ஒரு நூலகரின் டைரிக் குறிப்புகள்: 1. முன்னுரை:
“என் பணிகளைப் பற்றி எழுதி விளம்பரம் தேடிக்கொள்ள எனக்கு விருப்பம் இல்லை” என்று மறுப்பு தெரிவித்து வந்தேன். “உங்கள் பணிக்காலத்தில் நீங்கள் செய்த பணிகள், அத்துடன் உங்களது பணிக்காலத்தில் நீங்கள் சந்தித்த பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு கண்டீர்கள் என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்வது அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்” என்று நூலக நண்பர்கள் கூறினர்.
அவர்கள் சொல்வது சரி என்று உணர்ந்தேன். நான் நூலகத்துறையில் பணியில் சேர்ந்த நாள்முதல், மற்ற நூலகர்கள் சந்தித்திருக்க முடியாத பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வந்திருக்கிறேன்.
சங்கவாதியாகவும், தனி நபராகவும் நான் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம். அவற்றிற்கெல்லாம் எப்படித் தீர்வு கண்டேன் என்பதை மற்ற நூலகர்கள் தெரிந்துகொள்வது, அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வாய்ப்பாக இருக்கலாம்.
ஆதலால், நண்பர்களின் கோரிக்கையை ஏற்று நூலகத்துறையில் எனது அனுபவங்களை ஓர் அறிக்கையாகத் தொகுத்தேன். அந்த அறிக்கை ஒரு புத்தகம் அளவுக்கு வந்துவிட்டது.
அதை ஒரு நூலகரின் டைரிக் குறிப்புகள் என்ற தலைப்பில் புத்தகமாக அச்சிட்டு வெளியிடுவது என்று முடிவுசெய்து அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடையும் நிலையில், தேசிய அளவிலான நூலக மாநாட்டிற்கான அறிவிப்பு ஜனவரி 2018இல் வந்தது.
தமிழ்நாடு பொது நூலகத்துறை நூலகங்களின் சேவைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்கு அந்த மாநாடு எனக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கருதினேன். என் எதிர்பார்ப்பு நிறைவேறியது. நான் எழுதி அனுப்பிய பொது நூலகத்துறை நூலகங்களின் சேவைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் என்னும் ஆய்வுக் கட்டுரை தேர்வானது. மாநாட்டு வெளியீட்டில் அக்கட்டுரை வெளியானது. மாநாட்டில் நான் அக்கட்டுரை பற்றி பேச வாய்ப்பும் கிடைத்தது.
இதனிடையே, இந்நூலில் இன்னும் பல சம்பவங்களைச் சேர்க்க வேண்டும் என்று தோன்றியதால், ஒரு நூலகரின் டைரிக் குறிப்புகள் புத்தகம் வெளியிடுவதை தள்ளி வைப்பது என்று முடிவு செய்தேன்.
இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்திகள் பலவும் நூலக நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால், இதில் இடம்பெற்றுள்ள முக்கிய சம்பவங்களை தொடர் கட்டுரையாக எனது வலைப்பூவில் வெளியிடுவது என்று முடிவுசெய்து வெளியிடுகிறேன்.
இத் தொடர் கட்டுரை எனது வாழ்க்கை வரலாறு அன்று. நான் நூலகராகப் பொறுப்பேற்றபின் எனது பணிக்காலத்தில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளில் சிலவற்றை மட்டும் தொகுத்து வழங்கியுள்ளேன். இதில் எள்ளளவும் கற்பனை இல்லை. மற்றவர் மனம் வருந்தும் என்று பல சம்பவங்களைத் தவிர்த்துள்ளேன். தவிர்க்க முடியாததை உள்ளது உள்ளவாறு எழுதியிருக்கிறேன்.
பாராட்டப்பட வேண்டியவர்களைப் பாராட்டியுள்ளேன். விமர்சனம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தவர்களை விமர்சித்துள்ளேன். அதுவும் எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து நாகரிகமாக, எழுதியுள்ளேன். எனக்கு எதிரியாக யாரையும் நான் நினைக்கவில்லை. இந்நூலில் உள்ளவை அனைத்தும் எதார்த்தமானவை. எல்லாச் சம்பவங்களுக்கும் ஆதாரங்களும் உண்டு, சாட்சிகளும் உண்டு. ஆதாரம் இல்லாமல் நான் எதையும் எழுதவில்லை.
இத்தொடரில் உள்ளவை வெறும் வார்த்கைகள் அன்று. இவை எனது இதயத் துடிப்பு. இத் தொடர் கட்டுரைகளைப் படித்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.(மின்னஞ்சல்: saravanan.c.kadathur@gmail.com, வாட்ஸ்ஆப்: 8668192839)
அறிமுகம்: எங்களது குடும்பம் ஓர் ஆசிரியர் குடும்பம். எனது தாத்தா ஆசிரியராக இருந்தவர். எனது பாட்டி இரண்டு அரசு உதவிபெறும் பள்ளிகளை நடத்தி வந்தவர். எனது தந்தையும், சித்தப்பாக்களும் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தவர்கள். இவ்வாறு நான் ஆசிரியர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்.
நான் நூலகராக வேண்டும் என்பதுதான் எனது ஆசையாக இருந்தது. காரணம் நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து நூலகம் சென்று படிப்பது எனது வழக்கமாக இருந்தது. சனி, ஞாயிறு விடுமுறை என்றால் நூலகம் திறப்பதற்கு முன்பாகவே நூலகம் சென்றுவிடுவேன். நூலகம் மூடும்போதுதான் வெளியில் வருவேன். எந்தப் புத்தகம் எந்த அலமாரியில் இருக்கிறது என்று நூலகருக்குத் தெரியுமோ, தெரியாதோ எனக்கு எல்லாம் தெரியும். நூலகரிடம் வாசகர் எந்தப் புத்தகத்தையாவது கேட்டால் நூலகர் தேடுவதற்கு முன்பாக நான் அந்தப் புத்தகத்தை எடுத்து வந்து கொடுத்துவிடுவேன்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த நான் நூலகராக வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது. எனது விருப்பத்திற்குக் காரணம் எதிர்காலத்தில் நான் ஒரு எழுத்தாளராகவோ, பத்திரிகையாளராகவோ வரவேண்டும் என்பதுதான்.
இதலால், நான் 1986 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்ததும், நூலக அறிவியலில் சான்றிதழ் படிப்பு படித்தேன். 1988 ஆம் ஆண்டு மூன்றாம் நிலை நூலகர் பணிக்கான நேர்காணல் அழைப்பு வந்தது. நேர்காணலில் கலந்துகொண்டேன். நூலகராகும் கனவு வெகுவிரைவில் நனவாகிவிடும் என்று எண்ணி மகிழ்ந்தேன். ஆனால், எனது மகிழ்ச்சி சில நாட்களில் கானல் நீராகிப்போனது. எனக்குப் பணி நியமனம் கிடைக்கவில்லை.
அன்று என்னோடு நேர்காணலுக்கு வந்திருந்த திரு.பி.மாதையன் மாவட்ட நூலக அலுவலர் (பொ) வகித்து ஓய்வு பெற்றுவிட்டார். திருமதி எம்.தனலட்சுமி இன்று மாவட்ட நூலக அலுவலராக இருக்கிறார்.
மீண்டும் 1990, 1991, 1993, ஆம் ஆண்டுகளில் மூன்றாம் நிலை நூலகருக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. நேர்காணலில் கலந்து கொண்டவர்களில் நான்தான் பதிவு மூப்பில் முதல் இடத்தில் நான் இருந்தேன் என்பதை நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களின் பட்டியலைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். எப்படியும் எனக்கு மூன்றாம் நிலை நூலகர் பணி ஆணை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால், ஒவ்வொரு நேர்காணலிலும் நான் புறக்கணிக்கப்பட்டேன். எந்த முறைகேடும் இல்லாமல், நியாயமாக நியமனங்கள் நடைபெற்று இருந்திருந்தால், இன்று நானும் ஏதோ ஒரு மாவட்டத்தில் மாவட்ட நூலக அலுவலராக இருந்திருப்பேன். ஆனால், நான் இன்று மூன்றாம் நிலை நூலகராகவே இருக்கிறேன். அதற்காக நான் என்றைக்கும் வருத்தப்பட்டதில்லை.
நூலகத்துறைப் பணியாளர்களுக்கும், நூலகத் துறைக்கும், மாணவர்களுக்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும் நான் நூலகராக, பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலப் செயலாளராக இருந்து கடந்த பத்து ஆண்டுகளில் செய்த பணிகள் ஏராளம். அதை எல்லாம் எண்ணி மனநிறைவு அடைகின்றேன்.
அதற்குப் பிறகு மூன்றாம் நிலை நூலகர் பணியிடம் நிரப்பப்படுவது நிறுத்தப்பட்டது. ஊர்ப்புற நூலகங்கள் தொடங்கி ஊர்ப்புற நூலகர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஊர்ப்புற நூலகர் பணியிடத்துக்கான நேர்காணலுக்கு இரண்டு முறை அழைக்கப்பட்டேன்.
இரண்டு முறையும் என்னை விடப் பதிவு மூப்பில் இளையவர்களுக்கும், என்னை விடக் கல்வித் தகுதியில் குறைவானர்களுக்கும் ஊர்ப்புற நூலகர் பதவி கிடைத்தது. ஆனால், நான் மீண்டும், மீண்டும் ஒதுக்கப்பட்டேன்.
அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது, எந்த நியமனமும் முறையாக நடப்பதில்லை என்றும், அரசுப் பணியில் இருப்பவர்கள் எல்லாம் அறிவாளிகளும் இல்லை, வெளியில் இருப்பவர்கள் எல்லாம் முட்டாள்களும் இல்லை என்று.
நூலகராகும் கனவு தகர்ந்துவிடுமோ என்று எண்ணிய நான் அன்றைய பொது நூலகத்துறை இயக்குநர் முனைவர் சி.பழநிவேலு அவர்களைச் சந்தித்து முறையிட்டேன். அந்த முயற்சியும் பயனளிக்கவில்லை.
சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தேன். நாட்கள்தான் கடந்தன. தீர்ப்பு வந்தபாடில்லை. இதனிடையே மீண்டும் 1998 ஆண்டு ஊர்ப்புற நூலகர் பதவிக்கான நேர்காணலுக்குச் சிலருக்கு அழைப்புக் கடிதம் வந்தது. எனக்கு ஏனோ வரவில்லை. மாவட்ட நூலக அலுவலரைச் சந்தித்துக் கேட்டேன். வயது வரம்பு முடிந்து விட்டதால், பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை என்றார். என்ன செய்வது என்று திகைத்து நின்றேன். எதற்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவரைச் சந்தித்துக் கேட்கலாம் என்று அங்குச் சென்றேன்.
நண்பர் திரு.என்.பி.முத்துசாமியும் என்னைப்போல மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரைச் சந்திக்க வந்திருந்தார். இருவரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரைச் சந்தித்துக் கேட்டோம். வயது வரம்பு முடிந்து விட்டதால் பட்டியலில் சேர்க்கவில்லை என்றார்.
ஒரு பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விடக் கூடுதல் கல்வித்தகுதி உடைய இட ஒதுக்கீடு பிரிவினர்களுக்கு வயது வரம்பில் சலுகை உண்டு என்றேன். எந்த வாதத்தையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அலுவலகத்தில் இருந்து எங்களை வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்தார். அவரிடம் அதற்கும் மேல் பேசுவது பயனற்றது என்று வெளியில் வந்துவிட்டோம்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரைவிட உயர் அதிகாரி யார் என்று விசாரித்து அவரைப் பார்த்து முறை யிடுவது என்று நண்பர் திரு.என்.பி.முத்துசாமியும், நானும் முடிவு செய்தோம். அங்கிருந்த அலுவலக உதவியாளரிடம் விசாரித்தோம். சென்னை சேப்பாக்கத்தில் வேலைவாய்ப்புத் துறை ஆணையர் அலுவலகம் இருப்பதாகச் சொன்னார்.
1.4.1998 அன்று சென்னை சென்று, சேப்பாக்கத்தில் இருந்த வேலைவாய்ப்புத் துறை ஆணையர் அலுவலகம் அடைந்தோம். அங்குச் சென்று பார்த்த போதுதான் ஆணையர் ஓர் ஐ.ஏ.ஏஸ். அதிகாரி என்று தெரிந்தது. அங்கு இருந்த அலுவலர்களிடம் வந்த காரணத்தைக் கூறி ஆணையரிடம் பேசவேண்டும் என்றோம்.
மாலை 4 மணிக்கு ஆணையர் அழைப்பதாகச் சொன்னார் உதவியாளர். ஆணையரிடம் சுருக்கமாக எழுதி எடுத்துச் சென்ற விண்ணப்பத்தைக் கொடுத்து நடந்ததைச் சொன்னோம். உதவியாளரை அழைத்த ஆணையர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரைத் தொலைபேசியில் அழைக்கச் சொன்னார். ஆணையரே மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரிடம் விசாரித்தார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஏதோ காரணம் சொல்கிறார் என்று தெரிந்தது.
“உங்ககிட்ட இவங்க வேலையா கேக்கறாங்க? இல்ல, நீங்க வேலையா கொடுக்கப் போறீங்க? விடுபட்டுப் போச்சினு துணைப் பட்டியல் கொடுத்துட்டுப்போக வேண்டியதுதானே. இதுக்குப்போய் இவ்வளவு தூரம் அலைய வெச்சிட்டீங்களே. உங்களாட்டம் அதிகாரிங்க இருக்கிறதாலதான், தருமபுரி மாவட்டத்தில நக்சலைட்டுங்க உருவாகுறாங்க. நாளைக்கே இவங்க இரண்டு பேரையும் சேத்து துணைப்பட்டியல் அனுப்புங்க” என்று கோபமாகத் தொலைபேசியை வைத்துவிட்டு எங்களைப் போகச் சொன்னார்.
எதற்கும் ஒரு தபால் கொடுக்குமாறு வேண்டினோம். வெளியில் காத்திருக்கச் சொன்னார் ஆணையர். அரை மணிநேரம் கழித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பெயருக்கு ஒட்டப்பட்ட உறை ஒன்றைக் கொடுத்தார் நேர்முக உதவியாளர். நன்றி கூறிவிட்டு வந்தோம்.
ஒட்டப்பட்ட உறையைப் பிரித்து உள்ளே இருந்த தபாலைப் படித்தோம். அந்தத் தபால் என்றைக்காவது ஒரு நாள் தேவைப்படும் என்று ஜெராக்ஸ் போட்டுக்கொண்டு மீண்டும் ஒட்டிவிட்டோம். அன்று நகல் எடுத்து வைத்த தபால், பத்து ஆண்டுக்குப் பிறகு நூலகத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. அதைப்பற்றிப் பிறகு சொல்கிறேன்.
இப்படியெல்லாம் போராடி நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டும், எனக்கு ஊர்ப்புற நூலகர் பணி வழங்கப் படவில்லை. என்னைவிடப் பதிவு மூப்பில் நான்கைந்து ஆண்டுகள் இளையவர்களுக்கு எல்லாம் பணி வழங்கப்பட்டது. ஆனால், வழக்கம்போல் நான் புறக்கணிக்கப்பட்டேன். இது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தது.
நேராக மாவட்ட நூலக அலுவலகம் சென்றேன். திரு.த.வையாபுரி மாவட்ட நூலக அலுவலர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
“எதன் அடிப்படையில் பணிநியமனம் செய்தீர்கள்” என்று கேட்டேன்.
அவர் நியமனம் தொடர்பான பதிவேட்டை எடுத்துக் காண்பித்தார்.
“இது எப்படி சரியான நியமனம் ஆகும், அதிகாரி என்றால் நியாயமாக நடந்துகொள்ளக்கூடாதா?” என்று கேட்டேன்.
அவரால் அதற்குச் சரியாகப் பதில் சொல்ல முடியவில்லை. கோபத்தில் சத்தம் போட்டுப் பேசினேன். அதற்குள் அலுவலகத்தில் இருந்தவர்கள் அனைவரும்மாவட்ட நூலக அலுவலர் அறைக்குள் வந்துவிட்டனர். அப்பொழுது தலைமை எழுத்தராக இருந்த திரு.பெருமாள்சாமி என் கையைப் பிடித்து அழைத்துவந்து தன் மேசைக்கு முன்பு இருந்த நாற்காலியில் உட்காரவைத்து, ஏதேதோ சொல்லி என்னைச் சமாதானப்படுத்தினார்.
மாவட்ட நூலக அலுவலகத்தில் இருந்து இறங்கி வந்தேன். அங்கு நண்பர் திரு.சி.மாதையன் இருந்தார். நடந்ததைச் சொன்னேன். அவரும் என்னைப்போலப் பாதிக்கப்பட்டவர். பொது நூலகத்துறை இயக்குநரைச் சந்தித்து முறையிடலாம் என்றார் திரு.சி.மாதையன்.
சென்னை சென்று இயக்குநர் திரு. இரா.கண்ணன் அவர்களைச் சந்தித்து ஊர்ப்புற நூலகர் நியமனத்தில் நடத்த முறைகேட்டை எடுத்துச் சொல்லி முறையிட்டேன்.
அவரோ நீதிமன்றத்தில் டைரக்சன் ஆர்டர் வாங்கி வந்து கொடுத்தால் பணிநியமன ஆணை வழங்குவதாகக் கூறினார். இயக்குநரைச் சந்தித்த செய்தியையும், அவர் சொன்ன தகவலையும் எங்கள் வழக்கறிஞரைச் சந்தித்துக் கூறினோம்.
அடுத்த நாள் உயர் நீதிமன்றத்தில் டைரக்சன் ஆர்டர் வாங்கிக் கொடுத்தார் வழக்கறிஞர். டைரக்சன் ஆர்டரை இயக்குநரிடம் கொடுத்துவிட்டு வந்தோம்.
ஒருவாரம் கழித்து மாவட்ட நூலக அலுவலரிடமிருந்து பதிவு அஞ்சலில் தபால் ஒன்று வந்தது. நியமன ஆணையாக இருக்கும் என்று பிரித்துப் பார்த்தேன்.
“பணியிடம் காலியில்லை, அதனால் பணி வழங்க இயலாது” என்ற ஒரு வரியில் தபால் இருந்தது. இதனைச் சாதாரண தபாலில் அனுப்பியிருக்கலாம், என்னை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகவே திரு.தா.வையாபுரி பதிவு அஞ்சலில் அனுப்பினார் என்பதைப் புரிந்து கொண்டேன்.
எத்தனையோ தோல்விகளைச் சந்தித்து, சந்தித்துச் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொண்டதால் பொறுமையாக இருந்தேன்.
அதற்குப்பிறகு 1998 ஆம் ஆண்டு மீண்டும் ஊர்ப்புற நூலகர் பணிக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்தது.
“நீதி, நேர்மை, படிப்பு, அறிவு - இதற்கெல்லாம் வேலை கிடைக்காது. சிபாரிசு இருந்தால் மட்டுமே வேலை கிடைக்கும். வேலை வேண்டும் என்றால் உன்னுடைய கொள்கை கோட்பாட்டுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு அமைச்சரைச் சந்தித்துப் பேசு” என்று பலரும் என்னிடம் கூறினர்.
இடைப்பட்ட காலத்தில் மழலையர் தொடக்கப் பள்ளி நடத்தி வந்தேன். அத்துடன், மத்திய அரசின் ஸ்டாப் செலக்சன் கமிசன் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றிருந்தேன். பள்ளிப் பருவத்திலேயே தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்ச்சி பெற்றிருந்ததால் மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதியில் ஸ்டெனோ டைப்பிஸ்ட் பணி கிடைத்தது. நூலகராக வேண்டும் என்பதற்காக அப்பணியில் சேரவில்லை.
பிறகு, எல்.ஐ.சி.யில் இளநிலை வளர்ச்சி அலுவலர் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றிருந்தேன். அந்தப் பணியையும் நூலகராக வேண்டும் என்ற கனவுக்காக இழந்தேன்.
கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளாமல், கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாத ஒன்றுக்காகக் காத்துக் காத்துக் காலத்தைக் கடத்தியது தவறு என்று அப்பொழுதுதான் உணர்ந்தேன்.
இரண்டு நாள் தீவிர யோசனைக்குப்பின், உள்ளூர் ஆளும் கட்சிப் பிரமுகரைப்போய்ப் பார்த்தேன். உள்ளூர் பிரமுகர் என்னை அன்றைய மாவட்ட அமைச்சரிடம் அழைத்துச் சென்று தன்னுடைய ஆசிரியரின் மகன் என்று என்னை அறிமுகப்படுத்தினார்.
அன்றுவரை நான் கலந்துகொண்ட நேர்காணல்களின் அழைப்புக் கடிதங்களின் நகல்களை எல்லாம் இணைத்து மனுவாக அவரிடம் அளித்தேன். அமைச்சரும் ஆசிரியராக இருந்தவர் என்பதால், என் மனுமீது சற்றுக் கவனம் செலுத்துகிறார் என்பதை உணர்ந்தேன்.
“இத்தனை முறை நேர்காணலில் கலந்து கொண்டும் வேலை கிடைக்கவில்லையா? ஏற்கெனவே வந்திருக்கலாமே” என்றார்.
நான் எதுவும் பேசவில்லை. என்னுடைய மனுவை உதவியாளரிடம் கொடுத்துப் பார்க்கச் சொன்னார்.
ஒரு வழியாக நூலகர் பணி கிடைத்தாயிற்று. என்னோடு அன்று பணியில் சேர்ந்தவர்கள் நால்வர். மற்ற மூவருக்கும் அவரவர் சொந்த ஊருக்கு அருகில் இருந்த நூலகங்களுக்குப் பணியிடம் வழங்கப்பட்டது. ஆனால், எனக்கு மட்டும் 40 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சிங்காரப்பேட்டை நூலகத்தில் பணி வழங்கப்பட்டது. அது ஏன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும். (தொடரும்...)

Comments