உயர் நீதிமன்றத் தீர்ப்பு நூலகர்களுக்கு பின்னடைவா? இனி என்ன செய்யலாம்?
வழக்கு விவரம்:
1990, 97, 98, 99, 2000 ஆண்டுகளில் பகுதி நேர, ஊர்ப்புற நூலகர்களாக நியமிக்கப்பட்டவர்கள் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் நாள் மூன்றாம் நிலை நூலகர்களாக பணி ஈர்க்கப்பட்டனர்.
இவர்களில் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் கொடுத்து இருந்தனர். அதில் "நாங்கள் மூன்றாம் நிலை நூலகர்களாக பணியமற்றப்பட்ட நாளிலிருந்து தான் பணி வரன்முறை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, நாங்கள் ஊர்ப்புற நூலகர்களாகப் பணியில் சேர்ந்த நாளை அடிப்படையாகக் கொண்டு, அந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் முடிந்த நாள் மூன்றாம் நிலை நூலகர்களாக பணியமர்த்தப்பட்டதாகக் கருதி, பணிவரன்முறை செய்து, பணப்பலன் உட்பட இதர சலுகைகள் வழங்க வேண்டும்" என்று கோரி இருந்தனர்.
இந்த வழக்கிற்கு இவர்கள் வைத்த வாதம்: "அரசாணை 156 பள்ளிக்கல்வி (கே 2 ) நாள் 10/ 9/1998ல் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள். (Guidelines) அடிப்படையில் வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரையிலும் இட ஒதுக்கீடு இன சுழற்சி அடிப்படையிலும் முறையான பணிநியமன விதிமுறைகளின்படி பணி நியமனம் செய்யப்பட்டுள்ளோம். அதனால், நாங்கள் பணி வரன்முறை கோர தகுதியுடையவர்கள்" என்பதாகும்.
நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்:
ஊர்ப்புற நூலகர் பணியிடம் பகுதிநேரப் பணியிடம்.
மனுதாரர்கள் முறையாக வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலமும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமிக்கப்பட்டு இருந்தாலும், அது வரையறுக்கப்பட்ட பணியிடம் இல்லை. இது ஒரு வரையறுக்கப்படாத (unclassified post) பணியிடமாகும்.
பகுதிநேர பணியிடத்தில் பணிபுரிபவர்களை நிரந்தரம் செய்ய விதியில்லை.
பகுதி நேர பணியிடத்தில் பணிபுரிபவர்கள், sanctioned posts பணியிடத்தில் பணிபுரிபவர்களுக்கு இணையாக இவர்களை கருத முடியாது.
ஒரே வேலையாக இருந்தாலும் "ஒரே வேலை - ஒரே ஊதியம்' என்று கோர முடியாது.
அரசு ஊழியர்களுக்கு இணையாக தனியார் துறை ஊழியர்கள் ஊதியம் கோர முடியாது. அதேபோலத்தான் வரையறுக்கப்பட்ட பணியிடத்தில் பணி புரியும் ஊழியர்களின் ஊதியத்திற்கு இணையாக ஊதியம் கோர இயலாது.
சேலம் மாவட்ட நூலக அலுவலர் ஊர்ப்புற நூலகர்களுக்கு பணி வரன்முறை செய்து உத்திரவிட்டது சட்ட விரோதமானது.
ஊர்ப்புற நூலகர்களுக்கு அரசு சலுகை செய்து மூன்றாம் நிலை நூலகர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
பணி வரன்முறை, பணி ஈர்ப்பு என்பதையெல்லாம் உரிமையாக கோர முடியாது.
அரசு விதிகளின் அடிப்படையில்தான் பணி வரன்முறை செய்ய முடியும்.
ஆதலால், இவர்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
இது நூலகர்களுக்கு ஒரு பின்னடைவா?
இந்த தீர்ப்பு 2006 அக்டோபர் மாதம் 26ம் நாள் மூன்றாம் நிலை நூலகர்களாக பணியமற்றப்பட்ட நூலகர்களுக்கு ஒரு பின்னடைவாகத்தான் தெரிந்தது.
பணப்பலன் கோராமல், பணிக்காலத்தை மட்டும் கணக்கில் சேர்க்கக் கோரியிருந்தால் தீர்வு சாதகமாக வந்திருக்குமா? இந்த வழக்கில் பகுதி நேர நூலகர் பணியை சேர்க்காமல் இருந்திருக்கலாம்.
சரி, தற்பொழுது ஊர்ப்புற நூலகர்களாக பணிபுரிபவர்களுக்கு ஏதேனும் பாதிப்பா?
இந்த வழக்கு தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த நூலகர்கள் சம்பந்தப்பட்டது. ஊர்ப்புற நூலகர் பணியிடம் பற்றி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஊர்ப்புற நூலகர்களுக்கும் பொருந்துமா? இது விவாதிக்கப்பட வேண்டியது.
ஊர்ப்புற நூலகர் பணியிடம் மூன்றாம் நிலை நூலகர் பணியிடத்திற்கு நுழைவு பணியிடம் என்று பலரும் நினைக்கிறார்கள். அப்படி எந்த விதியும் இல்லை. ஊர்ப்புற நூலகர்கள் மூன்றாம் நிலை நூலகர்களாக பலமுறை பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவை எல்லாம் அரசு கொடுத்த சலுகைகள். சலுகைகளை உரிமையாக கோர முடியாது என்கிறது நீதிமன்றம்.
ஊர்ப்புற நூலகர்கள் தங்கள் பணியிடம் பற்றி தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
(குறிப்பு: நான் பொது நூலகத் துறை அலுவலர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளராக இருந்த போது, "ஊர்ப்புற நூலகர்களுக்கு பதிவுரு எழுத்தர்களுக்கு இணையான ஊதிய விகிதத்தில் 4 ஆம் நிலை நூலகர்களாக நியமிக்க வேண்டும்" என்று கோரி வந்தேன். இதை சில ஊர்ப்புற நூலகர்கள் விமர்சனம் செய்தனர்.
அத்துடன், "அனைத்து ஊர்ப்புற நூலகங்களும் கிளை நூலகங்கள் - அனைத்து ஊர்ப்புற நூலகர்களும் மூன்றாம் நிலை நூலகர்கள்" என்று தனியாக கோரி வருகிறார்கள். அனைத்து ஊர்ப்புற நூலக கட்டடங்களும் கிளை நூலகங்களாக தரம் உயர்த்தும் அளவுக்கு வசதியாக இருக்கின்னறவா? பயன்பாடுகள் உள்ளனவா?
சங்கங்கள் கோரிக்கை வைப்பதில் கவனம் தேவை. )
ஊர்ப்புற நூலகர் பணியிடம் பகுதிநேரப் பணியிடம் என்று எத்தனை ஊர்ப்புற நூலகர்களுக்குத் தெரியும்? நாம் காலை, மாலை இரண்டு வேளையும் வேலை செய்கிறோம். நாம் முழுநேர பணியாளர் என்று பலரும் நினைக்கிறார்கள்.
ஊர்ப்புற நூலகர்கள் முழுநேரப் பணியாளர்கள் என்கின்ற அந்தஸ்தைப் பெற வேண்டும்.
ஊர்ப்புற நூலகர்கள் பிரச்சினை மிக முக்கியமான ஒன்று. அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களை முழுநேர பணியாளர்களாக அறிவித்தது முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
நூலகச் சட்ட விதிகளில் திருத்தம் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் "ஊர்ப்புற நூலகர் பணியிடத்தை முழு நேரப் பணியிடமாக அறிவித்து, தனியாக பணி விதிகள் உருவாக்க வேண்டும்" என்று நூலகர் சங்கங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான கோரிக்கை வைக்க வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் ஊர்ப்புற நூலகர் பணியிடம் இப்படியேதான் இருக்கும்.
- சி. சரவணன், கடத்தூர், தருமபுரி மாவட்டம்.
8668192839.
Comments