நகைச்சுவைத் தொடர்: 12. நல்ல பெயர் வைக்க வேண்டுமா?


            கப்பல் ஓட்டிய தமிழன் என்று அழைக்கப்படுபவர் யார்?” இது அண்மையில் நான் ஒரு பள்ளிக்குச் சென்று மாணவர்களிடம் கேட்ட கேள்வி. ..சிதம்பரனார் என்று மாணவர்கள் பலரும் பதில் அளித்தனர்.
    அன்று மாலையே நூலகம் சென்று பெரியவர்கள் சிலரைச் சந்தித்து இதே கேள்வி கேட்டேன். அவர்களிடம் இருந்து வந்த பதில் ..சிதம்பரம் பிள்ளை என்பது. கேள்வி ஒன்றுதான். ஆனால், பதில் இரண்டாக வந்தது. இதில் சரியான விடை எது?
    இதேக் கேள்வி நேர்முகத்தேர்வு ஒன்றில் கேட்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நேர்முகத் தேர்வு நடத்தினால் இரண்டு பதிலில் எதைச் சொன்னாலும் மதிப்பெண் கொடுத்துவிடுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
    இதேக் கேள்வி தேசிய அளவிலான போட்டுத்தேர்வு நேர்காணல் ஒன்றில் ஆங்கிலத்தில் கேட்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். நேர்முகத்தேர்வு நடத்துபவர் வட மாநில அலுவலராக இருந்தால் சிதம்பரம் பிள்ளை என்று பதில் சொல்பவருக்கு மதிப்பெண் போடுவார். சிதம்பரனார் என்று பதில் சொன்ன தமிழக மாணவருக்கு அரை மதிப்பெண்கூட போட மாட்டார். மாறாக, தமிழ்நாட்டு மாணவனுக்கு தமிழ்நாட்டுத் தலைவர் பெயரைக்கூட முழுமையாகச் சொல்லத் தெரியவில்லையே என்று வருத்தப்படுவார்.
     நீட் தேர்வில் நடைபெற்ற மொழிபெயர்ப்புக் குளறுபடி பற்றி நாம் அனைவரும் அறிவோம். இந்தப் பிரச்சனை உச்ச நீதிமன்றம் வரை சென்றது வினாத்தாள் தயாரித்த அலுவலர்களின் மொழிபெயர்ப்புத் தவறுகளுக்கு மாணவர்களைத் தண்டிக்கக்கூடாது, மாணவர்களுக்கு மதிப்பெண் கொடுங்கள்  என்றார் தமிழக நீதிபதி. அப்படி எல்லாம் கருணை மதிப்பெண் வழங்க முடியாது என்றனர் வடமாநில நீதிபதிகள்.
   இதெல்லாம் கற்பனையான ஒப்பீடு என்று இக்கட்டுரையைப் படிக்கும் சிலர் நினைக்கலாம். ஆனால், இப்படியெல்லாம் நடக்காது என்பதற்கு யாராலும் உத்தரவாதம் கொடுக்க முடியாது. கால் மதிப்பெண்ணில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போன மாணவனுக்குத்தான் தெரியும், அந்தக் கால் மதிப்பெண்ணின் அருமை என்னவென்று. சிதம்பரம் பிள்ளை என்று சொல்வதற்குப் பதில் சிதம்பரனார் என்று சொல்லி பணி வாய்ப்பை இழந்தவனுக்குத்தான் தெரியும், இப்படி வரலாற்றைத் திருத்துவதால் ஏற்படுகின்ற பாதிப்பு என்னவென்று.
    தெருக்களின் பெயர்களில் உள்ள தலைவர்களின் பெயருக்குப் பின்னால் உள்ள சாதி அடையாளச் சொற்களை நீக்கவேண்டும் என்று எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இது தொடர்பான அரசாணை 3.10.1978 இல் பிறப்பிக்கப்பட்டது. 
    அந்த அரசாணையை நடைமுறைப்படுத்த முடியாது என்று எம்.ஜி.ஆருக்கும் தெரியும், அன்று தலைமைச் செயலாளராக இருந்தவருக்கும் தெரியும். ஆனாலும், இந்தக் கோரிக்கையை வைத்தவர்களைத் திருப்திப்படுத்தவே அந்த அரசாணை போடப்பட்டது. நடைமுறைக்கு ஒத்துவராத இது போன்ற அரசாணைகள் நூற்றுக்கணக்கில் உள்ளன என்பது எல்லோருக்கும் தெரியும்.
      சரி, எந்த ஒரு தலைவராவது தான் இறந்த பிறகு, தெருக்களுக்குத் தன் பெயரை வைக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்திருக்கிறாரா? அல்லது எந்த ஒரு தலைவரின் குடும்பத்தாராவது தலைவரின் பெயரை இதற்கு வையுங்கள், அதற்கு வையுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்களா? தலைவர்களின் சேவைகளைப் போற்றும் விதமாகத்தான் அரசு திட்டங்களுக்கு அவர்களது பெயர்கள் வைக்கப்பட்டன. அப்படித்தான் அவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன
    சாதி அடையாளச் சொற்களை நீக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அதை நடைமுறைப் படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன.
   இதுபோன்ற கோரிக்கைகளும், விவாதங்களும் தமிழ்நாட்டில்தான் உலா வருகின்றனமற்ற மாநிலங்களில் இதுபோன்ற விவாதங்கள் எழுவது இல்லை. அங்கெல்லாம் இன்றும் ஆட்சி, அதிகாரப் பொறுப்பில் உள்ளவர்களின் பெயருக்குப் பின்னால் சிங், நேரு, நாயர், ரெட்டி, யாதவ், மோடி, காந்தி, ராவ், சாஸ்திரி என்று சாதி அடையாளங்கள் ஒட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. அதையெல்லாம் நீக்க வேண்டும் என்று அந்த மாநிலங்களில் யாரும் கோருவதில்லை.
  தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு விழாவுக்கு வருகைதரும் பிரதமரை எப்படி வரவேற்பார்கள்? இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே வருக வருக என்றுதான் பேனர் வைக்க முடியும். நாங்கள் ஜாதி பெயர் சேர்க்க மாட்டோம் என்று, இந்திய பிரதமர் நரேந்தர் அவர்களே வருக வருக என்று பேனர் வைத்தால் என்ன ஆகும்? அடுத்தநாள் யார் யார் பதவி காலியாகும் என்று யாருக்கும் தெரியாது.
   சரி, அது எப்படியோ போகட்டும். அந்த அரசியல் நமக்கு வேண்டாம்என்னுடைய அனுபவத்தைக் கூறுகிறேன்.
    எங்களுடைய தந்தையார் பெயர் சின்னாண்டிக் கவுண்டர். 32 ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். தன்னுடைய பெயருடன் ஜாதி அடையாளம் ஒட்டி இருப்பதால் பல நேரங்களில் தர்மசங்கடங்கள் ஏற்படுவதால், அவர் தன்னுடைய பெயரை தனசேகரன் என்று மாற்றிக் கொள்ள விரும்பி, அதற்கான முயற்சிகளை மேற்கொண்டாராம்.
    இது நடந்தது 45 ஆண்டுகளுக்கு முன்பு. வீடு, நிலம், படிப்புச் சான்றிதழ்கள், பணிப் பதிவேடு, குழந்தைகளின் ஜாதிச் சான்றிதழ்கள், வங்கி, அஞ்சல் அலுவலக புத்தகம், நியாயவிலைக் கடை அட்டை, ரேடியோ லைசென்ஸ், ஆயுள் காப்பீடு என்று பல்வேறு ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்ய வேண்டி இருந்ததால், பல்வேறு துறைகளை அணுக வேண்டும் என்பதால் அது சாத்தியமில்லை என்று முடிவுக்கு வந்ததாகச் சொன்னார்.
     அவருக்காகத் தேர்வு செய்து, 5 ஆண்டுகளுக்கு மேலாக மனதில் வைத்திருந்த பெயரை வீணடிக்கக்கூடாது என்று, எங்கள் கடைசி தம்பி சீனிவாசனை ஒன்றாம் வகுப்பில் சேர்க்கும்போது தனசேகரன் என்று பெயர் பதிவு செய்ததாகக் கூறினார். அவனுக்கு இப்பொழுது வயது 46.
  என்னுடைய தந்தையார் பெயரைக் குறிப்பிடவேண்டிய இடங்களில் சின்னாண்டிக் கவுண்டர் என்பதற்குப் பதில், சின்னாண்டி என்றுதான் குறிப்பிட்டு வந்தேன்.
     7 ஆண்டுகளுக்கு முன்பு .பி.சி. சான்றிதழ் வேண்டி வட்டாட்சியருக்கு மனு அளித்து இருந்தேன்.  ஒரு வாரம் கழித்து அந்த மனு திரும்பி வந்துவிட்டது. வட்டாட்சியரை நேரில் சந்தித்தேன்.
       “.பி.சி. சான்றிதழ் வேண்டி நீங்கள் அனுப்பிய மனுவில் தந்தையார் பெயர் சின்னாண்டி என்று இருக்கிறது. ஆனால், அவரது ஜாதிச் சான்றிதழில் சின்னாண்டிக் கவுண்டர் என்று உள்ளது. அதனால்தான் மனு திருப்பப்பட்டது. அவரது மற்ற ஆவணங்களில் அவரது பெயர் எப்படி உள்ளது?” என்றார்.
       “என்னுடைய தந்தையாரின் படிப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட எல்லா ஆவணங்களிலும் சின்னாண்டிக் கவுண்டர் என்றுதான் உள்ளது. அவரது பெயருடன் சேர்ந்துள்ள கவுண்டர் என்றும் சொல்லைப் பயன்படுத்துவதில் சில நேரங்களில் எனக்குத் தர்மசங்கடம் ஏற்படுகிறது. அதனால்தான் சின்னாண்டிக் கவுண்டர் என்பதற்குப் பதில் சின்னாண்டி என்று சொல்லி வருகிறேன்  என்றேன்.
மெல்லச் சிரித்தார். சற்றுநேர மௌனத்திற்குப் பிறகு பேச ஆரம்பித்தார்.
உங்கள் பெயரையே உங்களால் எளிதில் மாற்ற முடியாது. அதற்கெற்று சில நடைமுறைகள் உள்ளன. நிலைமை அப்படி இருக்க, உங்கள் அப்பா பெயரை உங்களால் எப்படி மாற்ற முடியும்? முதலில் அவர் பெயரை மாற்றச் சொல்லுங்கள்  என்றார்.
அவர் தற்பொழுது உயிருடன் இல்லைஎன்றேன்.
அவர் பெயரை இனிமே யாராலும் மாற்ற முடியாதுஎன்றார்.
அவர் பெயரை சின்னாண்டிக் கவுண்டர் என்றுதான் எழுத  வேண்டுமா? சின்னாண்டி என்று எழுதக்கூடாதா?” என்றேன்.
உங்கள் தந்தையார் பெயரை எப்படி வேண்டுமானாலும் எழுதுங்கள், தடை இல்லை. ஆனால், நீங்கள் எந்த அலுவலகத்திற்குச் சென்றாலும் உங்களது கோரிக்கை மனுக்கள் இது போன்றுதான் திரும்பி அனுப்பப்படும். நீங்கள் தவறான தகவல் கொடுத்ததாக உங்கள் மீதே நடவடிக்கை பாயவும் வாய்ப்புள்ளதுஎன்றார்.
இறந்துபோன தலைவர்களின் பெயரில் உள்ள ஜாதி அடையாள சொற்களை நீக்க வேண்டும் என்று சிலர் கோரி வருகின்றனரே?” என்றேன்.
மீண்டும் சிரித்தார்
அதெல்லாம் அரசியல். இந்தச் சீட்டில் உட்கார்ந்துகொண்டு அதைப்பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லைஎன்றார்
    நான் அந்த அரசியல் பற்றி எழுத விரும்பவில்லை. அது இந்தப் பதிவின் நோக்கமன்று. இந்தப் பதிவின் நோக்கமே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான்.
  பெற்றோர்களில் பெரும்பாலானோர் ஜோதிடர் சொல்லும் முதல் எழுத்தில் பெயர் வைக்கின்றனர். சிலர் நல்ல தமிழ்ப்பெயர் தேடி வைக்கின்றனர். சிலர் குலதெய்வம் பெயர் வைக்கின்றனர். சிலர் தங்களுக்குப் பிடித்த தலைவர்கள், நடிகர் நடிகைகள் பெயர் வைக்கின்றனர். சிலர் குழந்தை பிறந்தபோது இருக்கும் சமூக சூழலுக்கு ஏற்ப பெயர் வைக்கின்றனர்.
     கன்னியாகுமரியில் விவேகானந்தருக்கு மணிமண்டபம் கட்டிய ஆண்டில் எங்கள் தம்பி பிறந்ததால் அவனுக்கு விவேகானந்தன் என்று எங்கள் தந்தையார் பெயர் வைத்தார்.
     ஸ்கைலேப் வானில் இருந்து விழுந்த நாளில் பிறந்த தன் குழந்தைக்கு ஸ்கைலேப் என்று பெயர் வைத்தார் ஒருவர்.
   நூலகத்திற்கு வந்து குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் புத்தகம் கேட்டு வாங்கி சில பெயர்களை குறித்துவிட்டுச் செல்கின்றனர். அதிலும் திருப்தி இல்லாதவர்களுக்கு இணையத்தில் தேடி பெயர் குறித்துத் தருவதுண்டு.
    ஒருநாள் குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டும் என்றார் ஒருவர். சில புத்தகங்களைக் கொடுத்தேன். நூலக வாரவிழா மலரில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகள் பெயர்களை எடுத்துக்கொடுத்தேன். பார்த்துவிட்டு திருப்தி இல்லை என்றார். இணையத்தில் தேடி சில பெயர்களைச் சொன்னேன். அதிலும் அவர் திருப்தி அடையவில்லை.
     பொறுமையை இழந்த நான், “வேறு எப்படித்தான் பெயர் இருக்க வேண்டும்என்றேன்.
எல்லோரும் எளிதாகக் கூப்பிடுமாறு இருக்க வேண்டும். அவன் ராசி எண் மூன்று. அதனால், மூன்று எழுத்தில் இருக்க வேண்டும்என்றார்.
இதை வந்த உடனே சொல்லியிருக்கலாமே. என் நேரத்தை வீணடித்து விட்டீர்களே?” என்றேன்.
எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார்.
ஃபேமசான பெயர். இந்த மாவட்டத்திலேயே இதுவரை யாரும் வைத்திருக்காத பெயர். மூன்று எழுத்து பெயர்தான். சொல்லட்டுமா?” என்றேன்.
சொல்லுங்கள் சார்என்றார் ஆவலோடு.
ஜி.எஸ்.டிஎன்றேன்.
நல்லாத்தான் இருக்கிறது.... ஆனால், மக்களுக்கு ஜி.எஸ்.டி. மேல் வெறுப்பு இருக்குதே?” என்று இழுத்தார்.
சரி, யாருக்கும் வெறுப்பு இல்லாத பெயர், எல்லோரும் விரும்பும் பெயர், மூன்று எழுத்து பெயர், படிக்காதவர் வாயிலும் எளிதில் வரும் பெயர் ஒன்று இருக்கிறது. அதைச் சொல்லட்டுமா?” என்றேன்.
அதற்குத்தான் வந்தேன், சொல்லுங்கள் சார்என்றார்.
ஆதார்என்றேன்.
ரொம்ப சந்தோஷம், ஆதார் பெயர் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அதையே வச்சிடுறேன்என்று மகிழ்ச்சியாகச் சென்றார்.

Comments