நகைச்சுவைத் தொடர்: 10. வாகனங்களில் வாசகங்கள்..
வாகனங்கள் வைத்திருப்பவர்களில் சிலர் தங்களுக்குப் பிடித்தமான வாசகங்களைத் தங்கள் வாகனங்களில் எழுதி வைக்கின்றனர்.
இரு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், சிற்றுந்து, பேருந்து, லாரி என்று எல்லா வாகனங்களிலும் வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.
வாகனங்களில் எழுதப்படும் வாசகங்கள் சிலவற்றில் எழுத்துப் பிழை இருப்பதையும் நாம் பார்க்கிறோம்.
இந்த வாசகங்களில் சில நகைப்பைத் தருகின்றன, சில முகம் சுளிக்க வைக்கின்றன. இங்கே ஒரு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். கிராமங்களில் இயக்கப்படும் சிற்றுந்து ஒன்று பழுதாகி இருந்ததால் புதியதாக வண்ணம் தீட்டி, எழுத வேண்டிய வாசகங்களை எழுதி இயக்கப்பட்டது. பொதுவாக, பேருந்துகளில் பின்படியில் ஏறும் வழி என்றும், முன் படியில் இறங்கும் வழி என்றும் எழுதுவது வழக்கம்.
முதல்நாள் பயணம். ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் அந்தச் சிற்றுந்தில் பயணம் செய்தார். அவர் இறங்கும் இடம் வந்தது. நடத்துநர் விசில் ஊதி அந்த ஆசிரியரை இறங்கச் சொன்னார். முன் படியில் இறங்கச் சென்ற ஆசிரியர் அந்தப் படியில் இறங்காமல், அவசர அவசரமாகத் திரும்பி வந்து பின் படியில் இறங்கினார்.
நடத்துநர் ஆசிரியரிடம், “ஏன் முன் படியில் இறங்காமல், திரும்பி வந்து பின்படியில் இறங்குறீங்க?” என்றார்.
“ஏம்பா, நான் நல்லா இருக்கிறது உனக்குப் பிடிக்கலயா? இறங்கும் வழி -னு எழுதறதுக்குப் பதிலா, இறக்கும் வழி -னு எழுதி வச்சா யாருப்பா இறங்குவாங்க?” என்றார்.
சிறிய எழுத்துப் பிழைதான். ‘ங்’ -க்குப் பதில் ‘க்’ போடப்பட்டது, அவ்வளவுதான். ஆனால், அச்சுறும் வகையில் பெரிய அளவில் பொருள் வேறுபடுகிறதைக் காணமுடிகிறது.
‘வாழ்க வளமுடன்’, ‘பிரசவத்திற்கு இலவசம்’, ‘தொடர்ந்து வா, தொட்டுவிடாதே’ – இது போன்ற வாசகங்கள் வாகனங்களில் எழுதப்பட்டிருப்பதை நம்மால் காண முடிகிறது. சிலர் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிப் பெயர் எழுதுகின்றனர். சிலர் தங்கள் குழந்தைகளின் பெயர்களை எழுதுகின்றனர். சிலர் தங்கள் குல தெய்வத்தின் பெயர் எழுதுகின்றனர்.
இவைகளையெல்லாம் கடந்து சிலர் தங்கள் வாகனங்களில் POLICE என்று பெரிய எழுத்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி வைத்திருப்பதைச் சர்வ சாதாரணமாக நம்மால் காண முடிகிறது. POLICE என்று காவல்துறைக்குச் சொந்தமான வாகனங்களில் எழுதப்படுவது வழக்கம். ஆனால், சிலர் தங்களுக்குச் சொந்தமான இருசக்கர வாகனங்களில் POLICE என்று பெரிய எழுத்துகளில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு பந்தாவாக வலம் வருவதைக் காண முடிகிறது. சொந்த வாகனங்களில்
POLICE என்றும் தமிழ்நாடு அரசு என்றும் எழுத இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் பணிபுரிந்த ஊரில் இளைஞர் ஒருவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் POLICE என்று பெரிய ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு பந்தாவாக வலம் வந்துகொண்டிருந்தார். அவர் செய்த அடாவடிக்கு அளவில்லை.
அவர் காவல் துறையில் பணிபுரிகிறாரா அல்லது அவரது குடும்பத்தில் யாராவது காவல் துறையில் பணிபுரிகிறார்களா என்று அவருக்கு வேண்டியவரிடம் விசாரித்தேன்.
அதற்கு அவர், “சார், அவன் எங்க போலீஸ்ல வேலை செய்யறான்? அவன் 4 ஆம் கிளாஸ்கூடப் படிக்கல. சும்மாதான் சுத்தினு இருக்கான். அவங்க குடும்பத்தல யாரும் போலீஸ்ல இல்ல. எல்லாம் கூலி வேலைக்குத்தான் போறாங்க” என்றார்.
“குடும்பத்தில் எல்லோரும் கூலி வேலை செய்யும்போது, அவன் எப்படி POLICE னு ஸ்டிக்கர் ஒட்டினு பந்தாவா சுத்தறான்” என்றேன்.
“சார், அவன் பாட்டி போலீஸ் ஸ்டேசன்ல கக்கூஸ் கழுவுது. அந்தக் கெத்துலதான் அவன் POLICE னு ஸ்டிக்கர் ஒட்டினு பந்தா பண்றான்” என்றார்.
இதைக் கேட்ட எனக்கு ஒரே அதிர்ச்சி.
“என்னங்க இப்படிச் சொல்றீங்க? என்னால நம்பவே முடியலயே” என்றேன்.
அதற்கு அவர் சொன்னார், “சார் எந்தப் போலீஸ் ஆபீசரும் இப்படிச் சொந்த வாகனத்தில POLICE னு ஸ்டிக்கர் ஒட்டறதில்லை. POLICE னு ஸ்டிக்கர் ஒட்டினு பந்தா பண்றவங்க எல்லாம், போலீஸ் ஸ்டேசன்ல கக்கூஸ் கழுவறவங்க, தண்ணீர் எடுத்து வைக்கறவங்க, பெருக்கறவங்க, எடுபிடி வேலை செய்யறவங்களோட வாரிசுங்கதான்” என்றார்.
“போலீஸ்காரங்க இதைக் கண்டுக்கறதில்லையா?” என்றேன்.
“போலீஸ்காரங்க கண்டுக்கனாங்கனா, அடுத்த நாள் போலீஸ் ஸ்டேஸனோட கக்கூஸ் நாறிடுமே?” என்று சிரித்தார்.
இதைவிட அதிர்ச்சியான வாசகம் ஒன்று. அண்மையில் முகநூலில் ஒரு படம் பார்த்தேன். அது பெண்கள் ஓட்டும் இரு சக்கர வாகனம். வாகனத்தின் பின்புறத்தில் “மாதா, பிதா, கணவன், தெய்வம்” என்று எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ந்து போனேன்.
தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட பெண்கள் சிலர் இருப்பதால்தான், கொஞ்சநஞ்சம் மழை பெய்கிறதோ?

Comments