ஒரு நூலகரின் டைரிக் குறிப்புகள்: 2. மாவட்ட நூலக அலுவலர்களின் முறைகேடுகள்.
இரண்டு
ஆண்டுகள் சிங்காரப்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பணிபுரிந்தேன். எங்கள்
ஊரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள மொரப்பூர் ஊர்ப்புற
நூலகத்தில் நூலகர் பணியிடம் காலியானது.
அந்த
இடத்திற்குப் பணிமாறுதல் கோரி மாவட்ட நூலக அலுவலரிடம் விண்ணப்பித்தேன். நண்பர்
திரு.தீ.சண்முகமும் அந்த இடத்திற்கு மாறுதல் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
எங்கள்
இருவரில் ஒருவருக்கு அந்த இடத்திற்குப் பணிமாறுதல் வழங்கியிருக்க வேண்டும்.
மாறாகப் புதியதாக நியமிக்கப்பட்ட நூலகர் ஒருவருக்கு அவ்விடத்தில் பணி வழங்கினார்
மாவட்ட நூலக அலுவலர் திரு.அருணாச்சலம்.
மாவட்ட நூலக
அலுவலர் அவர்களின் முறைகேட்டை அம்பலப்படுத்தி நண்பர் திரு.தீ.சண்முகம் இயக்குநர், பள்ளிக் கல்வித்துறைச் செயலர், முதலமைச்சர் ஆகியோருக்குப் புகார்கள் அனுப்பினார். நான் பொறுமையாக இருந்து
விட்டேன்.
பிறகு, தருமபுரியிலிருந்து 20 கி.மீ.தொலைவில் உள்ள
சாமிசெட்டிப்பட்டி நூலகத்திற்கு மாறுதல் வாங்கிச் சென்றேன். சுமார் இரண்டு
ஆண்டுகள் அங்குப் பணிபுரிந்தேன்.
2003 ஆம் ஆண்டுத் தமிழகத்தில் புதியதாக ஊர்ப்புற நூலகங்கள் தொடங்கத் தமிழக அரசு
அறிவிப்பு வெளியிட்டது. அப்பொழுது தருமபுரி மாவட்ட நூலக அலுவலராக இருந்த
திரு.சாமிக்கண்ணு அவர்கள் வாய்ப்புள்ள கிராமங்களில் ஊர்ப்புற நூலகங்கள் தொடங்க
ஏற்பாடு செய்யுமாறு நூலகர்களைக் கேட்டுக்கொண்டார். அப்படித் தொடங்கப்படும் புதிய
நூலகங்களுக்குத் தற்பொழுது பணிபுரியும் நூலகங்களில் இருந்து பணிமாறுதல் பெற்றுச்
செல்லலாம் என்றார். நூலக நண்பர்கள் பலரும் தங்கள் சொந்த ஊரிலோ அருகண்மையில் உள்ள
ஊரிலோ நூலகம் தொடங்கி, பணி மாறுதல்
வாங்கிச்செல்வது என்று முடிவுசெய்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.
நானும் எனது
சொந்த ஊரான கடத்தூரைச் சுற்றியுள்ள வாய்ப்புள்ள கிராமங்களில் ஊர்ப்புற நூலகங்கள்
தொடங்க முயற்சி செய்வது என்றும், அந்த நூலகங்களில் ஏதாவது
ஒன்றிற்குப் பணிமாறுதல் வாங்கி வருவது என்றும் முடிவு செய்து அதற்கான பணிகளைத்
தொடங்கினேன்.
ஒடசல்பட்டி, ஆர்.கோபிநாதம்பட்டி, சில்லாரஹள்ளி, நல்ல குட்லஹள்ளி ஆசிய ஊர்களுக்குச் சென்று உள்ளூர் பிரமுகர்கள் மூலம் ஊர்ப்புற
நூலகம் தொடங்க ஏற்பாடு செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
அடுத்த இரண்டு
நாட்களில் நூலகம் தொடங்கு வதற்கான புலவலர் தொகை, உறுப்பினர் காப்புத் தொகை, தளவாடங்கள், வாடகையில்லாக் கட்டடம் முதலான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர்.
இவ்வாறு
தொடங்கப்பட்ட நூலகங்கள் அனைத்தையும் ஒரே நாளில் மாவட்ட நூலக அலுவலர்
திரு.சாமிக்கண்ணுவை வரவழைத்துத் திறப்பு விழா நடத்துவது என்று முடிவுசெய்தேன்.
அப்பொழுது மாவட்ட நூலக அலுவலருக்கு வாகன வசதி இல்லை. நூலகங்களைப் பார்வையிட
வேண்டும் என்றாலும் பேருந்தில்தான் செல்ல வேண்டும்.
இப்பகுதியில்
உள்ள நூலகங்களை எல்லாம் ஒரே நாளில் தொடங்க இருப்பதாகவும், அதற்குப் பள்ளி வேன் ஒன்று அனுப்புமாறு ஒடசல்பட்டி இராமானுஜம் பள்ளி நிறுவனர்
நண்பர் திரு.பெருமாளிடம் கேட்டேன். அவரும் வாகனத்தை அனுப்பினார்.
20.11.2003 அன்று மாவட்ட நூலக அலுவலரை பள்ளி வேனில் அழைத்துச்சென்று, ஒடசல்பட்டி, ஆர்.கோபிநாதம்பட்டி, நல்லகுட்லஹள்ளி, ஒபிளிநாயக்கனஹள்ளி, சில்லாரஹள்ளி, நத்தமேடு, கேத்துரெட்டிப்பட்டி, தா.ஐயம்பட்டி ஆகிய
கிராமங்களில் தொடங்கப்பட்ட ஊர்ப்புற நூலகங்களைத் திறந்து வைத்தோம்.
புதியதாகத்
தொடங்கப்பட்ட ஒடசல்பட்டி நூலகத்திற்கு மாறுதல் வாங்கி வந்து பணியைத் தொடங்கினேன்.
நான் பணிபுரிந்துவந்த சாமிசெட்டிப்பட்டி ஊர்ப்புற நூலகம், எனக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. அத்துடன் ஆர்.கோபிநாதம்பட்டி ஊர்ப்புற
நூலகத்தின் பொறுப்பும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த இரண்டு
நூலகங்களுக்கும் புதியதாக நூலகர்கள் நியமிக்கப்படும் வரை தினக்கூலிப் பணியாளர்களை
நியமித்து நூலகத்தைப் பார்த்துக் கொள்ளுமாறு மாவட்ட நூலக அலுவலர் கேட்டுக்
கொண்டார். அதனை நானும் ஏற்றுக்கொண்டேன். என்னைப் போலவே புதியதாகத் தொடங்கப்பட்ட
ஊர்ப்புற நூலகங்களை, அருகண்மையில் உள்ள
நூலகங்களில் பணிபுரியும் நூலகர்கள், தினக்கூலிப் பணியாளர்களை நியமித்து நூலகங்களை இயக்கி வந்தனர்.
சாமிசெட்டிப்பட்டி, ஆர்.கோபிநாதம்பட்டி ஊர்ப்புற நூலகங்களுக்குத் தினக்கூலிப் பணியாளர்களை
நியமித்து நூலகங்களை இயக்கினேன்.
இது தொடர்பான
அறிக்கையைத் தயாரித்து மாவட்ட நூலக அலுவலரிடம் அளிப்பதற்காக மாவட்ட நூலக அலுவலகம்
சென்று நேரில் அறிக்கையைக் கொடுத்தேன். அப்போது மாவட்ட நூலக அலுவலர்
திரு.சாமிக்கண்ணு, “தினக்கூலிப் பணியாளர்களிடம் எவ்வளவு பணம் வாங்கினாய்?” என்று கேட்டார்.
“அப்படி நான் எதுவும் வாங்கவில்லையே” என்றேன்.
“அவர்களிடம் தலா ரூ.2000 வாங்கியதாகச்
சொன்னார்கள்” என்றார்.
“யார் சொன்னது? அப்படியெல்லாம்
வாங்கவேண்டிய அவசியம் எனக்கில்லை”
என்றேன்.
திரு.சாமிக்கண்ணு
சொன்ன வார்த்தை என்னை வெகுவாகப் பாதித்துவிட்டது. நூலக நண்பர்களிடம் நடந்ததைச்
சொல்லி வருத்தப்பட்டேன்.
புதியதாக
நியமிக்கும் தினக்கூலிப் பணியாளர்களிடம் ரூ.2000 வாங்கி, ரூ.1000 நூலகர் எடுத்துக்கொண்டு, ரூ.1000 மாவட்ட நூலக அலுவலருக்குக் கொடுக்குமாறு, நூலகர்களிடம் அவர் கேட்பதாக நூலக நண்பர்கள் சொன்னார்கள்.
“அவருக்கு என்ன வேண்டுமோ, அதை அவரே கேட்டு
வாங்கிக்கொள்ள வேண்டியதுதானே. இதில் என்னை எதற்குச் சம்பந்தப்படுத்த வேண்டும்” என்றேன்.
“நாங்களும் அப்படித்தான் செய்தோம். உனக்கு விருப்பமில்லை என்றால் ரூ.1000 வாங்கி அவருக்கு மட்டும் கொடுத்துவிடு. இல்லையென்றால், தினக்கூலிப் பணியாளர்களையே மாவட்ட நூலக அலுவலரிடம் அனுப்பி வை” என்றனர்.
மாவட்ட நூலக
அலுவலர் ரூ.1000 கேட்பதாகவும், விருப்பமிருந்தால் அலுவலகம் சென்று அவரிடம் கொடுத்துவிட்டு வருமாறும், தினக்கூலிப் பணியாளர்களிடம் கூறிவிட்டு, நான் ஒதுங்கிக்கொண்டேன். அவர்கள் சென்று தலா ரூ.1000 கொடுத்ததாகச் சொன்னார்கள். நான் அதைப் பொருட்படுத்தவில்லை.
மற்ற
நூலகர்கள் தினக்கூலிப் பணியாளர்களிடம் பணம் வசூல் செய்து மாவட்ட நூலக அலுவலரிடம்
கொடுக்க,
நான் மட்டும் பணம் வசூல் செய்து கொடுக்காமல், தினக்கூலிப் பணியாளர்களையே அவரிடம் அனுப்பி வைத்ததைத் திரு.சாமிக்கண்ணு கௌரவக்
குறைச்சலாக நினைப்பதாக நண்பர் திரு.தீ.சண்முகம் தெரிவித்தார். இதனால், திரு.சாமிக்கண்ணு என்மீது கோபமாக இருப்பதால், எதற்கும் எச்சரிக்கையாக இருக்குமாறும் நண்பர் திரு.தீ.சண்முகம் என்னிடம்
கூறினார். அவர் சொல்லி இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. ஒரு நாள் பகல் 12 மணிக்கு ஒடசல்பட்டி நூலகத்திற்கு மாவட்ட நூலக அலுவலர் திரு.சாமிக்கண்ணு
வந்தார். அன்று வியாழக்கிழமை, பதிவேடுகளை எடுத்து
வைத்தேன். எந்தப் பதிவேட்டையும் பார்க்கவில்லை.
ஆர்.கோபிநாதம்பட்டி
நூலகத்தில் 7 நபர்களிடம் பெரும்புரவலர் தொகையாக ஆளுக்கு ரூ.5000 நான் வாங்கியதாகவும், அத்தொகை மைய நூலகத்தில்
செலுத்தாமல் கையாடல் செய்துவிட்டதாகவும், அதற்கு என்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் திரு.சாமிக்கண்ணு
கூறினார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
“நான் அந்த நூலகத்தில் எந்தத் தொகையும் வசூல் செய்யவில்லையே” என்றேன்.
அதற்கு அவர்
ஆர்.கோபிநாதம்பட்டி நூலகத்திற்குச் சென்றதாகவும், பல்வகை இரசீது புத்தகத்தில் 7 இரசீதுகளும், அதற்கடியில் உள்ள நகல் இரசீது தாள்களும் கிழிக்கப் பட்டுள்ளதாகவும் கூறினார்.
அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது. எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தேன்.
“நாளை அந்த இரசீது புத்தகத்தை மாவட்ட நூலக அலுவலகத்திற்கு எடுத்து வா” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
உடனடியாக
ஒடசல்பட்டி நூலகத்தைப் பூட்டிவிட்டு ஆர்.கோபிநாதம்பட்டி நூலகம் சென்று பார்த்தேன்.
எனக்கு ஒரே அதிர்ச்சி. தினக்கூலிப் பணியாளரிடம் கேட்டேன்.
ஆண்டுச்
சந்தாத் தொதையாகச் சிலரிடம் ரூ.5 வசூல் செய்ததாகவும், அதற்கு இரசீது எழுதிக் கொடுத்ததாகவும் கூறினார். மேலும், சில இரசீதுகள் எழுதும்போது தவறாகிவிட்டதால் கிழித்துக் குப்பைத் தொட்டியில்
போட்டு விட்டதாகவும் கூறினார்.
குப்பைத்
தொட்டியைக் கிளறிப் பார்த்தேன். கசக்கிப் போடப்பட்ட இரண்டு இரசீதுகள் கிடைத்தன.
மற்ற இரசீதுகள் கிடைக்கவில்லை.
உடனே இரசீது
புத்தகத்தை எடுத்துக்கொண்டு, நூலகத்தைப் பூட்டி, சாவியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். அடுத்த நாள் வெள்ளிக்கிழமை, மாவட்ட நூலக அலுவலர் இரசீது புத்தகத்தை எடுத்துவரச் சொல்லியிருந்தார். எனக்கு
என்ன செய்வது என்று புரியவில்லை. அன்று இரவு முழுவதும் தூக்கமில்லை.
அடுத்த நாள்
தருமபுரி சென்றேன். நண்பர் திரு. அரங்கசாமியைச் சந்தித்தேன். நடந்த விவரத்தைச் சொன்னேன். அவர்
எனக்குச் சில ஆலோசனைகளை வழங்கினார்.
“இன்று வெள்ளிக்கிழமை, உனக்கு வார விடுமுறை.
இன்று நீ எதற்கு மாவட்ட நூலக அலுவலரைப் போய்ப் பார்க்க வேண்டும்? திங்கட்கிழமை போய்ப் பார்”
என்றார்.
“என்னதான் நல்ல பணியாளராக இருந்தாலும், பயந்தவர்களைக் கண்டால் மிரட்டுவதும், விவரமானவர்களைக் கண்டால் ஒதுங்கிச் செல்வதும் அதிகாரிகளின் வழக்கம். நீ ஏன்
பயந்தவனைப் போல இருக்கிறாய்? எல்லாம் தெரிந்தவனைப்போல்
காட்டிக்கொள். இல்லையென்றால் கடைசி வரை அதிகாரிகள் உன்னை மிரட்டிக்கொண்டே
இருப்பார்கள்” என்றார்.
நண்பர்
சொல்வதில் உள்ள எதார்த்தத்தைப் புரிந்து கொண்டேன். மாவட்ட நூலக அலுவலகம் செல்லாமல்
நேராக ஆர்.கோபிநாதம்பட்டி நூலகம் சென்று, உறுப்பினர் பதிவேட்டை எடுத்து 10 உறுப்பினர்களுக்கு ஆண்டுச் சாந்தாவுக்கான இரசீது போட்டேன்.
அங்கு
விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களில் இருவரை அழைத்து உறுப்பினர் படிவத்தில்
கையொப்பம் பெற்று அவர்கள் பெயரில் உறுப்பினர் கட்டணம் செலுத்தப்பட்டதாக இரசீது
போட்டேன். மொத்தம் பன்னிரண்டு இரசீதுகள் போட்டுக் கிழித்தேன்.
அதனைப் பணப்
பதிவேட்டிலும், சந்தாப் பதிவேட்டிலும் பதிவுசெய்து பதிவேடுகளையும்
இரசீது புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு நிம்மதியாக வீடு வந்து சேர்ந்தேன்.
திங்கட்கிழமை காலை நூலகத்திற்குச் சென்றுவிட்டு, பிற்பகல் மாவட்ட நூலக அலுவலகம் சென்று, மாவட்ட நூலக அலுவலர் திரு. சாமிக்கண்ணுவைச் சந்தித்தேன்.
“என்னைக்கு வரச்சொன்னேன், இன்னிக்கு வறே?” என்றார்.
“நேற்றும் வந்தேன், முந்தா நாளும் வந்தேன்.
அலுவலகம் பூட்டியே இருந்தது. அதனால், இன்னிக்கு வந்தேன்” என்றேன்.
என்னுடைய
பதில் அவருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஏனென்றால், இதுபோல எந்த நூலகரும் பேசியிருக்க மாட்டார்கள். நானும் அது நாள் வரை அப்படியெல்லாம்
பேசியது இல்லை. நான் அப்படிப் பேசியதற்குக் காரணம் அவரேதான். இரசீது புத்தகத்திலோ, அலுவலகப் பதிவேட்டிலோ ஏதாவது தவறு இருந்தால் அதனைச் சரிசெய்ய மாவட்ட நூலக
அலுவலர் தக்க ஆலேசனை வழங்க வேண்டும். அதைத் தவிர்த்து, அதையே பெரிய குற்றமாக உருவாக்கி, பயமுறுத்திப் பணம் பறிக்க முற்படுவது, நேர்மையாகப் பணிபுரியும் ஊழியர்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
அதற்குமேல்
அவர் எதுவும் பேசவில்லை. என் கையில் இருந்த இரசீது புத்தகத்தை வெடுக்கென்று
பிடுங்கிப் பிரித்துப் பார்த்தார். திருப்பித் திருப்பிப் பார்த்தார். அவரால்
ஒன்றும் பேச முடியவில்லை. சற்று நேர அமைதிக்குப் பிறகு அவரே பேசினார்:
“ஏழு இரசீதுகள் கிழிக்கப்பட்டு இருந்ததே? ” என்றார்.
“ஏழு இல்லை, பன்னிரண்டு இரசீதுகள் கிழிக்கப்பட்டு
இருக்கின்றன” என்றேன்.
“ஏழு இரசீதும் அடித்தாளும் கிழிக்கப்பட்டு இருந்ததைப் பார்த்தேனே” என்றார்.
“ஏழு இல்லை, பன்னிரண்டு இரசீதுகள். இந்தப் பன்னிரண்டு
இரசீதுகளும் ஒரு வாரத்திற்கு முன்பே போடப்பட்டவை. இவை எல்லாம் கடந்த வாரமே பணப்
பதிவேட்டில் பதிவு செய்து வைத்திருக்கிறேன்” என்று கூறிப் பணப்பதிவேட்டையும் திறந்து
காண்பித்தேன்.
இரசீது
புத்தகத்தையும் பணப் பதிவேட்டில் எழுதப் பட்டிருந்ததையும் சரி பார்த்தார்
திரு.சாமிக்கண்ணு.
“இல்லை, ஏழு இரசீதுகளும் அடித்தாள்களும்
கிழிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேனே” என்றார்.
“வேறு நூலகத்தில் பார்த்திருப்பீர்கள். இந்த இரசீது புத்தகத்தில் சாமிக்கண்ணு
என்று போடப்பட்டிருக்கும் கையெழுத்து உங்களுடையதா? என்னுடையதா?” என்றேன்.
“என்னுடையதுதான்” என்றார்.
“இதில் வைக்கப்பட்டிருக்கும் மாவட்ட நூலக அலுவலரின் சீலையும், அலுவலகத்தில் உள்ள சீலையும் கிளர்க்கைக் கூப்பிட்டு ஒப்பிட்டுப் பார்க்கக்
சொல்லட்டுமா?” என்றேன்.
“வேண்டாம்” என்றார்.
திரும்பத்
திரும்ப இரசீது புத்தகத்தை உற்றுப் பார்த்தார். “சரி,
இந்தா, எடுத்துட்டுப் போ” என்றார்.
“இனி கூடுதல் பொறுப்பு பார்க்க மாட்டேன், வேறு யாரையாவது வைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி, எனது சட்டைப் பையிலிருந்து நூலகச் சாவியை எடுத்து மாவட்ட நூலக அலுவலர் மேசை
மீது வைத்தேன்.
இதையும் அவர்
எதிர்பார்த்திருக்க மாட்டார். எனக்கு அவ்வளவு கோபம். பேசாமல் இருக்க முடியவில்லை.
திரு.தீ.சண்முகத்திற்குக்
கூடுதல் பொறுப்பு போடுவதாகவும், அவரிடம் பொறுப்பை
ஒப்படைக்குமாறும் கூறினார். சரி என்று வந்து விட்டேன்.
இந்தப் பிரச்சனையை
நான் சரியான நேரத்தில், சரியான முறையில்
கையாண்டதால் தப்பித்தேன். இல்லையென்றால் என் நிலைமை மோசமாகி இருக்கும். என்
இடத்தில் வேறு நூலகர் யாராவது இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று சொல்ல
முடியாது. தினக்கூலிப் பணியாளரிடம் மாவட்ட நூலக அலுவலர் திரு.சாமிக்கண்ணு பணம்
வாங்கிக் கொடுக்கச் சொன்னார். நான் மறுத்ததற்குப் பழிவாங்க இப்படி நடந்து கொண்டார்
என்பதைப் புரிந்துகொண்டேன். இவ்வளவு நடந்தும் நான் நூலக நண்பர்கள் ஒருவரிடமும்
இதைப்பற்றிச் சொல்லவில்லை.
தனி ஒரு
மனிதனாக இருந்தால் இதுபோன்று தொல்லைகள் வரும். இனியும் தனியாக இருக்கக்கூடாது, ஏதாவது ஒரு சங்கத்தில் இருக்க வேண்டும், அப்பொழுதுதான் பாதுகாப்பு கிடைக்கும் என்று முடிவு செய்தேன்.
அப்பொழுது
திரு.எம்.முனிராஜ், திரு.தீ.சண்முகம், திரு.சென்னகிருஷ்ணன், திரு.முருகேசன் ஆகியோர்
ஊர்ப்புற நூலகர்களுக்கு என்று தனியாகச் சங்கம் நடத்தி வந்தார்கள். அவர்கள்
சங்கத்தில் என்னையும் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டேன். அவர்களும் என்னைச்
சங்கத்தில் சேர்த்துக் கொண்டார்கள்.
சங்கத்தில்
மாவட்டப் பொறுப்பு ஒன்று எனக்கு வழங்குமாறு கேட்டேன். என்னால் சங்கப் பணி செய்ய
முடியாது என்று அவர்கள் பொறுப்பு கொடுக்க மறுத்துவிட்டனர். சங்கத்தில்
சேர்ந்தாகிவிட்டது, பொறுப்பு இல்லை என்றால்
என்ன?
ஏதாவது பிரச்சனை என்றால் அவர்களிடம் சொல்லி சரி செய்து கொள்ள வேண்டியதுதான்
என்று இருந்தேன். வெளி மாவட்டங்களில் சங்கக் கூட்டம் நடந்தால் நண்பர்கள் எனக்குத்
தகவல் கொடுப்பார்கள். நானும் அவர்களுடன் சென்று வருவேன். (தொடரும்...)

Comments