புதுமை நூலகர் மன்றம் (Innovative Librarians Forum)
நூலக நண்பர்களுக்கு வணக்கம்,
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை
தமிழகத்தில் உள்ள மற்ற துறைகளைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது
என்பதைப் பத்திரிகைச் செய்திகள் வாயிலாக நாம் அறிகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில்
பள்ளிக் கல்வித் துறையில் பல அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாடத்
திட்டம் மாற்றம், கற்பித்தலில் தொழில் நுட்பங்களைப்
பயன்படுத்துவது, ஆசிரியர்களுக்குப் பயிற்சி, நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை என்று பள்ளிக்
கல்வித்துறை நல்ல முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. இதன்மூலம் பொதுமக்களுக்கு பள்ளி
கல்வித்துறை மீது மதிப்பும் மரியாதையும் கூடி உள்ளது.
பொது நூலகத் துறையும் பள்ளிக்
கல்வித் துறையின் கீழ் இயங்கி வருகிறது. பள்ளிக் கல்வித்துறைக்கு கொடுக்கும்
முக்கியத்துவத்தில் சிறிதளவேனும் நூலகத் துறைக்கு கொடுத்தால் நூலக சேவைகள்
மேம்படும், நூலகர்கள் கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படும்
என்று நூலக நண்பர்கள் தங்களுக்குள் பேசி வருகின்றனர்.
கடந்த வாரம் முன்னணி ஆங்கில
நாளிதழ் ஒன்றில் நூலக துறையின் இயக்குநர் பணியிடம் கடந்த ஆறு ஆண்டுகளாக கலியாக
இருப்பதால் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தியை
நீங்கள் படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
மற்ற மாநிலங்களைக் காட்டிலும்
தமிழ்நாட்டில் நூலகத் துறைக்கு நல்ல கட்டமைப்பு உள்ளது. இருந்தபோதிலும் அறிவுக்
களஞ்சியங்களாகத் திகழும் நூலகங்களில் வாசகர்களின் வருகையும் நூல்கள் பயன்பாடும் நாளுக்கு
நாள் குறைந்து வருகிறது. இதற்குக் காரணம் வாசகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப
நூலகங்களின் சேவைகள் இல்லை என்பதே ஆகும்.
இது ஒருபுறமிருக்க, நூலகர்கள் நிலையைப் பார்ப்போம். தமிழகத்தில் 4
ஆயிரத்து 503 நூலகங்கள் மட்டும் உள்ளன. இதில் மொத்தமாக ஆறாயிரத்துக்கும் உட்பட்ட
நூலக பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மூன்று சங்கங்கள் இருந்தன. அது
இப்போது ஏழு, எட்டு சங்கங்களாக உருவெடுத்துள்ளது. இன்னும் எத்தனைச் சங்கங்கள் வரும் என்று
இப்போது சொல்ல இயலாது.
ஒரே நூலகர் பல சங்கங்களில்
உறுப்பினராக இருக்கிறார். கேட்டாள், “யாராவது எதையாவது
செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்” என்கிறார்.
நூலகர்களின் கோரிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து விட்டன. எந்தக் கோரிக்கையும்
கவனிக்கப்படவில்லை.
கோரிக்கைகளோடு இயக்குநர் அலுவலகம்
செல்லும் சங்க நிர்வாகிகளிடம் இயக்குநர் அலுவலகத்தில் கேட்கப்படும் ஒரே கேள்வி “எந்த நூலகம் ஒழுங்காக இயங்குகிறது?” என்பதுதான். சங்க நிர்வாகிகள் ஏதோ சமாதானம்
சொல்லிவிட்டு கோரிக்கை மனுவைக் கொடுத்து வருகின்றனர். எல்லாச் சங்க நிர்வாகிகளின்
நிலைமை இதுதான்.
பொது நூலகத் துறை அலுவலர்
சங்கத்தின் மாநில பொது செயலாளராக 8 ஆண்டுகளாக இருந்தேன். நானும் இதுபோன்ற
வார்த்தைகளைப் பலமுறை கேட்டிருக்கிறேன்.
கடந்த மாதம் பள்ளிக் கல்வித்துறை
செயலாளர் அவர்களைச் சந்தித்து நூலகர் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு நூலகர்
சங்க நிர்வாகிகள் சிலர் கோரிக்கை வைத்தனர். உடனே செயலாளரிடம் இருந்து வந்த கேள்வி, “எந்த நூலகம் ஒழுங்காக இயங்குகிறது?” என்பது தான்.
இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர், துணை இயக்குநர், இணை இயக்குநர், இயக்குநர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் என்று நூலகத்
துறை நிர்வாகத்தில் உள்ள அனைவரின் நம்பிக்கையையும் நூலகர்கள் இழந்தது எப்படி? யாரால்?
நூலகங்களின் சேவைகள் போற்றும்படியாக
இல்லை என்கின்ற குற்றச்சாட்டை முழுமையாக ஏற்கவும் முடியாது, முழுமையாக நிராகரிக்கவும் முடியாது.
தமிழகத்தில் உள்ள பல நூலகங்கள் முன்பு எப்போதும் இல்லாத வகையில் சிறப்பாக இயங்கி
வருகின்றன. பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், சமூக ஊடகங்களும் இதற்குச் சான்று. நூலகத்
துறையில் திறமையான நூலகர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் திறமையை முழுமையாகப்
பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஒட்டுமொத்தமாக நூலகர்களைக் குறை
கூறுவதைத் தவிர்த்து வாசகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நூலக சேவையை
மேம்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
நல்ல கட்டமைப்பும், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில்
நன்கு பயிற்சி பெற்ற பணியாளர்களும் இருக்கும் நிறுவனங்களால் மட்டுமே சிறந்த சேவை
வழங்க முடியும். மாற்றம் என்பது பொதுவானது. அது எல்லாத் துறையிலும் நிகழக்கூடியது.
மக்கள் எவ்வளவு விரைவாக மாற்றத்தைப் புரிந்து கொள்கிறார்களோ, அவ்வளவு விரைவாக மாற்றத்தைக் கொண்டு வருவது
அவசியமாகும். அவ்வாறு நிறுவனங்கள் மாற்றத்தை விரைவாகக் கொண்டு வரவில்லை எனில், அவை தங்களைத் தக்க வைத்துக்கொள்ள முடியாது.
இந்தச் சித்தாந்தம் நூலகத் துறைக்கும் பொருந்தும்.
நூலகங்கள் எந்த ஒரு புதிய தொழில்
நுட்பத்தையும் அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக இருக்க வேண்டும். விரல் நுனியில்
கூகுள் என்ற நிலையில் இன்றைய நூலகங்கள் மாறி வரும் நிலையில், தமிழக அரசு பொது நூலகத் துறை நூலகங்களும்
வாசகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது
காலத்தின் கட்டாயமாகும். அதற்கேற்ப தமிழ்நாடு பொது நூலகத் துறை நூலகங்களில்
பணிபுரியும் நூலகர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
நூலகச் சேவையை மேம்படுத்துவதன்
மூலம் உயர் அலுவலர்களின் நம்பிக்கையைப் பெற முடியும். நூலகத் துறையில் பல்வேறு
மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் இது சாத்தியமாகும். நூலகத் துறையில் என்னென்ன
சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று நூலகர்கள் விவாதித்து முடிவு செய்வது
இன்றைய தேவையாகும். அந்த முடிவுகளை அறிக்கையாகத் தயாரித்து நடைமுறைப்படுத்துமாறு
அரசுக்குப் பரிந்துரை செய்யலாம். இந்தப் பணியை மேற்கொள்ளும் பொருட்டு புதுமை நூலகர்
மன்றம் (Innovative Librarians Forum) என்னும் அமைப்பை உருவாக்கி உள்ளோம். இதில் ஆர்வமுள்ள நூலகர்கள் இணைந்து
செயல்பட வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி.
நூலகர் சி.சரவணன்,
ஒருங்கிணைப்பாளர்,
புதுமை நூலகர் மன்றம்.
Comments