நூலகர்களிடையே அதிகாரப் போட்டி!

-  சி. சரவணன்.

தரம் உயர்த்தப்பட்ட  முழுநேர கிளை நூலகங்களில் இரண்டு மூன்றாம் நிலை நூலகர்கள் மட்டும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நூலகங்களில் பலவும் ஊதிய மைய நூலகங்களாக இருக்கின்றன. அதனால், ஊதிய மைய நூலகர் என்கின்ற அந்தஸ்திற்கு கடும் போட்டி எப்பொழுதும் உண்டு.

 இரண்டு ஒரே நிலை (மூன்றாம் நிலை) நூலகர்கள் பணிபுரிகிறார்கள். இருப்பினும், இவர்களிடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது.  ஏன் இந்த போட்டி? 


ஏனென்றால், ஊதிய மைய நூலகர் என்கின்ற அந்தஸ்து. இவர்  ஜென்ரல் ஷிப்டில் பணிபுரியலாம். காலை / மாலை ஷிப்ட்க்கு வரத் தேவையில்லை.   மேலும், ஊதிய மைய நூலகர் என்றால், ஒரு கெத்து - சில இடங்களில் அதிகார தோரணை -  மாவட்ட நூலக அலுவலர்களிடம் நெருங்கிய தொடர்பு -  இப்படி பல. அத்துடன் சில சலுகைகளும் உண்டு. அதனால் ஊதிய மைய நூலகர் பதவியை கைப்பற்றுவதில் சங்கங்களுக்கு இடையே போட்டி.  இதனால், ஊதிய மைய நூலகர் என்கின்ற இடத்திற்கு பல மாவட்டங்களில் கடும் போட்டி.  


சமீபத்தில் ஒரு மாவட்டத்தில் ஊதிய மைய நூலகராக பணிபுரிந்த மூன்றாம் நிலை நூலகர் பணி ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்ற போது, அங்கு மூன்றாம் நிலை நூலகராகப் பணிபுரிந்து வந்த நூலகரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டுச் சென்றார். 

 ஓய்வு பெற்றவர் இடத்திற்கு பணி மாறுதல் பெற்று வந்த மூன்றாம் நிலை நூலகர், ஏற்கனவே அங்கு பணிபுரிந்து வந்த மூன்றாம் நிலை நூலகரியிடம் பொறுப்புகளை ஒப்படைக்குமாறு கோரினார். அதற்கு அந்த நூலகர், "நான் சில ஆண்டுகளாக இந்த நூலகத்தில் மூன்றாம் நிலை நூலகராக பணிபுரிந்து வருகிறேன். நீங்கள் இப்பொழுதுதான் இங்கு வந்திருக்கிறீர்கள். இருவரும் மூன்றாம் நிலை நூலகர்கள்தான்.  நான் ஸ்டேஷன் சீனியாரிட்டியில் உங்களுக்கு முன்னால் இருக்கிறேன். உங்களிடம் நான் ஏன் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும்?" என்று கூறி பொறுப்புகளை ஒப்படைக்க மறுத்து விட்டார்.  

புதிதாக பணி மாறுதலில் வந்தவர், "பணி அனுபவத்தில் உங்களைவிட நான் மூத்தவர்.  நான் விடுப்பு  எடுத்தால் உங்களிடம் கேட்டுவிட்டா போக முடியுமா? அதனால், நான்தான் ஊதிய மைய நூலகராக இருப்பேன்; நான்தான் ஜென்ரல் ஷிப்ட் வருவேன்" என்றார். 


இந்த பஞ்சாயத்து, மாவட்ட நூலக அலுவலகம் வரை சென்றது. இருவரும் அனுசரித்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. இருவரும் தங்கள் நிலையில் உறுதியாக இருந்தனர். விளைவு - இருவரும் ஆளுக்கொரு ஷிப்ட் வருகிறார்கள். தினக்கூலி பணியாளர் ஜென்ரல் ஷிப்ட்.


இது போன்ற அதிகாரப் போட்டிகள் கடந்த 10 ஆண்டுகளாக பல மாவட்டங்களில் நிகழ்ந்து வருகிறது. அதனால்தான், முழு நேர நூலகங்களில் இரண்டாம் நிலை நூலகர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று நான் பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளராக இருந்த போது பல முறை அரசுக்கு கோரிக்கை வைத்தேன். 

முழு நேர நூலகங்களில் இரண்டாம் நிலை நூலகர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டால் இது போன்ற அதிகாரப் போட்டிகள் வராது. 


மேலும், ஊதிய மையங்கள் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று பல ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வந்தேன். "ஊதிய மையங்களை விலக்கிக் கொள்வதன் மூலம், நூலக ஆணைக்குழுக்களுக்கு பல லட்ச ரூபாய் மிச்சம் ஆகும்" என்று  6.4.2022 அன்று  பொது நூலக இயக்குநர் அவர்களுக்கு விரிவான அறிக்கை அனுப்பினேன். ஊதிய மையங்கள் மூடுவதற்கான நடைமுறைகள் தொடங்கி விட்டன. இது மகிழ்ச்சி அளிக்கிறது.


சரி, மேற்படி பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன? 

சில நேரங்களில் station seniority பார்க்க வேண்டும். சில நேரங்களில் cadre seniority பார்க்க வேண்டும். Station seniority என்றால் கடைசியாக பணிபுரியும் நூலகத்தில் பணிபுரிந்த நாட்கள். Cadre seniority என்றால் தற்போதைய பதவியில் (மூன்றாம் நிலை நூலகராக) பணிபுரிந்த நாட்கள்.


இங்கு, இரண்டு மூன்றாம் நிலை நூலகர்களுக்கு இடையே அதிகாரப் போட்டி வருவதால், cadre seniority இல் மூத்தவரிடம் நூலக பொறுப்பு இருப்பது தான் சரியானது.

Comments