ஒரு நூலகரின் டைரிக் குறிப்புகள்: 3.மாநில அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது, EDUSAT நிகழ்ச்சியை நிறுத்தியது.
![]() |
| 2006 அக்டோபர் மாதம் 525 ஊர்ப்புற நூலகர்களுக்கு மூன்றாம் நிலை நூலகர்களாகப் பதவி உயர்வு வழங்கிய இயக்குநர் திரு.பழனிச்சாமி அவர்களுக்கு நல்லாடை அணிவித்து மரியாதை செலுத்தியபோது. உடன் திரு. எம்.ஜி.செல்வம். |
ஊர்ப்புற நூலகர்களுக்கு
மூன்றாம் நிலை நூலகர்களாகப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு
வழங்கிய பிறகும், புதிய நியமனங்களுக்கான தடை
உத்தரவு நடைமுறையில் இருந்ததால், பதவி உயர்வு
வழங்கப்படாமல் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2006 சட்ட மன்றத் தேர்தலுக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த வேளையில் புதிய
நியமனத் தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதைப் பயன்படுத்தி மூன்றாம் நிலை
நூலகராகப் பதவி உயர்வு பெற்றாக வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள ஊர்ப்புற
நூலகர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து முடிவு செய்து அதற்கான முயற்சிகள் மேற்கொண்டோம்.
இது தொடர்பாகத் தலைமைச்
செயலகம்,
இயக்குநர்
அலுவலகம் என்று மாதத்திற்கு இரண்டு, மூன்று
முறை வெளிமாவட்ட நிர்வாகிகள் சென்று வந்தோம்.
சென்னைக்கு வெளி மாவட்ட நிர்வாகிகள் அழைக்கும் போதெல்லாம் தருமபுரி
மாவட்டம் சார்பாக நான் சென்று வந்தேன். எவ்வளவோ முயற்சி செய்தும் பயனில்லை.
மாநில அளவில்
உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது:
மாநில அளவில் ஊர்ப்புற
நூலகர்களைத் திரட்டி சென்னையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் ஒரு உண்ணாவிரதப்
போராட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்தோம். அதற்குத் தக்க ஆலோசனைகளும்
ஒத்துழைப்பும் தேவை என்பதை உணர்ந்து யாரைச் சந்தித்து ஆதரவு கேட்பது என்று ஆலோசனை
செய்தோம்.
அப்போது திரு.
எம்.ஜி.செல்வம் நூலகத்துறையில் துடிப்பாகச் சங்கம் நடத்தி வருவதாகச் சில மாவட்ட
நூலக நண்பர்கள் கூறினர். அவரை
முன்னிறுத்தி உண்ணாவிரதம் நடத்துவது என்று முடிவு செய்தோம்.
திரு.எம்.ஜி.செல்வம்
அவர்களைச் சந்தித்துச் சென்னையில் மாநில அளவில் உண்ணாவிரதம் நடத்த ஆதரவு தருமாறு
கேட்டோம். அவரும் ஒப்புக்கொண்டு உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைப்பதாக உறுதியளித்தார்.
சென்னையில் நடைபெற்ற
உண்ணாவிரதப் போராட்டத்திற்குக் காவல்துறை அனுமதி வாங்குவது, நோட்டீஸ், போஸ்டர்
அடிப்பது,
அவற்றை
வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சில
மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சென்னை சேப்பாக்கத்தில்
கூடினோம். தருமபுரி மாவட்டத்திலிருந்து நான் மட்டும் சென்றிருந்தேன்.
உண்ணாவிரதத்திற்கு நாள் குறித்தோம். பிறகு சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் அனுமதி
கேட்பதற்கான மனுவை, திரு.எம்.ஜி.செல்வம்
தயாரித்தார். சென்னை காவல் துறைக் கண்காணிப்பாளரைச் சந்தித்து உண்ணாவிரதத்திற்கு
அனுமதி வாங்க, திரு.எம்.ஜி.செல்வம்
அவர்களுடன் செல்லுமாறு என்னை அனுப்பினர்.
நானும்
திரு.எம்.ஜி.செல்வம் அவர்களும் எழும்பூரில் இருந்த காவத்துறை கண்காணிப்பாளர்
அலுவலகத்திற்கு ஆட்டோவில் சென்றோம்.
நாங்கள் எழுதிக் கேட்ட
நாள் 7.2.2006
வெள்ளிக்கிழமை. அன்று நூலகங்களுக்கு வார விடுமுறை என்பதால் அந்த நாளைத் தேர்வு
செய்து அனுமதி கேட்டோம். நாங்கள் கேட்ட நாள், வேறு
ஒரு அமைப்பு உண்ணாவிரதம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. தேர்வு செய்த நாள்
கிடைக்காததால் மற்ற மாவட்ட நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசனை செய்து வேறு ஒரு நாளை
முடிவு செய்யலாம் என்று ஆட்டோவில் சேப்பாக்கத்திற்குப் புறப்பட்டோம்.
உடனே எனக்கு ஒரு ஞாபகம்
வந்தது. அடுத்த நாள் 8.2.2006
இரண்டாவது சனிக்கிழமை, அந்த நாளைக் கேட்கலாம் என்றேன்.
திரு.எம்.ஜி.செல்வம் ஆட்டோவை மாநகர காவல் கண்பாணிப்பாளர் அலுவலகத்திற்குத்
திருப்பச் சொன்னார். சனிக்கிழமை வாய்ப்பு உள்ளதா என்று கேட்டார். அன்று எந்த
நிகழ்ச்சியும் இல்லை என்றனர். உடனே மனுவில் உள்ள தேதியைத் திருத்தி அனுமதி
வாங்கினோம்.
உடனே நோட்டீஸ், போஸ்டர்
அச்சடித்தோம். வெளி மாவட்டங்களுக்கு நோட்டீஸ், போஸ்டர்
கொரியரில் அனுப்பினோம். டிஜிட்டல் பேனர் அடிக்க வேண்டும் என்று அதற்கான மாதிரியை
எழுதிய திரு. எம்.ஜி.செல்வம், அதை எங்கு அச்சிடுவது
என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
“ஆதம்
மார்க்கெட்டில் டிஜிட்டல் பிரிண்டிங் இருக்கிறது, அங்கேயே
கொடுக்கலாம்” என்றேன்.
“அங்கு
இருப்பது உனக்கு எப்படி தெரியும்?” என்றார்.
“புத்தக
அச்சு தொடர்பாகத் திருவல்லிக்கேணி, இராயப்பேட்டை
பகுதி எல்லாம் சுற்றி இருக்கிறேன்” என்றேன்.
ஆதம் மார்க்கட்டில் உள்ள
டிஜிட்டல் பேனர் அச்சிடும் இடத்திற்குச் சென்று அச்சிட்டு வாங்கி வந்தோம்.
உண்ணாவிரதத்திற்கு
இரண்டு நாட்கள் முன்னதாகச் சென்னை சென்று திரு.எம்.ஜி.செல்வம் அவர்களுடன்
உண்ணாவிரதத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தேன். மொத்தமுள்ள 525
ஊர்ப்புற நூலகர்களில் 400க்கும் மேற்பட்டோர்
உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர்.
உண்ணாவிரதப்
போராட்டத்திற்குப் பிறகு, ஊர்ப்புற நூலகர்களுக்கு
மூன்றாம் நிலை நூலகராகப் பதவி உயர்வு வழங்கும் கோப்பு மீது விரைந்து நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டன. 12.05.2016
அன்று ஊர்ப்புற நூலகர்களுக்கு மூன்றாம் நிலை நூலகராகப் பதவி உயர்வு வழங்குவதற்கான
அரசாணை வெளியானது.
கடலூர் மாவட்டத்திற்குப்
பணிமாறுதல்:
தருமபுரி மாவட்டத்தில்
மூன்றாம் நிலை நூலகர் காலிப் பணியிடம் குறைவாக இருந்ததால் பலரும் வெளி
மாவட்டங்களுக்கு அனுப்பட்டனர். அந்த வகையில் நான் கடலூர் மாவட்டத்திற்கு
அனுப்பப்பட்டேன். கடலூர் மாவட்டத்தில் புவனகிரி கிளை நூலகத்தில் மூன்றாம் நிலை
நூலகராகப் பணியில் சேர்ந்தேன்.
அப்பொழுது அந்த
மாவட்டத்தில் மாவட்ட நூலக அலுவலராகப் பணியில் இந்தவர் திரு.சி.அசோகன் அவர்கள்.
நேர்மையான, திறமையான மாவட்ட நூலக அலுவலர்
என்பதை விசாரித்துத் தெரிந்துகொண்டேன். நானும் எனது புவனகிரி கிளை நூலகத்தை
முதலில் தூய்மை செய்தேன்.
நூலகக் கட்டடம் பல ஆண்டுகளாக வெள்ளை
அடிக்கப்படாமல் சாம்பல் நிறத்தில் இருந்தது. நூலகக் கட்டடத்தைச் சொந்த செலவில்
வெள்ளை அடித்தேன். வேண்டாத பொருட்கள் போட்டுவைக்கும் அறை ஒன்று இருந்தது. அதைச்
சுத்தம்செய்து, பெயிண்ட் அடித்து, குறிப்புதவிப்
பகுதியாக மாற்றினேன். கடலோரப் பகுதி என்பதால் உப்புக்காற்று பட்டு இரும்பு
நூலடுக்குகளும் பீரோவும் துருபிடித்து இருந்தன.
எல்லா இரும்பு நூலடுக்குகளுக்கும், பீரோவுக்கும்
பெயிண்ட் அடித்தேன். எல்லா நூல்களுக்கும் லேபிள் ஒட்டி நூல்சேர்க்கை எண், பகுப்பு
எண் எழுதி எல்லாப் புத்தகங்களையும் பொருள் வாரியான அடுக்கி வைத்தேன்.
அதிகப் பயன்பாடு உள்ள
நூலகம் என்பதால் தினக்கூலிப் பணியாளராகத் திருமதி மேரி ஜாக்குலின் என்பவர் சில
மாதங்கள் பணிபுரிந்தார். பிறகு, இராஜ ராஜன் என்ற
எம்.எல்.ஐ.எஸ். படித்த அப்ரன்டிஸ் பணிபுரிந்தார். அவர்கள் உதவியுடன் இத்தனை
பணிகளையும் சில மாதங்களில் செய்து முடித்தேன்.
இதனால், பணியில்
சேர்ந்த சில மாதங்களிலேயே வாசகர்களிடையே எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. வாசகர்கள்
பலரும் பாராட்டினர். எனது பணியை நேரில்
பார்த்த மாவட்ட நூலக அலுவலர் திரு. சி.அசோகனும் பாராட்டினார். நூலகத்திற்குச்
செய்த செலவுத் தொகையைப் பொதுப் பணித்துறை அலுவலரின் ஒப்புதல் சான்று பெற்றுப்
பட்டியல் சமர்ப்பித்துப் பணம் பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட நூலக அலுவலர் கூறினார்.
செலவுக்கான பணம்
பெறுவதற்கான பட்டியல் தயாரிக்க, மாதிரி பட்டியல் தருமாறு
மாவட்ட நூலக அலுவலகத்தில் பணிபுரிந்த அமைச்சுப் பணியாளர்களிடம் கேட்டேன்.
இதுபோன்று இதுவரை யாரும் செய்யவில்லை, அதனால்
மாதிரிப் பட்டியல் இல்லை என்றனர்.
நானே ஒரு பட்டியல்
தயார்செய்து சிதம்பரத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் சென்று, கட்டடம்
தொடர்பான பொறியாளரைச் சந்தித்துப் பட்டியலில் மேலொப்பம் பெற்று, பட்டியல்
சமர்ப்பித்தேன். உரிய தொகைக்கான காசோலை
வழங்கினார் மாவட்ட நூலக அலுவலர்.
கடலூர் மாவட்ட
நூலகத்துறை நூலகர்கள் வித்தியாசமானவர்கள். நூலகப் பணியாளர்களுக்கான கூட்டம் கடலூர்
மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. அதுதான் நான் முதன்முதலாக கடலூர் மாவட்டத்தில்
கலந்துகொள்ளும் முதல் பணியாளர் கூட்டம். கூட்ட முடிவில் நூலகர்கள் சந்தேகங்களைக்
கேட்கலாம் என்றார் மாவட்ட நூலக அலுவலர் திரு. சி.அசோகன்.
பல கேள்விகளை ஒரே ஒரு
நூலகர் தொடர்ந்து கேட்டார். நானும் சில கேள்விகளைக் கேட்டேன். எல்லோரும் என்னைத்
திரும்பிப் பார்த்தனர். நான் மாவட்டத்திற்குப் புதியதாக வந்து பணியில் சேர்ந்ததால்
என்னை அவர்கள் பார்ப்பதாக நினைத்தேன். மற்றபடி வேறு யாரும் எந்தக் கேள்வியும்
கேட்கவில்லை.
அடுத்த மாதம் நடைபெற்ற
நூலகர்களுக்கான கூட்டமும் அப்படியே இருந்தது. எந்த நூலகரும் எந்தக் கேள்வியும்
மாவட்ட நூலகரிடம் கேட்கவில்லை. அந்த ஒரு நூலகர் மட்டுமே கேட்டார். நானும் சில
கேள்விகளைக் கேட்டேன். அவ்வளவுதான். வேறு எவரும் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.
என் அருகில் அமர்ந்திருந்த நூலகரிடன் விசாரித்தேன்:
“யாருக்கும்
எந்தப் பிரச்சனையும் இல்லையா? ஒருவர் மட்டுமே பல
கேள்விகளைக் கேட்கின்றாரே” என்றேன்.
“அவர்
தன்னை மட்டுமே முன்நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர். கூட்டம் தொடங்கும்
முன்பு,
மாவட்ட
நூலக அலுவலரிடம் என்னென்ன கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று நூலகர்கள் அந்தக்
குறிப்பிட்ட நூலகரிடம் சொல்லி விடுவார்கள். அவர் அத்தனை கேள்விகளையும் கேட்பார்.
அதனால்,
மற்ற
நூலகர்கள் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை” என்றனர்.
அவரது பதில் எனக்கு
வியப்பாக இருந்தது. மாவட்ட நூலக அலுவலர் திரு.சி.அசோகன், நூலகர்கள்
சிறப்பாகப் பணிபுரிய வேண்டும் என்று நினைப்பவர். சிறப்பாகப் பணிபுரியும்
நூலகர்களைப் பாராட்டுபவர். சரியாகப் பணிபுரியவில்லை என்றால் கண்டிப்பவர்.
EDUSAT நிகழ்ச்சியை நிறுத்தியது:
முனைவர் பழனிச்சாமி
அவர்கள் பொது நூலகத்துறை இயக்குநராக இருந்தபோது, மாநில
அளவில் நூலகர்களுக்கான கூட்டம் ஆன்லைன் மூலம் பள்ளிக் கல்வித் துறையின் EDUSAT மூலம்
மாதந்தோறும் ஏதாவதொரு ஒரு வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வந்தது. அந்தந்தப்
பகுதியில் உள்ள வட்டார வள மையங்களில் உள்ள கூட்ட அரங்கில் நூலகர்கள்
கலந்துகொண்டனர்.
நான் எல்லாக்
கூட்டங்களிலும் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தேன். EDUSAT நிகழ்ச்சிக்கு
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக, கூட்டத்திற்கான
தகவல் கொடுக்கப்படுவது வழக்கம். 2007
ஆம் ஆண்டு வழக்கத்திற்கு மாறாக, அன்று நடைபெறும் EDUSAT நிகழ்ச்சிக்கு
அன்று காலையில்தான் திடீரென்று நூலகர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
நான் வியாழன் இரவு
புவனகிரியிலிருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமை காலைதான் வீட்டுக்கு வந்தேன். நான்
வீட்டுக்கு வந்து இரண்டு மணிநேரம் கூட ஆகவில்லை. மாவட்ட நூலக அலுவலர் திரு.
சி.அசோகன் தொலை பேசியில் அழைத்தார்.
“இன்று
பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் EDUSAT நிகழ்ச்சிக்குக் கலந்துகொள்ள
வேண்டும்”
என்றார்.
“நான்
வீட்டிற்கு வந்து இரண்டு மணிநேரம்கூட ஆகவில்லை, இப்பொழுது
புறப்பட்டால்கூட பகல் ஒரு மணி ஆகிவிடும்” என்றேன்.
“EDUSAT நிகழ்ச்சி
2
மணிக்குத்தான். அனைவரும் கலந்துகொள்ள வேண்டும், அவ்வளவுதான்
வேறு எதுவும் பேச நேரமில்லை” என்று தொலைபேசியைத்
துண்டித்து விட்டார்.
அவசர அவசரமாகப்
புறப்பட்டுப் பிற்பகல் 1.30 மணிக்குள் கடலூர்
வட்டார வள மையம் சென்று கூட்ட அரங்கில் முதலாவதாக அமர்ந்தேன். எனக்குப்
பிறகுதான் ஒவ்வொரு நூலகராக வந்து
சேர்ந்தனர். கூட்டத்தில் பேசுவதற்கு மற்ற நூலகர்கள் தயங்கியபோது, நான்
பேசுவதாக மைக்கை வாங்கிக் கையில் வைத்திருந்தேன்.
துணை இயக்குநர்
திரு.இராமலிங்கம் அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.
புதியதாகப் பொறுப்பேற்றிருந்த இயக்குநர் திரு.வே.இரமணி நிகழ்ச்சிக்கு
வந்திருப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவர்
அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. இருந்தாலும் அவர் நிகழ்ச்சியை நேரலையில்
பார்ப்பார் என்று நினைத்தேன்.
எப்பொழுது கடலூர்
மாவட்டத்தை அழைப்பார்கள் என்று காத்திருந்தேன். கடலூர் மாவட்ட நூலகர் பேசலாம்
என்று துணை இயக்குநர் திரு.இராமலிங்கம் அழைத்தார். நான் பேசினேன்:
“தமிழகத்தில்
உள்ள அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு இரண்டு நாட்கள் வார விடுமுறை. ஆனால், நூலகர்களுக்கு
வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே வார விடுமுறை. அந்த ஒரு நாளிலும் மாவட்ட மைய
நூலகத்திலிருந்து நூலகங்களுக்குப் புதிய புத்தகம் எடுத்துச்செல்வது, நூலகப்
பணியாளர் கூட்டத்தில் கலந்துகொள்வது, தணிக்கையில்
கலந்து கொள்வது, EDUSAT நிகழ்ச்சியில் கலந்துகொள்வது என்று தொடர்ச்சியாக
நூலகர்கள் பணிபுரிவதால் நூலகர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எல்லா நூலகர்களும்
உள்ளூரிலேயே வேலை செய்வதில்லை. மாவட்டம்விட்டு மாவட்டம் வந்தும் வேலை
செய்கின்றனர். ஆகவே, தயவுசெய்து இந்த EDUSAT நிகழ்ச்சியை
வெள்ளிக்கிழமையைத் தவிர்த்து, வேறு ஒரு வேலைநாளில்
வைக்குமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்” என்றேன்.
என் கேள்விக்குப்
பதிலளித்த துணை இயக்குநர் “இந்த கோரிக்கையை இயக்குநரின்
கவனத்திற்கு எடுத்துச் செல்கிறேன்” என்றார்.
நான் கடலூர்
மாவட்டத்தைப் பற்றி ஏதாவது சிறப்பாகப் பேசுவேன் என்று எதிர்பார்த்திருந்த மாவட்ட
நூலக அலுவலருக்கு நான் பேசியது அதிர்ச்சியாக இருந்தது என்பதை அவர் என்னைப்
பார்த்து முறைத்ததிலிருந்து தெரிந்து கொண்டேன். கூட்டம் முடிந்ததும் முதல் ஆளாக
வெளியேறிப் பேருந்து பிடித்துப் புவனகிரி சென்றுவிட்டேன்.
கூட்டம் முடிந்து மாவட்ட
நூலக அலுவலரிடம் பேசிவிட்டுச் சில நூலக நண்பர்கள் என் அறைக்கு வந்தனர். என் மீது
மாவட்ட நூலக அலுவலர் கோபமாக இருப்பதாக அவர்கள் சொன்னார்கள்.
“நமக்குக்
கிடைப்பது வாரத்தில் ஒரு நாள் வார விடுமுறை. அதிலும் இப்படி தொல்லை கொடுத்தால்
எப்படி?
உங்களுக்குக்
கஷ்டமாக தெரியவில்லையா?” என்றேன்.
“எங்கள்
கஷ்டத்தை எங்களால் தைரியமாகச் சொல்ல முடியவில்லை. நீங்கள் தைரியமாகச் சொன்னது
எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி” என்று தங்கள்
மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினர்.
நடந்ததைத்
திரு.எம்.ஜி.செல்வம் அவர்களுக்குத் தொலைபேசியில் தெரிவித்தேன். நான் சரியாகத்தான்
பேசியதாகக் கூறினார். இயக்குநரைச் சந்திக்கும்போது வெள்ளிக்கிழமைகளில் EDUSAT நிகழ்ச்சி
நடத்துவதைத் தவிர்க்கக் கோரிக்கை வைக்குமாறு சொன்னேன்.
ஒரு வாரம் கழித்துத்
திரு.எம்.ஜி.செல்வம் தொலைபேசியில் என்னை அழைத்து EDUSAT நிகழ்ச்சி தொடர்பாக
இயக்குநரிடம் பேசியதாகக் கூறினார். இயக்குநர் EDUSAT நிகழ்ச்சியை நேரலையில்
பார்த்ததாகவும், அந்நிகழ்ச்சியை
நிறுத்திவிடுவது என்று முடிவு செய்திருப்பதாகவும் கூறியதாகத் திரு.எம்.ஜி.செல்வம்
கூறினார். அதற்குப் பிறகு EDUSAT நிகழ்ச்சி எதுவும் நடக்கவில்லை. . (தொடரும்...)

Comments