ட நூலக அலுவலர் கிழித்துப் போட்டுவிட்டதாகவும், பதிவு
அஞ்சலில் புகார் அனுப்புமாறும், புகார்தாரருக்கு நூலகர்
ஒருவரால் ஆலோசனை வழங்கப்பட்டது என்னும் தகவலைச் சில நாள்களுக்குப் பிறகு
விசாரித்து தெரிந்து கொண்டேன்.
புவனகிரியில் இருந்து நான்
பணிமாறுதல் பெற்று வரும்வரை அந்தப் புகார்தாரர்கள் என்னிடம் நல்ல நட்பாகத்தான்
இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் பணிமாறுதலில் வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் புகார்தாரர்
எழுதிய சிறுகதைத் தொகுப்பு ஒன்றை எனக்குத் தபாலில் அனுப்பி வைத்தார். இப்பொழுதும்
அவர் தொலைபேசியில் நட்பாகத்தான் பேசுகிறார்.
நூலகங்கள்
தரம் உயர்த்தக் கோரிக்கை:
இதனிடையே 2007
ஆம் ஆண்டு பொது நூலகத்துறை இயக்குநராக திரு.வே.இரமணி அவர்கள் பொறுப்பேற்றார். அவர்
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
திரு.எம்.ஜி.செல்வம்
தலைமையில் சங்கம் சார்பாகப் புதியதாகப் பொறுப்பேற்றிருந்த இயக்குநரைச் சந்தித்து
வாழ்த்துகள் தெரிவித்தோம். இயக்குநரும் சிறப்பாகப் பணிபுரியுமாறு எங்களைக்
கேட்டுக்கொண்டார். முதல் சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்பதால், முக்கியமான
சில கோரிக்கைகள் தொடர்பாக மட்டும் பேசிவிட்டு விடைபெற்றோம்.
இயக்குநர் தருமபுரி
மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், தருமபுரி
மாவட்டத்தில் இருந்து வந்திருப்பதாக இயக்குநரிடம் நண்பர் திரு.எம்.முனிராஜ் தன்னை
அறிமுகம் செய்து கொண்டார். எந்த நூலகத்தில் வேலை செய்கிறீர்கள் என்று இயக்குநர்
கேட்டார். ஜக்கசமுத்திரத்தில் பணிபுரிவதாகத் திரு.எம்.முனிராஜ் கூறினார்.
நான் கடலூர் மாவட்டம்
புவனகிரியில் வேலை செய்வதாகச் சொன்னேன்.
“ஏன்
அவ்வளவு தொலைவில் வேலை செய்கிறீர்கள்?” என்று
கேட்டார்.
ஊர்ப்புற நூலகர்களுக்கு
மூன்றாம் நிலை நூலகராகப் பதவி உயர்வு வழங்கியபோது தருமபுரி மாவட்டத்தில் மூன்றாம்
நிலை நூலகர் பணியிடம் காலியில்லாததால் கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டதாகச்
சொன்னேன்.
அப்பொழுது
திரு.எம்.முனிராஜ் குறுக்கிட்டு “சார், பள்ளிகள்
ஒவ்வோர் ஆண்டும் தரம் உயர்த்தப்படுகின்றன. ஆனால், நூலகங்கள்
அவ்வாறு தரம் உயர்த்தப்படுவதில்லை” என்றார்.
இயக்குநரிடம் அவர்
பேசுவது அதிகப்படியான வார்த்தைகள் என்று அவரது கையைப் பிடித்துப் பேச்சைக்
குறைக்கச் சொன்னேன்.
ஆனால், இயக்குநர்
“அப்படியா?” என்று
என்னிடம் ஆச்சரியமாகக் கேட்டார்.
“ஆமாம்
சார்,
தமிழகத்தில்
கடந்த 12
ஆண்டுகளாக ஒரு கிளை நூலகம்கூடத் தொடங்கப்படவில்லை.
கடைசியாகத் தொடங்கப்பட்ட கிளை நூலகம் தருமபுரி மாவட்டம் மோளையானூர் கிளைநூலகம்தான்” என்றேன். இந்த உரையாடல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது
அங்கிருந்த கண்காணிப்பாளர் திருமதி சுமதியிடம், “ஏ.டி.ஐ
வரச்சொல்லுங்க” என்றார் இயக்குநர்.
சில நிமிடங்களில் துணை
இயக்குநர் திரு.இராமலிங்கம் வந்தார்.
“பல
ஆண்டுகளாக நூலகங்கள் தரம் உயர்த்தப்படவில்லை என்று சொல்கிறார்களே?” என்று
துணை இயக்குநரிடம் இயக்குநர் கேட்டார்.
“ஆமாம், சார்” என்றார்
துணை இயக்குநர்.
“ஏன்?” என்றார்
இயக்குநர்.
“மத்திய
அரசு நிதி கொடுத்தால்தான் நூலகங்கள் தரம் உயர்த்த முடியும், சார்”, என்றார்
துணை இயக்குநர்.
துணை இயக்குநரையும்
கண்காணிப்பாளரையும் அனுப்பிவிட்டு, “எத்தனை
பேர் தருமபுரி மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டத்திற்குச் சென்று பணிபுரிகின்றனர்?” என்றார்.
“பத்து
பேர்”
என்றேன்.
“அமைச்சரிடம்
பேசுகிறேன்” என்றார்.
நன்றிகூறி விடைபெற்று
வந்தோம்.
நண்பர்
திரு.எம்.முனிராஜால் ஒரு நல்ல காரியம் நடக்கப் போகிறது என்பதை உணர்ந்தேன்.
ஒரு மாதம் கழித்து, இயக்குநர்
அவர்களின் சொந்த கிராமமான முக்கல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் கோயில்
திருவிழாவிற்காக இயக்குநர் வந்திருப்பதாக திரு.எம்.முனிராஜ் தகவல் கொடுத்தார்.
உடனடியாக நானும் நண்பர் திரு.எம்.முனிராஜ÷ம்
முக்கல்நாயக்கன்பட்டியில் உள்ள இயக்குநர் வீட்டிற்குச் சென்றோம்.
அப்போது இரண்டாம் நிலை
நூலகராக இருந்த, அதே கிராமத்தைச் சேர்ந்த
திரு.சி.இராஜேந்திரன் இயக்குநரிடம் பேசிக்கொண்டிருந்தார். (அவர் தற்பொழுது மாவட்ட
நூலக அலுவலராகப் பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றுள்ளார்.)
இயக்குநருக்கு வணக்கம்
தெரிவித்தோம். எங்களை இயக்குநர் அடையாளம் கண்டுகொண்டார். “நூலகங்கள்
தரம் உயர்த்துவது பற்றி அமைச்சரிடம் பேசியுள்ளேன், மீண்டும்
பேசுகிறேன்” என்றார். இயக்குநருக்கு நன்றி
கூறிவிட்டு அங்கேயே சற்றுநேரம் நின்றிருந்தோம்.
“வேறு
ஏதாவது தகவல் உண்டா?” என்றார் இயக்குநர்.
சேலம் மாவட்டத்தில்
மூன்றாம் நிலை நூலகர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், அப்பணியிடம்
நூலக நிதி என்பதால் அந்த இடத்திற்கு எனக்குப் பணிமாறுதல் வழங்க மறுக்கப்படுவதாகவும், அவ்விடத்திற்குப்
பணி மாறுதல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.
“நூலக
நிதியோ,
அரசு
நிதியோ,
பணியிடம்
காலியாக இருந்தால் பணிமாறுதல் வழங்கலாமே” என்ற
இயக்குநர், அந்த இடத்திற்குப் பணி மாறுதல்
வேண்டித் தபால் அனுப்பச் சொன்னார். அங்கிருந்த திரு.சி.இராஜேந்திரன் எனக்காக
இயக்குநரிடம் பரிந்து பேசினார்.
கடலூர்
மாவட்டத்திலிருந்து சேலம் மாவட்டத்திற்கு மாவட்ட மாறுதல் வேண்டி கடலூர் மாவட்ட
நூலக அலுவலர் மூலமாக இயக்குநருக்கு விண்ணப்பித்தேன்.
அடுத்து ஒரு மாதத்தில்
எனக்குக் கடலூர் மாவட்டத்தில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு மாறுதல் கிடைத்தது.
பணி மாறுதல் கிடைக்கும்
என்ற நம்பிக்கையில் புவனகிரி கிளை நூலகத்தில் பொறுப்பு ஒப்படைப்பதற்கான அனைத்து
ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்து வைத்திருந்தேன். பரங்கிப்பேட்டை கிளை
நூலகத்தில் மூன்றாம் நிலை நூலகராகப் பணிபுரிந்து வந்த திரு.பி. இரகுநந்தனன், புவனகிரி
கிளை நூலகத்திற்குப் பணிமாறுதல் கேட்டிருந்தார்.
புவனகிரி கிளை
நூலகத்திற்கு திரு.பி. இரகுநந்தனனுக்குப் பணிமாறுதல் வழங்கப்பட்டால், நான்
இல்லாமலேயே புத்தகம் சரி பார்ப்பை அவரே பார்த்துக் கொள்வதாகவும், உடனடியாக
என்னை விடுவித்து அனுப்புவதாகவும் கூறியிருந்தார். புவனகிரி கிளை நூலகத்திற்கு மாறுதல் கேட்டு வேறு யாரும்
விண்ணப்பிக்காததால் திரு.பி.இரகுநந்தனனுக்கு அவ்விடம் வழங்கப்பட்டால் பொறுப்பு
ஒப்படைப்பு எளிதாக இருக்கும் என்று மாவட்ட நூலக அலுவலர் திரு.சி.அசோகனிடம்
கூறினேன். அவரும் அவ்வாறே வழங்குவதாகக் கூறினார்.
மாவட்ட மாறுதல் ஆணை
இயக்குநர் அலுவலகத்திலிருந்து வந்திருப்பதாகவும் அதனைப் பெற்றுக் கொள்ளுமாறும்
மாவட்ட நூலக அலுவலகத்திலிருந்து எனக்குத் தகவல் சொல்லப்பட்டது.
கடலூர்
மாவட்டத்திலிருந்து விடுவித்து மாவட்ட நூலக அலுவலர் கடிதம் கொடுத்தார்.
பரங்கிப்பேட்டை கிளை நூலகத்தில் பணிபுரியும் திரு.பி.இரகுநந்தனுக்குப் புவனகிரி
கிளை நூலகத்திற்குப் பணி மாறுதல் வழங்கப்படும் என்ற எனது எதிர்பார்ப்பு
நடக்கவில்லை.
மாறாக, சிதம்பரம்
கிளை நூலகத்தில் பணிபுரிந்த திரு.இராஜ்குமார் என்பவருக்குப் புவனகிரி கிளை
நூலகத்திற்குப் பணிமாறுதல் வழங்கப்பட்டிருந்தது. இது எனக்கு அதிர்ச்சியாக
இருந்தது. எனக்கு எதிராக ஏதோ சூழ்ச்சி நடைபெறுகிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.
மாறுதல் ஆணையைப்
பெற்றுக்கொண்டு அடுத்த நாளே சேலம் சென்று பணியில் சேர்ந்தேன். புவனகிரி கிளை
நூலகப் பொறுப்புகளை ஒப்படைக்கச் சில நாட்கள் அனுமதி வழங்குமாறு சேலம் மாவட்ட நூலக
அலுவலர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டேன். அவரும் அனுமதி அளித்தார்.
ஒரே
நாளில் 32 ஆயிரம் புத்தகங்களையும்
சரிபார்த்து:
2007, டிசம்பர்
24,
இரவு
கடத்தூரிலிருந்து புறப்பட்டு அதிகாலை புவனகிரி சென்றடைந்தேன்.
புவனகிரி கிளை நூலகப்
பொறுப்பு ஏற்க உள்ள நூலகர் திரு.இராஜ்குமாரைத் தொடர்பு கொண்டு பொறுப்பு ஒப்படைக்க
வந்திருப்பதாகவும், இரண்டு மூன்று நாட்களில்
பொறுப்பு ஒப்படைத்துவிட்டுச் செல்ல இருப்பதாகவும் கூறினேன். நூலகத்திலிருந்து ஒரு
கிலோ மீட்டர் தொலைவில் தான் அவரது வீடு உள்ளது. ஆனால், அவர்
வர மறுத்து விட்டார். அன்று கிருஸ்துமஸ் விடுமுறை என்பதால் வர முடியாது என்றும், இன்னும்
தற்செயல் விடுப்பு நான்கைந்து நாட்கள் இருப்பதால் அதையெல்லாம் முடித்த பிறகு, ஜனவரியில்தான்
பொறுப்பு ஏற்க வரமுடியும் என்றும் கூறினார்.
அத்துடன், நாள்
ஒன்றுக்கு 1500 புத்தகங்கள் மட்டுமே நூல்
சரிபார்ப்பு செய்ய முடியும் என்றும், 32
ஆயிரம் புத்தகங்கள் சரிபார்க்க 20 நாட்களுக்கு மேல் ஆகும்
என்றும்,
அத்தனை
நாட்கள் நான் அங்கு தங்கி நூல்களை ஒப்படைத்துவிட்டுப் போக வேண்டும் என்றும்
கூறினார்.
அவருக்கு வேண்டிய நூலக
நண்பர்களிடம் இந்தத் தகவல் சொன்னேன். அவர்களும் திரு.இராஜ்மோகனிடம்
பேசிப்பார்த்தார்கள்.
திரு.இராஜ்மோகன் இதையே
சொல்வதாக நூலக நண்பர்கள் என்னிடம்
கூறினார்கள். இவர் தானாக இந்த முடிவு
எடுக்கவில்லை என்றும், எனக்குச் சிக்கலை உருவாக்க
வேண்டும் என்பதற்காக, வேறு யாரோ இவரை இயக்குவதாகவும்
நூலக நண்பர்கள் கூறினர்.
எனக்குப் பிரச்சனை
என்பதைத் தெரிந்துகொண்ட பல நூலக நண்பர்கள் என்னைப் பார்க்க புவனகிரி வந்தனர்.
அவர்கள் திரு.இராஜ்மோகனிடம் எவ்வளவோ பேசிப் பார்த்தனர். அவர் தன் நிலையில் இருந்து
இறங்கி வரவில்லை.
அன்று கிருஸ்துமஸ்
விடுமுறை,
காலை
முதல் மாலை வரை நூலகத்திலேயே உட்கார்ந்திருந்தேன். சில நூலக நண்பர்கள் என்னுடனேயே
இருந்தனர். எந்த முன்னேற்றமும் இல்லை.
எனக்குப் பிரச்சனையை
உருவாக்க வேண்டும் என்பதற்காகவே புவனகிரி கிளை நூலகத்திற்குப் பணி மாறுதல்
கேட்டிருந்த திரு.பி.இரகுநந்தனுக்குப் பதில், திரு.இராஜ்மோகனுக்குப்
பணிமாறுதல் வழங்கப்பட்டதன் பின்னணியில் யார் யாருக்குத் தொடர்பு உண்டு என்பதைப்
பற்றி நூலக நண்பர்கள் தங்களுக்குள் விவாதம் நடத்திக் கொண்டிருந்தனர்.
“நல்லது
செய்வதற்குப் பலர் இருந்தாலும், கெட்டது செய்வதற்குச்
சிலர் இருப்பது இயல்புதான். தருமபுரி மாவட்டத்திலிருந்து யாரோ ஒரு நூலகர் கடலூர்
மாவட்டத்திற்கு வந்து ஓராண்டு பணிபுரிந்தார், பிறகு
மாறுதலில் சென்று விட்டார் என்ற நிலை இருந்திருந்தால் இப்படி பிரச்சனை
வந்திருக்காது. வந்து பணிபுரிந்த ஓராண்டில் மாவட்டத்தில் நூலகர் அனைவரின் கவனத்தை
ஈர்க்கும் விதமாகச் செயல்பட்டதால், ஏற்கெனவே
ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருப்பவர்களுக்குப் பொறுக்காது” என்றார்
ஒருவர்.
“அடுத்து
என்ன செய்யலாம்?” என்று நண்பர்
திரு.பி.இரகுநந்தனனிடம் கேட்டேன்.
“கடைசி
முயற்சியாக மாவட்ட நூலக அலுவலரைச் சந்தித்துப் பேசுங்கள்” என்று
திரு.சி.அசோகன் வீட்டு முகவரியைக் கொடுத்தார்.
அன்று இரவு சரியானத்
தூக்கமில்லை. அடுத்த நாள் காலை மாவட்ட நூலக அலுவலரைச் சந்திக்க வடலூர் சென்றேன்.
அவரது வீட்டைத் தேடிப்பிடித்து வந்த விவரத்தைச் சொன்னேன்.
“நான்கு
நாட்கள் அனுமதியில் வந்திருக்கிறேன். திரு.இராஜ்மோகன் சார்ஜ் வாங்க 20
நாட்கள் ஆகும் என்கிறார். அத்தனை நாட்கள் இங்கு இருந்தால் நான் பணியில் சேர்ந்த
நூலகம் என்ன ஆகும்? அந்த மாவட்ட நூலக அலுவலருக்கு
என்ன பதில் சொல்வது? மாவட்ட நூலக அலுவலர் என்ற
முறையில் திரு.இராஜ்மோகனுக்கு நீங்கள் சொன்னால் அவர் கேட்பார்” என்றேன்.
“டிரான்ஸ்பர்
ஆர்டர் போடுவது என் வேலை. சார்ஜ் கொடுப்பது உன் வேலை. சார்ஜ் வாங்குவது அவன் வேலை.
அவ்வளவுதான். இதற்கு மேல் நான் பேச ஒன்றுமில்லை” என்று
முடித்து விட்டார். எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். அவர் எதையும் கேட்கவில்லை.
“அதெல்லாம்
எனக்குத் தெரியாது. நீயாச்சு, அவனாச்சு, என்னமோ
செய்யுங்கள். எனக்கு நேரமாச்சு, நான் ரெடியாகனும்” என்று
வீட்டினுள்ளே சென்று விட்டார்.
திரு.சி.அசோகன் நல்ல
பண்புடையவர், எல்லோரிடமும் அன்பாகப்
பழகுபவர். என்றைக்கும் அப்படி பேசியதில்லை. ஏன் அப்படி நடத்து கொண்டார் என்று
ஒன்றும் புரியாமல் தவித்தேன்.
ஒரு பக்கம் வருத்தம், மறு
பக்கம் எரிச்சல். என்னை ஏதோ பழி வாங்கிவிட்டதாகவும், அவர்கள்
எதையோ சாதித்துவிட்டதாகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதை உணர்ந்தேன்.
எந்தத் தோல்வியும்
நிரந்தரமில்லை என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் எல்லா முயற்சிகளும்
தோல்வியில் முடிந்துவிட்டது எனக்கு ஆத்திரத்தை வரவழைத்தது.
வாழ்க்கையில் எத்தனையோ
சோதனைகளைக் கடந்து வந்தவன். எத்தனையோ நூலகர்களுக்கு ஆலோசனைகள் சொன்னவன். எனக்கே
இப்படி ஒரு பிரச்சனையா? என் இடத்தில் வேறு யாராவது
இருந்திருந்தால் அவரது நிலைமை என்னவாயிருக்கும்? என்று
என் மனத்தில் ஏதேதோ ஓடிக்கொண்டிருந்தது.
மன உளைச்சலில் இரவு
சரியாகச் சாப்பிடவில்லை. காலை 9 மணிக்கு மேல்
ஆகிவிட்டது, சாப்பிடவும் விருப்பமில்லை.
உடல் சோர்வாக இருந்தது. அருகில் இருந்த
தேநீர் கடையில் தேநீர் அருந்திவிட்டுப் பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்று
கொண்டிருந்தேன்.
எல்லா முயற்சிகளும்
தோல்வியில் முடிந்துவிட்டன. 20
நாட்கள் தங்கி நூல்களை ஒப்டைத்துவிட்டுதான் போக வேண்டும் என்கின்ற கட்டாயம்
வந்துவிட்ட பிறகு, இதற்குமேல் எதற்காகப்
பொறுமையாக இருக்க வேண்டும் என்று கோபம் வந்தது. திரு.சி.அசோகன் அலுவலகம் போக
பேருந்து நிறுத்தம் வருவார் என்று அவருக்காகக் காத்திருந்தேன். அரை மணி நேரம்
கழித்துப் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தார்.
“இன்னும்
போகலயா?”
என்றார்.
“எங்கு
போறதுனு தெரியல சார்” என்றேன்.
“எங்கேயோ
ஒன்னு போகவேண்டியதுதானே” என்றார்.
“இந்தப்
பக்கம் போற பஸ் எங்க போகுது? அந்தப்பக்கம் போற பஸ்
எங்க போகுது? ” என்றேன்.
“இந்தப்
பக்கம் போற பஸ் சேலம் போகுது. அந்தப் பக்கம் போற பஸ் கடலூர் போகுது” என்றார்.
“நான் சேலம் போற பஸ்ல ஏறட்டுமா?” என்றேன்.
“அது
உன் விருப்பம்” என்றார்.
பேண்ட்
பாக்கட்டிலிருந்து சாவிக்கொத்தை எடுத்து அவரிடம் காண்பித்து, “இது
லைப்ரரி சாவி. நான் சேலம் போறேன். ராஜ்மோகன் சி.எல். எல்லாம் போட்டு முடிச்சிட்டு, அவனுக்கு
என்னிக்கு வசதியா இருக்குதோ அன்னிக்கு எனக்குப் போன் பண்ணச் சொல்லுங்க, நான்
வந்து சார்ஜ் கொடுத்துட்டுப் போறேன்” என்று
நூலக சாவிக் கொத்தை எடுத்துக் காட்டினேன்.
“நீ
பாட்டுக்கு லைப்ரரியைப் பூட்டிட்டுச் சாவிய எடுத்துனு போயிட்டா, பப்ளிக்குக்கு
நான் தானே பதில் சொல்லணும்” என்றார்.
“டீ.எல்.ஓ.
என்ற மரியாதைக்கு உங்க கிட்ட வந்து சொன்னேன். நீயாச்சு, அவனாச்சி, நான்
தலையிட முடியாதுனு நீங்கதானே சொன்னீங்க? நானா, அவனானு
பாத்துக்கிறேன்” என்றேன்.
“என்னப்ப
இப்படி பேசறே” என்றார்.
“சார், கடலூர்
பஸ் வந்துடுச்சு, நீங்க போங்க” என்றேன்.
“ஏற்கெனவே
புவனகிரி பிரச்சனைக்குரிய இடம். லைப்ரரி திறக்கலனா பெரிய பிரச்சனை ஆயிடும். எதுவா
இருந்தாலும் ஆபீஸ்ல போய் பேசிக்கலாம் வா” என்றார்.
“கடலூர்
வர எனக்கு விருப்பமில்லை” என்றேன்.
“எல்லாம்
அங்க போய் பேசிக்கலாம், வா, வா” என்று
என் கையைப் பிடித்துக் கடலூர் செல்லும் பேருந்தில் ஏற்றினார். அவரே இரண்டு டிக்கட் வாங்கினார்.
உடனே
திரு.இராஜ்மோகனுக்குப் போன்போட்டு “இன்னும்
ஒருமணி நேரத்தில் ஆபீசுக்கு வரணும்” என்றார்.
மாவட்ட நூலக அலுவலகம்
சென்றடைந்தோம். சம்பந்தப்பட்ட திரு.இராஜ்மோகன் வந்திருந்தார். நான் மாவட்ட நூலக
அலுவலர் அறைக்கு வெளியே உட்கார்ந்திருந்தேன். திரு.இராஜ்மோகனைத் தன் அறைக்கு
அழைத்துத் திரு.சி.அசோகன் கோபமாகப் பேசினார்.
“வெளி
மாவட்டத்திலிருந்து வந்தவங்களை நல்லபடியா சார்ஜ் வாங்கிணு அனுப்பக் கூடாதா? நம்
மாவட்டத்தைப் பற்றி மற்ற மாவட்டத்துக்காரங்க என்ன நினைப்பாங்க” என்று
திட்டியது என் காதில் விழுந்தது.
சிறிது நேரம் கழித்து
என்னை அழைத்த திரு.சி.அசோகன் நான்கைந்து நூலகர்களைத் துணைக்கு வைத்துக்கொண்டு
மூன்று நாட்களில் நூல் சரிபார்ப்புப் பணியை முடிக்கச் சொன்னார்.
நன்றி கூறிவிட்டு வந்தேன்.
அடுத்த நாள் நூலக நண்பர்கள் திரு.உத்ராபதி, திரு.சிவராமன், திரு.பி.இரகுநந்தனன், திரு.இராஜராஜன், திரு.முருகன், திரு.சிவக்குமார், இரு.ராஜராஜன், திரு.புருசோத்தமன்
உள்ளிட்ட நூலக நண்பர்கள் நூல் சரிபார்ப்புப் பணிக்கு உதவ வந்தார்கள்.
ஏற்கெனவே அனைத்து
நூல்களும் வரிசைப்படி வைத்திருந்தேன். 3
பிரிவாக 6
பேர் நூல் கணக்கெடுக்கும் பணியைக் காலை 9
மணிக்குத் தொடங்கினோம். மாலை 7
மணிக்குள் எல்லா நூல்களும் சரிபார்க்கப்பட்டன.
சுமார் 160
புத்தகங்கள் காணாமல் போனதாகக் கணக்கு வந்தது. உடனே படிவுத்தாள் வைத்து
நூல்சேர்க்கை எண்களை மட்டும் எழுதி இருவரும் ஆளுக்கு ஒரு நகல் வைத்துக் கொண்டோம்.
மாவட்ட நூலக அலுவலருக்குத் தகவல் சொன்னேன். ஒரே நாளில் 32
ஆயிரம் புத்தகங்களையும் சரிபார்த்து முடித்ததைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்.
அன்றிரவே வீட்டுக்குப் புறப்பட்டேன். வந்திருந்த அனைத்து நூலகர்களும் என்னை
வழியனுப்பி வைத்தனர். . (தொடரும்...)

Comments