சாந்திக்கு மறு பெயர் காந்தி!
சாந்திக்கு மறுபெயர் காந்தி!
மகாத்மா
காந்தி, இந்திய சுதந்திரப் போரட்டத்தில் மக்களைத்திரட்டி,
அகிம்சை முறையில் ‘வெள்ளையனே வெளியேறு’
என்று பேராடிக்கொண்டிருந்தார். மக்களின் எழுச்சிமிக்கப் போராட்டதை
ஆங்கிலேய ஆட்சியாளர்களால் எதிர்கொள்ள முடியவில்லை.
அப்போது, பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அன்றைய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள்
இவ்வாறு கூறுகிறார்:
“இந்த காந்திஜி,
துப்பாக்கி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டால், பீரங்கியால்
நசுக்கி இருப்பேன். பீரங்கி எடுத்து போராடி இருந்தால், விமானம்
மூலம் அழித்து இருப்பேன். ஆனால், அவரோ, ஆயுதங்களைப் புறக்கணித்து அகிம்சை, சத்தியம்
போன்றவைகளை ஆயுதங்களாகக் கொண்டு போராடியதால், இதனை வெல்ல
உலகில் வேறு ஆயுதம் எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், அவரை
வெற்றி கொள்ள இயலாமல் பணிந்து போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது”.
‘பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் சூரியன் ஒருபோதும் மறையாது (The sun
never sets on the British Empire)’ என்று இறுமாப்புடன் ஆட்சி
புரிந்துவந்த பிரிட்டிஷ் அரசின் பிரதமரே, ‘காந்தியின்
அகிம்சைப் போராட்டத்தை வெல்ல முடியவில்லை’ என்று
ஒப்புக்கொண்டதைக் கேட்டு உலகமே வியந்தது.
காந்தி, தான் கண்டுபிடித்த, கடைபிடித்த, மக்களைக் கடைபிடிக்கவைத்த, ‘அகிம்சை வழி என்னும்
சாந்தி வழிக்கு’ எவ்வளவு வலிமை இருக்கிறது என்பதை வார்த்கைகளால் சொல்ல முடியாது.
இந்தக்
கட்டுரையின் தலைப்பு ‘சாந்திக்கு மறுபெயர் காந்தி’.
‘சாந்திக்கு மறுபெயர் காந்தியா? காந்திக்கு மறுபெயர்
சாந்தியா?’ என்று கேட்டால், ‘இரண்டும்
ஒன்றே’ என்றுதான் சொல்லமுடியும்.
இன்றும்
நாம் பல நேரங்களில் சாந்தி வழி என்பதை, காந்தி வழி என்றுதான்
பேசுகிறோம், எழுதுகிறோம். அந்த அளவுக்கு சாந்தி வழி, காந்தி வழி ஆகிவிட்டது.
சாந்த
வாழ்க்கை, துயரங்கள் நிறைந்த வாழ்க்கை. சாமானியர்களால் அவ்வளவு
எளிதில் கடைபிடிக்க முடியாது.
அகிம்சை
வழியால் ஏற்பட்ட எல்லாத் துன்பங்களையும் காந்தி ஏற்றுக்கொண்டார். மேலும், அகிம்சைப் போராட்டத்தில் பிறரால் ஏற்பட்ட சில வன்முறைகளுக்கும் தானே
பொறுப்பேற்று துன்பத்தை அனுபவித்தார். அதனால்தான் நாம் காந்தியை மகாத்மா என்று
போற்றுகிறோம்.
எல்லா
மதங்களும் அன்பையும், அகிம்சையையும் போதிக்கின்றன. ஆனால், காந்தி மட்டுமே அன்பையும், அகிம்சையும் கடைபிடித்து
வாழ்ந்து காட்டினார்.
இந்த
உலகுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்னவென்று காந்தியிடம் கேட்டபோது அவர் சொன்னார், ‘என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், என் வாழ்க்கையே
உலகுக்கு நான் சொல்லும் செய்தி’ என்றார்.
காந்தி
கடைபிடித்த சாந்த வாழ்கையை ஆழ்ந்து படித்தால்தான், சாந்தி வழி எது? என்று நம்மால் உணரமுடியும்.
அந்த
மகாத்மாவின் வாழ்வில் நிகழ்ந்த சில அகிம்சைப் போராட்ட நிகழ்வுகளை மட்டும்
இக்கட்டுரையில் காண்போம்.
கல்வி:
மகாத்மா, தேசப்பிதா, அன்னல், அடிகளார்
என அனைவராலும் போற்றப்படும் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், குஜராத்தில் போர்பந்தர் எனும் ஊரில் கரம்சந்த் காந்தி, புத்திலிபாய் ஆகியோருக்கு மகனாக 1869 ஆம் ஆண்டு
அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி பிறந்தார்.
குஜராத்தில்
உள்ள ராஜ்கோட்டில் பள்ளிப் படிப்பை முடித்த மோகன்தாஸ் காந்தி,
1888 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.
காந்தியின் வாழ்க்கையையே மாற்றிய இரயில் பயணம்:
தென்னாப்ரிக்காவில்
குடியேறி வசித்துவந்த வர்த்தகர் ஒருவருக்கு ஒரு வழக்கறிஞரின் சேவை தேவைப்பட்டது.
அவர் பாரிஸ்டர் காந்தியை அழைத்தார். அதன்பெயரில் காந்தி 1893ஆம் ஆண்டு தென்னாப்ரிக்கா சென்றார்.
நேட்டாலில்
இருந்து பிரிட்டோரிவுக்கு புகை வண்டியில் பயணம் செய்தார். முதல் வகுப்புப்
பயணச்சீட்டு வாங்கி, முதல் வகுப்புப் பெட்டியில் பயணம்
செய்துகொண்டிருந்தார். இரயில் பீட்டர்மாரிஸ் பர்க் இரயில் நிலையத்தில் நின்றதும்,
வெள்ளிக்காரன் ஒருவன் முதல் வகுப்புப் பெட்டியில் ஏறினான். “முதல் வகுப்புப் பெட்டியில் கருப்பன் ஒருவன் இருக்கிறான், அவனை இறக்கிவிடுங்கள்” என்று நிலைய அதிகாரியிடம்
புகார் செய்தான் அந்த வெள்ளைக்காரன்.
நிலைய
அதிகாரி வந்து, முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து இறங்கி, சாமான் ஏற்றும் பெட்டிக்குப் போகுமாறு காந்தியிடம் கூறினார். அதற்குக்
காந்தி, தான் ஒரு பாரிஸ்டர் என்றும், தான்
முதல் வகுப்புக்கான பயணச் சீட்டு வாங்கியிருப்பதாகவும் காண்பித்தார்.
“கூலி பாரிஸ்ட்டரா? கூலிகளெல்லாம் முதல் வகுப்பில்
ஏறக்கூடாது” என்றார் நிலைய அதிகாரி.
தென்னாப்ரிக்காவில்
இந்தியர்களை கூலிகள் என்றுதான் வெள்ளையர்கள் அப்பொழுது அழைப்பது வழக்கமாக இருந்தது.
காந்தி சொன்னது எதையும் அவர்கள் ஏற்கவில்லை. ஒரு காவலன், காந்தியைப் பிடித்து இழுத்து வெளியில் தள்ளினான். அவன் காந்தியின்
உடைமைகளை எடுத்து வெளியில் வீசினான். காந்தி ஒரு வார்த்தையும் எதிர்த்துப் பேசவில்லை. அவர்
அவ்வளவு அவமானங்களையும் ஏற்றுக்கொண்டு சாந்தமாக இருந்தார்.
இரயில்
புறப்பட்டுச் சென்றது. அப்பொழுது இரவு ஒன்பது மணி. அடுத்த இரயில் அடுத்தநாள் தான்.
காந்தி இரவு முழுவதும் இரயில் நிலைய கொட்டகையில் கடுங்குளிரில்
உட்கார்ந்திருந்தார். இந்த சம்பவம்தான் காந்தியின் வாழ்க்கையையே மாற்றியது என்பது
குறிப்பிடத்தக்கது.
தென்னாப்ரிக்காவில் ஒப்பந்த தொழிலாளர் உரிமைகளுக்கான
போராட்டங்கள்:
அங்கு
இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்களை ஆங்கிலேயர்களும், ஐரோப்பியர்களும் அடிமைகளாக நடத்துவதைக் கண்டு மனம் வருந்தினார்.
வழக்கறிஞர் என்ற முறையில் பல்வேறு சட்ட உதவிகளை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குச்
செய்தார்.
தென்னாப்பிக்காவில்
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு எதிராக இருந்த பல்வேறு சட்டங்களை எதிர்த்து
மக்களைத்திரட்டி போராடினார்.
அவரது
போராட்டங்கள் அனைத்தும் அகிம்சை வழியிலான சத்தியாகிரகப் போராட்டங்களே. அதில்
வெற்றியும் கண்டார்.
தென்னாபிரிக்காவில்
காந்தியின் வேலை முடிந்து இந்தியா திரும்பலானார். அப்பொழுது தென்னாப்ரிக்க ஒப்பந்த
தொழிலாளர்கள் பாரிஸ்ட்டர் காந்தியை, வற்புறித்தி இன்னும்
சில ஆண்டுகள் தென்னாப்ரிகாவில் தங்கி வக்கீல் தொழில் செய்யுமாறு வேண்டினர்.
அவர்களின்
கோரிக்கையை ஏற்று 1914 ஆம் ஆண்டு வரை தென் ஆப்பிரிக்காவில் இருந்து
கருப்பு இன அடிமைத்தனத்தை ஒழிக்க பாடுபட்டார். அவர் இந்த காலத்தில் அனுபவித்த
கொடுமைகள், அவமானங்கள் ஏராளம். இருந்தும் அவர் தொடர்ந்து
அகிம்சை வழியில் போராடி வந்தார்.
காந்தியின் முதல் சத்தியாகிரகப் போராட்டம்:
1906
ஆம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் டிரான்ஸ்வால் மாநில அரசு ஒரு சட்டத்தை
இயற்றியது. அதன்படி, எட்டு வயதுக்கு உட்பட்ட இந்தியர்
அனைவரும் பத்து விரல் கைரேகை வத்து கட்டாயமாக தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்
(ஆதார் அட்டையைப்போல). அதன்பிறகு அரசாங்கம் வழங்கும்
அடையாளச் சீட்டுகளை போகும் இடமெல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும். தவறினால்,
அபராதம், சிறைத்தண்டனை, நாடுகடத்தல்
போன்ற கொடிய தண்டனைகள் வழங்கப்படும் என்பதாகும்.
இச்சட்டம்
இந்திய மக்களை அவமானப்படுத்தும் சட்டம், இதை எதிர்த்தாக
வேண்டும் என்று காந்தி போராட்டத்தை அறிவித்தார். அதன்படி, நகரின்
மையப்பகுதியில் மக்களை ஒன்று திரட்டி, ஒரு கொப்பரையில்
எண்ணெய் விட்டு எரிய வைத்தார். இந்தச் சட்டத்துக்கு எதிராக எழுதி எடுத்து வந்த
வாசகங்களைப் படித்தார். பிறகு, அந்த அடையாள அட்டையை தீயில்
போட்டு எரித்தார். இதனைக் கண்ட காவலர்கள் காந்தியைக் கடுமையாகத் தாக்கினார்கள்.
காந்தி சரிந்து வீழ்ந்தார். காந்தி விழுவதைக் கண்டு கஸ்தூரிபா காந்தி துடித்தார்.
கூடியிருந்த
மக்களும் தங்கள் அடையாள அட்டைகளை தீயில் இட்டு எரித்தனர். போராட்டக்காரார்களை
காவலர்கள் கடுமையாக தாக்கினர். காந்தியின் வேண்டுகோளின்படி, எந்த ஒரு போராட்டக்காரரும் காவலர்களை எதிர்க்கவில்லை. இதுதான் காந்தி செய்த முதல் சத்தியாகிரகப்
போராட்டம். இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவியது. இந்தப் போராட்டத்தை லண்டன்
பத்திரிகைகள் பெரிய, பெரிய கட்டுரைகளாக எழுதின. அகிம்சைப் போராட்டம்
வெற்றிபெற்றது.
பகைவரிடம் அன்பு காட்டுதல்:
பகைவரை
நேசித்தல், அன்பு காட்டுதல், என்பவற்றைச்
செயலில் காட்டிய மகாத்மா, திருவள்ளுவர் உரைத்த,
“இன்னா செய்தாரை ஒருத்தல் - அவர்நாண
நன்னயம்
செய்து விடல்”
- என்ற
திருக்குறளுக்கு மிக எடுத்துக்காட்டாக விளங்கினார்.
தென்னாப்பிரிக்காவில்
ஒருநாள், ஆப்கானியர் சிலர் உண்மையை உணராது, காந்தியடிகளை அளவுக்கு அதிகமாக அடித்து உதைத்தனர். அதைக்கண்ட காந்தியின்
ஜெர்மானிய நண்பர் தடுத்து நிறுத்தி, அவர்களைச் சுடுவதற்கு
முயன்றார்.
அச்சமயம்
காந்தியடிகள் ரத்தம் சொட்டும் வாயுடன், “நண்பரே அவர்களைச்
சுட வேண்டாம், அவர்கள் நம் சகோதரர்கள்” என்று தடுத்து நிறுத்தினார். சிறிது நேரம் மயங்கி இருந்த காந்தி மீண்டும்
உணர்வு பெற்று கண் விழித்து எழுந்தபோது, “என்னைக் கடுமையாகத்
தாக்கியவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய வேண்டாம்” என்று
அங்கிருந்த பலரையும் வேண்டினார்.
மன்னிப்புக் கேட்ட வெள்ளையன்:
தென்
ஆப்பிரிக்காவில் காந்தியடிகள் ஒரு நாள் மாலை ஒரு சந்து வழியே சென்று
கொண்டிருந்தார். அந்தப் பாதையில் வெள்ளையர் மாளிகை ஒன்று இருந்தது. அந்த
மாளிகையைக் காவல் காத்துக் கொண்டிருந்த வெள்ளையர், கருப்பு மனிதரான காந்தி இந்த வழியாக வருவதை பார்த்து, “இந்த வழியே நீ வரக்கூடாது, எப்படி வரலாம்?” என்று கேட்டு கீழே தள்ளி அடித்தார். இந்தச் செயல்களைப் பார்த்து
கொண்டிருந்த இன்னொரு வெள்ளையர் காந்தியைப் பார்த்து, “நீங்கள்
ஒரு வழக்கறிஞர். உங்களை அடித்த வெள்ளையன் மீது வழக்கு தொடருங்கள். நான் நீதிமன்றம்
வந்து சாட்சி சொல்கிறேன்” என்றார்.
அதைக்
கேட்ட காந்தி, “அவன் மீது என்ன குற்றம் உள்ளது. இங்குள்ள வெள்ளையர்
அனைவரும் கருப்பு மனிதர்களை இப்படித்தான் செய்கிறார்கள். அவன் மட்டும் அதற்கு
விதிவிலக்கா?” என்றார்.
அதைக்
கேட்ட அந்தக் காவல்கார வெள்ளையன் காந்தியின் பெருந்தன்மையைப் பார்த்து மனம்
நெகிழ்ந்து, ‘நம்மை எதிர்ச்சொல் எதுவும் பேசாமல், நம் மீது குற்றம் இல்லை என்று சொல்லும் மனிதரைத் தாக்கி விட்டோமே என
வருத்தப்பட்டு காந்தியிடம் நேராக வந்து, “ஐயா என்னை
மன்னித்து விடுங்கள்” என்று மன்னிப்புக் கேட்டான்.
காந்தியின் அகிம்சை வழி:
அகிம்சையின்
அவதாரமாக விளங்கியவர் காந்தி. பகைவர்களிடம் அன்பு காட்டும் பண்பு அவரிடம்
இருந்தது.
அகிம்சை
பற்றி பலருக்கு போதித்து, அதன் வழியில் நடந்து, இந்தியாவிற்கு
சுதந்திரம் வாங்கி தந்த பெருமை நமது காந்தியடிகளை சாரும்.
அகிம்சை
பற்றி கூறும் அவர் இவ்வாறு கூறுகிறார், “அகிம்சை கோழையின் ஆயுதம் அன்று. அது
வீரனின் ஆயுதம். அகிம்சையில் உறுதி உடையவன் ஆண்டவனிடத்தில் உறுதி உடையவன். பகைவன்
என்னை தாக்குகிறான், அப்போது அவனைத் தாக்குவது என்பது இம்சை
ஆகும். பகைவன் என்னைத் தாக்கும் பொழுது அவனை நான் நேசித்தல் வேண்டும். இதுதான்
அகிம்சை. அகிம்சை நம்மை கோழைகளாக ஆக்கவில்லை. அகிம்சை கோழைகள் கடைபிடிக்கும்
நெறிமுறை அன்று. அது மரணத்துக்கு அஞ்சாதவன் கடைபிடிக்கும் தகுதி வாய்ந்தது.
அகிம்சையில் எனக்கு அசைக்க முடியாத உறுதி உண்டு. நாட்டின் தேவைகளை அகிம்சையில்
பெறலாம். நிறைவேற்றலாம். இந்தியா அகிம்சையில் தன்னை காக்கலாம்”.
காந்தியின் சத்யாகிரகம்:
சத்யாகிரகம்
சத்தியமும் அகிம்சையும் கொண்டது. சத்யாகிரகம் ஒரு நாணயத்தின் ஒருபக்கம் முத்திரை
அன்பு. அடுத்த பக்க முத்திரை உண்மை என்பது காந்தியின்
தத்துவம்.
மூர்க்கச்
சக்தியை மூர்க்கச் சக்தியால் எதிர்ப்பது வலிமையுடையது ஆகாது. மூர்க்கச் சக்தியை ஆன்ம சக்தியால் எதிர்ப்பதே வலிமை. பகைமை, பகைமையையே வளர்க்கும்.
அகிம்சை வழியில் ஒத்துழையாமை இயக்கம்:
காந்தி
எடுத்த அகிம்சை என்னும் புதிய ஆயுதம், கொஞ்சம் கொஞ்சமாய்
பலரின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தது. நம்மை அடக்கி ஆள
வந்தவரிடம் கைகட்டி, வாய்ப் பொத்தி சேவகம் செய்வதால் தானே பல
கோடி மக்களை ஒரு சிறிய வெள்ளைக்காரப் படை ஆட்சி செய்ய முடிகிறது. இந்த அரசாங்கத்துடன் ஒத்துழைக்கப் போவது இல்லை என்ற முடிவை இந்த தேச
மக்கள் அனைவரும் எடுத்து விட்டால், நம்மை ஆட்சி செய்வது
எப்படி முடியும். எனவே, ஒத்துழையாமை
இயக்கம் ஆரம்பித்தார். ஒரு சிறிய கிராமத்தில் ஆரம்பித்து,
அது மாவட்டம் முழுவதும் பரவி, இன்னும் நாடு
முழுவதும் பரவ தருணம் பார்த்து கொண்டு இருந்தது.
அதுவரை
கண்டிராத வகையில் நாட்டு மக்களின் ஒன்றுபட்ட பலம் தெரிய ஆரம்பித்தது. ஆங்காங்கே மக்கள் கூடி காந்தி காட்டிய வழியில் ஆங்கிலேயே அரசாங்கத்துடன்
ஒத்துழைக்கப் போவது இல்லை என்று சபதம் ஏற்றார்கள். போலீஸின்
தடியடிக்கும், கைதுக்கும் பயப்படாமல் நாடு முழுவதும்
ஆங்காங்கே தேசபக்தி ஊர்வலங்கள் நடைபெற்றன. தேசத்தின் முன்னணித் தலைவர்கள் எல்லாம்
காந்தியத்தின் சக்தியைப் பார்த்து மெய்சிலிர்த்து நின்றார்கள். சுதந்திர ஜுரம் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது.
சௌரி
சௌரா என்னும் இடத்தில் கொஞ்சம் ஆவேசம் கூடிப் போனது. தடியடியில் ஈடுபட்ட போலீஸ்காரர்களை சுதேசிகள் எதிர்த்து நின்றனர். நடந்த களேபரத்தில் சில போலீஸ்காரர்கள் காவல் நிலையத்திற்கு உள்ளேயே
உயிருடன் கொளுத்தப்பட்டனர்.
உடனே, காந்தியடிகள் இந்த விபத்துக்குத் தானே பொறுப்பேற்றுக் கொண்டு, அப்போதுதான் சூடு பிடிக்க ஆரம்பித்த ஒத்துழையாமை இயக்கத்தை வாபஸ் வாங்கிக்
கொண்டார்.
காந்தியுடன்
இருந்த தலைவர்கள் எல்லாம் கூட இது தேவையில்லை என்று நினைத்தார்கள். நாடு முழுவதும் கொந்தளித்துப் போய் நடக்கிற ஒரு போராட்டம் பெரும்பாலும்
காந்தி சொன்ன சார்ந்த மார்க்கத்திலேயே நடந்தாலும் "நாட்டின்
ஒரு மூலையில், ஒரே ஒரு வன்முறைச் சம்பவம் நடந்தது என்பதற்காக
மொத்தப் போராட்டத்தையும் வாபஸ் பெறுவதா? எங்கேயோ யாரோ ஒரு
சிலர் வன்முறையில் ஈடுபட்டால் அதற்குத் தலைவர் எப்படி பொறுப்பேற்க முடியும்?
சுதந்திரத்துக்காக இன்று இந்தியா முழுவதும் எழுந்துள்ள மக்கள்
கிளர்ச்சியை வாபஸ் பெறுவதா?' என்றனர்.
இதற்கு
பதிலளித்த காந்தி, “ஏதோ ஒரு மூலையில் நடந்த வன்முறைக்கும் நான்தான்
காரணம். நான் இன்னும் அகிம்சையை மக்களுக்கு சரியாக போதிக்கவில்லை, என்மீது தான் தவறு உள்ளது” என்றார்.
இதுதான்
காந்தி வழி - சாந்தி வழி.
நாள்தோறும் கீழ்வரும் உறுதிமொழியைப் பற்றி நடப்போம் என்றார்
காந்தி:
இந்த உலகில் எவருக்கும் நான் அஞ்சேன்.
ஆண்டவனுக்குநான் அஞ்சு நடப்பேன்.
எவரிடத்தும் பகைமை கொள்ளேன்.
எவரது அநியாயத்துக்கும் இணங்கேன்.
ஆனால், அசத்தியத்தை சத்தியத்தால் வெல்வேன்.
அசத்தியத்தை போராட எல்லா
துன்பங்களையும் ஏற்பேன்.
காந்தி குறிப்பிடும் ஏழு பாவங்கள்:
உழைக்காமல் பெறுகின்ற செல்வம்.
ஒழுக்கம் இல்லாத கல்வி.
நேர்மை இல்லாத வியாபாரம்.
தியாக உணர்வு இல்லாத இறைவழிபாடு.
மனித உணர்வற்ற அறிவியல் வளர்ச்சி.
மனசாட்சி இன்றி அனுபவிக்கும் இன்பம்.
கொள்கை எல்லாத அரசியல்.
முடிவுரை:
1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம்
நாள் கோட்சே என்ற கொடியவன் குண்டுக்கு இரையானார் காந்திமகான். உயிர்
பிரியும்போதுகூட, "என்னைச் சுட்டவனை ஒன்றும்
செய்யாதீர்"? என்றார் அகிம்சாவாதி.
காந்தி
இறந்த பிறகு, 14-2-1948 குடியரசு இதழில் பெரியார் இப்படி
எழுதுகிறார்: "இந்தியாவுக்கு ‘ஹிந்துஸ்தான்’ என்கிற பெயருக்குப் பதிலாக ‘காந்திதேசம்’ அல்லது ‘காந்திஸ்தான்’ என்று
பெயரிடலாம். இந்துமதம் என்பதற்குப் பதிலாக ‘காந்திமதம்’
அல்லது காந்தியிசம்’ என்பதாக மாற்றப்படலாம்! கிறிஸ்து
ஆண்டு என்பதற்குப் பதிலாக ‘காந்தி ஆண்டு’ என்று துவக்கலாம். இப்படிப்பட்ட காரியங்கள் செய்வதனால்தான் புத்தர்,
கிறிஸ்து, முகமது முதலிய பெரியார்களுக்கு
காந்தியார் ஒப்பானவராகவும், இன்றைய நிலைமைக்குத் தோன்றிய ஓர்
சீர்திருத்த மகானாகவும் உலகமே கருதும்படியான நிலை ஏற்படும். உலக மக்களால் நாம்
நன்கு மதிக்கப்படுவோம்". காந்தியின் கொள்கைகள் சிலவற்றில் மாற்று கருத்து
கொண்டிருந்த பெரியாரே இப்படி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“மிகவும் நல்லவராக இருப்பதும் ஆபத்துதான்” என்று
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஜார்ஜ் பெர்னாட்ஷா தனது இரங்கல் செய்தியில்
குறிப்பிடுகிறார்.
அறிவியல்
மேதை அல்பர்ட் ஐன்ஸ்டீன் விடுத்த இரங்கல் செய்தியில், “இப்படிப்பட்ட மாமனிதர் இந்த நிலவுலகில் உயிரோடும், உதிரத்தோடும்
உலவினார் என்பதை வருங்காலச் சந்ததியினர் நம்பவே மறுப்பர்” என்றார்.
காந்தியின் சத்திய சோதனையை படிக்கும்போது நமக்கும் அப்படித்தான் எண்ணத்
தோன்றுகிறது.
இன்று
நம் நாட்டில் வன்முறையும், வெறுப்பு அரசியலும் பரவி வருகிறது. உலகம் போற்றும்
காந்தியின் அகிம்சைக் கொள்கை நம் நாட்டில் காணாமல் போய்விடுமோ என்கின்ற அச்சம்
ஏற்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது.
இன்றையச்
சமூகச் சிக்கல்கள் பலவற்றிற்கும் காரணம், நாம் நம் மக்களுக்கு காந்தியின் அகிம்சைக்
கொள்கையை முறையாக கற்பிக்கத் தவறியதே.
காந்தி
பிறந்த 150ஆம் ஆண்டு விழா கொண்டாடும் இவ்வேளையில், காந்தியின் அகிம்சைக் கொள்கைகளை மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் கொண்டு
செல்லும் பணியை இன்றே மேற்கொள்வோம்.
வாழ்க காந்தி!
ஓங்குக அவர் புகழ்!
வெல்க அவர் தத்துவங்கள்!

Comments