கேள்விக்குறியாகுமா நூலகங்களின் எதிர்காலம்?
கி.பி.4 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்த பௌத்த மடங்களில்
நூலகங்கள் இருந்ததாகச் சீன யாத்திரிகர் பாகியான் கூறியுள்ளார்.
கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் பாட்னா என்கின்ற பாடலிபுத்திரத்தில்
நாளந்தா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. அந்தப் பல்கலைக்கழகத்தில்
ஒரு சிறந்த நூலகம் உருவாக்கப்பட்டது.
மேலை நாட்டவர் பலரும் இந்நூலகத்திற்கு வந்து படித்துள்ளனர்.
சீனப் பயணி யுவான் சுவாங் நாளந்தா நூலகத்திற்கு வந்து படித்து, வியந்து பாராட்டிச் சென்றார் என்பது வரலாற்றுச்
செய்தி.
தென்னிந்தியாவில், குறிப்பாகத்
தமிழ் நாட்டில் சிறந்த நூலகங்கள் பல இருந்தன. அந்நூலகங்களில்
தஞ்சை சரஸ்வதி மகால் நூலகமும் ஒன்றாகும்.
சரஸ்வதி மகால் நூலகம் தஞ்சை சரபோஜி மன்னரால் 1820 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும்.
இந்நூலகத்தில் இந்திய மொழிகள் பலவற்றிலும் சிறந்து விளங்கிய நூல்கள் ஏராளமாக
இருந்தன.
அச்சுப் படிகளும், கையெழுத்துப் படிகளும், ஓலைச் சுவடிகளும் ஏராளமாக இருந்தன. பல மேலை
நாட்டு மொழி நூல்களும் இந்நூலகத்தில் இருந்தன. இந்நூலகத்தில் தற்பொழுது சுமார்
44 ஆயிரம் ஓலைச்சுவடிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் ஆளுநராக இருந்த கன்னிமரா பிரபு அவர்கள்
1890 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் நாள் கன்னிமரா நூலகத்திற்கு
அடிக்கல் நாட்டிப் பேசும்போது “இந்தியாவில் பலர் படிக்க முன் வருகிறார்கள். ஆனால், தொடர்ந்து படித்து முதுகலைப் பட்டம் பெற
முடியவில்லை. காரணம், அவர்கள் படிப்புக்கு உதவும் வகையில் நூல்கள்
கிடைக்கவில்லை. நூல்களைக் கொடுத்து உதவ நூலகங்கள் இல்லை. இந்தக் குறையை
நீக்க நினைத்தோம். விளைவு - இந்த அடிக்கல்நாட்டு
விழா!”
என்று கூறினார்.
இலட்சக்கணக்கான நூல்களையும், சுவடிகளையும் கொண்ட இந்த நூலகம் அறிவு தேடுபவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் புகலிடமாகவும், அறிவுச் சுரங்கமாகவும் விளங்குகிறது.
இராஜா ராம்மோகன் ராய் பிறந்த 200வது ஆண்டு விழா கொண்டாட்டக்குழு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி
தலைமையில் 1972 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அக்குழு, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள
வாசகர்களுக்கு நூல்களைக் கொண்டுசென்று, படிக்கும் பழக்கத்தை வளர்க்கும்வண்ணம் நூலகங்களுக்கு உதவியளிக்கவும், ஊக்கமளிக்கவும் இராஜா ராம்மோகன்ராய் நூலக அறக்கட்டளையை
உருவாக்கியது.
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பொது நூலக வளர்ச்சிக்குப் பல பயனுள்ள
திட்டங்களை இவ்வறக்கட்டளை செயல்படுத்தி வருகிறது.
இன்று நாடு முழுவதும் நூலகத்துறை ஓரளவு வளர்ச்சி அடைந்துள்ளதற்கு
முக்கிய காரணம் இராஜா ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளையின் சிறப்புமிக்கச்
சேவையே ஆகும்.
நூலகத்துக்கு சென்று புத்தகங்களையும் பத்திரிகைகளையும் படிப்பது அலாதியானது. அதை அனுபவிக்க மாலை நேரங்களிலும்
விடுமுறை நாட்களில் நூலகங்களுக்கு வாசகர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வந்தனர்.
மாணவர்கள் விடுமுறை நாட்களில் பாடப்புத்தகத்துக்கு அப்பாற்பட்ட புத்தகங்களை
எடுத்துப் பார்க்கவும், படிக்கவும் நூலகங்களுக்குச் சென்று வந்த
காலம் உண்டு.
ஆனால், இன்றைய
நூலகங்கனின் பயன்பாடு எப்படி இருக்கிறது?
பத்திரிகைகள் படிக்க, நூல் இரவலாக பெற, குறிப்புகள்
எடுக்க என்று நூலகத்துக்கு வரும் வாசகர்கள் பலதரப்பட்டவர்கள். நூலகத்திற்கு வரும் அனைத்துத்
தரப்பு வாசகர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் குறைந்து வருகிறது.
இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. புதியதாக வெளியாகும் நூல்கள்
நூலகத்துக்கு வர சில ஆண்டுகள் ஆவதால், தீவிர வாசிப்பாளர்கள் சொந்தமாக புத்தகங்கள் வாங்கிப் படிக்கின்றனர். இதற்குப் புத்தகக் கண்காட்சிகளில்
விற்பனையாகும் புத்தகங்களின் எண்ணிக்கையே சாட்சி. புத்தகங்களை
விலைகொடுத்த வாங்கிப் படிக்க முடியாதவர்கள், குறைந்த விலையில் கிடைக்கும் மின்நூல்களுக்குச் சென்றுவிட்டனர்.
கைப்பேசியும்
தொலைக்காட்சியும் மக்களிடம் வாசிப்புப் பழக்கத்தைக் குறைந்து விட்டது.
பெரும்பாலான
மாணவர்கள் ஆங்கில வழியில் படிப்பதால், தமிழ் புத்தகங்களை
சரளமாகப் படிக்க முடிவதில்லை. அதனால், சிறுவர் பத்திரிகைகளை
நடத்தி வந்த பெரிய நிறுவனங்கள் அந்தப் பத்திரிகைகளைத் தொடர்ந்து நடத்த முடியாமல் நிறுத்தி
விட்டன.
மாணவர்களிடையே பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட வாசிப்புப் பழக்கம் இல்லாததால், சொந்தமாக எதையும் எழுத முடிவதில்லை. தாய்மொழியிலேயே எழுத முடியாமல்
சிரமப்படுகின்றனர். இது மிகவும் ஆபத்தானது. தாய்மொழியைப் படிக்காமல்
பிற மொழிகளைப் படிப்பதால் எந்த பயனும் இல்லை.
வாசிப்பு அறிவை விசாலமாக்குவதோடு, மொழி ஆளுமையை மேம்படுத்துகிறது. பிற மொழியில் படித்தாலும், எழுதினாலும் தாய்மொழியில்தான் சிந்திக்க
முடியும். ஆகவே, மாணவர்கள் தாய்மொழியில் புத்தகங்களை வாசிக்கப்
பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
குழந்தைகள் நூலகத்திற்குச் சென்று நூல்கள் படிப்பதற்குப் பெற்றோர்கள்
பயிற்சி அளிக்க வேண்டும்.
போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் பாடநூல்கள் மட்டும் படிப்பது போதுமானதாக
இருக்காது. நூலகத்திற்குச் சென்று பல்வேறு நூல்கள்
படிப்பதன்மூலம் பரந்த அறிவை மாணவர்கள் பெற முடியும்.
ஒரு நாணயத்திற்கு எப்படி இரண்டு பக்கங்கள் உள்ளனவோ, அதைப் போன்றதுதான், அறிவை வளர்க்கும் கல்விக்கு வகுப்பறையும், நூலகமும்.
வகுப்பறைக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அந்த அளவிற்கு நூலகத்துக்கும் முக்கியத்துவம்
கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் மாணவர்கள் அறிஞர்களாக ஆக முடியும்.
தொலைக்காட்சிகளில்
மூழ்கிக்கிடப்பதால் எந்தப் பயனுமில்லை என்பதைப் பெண்கள் உணர்ந்து நல்ல நூல்களைப் படிக்க
முன்வர வேண்டும்.
அறிவார்ந்த
சமுதாயத்தால் மட்டுமே வலிமையான இந்தியாவை உருவாக்க முடியும் என்பதால்தான், மத்திய, மாநில
அரசுகள் நூலகத்துறைக்கு அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
ஆனால், அதை மாணவர்களும் வாசகர்களும் பொது மக்களும் பயன்படுத்திக்கொள்வதில்லை.
"வாசகர்கள் வரமாட்டார்களா?" என்று நூலகர்களும், "தன்னை
எவராவது எடுத்துப் படிக்க மாட்டார்களா?" என்று
புத்தகங்களும் ஏங்கும் நிலை இன்று உருவாகியுள்ளது.
இந்த நிலை நீடித்தால் நூலகங்களின்
எதிர்காலம் கேள்விக்குறியாகலாம்.
( நவம்பர் 14 முதல் 20 வரை
நூலக வார விழா
)

Comments