ஊர்ப்புற நூலகர்கள் வழக்கு - முழு விவரம்.

("ஊர்ப்புற நூலகர்களுக்கு நீதிமன்ற உத்தரவால் பாதிப்பா?" என்ற தலைப்பில் ஒரு பதிவை நேற்று காலை போட்டேன். மாலை 6 மணிக்குள் அந்த பதிவை 872 பேர் படித்து இருக்கிறார்கள். இதிலிருந்து வழக்கு தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள நூலகர்கள் ஆர்வம் காட்டுவது தெரிகிறது. அதனால் வழக்கு தொடர்பாக மேலும் பல தகவல்களை திரட்டி இந்த பதிவை போடுகிறேன்.) 

2015 ஆம் ஆண்டு 19 ஊர்ப்புற நூலகர்கள் "நாங்கள் பகுதி நேர நூலகர்களாக / ஊர்ப்புற நூலகர்களாக பணியில்  சேர்ந்த நாளிலிருந்து பணி வரன்முறை செய்ய வேண்டும்" என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.  அந்த வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. (வழக்கு எண். 8397/ 2015 )

 இந்த நிலையில் மேற்படி 19 மனுதாரர்களில் ஒருவரான கே. ஏ. சத்திய நாராயணன் என்பவர் 2022 ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியாக ஒரு வழக்கைத் தொடுத்து, "என்னுடைய கோரிக்கையை சேலம் மாவட்ட நூலக அலுவலர் பரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும்" என்று மனு தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றமும் இவரது கோரிக்கையை பரிசீலனை(consider) செய்ய வேண்டும் என்று சேலம் மாவட்ட நூலக அலுவலருக்கு உத்தரவிட்டது.

 (வழக்கு எண். 79/2022.)


மனுதாரரின் கோரிக்கை பரிசோதனை செய்யுமாறு நீதிபதி போட்ட உத்தரவை மாவட்ட நூலக அலுவலரிடம் காண்பித்து,  தான் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை  செய்யுமாறு திரு. கே.ஏ. சத்திய நாராயணன் கோரிக்கை வைத்திருக்கிறார்.

 பரிசீலனை (consider) என்பதை உத்தரவு(order) என்று தவறுதலாக புரிந்து கொண்ட சேலம் மாவட்ட நூலக அலுவலர், அவருக்கு பணிவரன்முறை  செய்ததோடு, அவருடன் சேர்ந்து 69 பகுதிநேர / ஊர்ப்புற நூலகர்களுக்கு பணி வரன்முறை செய்து உத்தரவிட்டார். ( ந.க.எண.  4941/அ1/2021, நாள். 22.7.2022 )


இதனிடையே, மேற்படி 2015 ஆம் ஆண்டு வழக்கு விசாரணைக்கு (4.8.2022) வந்தபோது, சேலம் மாவட்ட நூலக அலுவலரின் உத்தரவு நகல் நீதிபதியின் பார்வைக்கு மனுதாரர்கள் வழக்கறிஞர் மூலம் சமர்ப்பிக்கப்பட்டது. 

அதைக் கண்ட நீதிபதி "அரசு ஊழியர்களை பணி வரன்முறை செய்வது தொடர்பாக அரசாணையில் 74 P&AR (27.6.2013) தெளிவாக வழிகாட்டுதல்கள் இருக்கும் போது, பகுதி நேர பணியாளர்கள் எதன் அடிப்படையில் பணி வரன்முறை செய்யப்பட்டனர்?" என்று கற்றிந்த அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

நீதிமன்ற உத்தரவு தவறாக சேலம் மாவட்ட நூலக அலுவலரால் புரிந்து கொள்ளப்பட்டது என்று அரசு வழக்கறிஞர் பதிலளித்தார்.


 இந்த வழக்கில் நீதிபதி உத்தரவின் சுருக்கம்: 

  1. முறையில்லாத நியமனங்களை (irregular appointments), சட்டவிரோத நியமனங்களை (illegal appointments)  பணி வரன்முறை செய்வது நியமன விதிகளை மீறுவதாகும்.

  2. பகுதி நேர அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட பகுதி நேர நூலகர்கள் / ஊர்ப்புற நூலகர்கள்  எவ்வாறு சேலம் மாவட்ட நூலக அலுவலரால் பணிவரன் செய்யப்பட்டனர்?

  3. கே.ஏ.சத்திய நாராயணன் என்னும் தனிநபர் கொடுத்த பரிசீலனை மனுவின் மூலம் அறுபத்து ஒன்பது பகுதி நேர பணியாளர்கள் எவ்வாறு பணி வரன்முறை செய்யப்பட்டனர்?

  4. "மேற்படி மனுதாரர்களான பகுதி நேர நூலகர்கள் / பகுதிநேர ஊர்ப்புற நூலகர்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் முறையான காலமுறை ஊதியத்தில் மூன்றாம் நிலை நூலகர்களாக நியமனம் செய்யப்படும் நாளிலிருந்து தான் பணி வரன்முறை செய்ய முடியும்" என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கருத்து தெரிவிக்கிறார்.

  5. சேலம் மாவட்டத்தில் பகுதி நேர பணியாளர்கள் பணி வரன்முறை  செய்யப்பட்டுள்ளதால், பொது நூலகத்துறையில் பணி வரன்முறை செய்வது தொடர்பான அரசு உத்தரவுகள் பின்பற்றப்படுகின்றனவா? இல்லையா? என்று பொது நூலகத்துறை இயக்குநர் 8.8.2022 அன்று நேரில் ஆஜராகி பதில் அளிக்க வேண்டும்.


  • இது தான் 4.8.2022 அன்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணையை அடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தான் நேற்று நான் போட்ட பதிவு.

....



Comments