நூலகர்களும் ஆன்லைன் வருகைப் பதிவும்.

-      சி.சரவணன்.

நூலகங்கள் சரியாக இயங்குவதில்லை என்று பரவலாக பேசப்பட்டது. பத்திரிகைகள் சிலவும் அவ்வாறே எழுதி வந்தன. இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக ஆன்லைன் வருகைப் பதிவு அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் சில நூலகர்கள் அச்சப்பட்டனர். போகப் போக சரியாகி விட்டது.

ஆன்லைன் வருகைப்பதிவு விகிதம் அதிகரித்து உள்ளது. நூலகப் பணியாளர்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ‘நூலகர்கள் சரியாக வேலை செய்வதில்லை என்று இனி எவரும் சொல்ல முடியாது. மாவட்ட நூலக அலுவலர்கள்கூட ‘ஏன் வேலைக்கு போகவில்லை என்று கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நூலக ஆய்வாளர், மாவட்ட நூலக அலுவலர் ஆகியோர் நூலகங்களை திடீர் பார்வை செய்வதை குறைத்துக் கொண்டு, நூலகத்துறை மேம்பாட்டிற்கு தங்கள் நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

தொழில்நுட்பச் சிக்கல்களும்,  நடைமுறைச் சிக்கல்களும்:

எந்த ஒரு தொழில்நுட்பத்தை நடைமுறைபடுத்தும்போதும் சில சிக்கல்கள் வருவதுண்டு. அந்த வகையில் நூலகர்களும் சில நடைமுறை சிக்கல்களையும், தொழில்நுட்ப சிக்கல்களையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

 சில நூலகர்கள் அவசரத்தில் கைபேசியை இயக்குவதால் சில தவறுகள் நடப்பதுண்டு.  நேரம் ஆகிவிட்டது என்று அவசரத்தில் பதிவு செய்யும்பொது மாவட்டம் மாற்றி பதிவு செய்யும் நூலகர்களும் உண்டு. Dharmapuri – Dindugal, Thiruvallur – Thiruppur இதுபோன்ற மாவட்டங்கள், அருகருகே இருப்பதால் அவசர கதியில் மாற்றி போடுவதும் உண்டு. Village Library என்பதற்கு பதில் Branch Library என்று போடுவதும் உண்டு.

எனக்கும் அப்படி சில அனுபவங்கள் உண்டு. நாம் கைபேசியில் டைப் செய்யும்போது அது தொடர்பான வார்த்தைகள் வந்து நிற்புக்கும். Good என்று டைப் செய்தால் morning, evening என்று வந்து நிற்கும்.  Saravanan என்று டைப் செய்யும்போது Meenaakshi என்று வந்து நிற்பது வழக்கம். ஏனென்றால், இந்த இரண்டு சொற்களும் அடிக்கடி இணையத்தில் பயன்படுத்திவரும் வார்த்தைகள்.

இப்படித்தான், ஒரு நாள் அவசரத்தில் Saravanan என்று டைப் செய்து விட்டு, C என்று டைப் செய்வதற்குள் Meenaakshi என்று வந்து நின்று விட்டது. அதை அவசர கோலத்தில் டச் செய்து விட்டேன். அன்று Saravanan Meenaakshi இன்று பதிவாகிவிட்டது. இப்படி சில தவறுகள் நடப்பது உண்டு.

Share Location என்று கொடுக்கும் பொழுது, கைப்பேசி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தை காண்பிக்கிறது. சரியான லொகேஷனை தேர்வு செய்ய வேண்டும் என்றால் கைபேசியை ரீஸ்டார்ட் செய்ய வேண்டி இருக்கிறது. அல்லது லொகேஷனை Off செய்து On செய்ய வேண்டியது அவசியமாகிறது. இதனால், குறைந்தது 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை நேரம் வீணாகிறது.

நேரம் ஆகிறது என்பதற்காக அவசர கோலத்தில் நாம் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதால், லொகேஷனை நாம் சரியாக பதிவிட முடிவதில்லை.  எந்த லொகேஷன் காண்பிக்கிறதோ, அந்த லொகேஷனில் பதிவு செய்துவிட்டு, அடுத்த வேலையை பார்க்க வேண்டியதுதான். ஏனென்றால், நூலகம் நாளுக்கு நாள் இடம் மாறப்போவதில்லை. அதனால் லொகேஷன் பற்றி கவலைப்படாமல் பதிவு செய்வது நல்லது;  இல்லையென்றால் காலதாமதம் (Late) ஆகிவிடும்.

குறைந்த விலை, குறைந்த செயல்திறன் கொண்ட கைப்பேசி வைத்திருக்கும் நூலகர்கள்  நிலைமை இன்னும் மோசம்.  கைசாலா ஆப் ஓபன் ஆவதற்கு சில நிமிடங்கள் ஆகும். சில நேரங்களில் சுற்றிக் கொண்டே இருக்கும்; சில நேரங்களில் கைப்பேசி ஹேங் ஆகிவிடுவதும் உண்டு. அதனால், சற்று செயல்திறன்மிக்க கைபேசியை வாங்குவது நல்லது. இன்னும் சில மாதங்களில் 5G அறிமுகப்படுத்த இருக்கிறார்கள். 5G வந்தால் தற்பொழுது நம்மிடம் இருக்கும் நல்ல நிலையில் இயங்கும் கைபேசிகளில் முழு செயல்பாடு இருக்கும் என்று சொல்ல முடியாது.  நூலகர்கள் கைபேசி வங்க மாவட்ட நூலக ஆணைக்குழு வட்டியில்லா கடன் வழங்கினால் நன்றாக இருக்கும்.

இது ஒரு புறம் இருக்க, மது பிரியர்களின் தொல்லை தாங்கமுடிவதில்லை. தமிழகத்தில் ‘குடிமக்களின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. இவர்களின் ‘திறந்தவெளி பார் எதுவென்றால் அரசு அலுவலகங்கள்தான். எல்லா அரசு அலுவலகங்களும் மாலை ஆறு மணிக்குமேல் இயங்குவதில்லை. ஆனால், நூலகங்கள் 6.30, 7.00 மணி வரை திறந்து இருப்பது, ‘மது பிரியர்களுக்கு மது அருந்த தடையாக இருக்கிறது. மது பிரியர்கள் சிலர் மது அருந்திவிட்டு, நூலகர்களிடம் வம்பு செய்வது வாடிக்கையாக இருக்கிறது. தினம், தினம் இதுபோன்ற தொல்லைகளை நான் சந்தித்து வருகிறேன். கிராமங்களில் பணிபுரியும் ஊர்புற நூலகர்களின் நிலைமை எப்படி இருக்கும் என்று அவர்களைக் கேட்டால்தான் தெரியும்.

 கிராமப்புற கிளை நூலகங்கள் மாலை 6 மணிக்கு மூடப்படுகின்றன. ஆனால், ஊர்ப்புற நூலகங்கள் 6.30 மணி வரை திறந்து வைத்திருக்க வேண்டி இருக்கிறது.  இது முரண்பாடாக இல்லையா?

 ‘நூலகங்களின் வேலை நேரத்தை முறைப்படுத்த வேண்டும் என்று நான் கடந்த பத்து ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். நான் பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளராக இருந்தபோது, “நூலக நேரத்தை முறைப்படுத்த வேண்டும் என்று பலமுறை இயக்குனருக்கும், அரசுக்கும் கோரிக்கை வைத்திருக்கிறேன். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நூலக மாநாட்டில் நான் கட்டுரை சமர்ப்பித்து பேசியபோதும், “நூலகங்களின் மதிய இடைவேளையில் 3 மணி நேரம் இடைவெளி விடுவதை குறைத்து, நூலகங்கள் மாலை 5 மணிக்கு மூடுமாறு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன். எனது கோரிக்கையை நூலகர்கள் அப்பொழுது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், தற்பொழுது ஆன்லைன் வருகைப் பதிவு வந்த பிறகு, நூலகங்களின் நேரங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று நூலகர்கள் பரவலாக பேசி வருகிறார்கள். இதை அரசு பரிசீலனை செய்யும் என்று நம்புகிறேன்.

நன்றி.

Comments

சரியான நேரத்தில் சரியான கருத்தை வலியுறுத்தி எழுதப்பட்ட சரியான கட்டுரை இது! மாலை 7:00மணி மற்றும் 8:00மணி வரையில் இயங்கும் நூலகங்கள் விடுமுறை நாளில் செயல்படும் நூலகங்கள்பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம்.