நகைச்சுவைத் தொடர்: 11 குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது?
குழந்தை பிறந்திருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் பேசப்படுவது, “குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது?” என்பதுதான். கூட்டுக் குடும்பமாக இருந்தால் பெரியவர்கள்தாம் பெயர் வைப்பர். தற்பொழுது பெரும்பாலும் தனிக் குடும்பம்தான். எப்படியிருந்தாலும், பெரும்பாலான வீடுகளில்,
குழந்தைக்கு பெயர் வைக்க பலரும் ஆலோசனை கூறுவதுண்டு. கடைசியாக, பெற்றோர்கள்தாம் தங்களுக்குப் பிடித்த பெயர் வைப்பர்.
முன்பெல்லாம் குழந்தைகளுக்கு தங்கள் குலதெய்வம் பெயர் அல்லது தங்களுக்குப் பிடித்த கடவுள் பெயர் வைத்தார்கள். சில குடும்பங்களில் குழந்தையின் தாத்தா பெயர் வைக்கும் வழக்கமும் இருந்தது.
சிலர் பிரபலமான தலைவர்கள் பெயர், சிலர் தங்களுக்குப் பிடித்த நடிகர், நடிகையின் பெயர் வைப்பதுண்டு. இவர்களது நம்பிக்கை தங்கள் குழந்தையும் அவர்களைப்போல் செல்வாக்கு உள்ளவர்களாக வரவேண்டும் என்பது.
குழந்தைக்குப் பெயர் வைப்பது பெற்றோர் விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது. ஆனால், குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்த பிறகு,
அந்த பெயர் எப்படி அழைக்கப்படும் என்பதையும் மனதில் நிறுத்தி பெயர் வைப்பது நல்லது.
50 ஆண்டுகளுக்கு முன்பு சரவணன் என்கின்ற பெயர் பிரபலமாக இருந்தது. ஒரு வகுப்பறையில் 50 மாணவர்கள் இருந்தால் அதில் எப்படியும் 2, 3 மாணவர்கள் சரவணன் என்னும் பெயரில் இருப்பார்கள். ஒரு தெருவை எடுத்துக் கொண்டால் குறைந்தது 3, 4 சிறுவர்கள் சரவணன் என்ற பெயரில் இருந்தார்கள்.
நான் சிறுவனாக இருந்தபோது, “டே சரவணா...” என்கின்ற குரலைக் கேட்டால் என்னால் திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியாது. அவர்கள் அழைத்தது என்னை இல்லை என்றாலும், என்னை அறியாமலேயே திரும்பிப் பார்ப்பேன். தன்னுடைய பெயரை யாராவது அழைத்தால் திரும்பிப் பார்ப்பது என்பது எல்லோருக்கும் அணிச்சைச் செயல்தான்.
சிலர் வேண்டுமென்றே என்னை வெறுப்பேற்ற அப்படி அழைக்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொண்டேன். “ஏன் என்று அவர்களிம் கேட்டதில்லை. அவர்களின் ஆசை அவ்வளவுதானே?” என்று இருந்தது உண்டு.
பெயர் சொல்லி யார் அழைத்தாலும் திரும்பிப் பார்ப்பதில்லை என்று ஒரு கட்டத்தில் முடிவு செய்து அதற்கான பயிற்சியும் எடுத்துக் கொண்டேன். இப்பொழுதுகூட யாராவது பெயர் சொல்லி அழைத்தால் கண்டுக் கொள்வதில்லை. “சார்” என்று அழைத்தால் மட்டுமே திரும்பிப் பார்க்கிறேன்.
எங்கள் தெருவில் சரவணன் என்கின்ற பெயரில் 4 பேர் உள்ளோம். தபால்காரருக்கு தபால் கொடுப்பதில் சிக்கல். சில நேரங்களில் தபால் மாறி வந்துவிடுவதுண்டு. அது தபால்காரரின் தவறன்று.
இப்பொழுதுகூட சிலர் தொலைபேசியில் “சரவணன், சாரா?” என்கிறார்கள். “ஆமாம்” என்றால் ஏதேதோ பேசுவார்கள். எனக்கு ஒன்றும் புரியாது. சற்று நேரம் கழித்து, அந்த அழைப்பு எனக்கில்லை என்று புரிந்துகொண்டு, என்னைப் பற்றி அவருக்கு விளக்கம் அளிப்பேன்.
பிறகு,
“சாரி, சார். அந்த சரவணன் சாருக்குப் போன் போட்டேன், அது உங்களுக்கு வந்துவிட்டது” என்பார்கள். இதன் மூலம் சரவணன் என்கின்ற பெயரில் உள்ளவர்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் உள்ளன என்று ஓரளவு தெரிந்து கொள்ள முடிகிறது.
அண்மையில் ஒரு நாள் அலுவலகம் முடித்து வீட்டுக்கு வந்தேன். எங்களது மகன் சொன்னான், “சார் ஒருத்தர் உங்களைத் தேடிக்கொண்டு வந்தார். அவரிடம் நீங்கள் 5000 ரூபாய் வாங்கி 4 மாசம் ஆச்சாம். அவர் போன் போட்டால் நீங்கள் எடுக்கலயாம். வந்ததும் இந்த நெம்பருக்கு போன் போடச் சொன்னார்” என்றான்.
“எத்தனை பேர்கிட்ட கடன் வாங்கினு இருக்கிங்க?” என்று மனைவி ஒரு பக்கம் முறைத்தார்.
“ஏதோ அவசரத்துக்குப் பணம் வாங்கி, கொடுக்க மறந்துட்டு இருப்பேனா?” என்று எனக்கு ஒரே அதிர்ச்சி.
அந்தத் தொலைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு கேட்டேன்.
“சாரி,
சார். எலிமின்டரி ஸ்கூல்ல வாத்தியார் சரவணன் சாரைத்தான் பார்க்க வந்தேன். சரவணன் சார் வீடு எதுன்னு? அங்கு இருந்த பெண்ணிடம் கேட்டேன். உங்கள் வீட்டைக் காண்பித்தார். உங்கப் பையனிடம் “சரவணன் சார் வீடா?” என்றேன். “ஆமாம்”. என்றான். ஒரே தெருவில் வரிசையா 3 சரவணன் சார் இருப்பதால் கன்பியூஸ் ஆயுடுச்சு. சாரி, சார். மன்னிக்கனும். உங்களுக்குச் சிரமத்தைக் கொடுத்துட்டேன்” என்றார்.
திருமண அழைப்பிதழ் கொடுக்க வருபவர்களும் இப்படி வீடு மாறி வந்துவிடுவது உண்டு. இப்படி பல சம்பவங்கள் நடப்பதுண்டு.
இப்பொழுதெல்லாம் சரவணன் என்கின்ற பெயர் குழந்தைகளுக்கு வைப்பதாகத் தெரியவில்லை. குழந்தைகளுக்கு கடவுள் பெயர் வைப்பதுகூட குறைந்துவிட்டது. மாறாக, பிற மொழி சொற்கள் பயன்படுத்தி பெயர் வைக்கின்றனர்.
பொருள் இல்லாத, ஏதோ சில எழுத்துகள் கொண்ட பெயருடைய குழந்தை ஒன்றின் பெற்றோரிடம் “இந்த பெயரின் பொருள் என்ன?” என்று கேட்டேன்.
“ஜோதிடர் இந்த எழுத்தில் தொடங்கும் பெயர் வைக்கச் சொன்னார், இந்த பெயரை வைத்தோம். ஆனால், இந்த பெயருக்கு பொருள் என்ன என்று எங்களுக்குத் தெரியாது. பெயருக்கும் பொருள் இருக்க வேண்டுமா?” என்றார்.
“ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் உண்டு. பொருள் இல்லாததை வார்த்தை எதையும் நாம் ஏற்றுக்கொள்வதில்லை. நாமும் பொருள் அறிந்து பெயர் வைப்பதுதானே நல்லது?” என்றேன்.
“நீங்க சொல்லறது சரிதான்” என்றார்.
“நித்திய கல்யாணி - இந்த பெயர் எப்படி இருக்குது?” என்றேன்.
“நல்ல பெயர்தான். நல்லாதான் இருக்குது” என்றார்.
“நித்திய கல்யாண ராமன் என்றால் தினம்தினம் திருமணம் செய்பவர் என்று பொருள். நித்திய கல்யாணி என்றால்.....?” என்றேன்.
“ஐயையோ,
இது தப்பான பேராச்சே” என்றார்.
“இதுக்குதான் சொல்கிறேன். பெயருக்குப் பொருள் இல்லாமல்கூட இருக்கலாம், ஆனா,
தவறான பொருள் இருந்துவிடக்கூடாது. இல்லையா?” என்றேன்.
“ஆமாம்,
ஆமாம்”, என்றார்.
நான் பணிபுரியும் நூலகத்திற்கு பலரும் வந்து, “குழந்தைகளுக்குப் பெயர் வைக்க வேண்டும்” என்று புத்தகம் கேட்பார்கள். அவர்களுக்கு நல்ல தமிழில் பெயர் வைக்கும் வகையில் புத்தகம் கொடுத்து, உரிய ஆலோசனைகளும் வழங்குவதுண்டு.
குழந்தைகளுக்கான தனித்தமிழ்ப் பெயர்களைத் தொகுத்து நூலக வார விழா மலரில் (நவம்பர் 2017) வெளியிட்டுள்ளோம். குழந்தைகளுக்குப் பெயர் வைக்க வேண்டும் என்று வருபவர்களுக்கு வாரவிழா மலர் ஒன்றை இலவசமாக வழங்கி வருகிறோம்.
குழந்தைகளுக்கு பொருள் பொருந்த தமிழ்ப் பெயர்கள் வைப்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், பெரியவர்கள் தங்கள் பெயர்களை மாற்றிக் கொள்வதில் பல இன்னல்கள் உள்ளன. அவர்களது பல்வேறு சான்றிதழ்களிலும் ஆவணங்களிலும் பெயர் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. அதற்குத் தீர்வாக அவர்கள் புனைப் பெயர் வைத்துக்கொள்ளலாம்.
தங்கள் பெயர்களை தனித்தமிழில் வைத்துக்கொள்ள விரும்புபவர்களுக்கு புனைப் பெயர் இயக்கம் என்னும் இயக்கம் நடத்தி வருகிறோம். அவர்கள் தங்களுக்குப் பிடித்த தமிழ்ப் பெயரை புனைப்பெயராக வைத்துக்கொள்ளலாம். பலரும் எங்களிடம் வந்து புனைப்பெயர் வைத்துக் கொண்டுள்ளனர். சொல்லாக்கப் புலவர் நெடுமிடல் இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.
சரி. நல்ல தமிழில் பெயர் வைப்பது நல்லது. நல்ல தமிழ்ப் பெயரை வைத்து அழைப்பதிலும் சில சிக்கல் உண்டு. என்னுடைய அனுபவம் ஒன்றைக் கூறுகிறேன்.
எங்களது குடும்ப நண்பர் பெயர் அறிவுடைநம்பி. அவரை அறிவு என்று சுருக்கமாக அழைப்பேன். ஒரு நாள் முக்கிய வேலையாக அவரிடம் பேச வேண்டும் என்று அவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தேன். அவர் எடுக்கவில்லை. மாறாக, அவரது தாயார் பேசினார்.
“அறிவு இருக்கா?” என்றேன்.
“உங்களுக்கு இல்லையா?” என்றார் கோபமாக.
அவர் வீட்டில் ஏதோ பிரச்சனை. அவருக்கும் அவரது தாராருக்கும் ஏதோ வாக்குவாதம் நடந்திருக்கிறது. அந்த நேரத்தில் நான் தொலைபேசியில் அழைத்தது என் தவறு என்று புரிந்துகொண்டேன்.
அடுத்த நாள் அவர் தந்தையிடம் கேட்டேன்: “உங்கள் மகனை எப்படி அழைக்கிறீர்கள்?” என்று.
“நம்பி” என்று அழைப்பதாகச் சொன்னார். “நம்பி” என்று நானும் அழைத்திருந்தால் திட்டு வாங்கி இருக்க மாட்டேன்.
நன்றி.
(5.10.2018)
Comments