ஊர்ப்புற நூலகர்களுக்கு நீதிமன்ற உத்தரவால் பாதிப்பா?
ஊர்ப்புற நூலகர்களின் பணி தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் சில கருத்துகளை தெரிவித்துள்ளது. இதைப் படித்த நூலகர்களில் சிலர் என்னிடம் கருத்து கேட்டனர்.
நீதிமன்ற உத்தரவால் ஊர்ப்புற நூலகர்களின் பணிக்கு பாதிப்பு வருமோ? என்று நூலகர்கள் சிலர் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக, என்னுடைய கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
"தங்களுக்கு பதவி உயர்வு வேண்டும் அல்லது முறையான காலமுறை ஊதியம் வேண்டும்" என்று 19 ஊர்ப்புற நூலகர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் கோரிக்கை பற்றிய முழு விவரம் எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் வழக்கின் போக்கை வைத்துப் பார்த்தால் இவர்கள் கோரிக்கை என்னவாக இருக்கும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த வழக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக நடப்பதால் வழக்கு தொடுத்தவர்களில் சிலர் இந்த வழக்கையே மறந்து விட்டனர். இந்த வழக்கில் உள்ள நூலகர் ஒருவரிடம் பேசினேன். இந்த வழக்கு பற்றி ஒன்றும் தெரியாது என்றார்.
இந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மேற்படி மனுதாரர்களின் கோரிக்கை ஏற்க இயலாது என்பதற்கு அரசு தரப்பு சில வாதங்கள் புள்ளி விவரங்களுடன் நீதிமன்றத்தில் வைத்திருப்பதாகத் தெரிகிறது.
அந்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்த நீதிபதி பொது நூலக இயக்குநர் அவர்களுக்கு சில கருத்துகளை (directions) வழங்கி இருக்கிறார்.
அந்த கருத்துகள்தான் தற்பொழுது சமூக ஊடகங்களில் உலாவி வருகிறது.
பொதுவாக, அரசு ஊழியர்கள் நிவாரணம் கோரி வழக்கு தொடுத்தால், அதற்கு அரசு தரப்பு மறுப்பு தெரிவிக்க சில விவரங்களை (grounds) வைப்பது வழக்கம்.
அப்படித்தான் இந்த வழக்கிலும் அரசு தரப்பு மேற்படி ஊர்ப்புற நூலகர்களின் கோரிக்கை ஏற்க முடியாது என்பதற்கு சில புள்ளி விவரங்களுடன் வாதங்களை முன்வைத்திருக்கிறது.
அவற்றில் சில:
ஊர்ப்புற நூலகர்கள் பகுதிநேரப் பணியாளர்கள்.
காலை மாலை நூலகத்தை திறக்கிறார்கள்.
தனிப்பட்ட முறையில் வேறு எந்த வேலையும் செய்வதில்லை.
அதனால்தான் அவர்களுக்கு சிறப்பு காலம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
இப்படி இவர்கள் பணிநிலை இருக்கும்பொழுது இவர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் / பதவி உயர்வு வழங்க இயலாது.
இவைதான் அரசு தரப்பு வாதம். இந்த வாதங்கள் எல்லாம் சரியா? தவறா? அபத்தம் இல்லையா? என்று வெளியில் விவாதிப்பதால் எந்த பயனும் இல்லை. வழக்கு என்று வந்து விட்டால் விவாதங்கள் எப்படி எல்லாம் திசை மாறிப் போகலாம்.
இதற்கு பதில் சொல்ல வேண்டியது மனுதாரர்கள் தரப்பு. அன்றாட பணிகளுக்கு அப்பால் நாங்கள் என்னென்ன செய்திருக்கிறோம் என்று புள்ளிவிவரங்களை நீதிமன்றத்தில் மேற்படி 19 ஊர்ப்புற நூலகர்கள் மனுவாக சமர்பித்து வாதிடலாம்.
அரசு தரப்பு வாதத்தை மறுக்க எதுவும் இல்லை என்றால் வழக்கு தள்ளுபடி ஆகிவிடும். இதைத் தவிர்க்கத்தான், இவர்களது வாழ்வாதாரம் கருதி, கூடுதல் ஊதியம் வழங்க ஏதுவாக நீதிமன்றம் சில யோசனைகளை அரசுக்கு வழங்கி இருக்கிறது என்றுதான் நான் கருதுகிறேன்.
சரி, இந்த வழக்கால் தற்பொழுது பணிபுரியும் ஊர்ப்புற நூலகர்களுக்கு ஏதேனும் பாதிப்பு வருமா?
இது தான் ஊர்ப்புற நூலகர்களின் கேள்வி.
இந்த வழக்கால் தற்பொழுது பணிபுரியும் ஊர்ப்புற நூலகர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை; மாறாக, நன்மை பயக்கவும் வாய்ப்பு உள்ளது என்பதுதான் என் கருத்து.
எப்படியென்றால், தற்பொழுது பணியில் உள்ள ஊர்ப்புற நூலகர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், இன சுழற்சி அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள். அதனால், இவர்களை வீட்டுக்கு அனுப்ப முடியாது. நிர்வாக நலன் கருதி பணியிடம் மாற்றும்போது ஏற்கனவே கொடுக்கப்பட்டு வந்த ஊதியத்தை குறைக்கக்கூடாது என்பது சட்டம். அதனால் ஊர்ப்புற நூலகர்கள் அச்சப் படத் தேவையில்லை. (பட்டு வளர்ச்சித் துறையில் ஆட்குறைப்பு செய்தபோது, நூலகர்களாக வந்தவர்கள் ஊதியம் குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)
ஒருவேளை, நீதிமன்ற ஆலோசனையின்படி ஊர்ப்புற நூலகர் பணியிடங்களை ஒழுங்குபடுத்த அரசு முடிவு செய்தால், அதை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
ஊர்ப்புற நூலகங்களை பள்ளி நூலகங்களோடு இணைத்து, அங்கு பணி வழங்கப்பட்டால், அது ஊர்ப்புற நூலகர்களுக்கு நன்மையே.
தற்பொழுது ஊர்ப்புற நூலகர்கள் காலை 9 மணிக்கு நூலகத்தைத் திறந்து, மாலை 6.30 வரை நூலகத்தில் இருக்க வேண்டிய நிலை இருக்கிறது. பள்ளி நூலகத்தோடு ஊர்ப்புற நூலகம் இணைக்கப்பட்டால், காலை 9 மணிக்கு பள்ளிக்குச் சென்று, மாலை 4.30 மணிக்கு வீட்டுக்கு கிளம்பி விடலாம். மேலும், சனி, ஞாயிறு விடுமுறை, காலாண்டு விடுமுறை, அரையாண்டு விடுமுறை, முழு ஆண்டு விடுமுறை என்று விடுமுறைகள் அதிகம். அத்துடன் தற்பொழுது வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியம் முறையான காலமுறை ஊதியமாக மாற்றப்படலாம்.
இது மட்டுமல்லாது, ஊர்ப்புற நூலகங்களை பஞ்சாயத்துகளில் உள்ள அண்ணா மறுமலர்ச்சி நூலகங்களோடு இணைத்தாலும் ஊர்ப்புற நூலகர்களுக்கு நன்மையே.
அண்ணா மறுமலர்ச்சி நூலகங்களில் கட்டட வசதி சிறப்பாக உள்ளது. வேலை நேரமும் குறைவு. மாலை 6.30 வரை நூலகத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
இப்படி ஒரு நிலை ஏற்பட்டால், மூன்றாம் நிலை நூலகர்களே பள்ளி நூலகங்களுக்கு செல்ல விருப்பம் தெரிவிப்பார்கள். நானும் கூட விருப்பம் தெரிவிப்பேன். கிளை நூலகத்தில் இரவு 7 மணி வரை இருப்பதை விட, பள்ளி நூலகத்தில் 4.30 வரை இருப்பது மகிழ்ச்சி தானே.
(குறிப்பு: நூலகத் துறையில் ஆளாளுக்கு நீதிமன்றம் செல்கிறார்கள். நீதிமன்றம் செல்லும் முன்பு விசயம் தெரிந்த நூலகர்களிடமும் சட்ட வல்லுநர்களிடமும் கருத்து கேட்க வேண்டும். வழக்கின் போக்கு எப்படியெல்லாம் போகலாம் என்று யோசிக்க வேண்டும். எதிர் விளைவு என்னவாக இருக்கும் என்றும் யோசிக்க வேண்டும். யார் பேச்சையோ கேட்டுக் கொண்டு வழக்கு தொடுத்தால் விளைவு இப்படித்தான் இருக்கும்)
(Flashback: நூலகத் துறை கடந்த 10 ஆண்டுகளாக முடங்கிக் கிடப்பதற்குக் காரணம், எல்லாம் எங்களுக்கே வேண்டும் என்று சில சியநல நூலகர்கள் தொடுத்த வழக்கு தான். அந்த வழக்கால் அவர்களும் பயனடைந்த பாடில்லை. மற்ற நூலகர்களின் வாழ்க்கையை நாசமாக்கியதுதான் மிச்சம்.)
Comments