நூலகங்களின் கட்டமைப்பை மேம்படுத்த...
"தமிழகத்தில் பொது நூலகங்களின் செயல்பாடுகள் மோசம்" என்று ஒரு முன்னணி செய்தித்தாளில் சில நாட்களுக்கு முன்பு செய்தி வந்தது. இந்த செய்தி பல்வேறு நூலகர் குழுக்களில் பதிவு செய்யப்பட்டது.
இந்த பத்திரிக்கைச் செய்தி பற்றிய
என்னுடைய கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அண்ணா நூற்றாண்டு நூலக கட்டடத்திற்கு
அடிக்கல் நாட்டிப் பேசிய அன்றைய முதலமைச்சர் மு. கருணாநிதி, "நூலகத்துறையின்
செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை" என்று பேசினார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த நூலகத் துறை நண்பர்கள்
அந்த நிகழ்ச்சியை மறந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
நூலகங்களின் செயல்பாடுகளை விமர்சித்து, பல ஆண்டுகளாக பத்திரிகைகள்
பலவும் எழுதி வருகின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த பத்திரிகைச் செய்தியையும் நான்
பார்க்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளாக நூலகத்துறை
கவனிப்பாரற்று இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால், இந்த அரசு பொறுப்பேற்ற
பிறகு நூலகத்துறையின் செயல்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நூலகத்துறை இயக்குநர்
பொறுப்புக்கு இந்திய ஆட்சிப் பணி அலுவலர் நியமிக்கப்பட்டது, இந்த
அரசு நூலகத்துறை மீது காட்டும் அக்கறையையே காட்டுகிறது.
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில்கூட
நூலகத்துறைக்கென்று சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அந்த அறிவிப்புகள் நூலகர்களுக்கு
மகிழ்ச்சி அளித்ததோ இலையோ,
பொதுமக்கள் / வாசகர்கள் பெரிதும் பயன்படும் அறிவிப்புகளாக இருந்தன.
பொது நூலக இயக்குனராக திரு. க.இளம்பகவத், இ.ஆ.ப. அவர்கள் பொறுப்பேற்ற
பிறகு, நூலகத்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. நூலக நிதி எந்தெந்த வகையில் விரையம் ஆகிறது என்று கண்டுபிடித்து,
அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிர்வாகம் வெளிப்படையாக இருந்தால்தான்
முறைகேடு நடக்க வாய்ப்பிருக்காது என்று,
நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை கொண்டு வரப்பட்டுள்ளது.
நூலகங்களுக்கு பத்திரிக்கை, செய்தித்தாள் வாங்குவதில்
புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், தரமான பத்திரிகைகள்
கிராமபுற வாசகர்களையும் சென்றடைகிறது.
பணி மாறுதல் / பதவி உயர்வு வழங்குதல் போன்றவற்றில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படுவதால், முறைகேடுகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இடமில்லாமல் போய்விட்டது.
மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சிகளை
நடத்தி, தங்களுக்கு
வேண்டிய புத்தகங்களை வாசகர்கள் வாங்கிப் படிக்க வாய்ப்பு உருவாக்கித் தரப்பட்டுள்ளது.
பொது நூலக சட்டத்தை திருத்த உயர்மட்டக்
குழு அமைத்து, பல்வேறு தரப்பட்ட மக்களின் கருத்துகள் கேட்டு, அதற்கேற்ப
சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது.
மேலும், நூல் கொள்முதல் இன்னும்
தொடங்கப்படவில்லை. பத்திரிகைகள் கொள்முதலில் கொண்டுவரப்பட்ட நடைமுறைபோல், தரமான நூல்களை குறைந்த விலையில் நூலகங்களுக்கு கொள்முதல் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை
இந்த அரசு எடுக்கும் என்று நம்புகிறோம்.
இதுபோன்று, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள்
மேற்கொண்டு வருவதால் நூலகச் சேவை மேலும் மேம்படையும் என்பது உறுதி.
நிலைமை இவ்வாறு இருக்க, நூலகங்களின் செயல்பாடுகள்
மோசம் என்று சில பத்திரிகைகள் எழுதுகின்றன. இருந்தாலும், பத்திரிகைகளின் குற்றச்சாட்டுகளை
புறந்தள்ளிவிட முடியாது. பொதுமக்கள் நூலகத்துறையில்
இன்னும் நிறைய எதிர்பார்கிறார்கள் என்றுதான் நாம் இந்த செய்தியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
நூலகத்துறையில் இன்றை பிரச்சினையே
நூலகங்களில் கழிவறை இல்லாததும்,
சொந்த கட்டடம் இல்லாததும்தான்.
10-15 ஆண்டுகளுக்கும் மேலாக
இயங்கி வரும் 70-80 சதவிகித ஊர்ப்புற நூலகங்களில் கழிவறை வசதி
இல்லை.
50 ஆண்டுகளுக்கும் மேலாக
இயங்கி வரும் சில கிளை நூலகங்களுக்கு சொந்த கட்டிடமே இல்லை. வாடகை கட்டடங்களில்தான்
இயங்கி வருகின்றன.
இந்த நிலைமை இத்தனை ஆண்டுகள் தொடர்வதற்கு
யார் காரணம்?
நூலகத்துறை உற்பத்தித் துறையாக
இருந்தால் அரசாங்கம் முதலீடு செய்திருக்கும். இது சேவைத் துறை. அதனால்தான், மக்கள் செலுத்தும் நூலக
வரியிலிருந்து இந்தத் துறை இயங்குகிறது.
நூலகங்களுக்கான அடிப்படை வசதிகளை
ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசாங்கம்தான் என்று பலரும் நினைக்கிறார்கள். அரசாங்கம்
என்றால் யார்? முதலமைச்சரும், கல்வி அமைச்சருமா? மாவட்ட நூலக அலுவலர்களும், நூலகர்களும் அரசாங்கத்தின்
அங்கம் தானே?
இன்றைக்கு நான் பணிபுரியும் நூலகக்
கட்டடமும், நான் உட்கார்ந்து வேலை செய்யும் நாற்காலியும், எனக்கு
முன்பு யாரோ ஒரு சிலர் எடுத்த முயற்சியால் வந்தவை. அப்படித்தான் தமிழ்நாட்டில் இன்றைக்கு
இருக்கின்ற நான்காயிரத்துக்கும் மேற்பட்ட நூலகங்கள் முகமறியாத பலர், பல்வேறு காலக் கட்டங்களில் எடுத்த முயற்சிகளால் தொடங்கப்பட்டவை. அதனால், நூலகத்துறையை
மேம்படுத்துவதில் நூலகச் சமூகத்திற்கு பெரும் பங்கு உண்டு.
இன்றைக்கு பெரும்பாலான நூலகங்களில்
அடிப்படை வசதிகள் இல்லை. சில பாரம்பரியமிக்க கிளை நூலகங்கள் வாடகைக் கட்டடங்களில் இயங்கி
வருகின்றன. இதற்கெல்லாம் தீர்வு காண நூலகர்கள் பலரும் முயற்சி எடுத்திருக்கலாம். சில
முயற்சிகள் பலன் கொடுத்திருக்கும். சில முயற்சிகள் பலன் கொடுகாமல் போயிருக்கும். எல்லா
முயற்சியும் வெற்றியில் முடியும் என்று நாம் எதிர் பார்க்க முடியாது. யாரையும் குறை
சொல்ல முடியாது.
உயர் அலுவலகங்களுக்கு நூலகர்கள்
சென்றால் ஓரளவு மரியாதை இருக்கும். அதுவே மாவட்ட நூலக அலுவலர் சென்றால் நல்ல மரியாதை இருக்கும். அதனால்தான் பல ஆண்டுகளாக நாம் ஒரு கோரிக்கையை
வலியுறுத்தி வருகிறோம். மாவட்ட அளவில் மாவட்ட நூலக அலுவலர் தலைமையில் நூலக வளர்ச்சிக்
குழுக்களை உருவாக்கி, அந்த குழு மூலம் சட்டமன்ற,
நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள்,
மாவட்ட வருவாய் அலுவலர்கள் என்று பல்வேறு அலுவலர்களை தொடர்ந்து சந்தித்து
வந்தால், எல்லா நூலகங்களும் தன்னிறைவு பெற்ற நூலகங்களாக மாறி
விடும்.
ஒரு நூலகருக்கு சட்ட மன்ற உறுப்பினர்
நன்கு அறிமுகமானவராக இருக்கலாம்;
இன்னொரு நூலகருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நன்கு தெரிந்தவராக இருக்கலாம்;
வேறு ஒரு நூலகருக்கு மாவட்ட ஊராட்சி அலுவலர் நல்ல தொடர்பில் இருக்கலாம்.
இப்படி பல நூலகர்களின் தொடர்புகள் நூலகத் துறை வளர்ச்சிக்கு பயன்படும்.
தனி ஒரு நபராக செல்வதை விட, குழுவாக சென்றால் அதற்கு நல்ல மரியாதை கிடைக்கும். அதனால்தான் நன்கொடை திரட்டுபவர்கள்கூட தனியாக செல்வதில்லை. குழுவாக செல்கிறார்கள். இவ்வாறு, நூலகர்கள் குழுவாக செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பது உறுதி.
- சி. சரவணன்.
Comments