‘தொடர்பு எல்லைக்கு அப்பால்’ - சிறுகதை

நூலகர். சி. சரவணன்

சிறுகதை

தொடர்பு எல்லைக்கு அப்பால்
நூலகர். சி. சரவணன்

அலுவலக கண்காணிப்பாளர் ஒவ்வொருவராக அழைத்து போனஸ் தொகை வழங்கிக் கொண்டிருந்தார்.
செல்வியும் கண்காணிப்பாளரிடம் சென்று கையொப்பமிட்டு மூவாயிரத்தைப் பெற்றுக் கொண்டாள்.  இரண்டாயிரம் ரூபாய் நோட்டு ஒன்று, ஐந்நூறு ரூபாய் நோட்டு இரண்டு. அதை எண்ணிப் பார்த்தாள், ஒரு முறைக்குப் பல முறை. 
“ஏம்மா, மூணு நோட்டுதானே இருக்கு. அதை இத்தனை முறை எண்ணனுமா?” என்றார் கண்காணிப்பாளர்.
சிரித்துக்கொண்டே செல்வி தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தாள்.  அவள் எதற்காகச் சிரித்தாள் என்பது அவளுக்கு மட்டும்தான் தெரியும்.  அவள் இளநிலை உதவியாளராக அந்த அலுவலகத்தில் பணியில் சேர்ந்து மூன்று ஆண்டுகளுக்கும்மேல் ஆகிறது.  அவளுடைய ஊதியம் அனைத்தும் அவள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதுதான் வழக்கம்.
வங்கிக் கணக்கைத் தொடங்கி, ஏ.டி.எம். அட்டையை கணவரிடம் கொடுத்ததோடு அவள் வேலை முடிந்துவிட்டது.  அவள் கணக்கில் எவ்வளவு தொகை வரவு வைக்கப்படுகிறது என்பதை அவரிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்வாள்.  
அலுவலகத்தில் இதுவரை எந்தத் தொகையையும் அவள் கையில் ரொக்கமாகப் பெற்றதில்லை.  இணையதளப் பிரச்சினையால் இன்று பொங்கல் போனஸ் ரொக்கமாக வழங்கப்பட்டது. இதுதான் அவள் கையில் வாங்கும் முதல் பணம்.  அந்த மகிழ்ச்சியில்தான் அந்த மூன்று தாள்களைப் பல முறை எண்ணிப் பார்த்தாள்.
“செல்வி, எப்ப ஊருக்கு கிலம்பர?”  கவிதா கேட்டாள்.
“நைட் 9 மணி டிரைனுக்கு”.
இருவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள்.
அலுவலக நேரம் முடிந்ததும் அவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு அருகில் உள்ள பிரபலமான துணிக் கடைக்குச் சென்றனர்.  
கவிதா தன் குழந்தைகளுக்குத் தேவையான துணிகளை எடுத்தாள்.
“செல்வி, நீயும் உங்க பையனுக்கு டிரஸ் எடுத்துக்கோ”.
“அவரைக் கேட்காமல் எதுவும் செய்வதில்லை”.
“சரி, அவருக்கு போன் போட்டு கேட்டுட்டு எடு”.
தயங்கினாள் செல்வி.
அவள் தயக்கத்திற்குக் காரணம் உண்டு. கணவரிடமிருந்து அனுமதி கிடைக்காதென்று  அவளுக்குத்தான் தெரியுமே.
“போனைக் கொடு, நானே போடறேன்” என்று வாங்கி, போன் போட்டாள் கவிதா.
‘தொடர்பு எல்லைக்கு அப்பால்’ என்று சொல்லப்பட்டது.
மூன்று முறை முயற்சி செய்தும் அப்படியே பதில் வந்தது.
“சரி போனஸ் பணம் மூவாயிரம் இருக்கே.  அதல பையனுக்கு டிரஸ் எடுத்துக்கோ. அவருக்கு ஏதோவொன்னு சொல்லி சமாளிக்கலாம் என்றாள் கவிதா.
“வேண்டாம், போகலாம்” செல்வி.
“நீ எடுக்கலனா, நானும் இதை வெச்சிடுவேன்”.
கவிதா வற்புறுத்தியதால் மறுக்க முடியவில்லை.  செல்வி தன் மகனுக்கு, தேடித்தேடி அழகான துணி ஒன்றினை எடுத்தாள். அதன் விலை ரூ.900.  போனஸ் பணத்தில் இரண்டு ஐந்நூறு ரூபாய் நோட்டுகள்க் கொடுத்து மீதி ரூ.100ஐ பெற்றுக்கொண்டாள்.
இருவரும் பேசிக்கொண்டே கடையிலிருந்து விடுதிக்குச் சென்றனர்.
விடுதியினுள் நுழையும்பொழுது செல்வியின் கைபேசி ஒலி எழுப்பியது.
“கவிதா, வீட்டுக்காரர் போன். நீ ரூமுக்கு போ. நான் பேசிட்டு வறேன்”.
“சொல்லுங்க மாமா”.
“எப்ப வர?”
“9 மணி டிரெயின்ல வரேன். காலை 5 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துடுங்க”.
“சரி வைச்சிடட்டுமா?” 
“மாமா........ ” என்று இழுத்தாள்.  
அவனைக் கேட்காமல் குழந்தைக்குத் துணி எடுத்ததைச் சொல்ல முற்பட்டாள். பயத்தில் நிறுத்தினாள்.
“என்ன, ஏதோ சொல்ல வந்த.....?”
“அது வந்து....”
“சொல்லு”
“கூட வேலை செய்யறகவிதா, அவங்க குழந்தைகளுக்கு டிரஸ் எடுத்தாங்க. என்னையும் நம்ம பையனுக்கு டிரஸ் எடுத்துக்கச் சொன்னாங்க. உங்களுக்கு போன் போட்டேன். உங்க போன் வேலை செய்யல. நான் வேண்டாம்னு சொன்னாலும் அவங்க விடவில்லை. வற்புறுத்தி ஒரு டிரஸ் எடுக்க வெச்சிட்டாங்க”.
“டிரஸ் எடுத்கப் பணம் ஏது?”
“பொங்கல் போனஸ் பணத்தை, அக்கவுண்ட்ல போடம கையில கொடுத்துட்டாங்க. அதலதான் பையனுக்கு டிரஸ் எடுத்தேன்”.
“கடைக்குப் போய் துணி எடுக்கற அளவுக்கு ஆயிட்டயா?”
“இல்ல..... மாமா”.
“என்ன, நொல்ல மாமா,  துணிய கொடுத்துட்டு பணத்தை வாங்கினு வா!” என்று சொல்லிவிட்டு போனை துண்டித்து விட்டான்.
என்ன நடக்கும் என்று செல்வி அச்சப்பட்டாளோ அது நடந்துவிட்டது.  இவள் பேச்சு அவனிடம் எடுபடாது. இருந்தாலும், அவனிடம் கெஞ்சிக் கேட்டாவது தான் ஆசையாக எடுத்த துணியைத் தன் மகனுக்குப் போட்டு அழகு பார்க்க வேண்டும் என்னும் எண்ணத்தில் மீண்டும் அவனுக்கு போன் போட்டாள். மணி ஒலித்து நின்றது. அவன் எடுக்கவில்லை.  மீண்டும் போன்போட முயன்றாள். போன் போட்டாள் திட்டு விழும் என்று அந்த முயற்சியைக் கைவிட்டாள்.
காலம் கடத்துவதால் எந்த பயனும் இல்லை என்று உணர்ந்த செல்வி, வேதனையுடன் கடைக்குச் சென்றாள்.  தான் எடுத்துப்போன துணி பிடிக்கவில்லை என்றும், அதற்குரிய பணத்தை திருப்பித் தருமாறும் கேட்டாள்.
“இந்த டிரஸ் பிடிக்கலனா இதே விலைக்கு வேற டிரஸ்  எடுத்துக்கோங்க. ஆனா, பணம் திருப்பித்தர முடியாது.  இதுதான் இந்த கடையோட வழக்கம்” என்றார் கடை மேலாளர்.
எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் பயனில்லை.  மிகுந்த வருத்தத்தோடு கடையை விட்டு வெளியே வந்தாள் செல்வி.
இந்தத் துணியை வீட்டுக்கு எடுத்துச்சென்றால், இதை வைத்தே பல பிரச்சனைகளை வீட்டில் உள்ளவர்கள் கிளப்புவார்கள் என்று பயப்பட்டாள்.  அவளால் நடக்க முடியவில்லை. கடையின் வாசற்படியிலேயே உட்கார்ந்து விட்டாள். “தன் மகனுக்கு ஆசையாய் எடுத்த முதல் துணி இது. இதை அவனுக்குப் போட்டு அழகு பார்க்க முடியவில்லை.  மாதம் இருபதாயிரம் சம்பளம் வாங்கி என்ன பயன்?“ என்று வருந்தி கண் கலங்கினாள்.
அப்பொழுது அக்கடையின் எதிரில் கிழிந்த சட்டையுடன் சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.  அச்சிறுவன் அவள் மகன் வயதில் இருந்ததால் அவள் கவனம் முழுவதும் அந்தப் பையன் மீது விழுந்தது. சற்று நேரம் அவன் விளையாடுவதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.   தன் மகனுக்குத்தான் இந்த உடையை உடுத்திப் பார்க்க முடியவில்லை, இவனுக்காவது இதை உடுத்திப் பார்க்கலாமா என்று அவளுக்குத் தோன்றியது. எழுந்து அந்தப் பையனை நோக்கிச் சென்றாள்.
“உங்க வீடு எங்கே?” என்றாள்.
“அதோ அந்த மரத்தடிதான் எங்கள் வீடு. அங்குதான் ராத்திரியில படுப்போம்” என்றான்.
நடைப்பாதைவாசி குழந்தை என்று தெரிந்துக் கொண்டாள்.
“இந்த புது டிரஸ்ஸ போட்டுப் பார்க்கறயா?”
“ஓ போட்டுப் பார்க்கறேன்”.
செல்வி தன் கையிலிருந்த துணியை அவனுக்கு அணிவித்தாள்.  புத்தாடை அணிந்த அச்சிறுவன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான்.
“நான் அழகா இருக்கேனா, ஆண்ட்டி?”
“ரொம்ப அழகா இருக்கே”.
“நான் புது டிரஸ் போடறது இதுதான் முதல் தடவை” என்று மகிழ்ச்சியில் சிரித்த அச்சிறுவன் ஆடையைக் கழற்றினான்.
“ஏன் கழட்டற?”
“உங்க பையனுக்கு வாங்கியது. நல்லா இருக்கானு போட்டுப் பாத்தீங்க.  நல்லா இருக்கு. கட்டிக் கொடுக்கறேன்.  உங்க பையனுக்கு எடுத்துட்டுப் போங்க”.
செல்வி முகம் வாடியது.
“ஏன் ஆண்ட்டி ஒரு மாதிரியா இருக்கீங்க?”
“ஒன்னுமில்லை. ஆண்ட்டினு கூப்பிடாத. அம்மான்னு கூப்பிடு”.
“சரி, மம்மி”.
“எங்க பையனுக்கு இதே மாதிரி இன்னொரு துணி எடுத்து வைத்திருக்கேன். இத நீயே போட்டுக்கோ” 
“உண்மையாவா சொல்றீங்க, மம்மி”.
“உண்மையாத்தான் சொல்லறேன்டா செல்லம்” என்று அவனைத் தூக்கி அணைத்து முத்தமிட்டாள் செல்வி.  அவள் மனதில் இருந்த பாரம் அத்தனையும் இறங்கிவிட்டது.
“தேங்ஸ், மம்மி” என்றான்.
டாட்டா காண்பித்துவிட்டுப் புறப்பட்டாள் செல்வி.
சற்று தொலைவு சென்றதும் யாரோ தன்னைக் கூப்பிடுவதை உணர்ந்த செல்வி திரும்பிப் பார்த்தாள்.
“நீ செல்விதானே”.
“ஆமாம், கோமதி.  நானேதான். நீ எப்படி இருக்கே?”
“நலமா இருக்கேன், இங்கே எப்படி?”.
“சென்னையில்தான் மூணு வருஷமா øனியர் அசிஸ்டண்ட்டா வேலை செய்யறேன்”.
“அப்படியா?”
“ஆமாம். டி.என்.பி.எஸ்.ஸி. குரூப் 4 எழுதினேன். செலக்ட் ஆச்சி. சென்னையில போட்டுட்டாங்க.  இங்க ஹாஸ்ட்டல்ல தங்கி இருக்கேன். குடும்பம் எல்லாம் கிராமத்துலதான் இருக்கு. சனி, ஞாயிறு வீட்டுக்குப் போயிடுவேன்”.
“பார்த்து பத்து வருஷத்துக்கு மேலாச்சி. வா, காப்பி சாப்பிட்டுனே பேசலாம்”.
இருவரும் தேநீர் விடுதிக்குச் சென்று தேநீர் அருந்தினர்.  செல்வியும், கோமதியும் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் ஒன்றாகப் படித்தவர்கள்.  கல்லூரிப் படிப்பு முடிந்ததும் கோமதிக்குத் திருமணம் ஆகிவிட்டது. அவள் திருமணத்திற்குத் தன் தோழிகளோடு சென்று பார்த்ததோடு சரி. அதற்குப் பிறகு இப்பொழுதுதான் பார்க்கிறாள் செல்வி. 
“செல்வி! குழந்தைகள் எத்தனை?”
“ஒரே பையன். மூன்றாம் வகுப்பு படிக்கிறான். உனக்கு?”
“ஒரு பையன், ஒரு பொண்ணு. பையன் 4 ஆம் வகுப்பு. பொண்ணு 2 ஆம் வகுப்பு.  சென்னையிலயே செட்டில் ஆயிட்டோம். அவர் டிராவல்ஸ் கம்பெனி நடத்தறார். நல்ல வருமானம்தான்.  சொந்த வீடு வாங்கி இருக்கோம். ஃபேமிலி நல்லாத்தான் போயிட்டு இருக்கு”.
“கேக்கறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு”.
“சரி, உன் கல்யாணத்துக்கு ஏன் என்னை அழைக்கல?”
“நான் யாரையும் அழைக்கல”.
“ஏன் விருப்பமில்லாத கல்யாணமா?”
எதுவும் பேசாமல் மௌனமாகத் தேநீர் அருந்திக்கொண்டிருந்தாள் செல்வி.
அவள் எதைச் சொல்வாள்?  தன் குடும்பத்தைப்பற்றி எவரிடமும், எதுவும் சொல்லக்கூடாது என்பது அவளுக்கு விதிக்கப்பட்ட கட்டளை ஆயிற்றே. 
அந்த கிராமத்திலேயே அவள்தான் முதல் பட்டதாரி. பட்ட மேற்படிப்பு படித்து பெரிய வேலைக்குப் போக வேண்டும் என்பதும், அதிகம் படித்து நல்ல வேலையில் உள்ளவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதும் அவளது கனவாக இருந்தது.  ஆனால், அவளது தாயாரின் கனவோ பத்தாம் வகுப்போடு விவசாயம் செய்யும் தன் தம்பிக்குத்தான் அவளைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது.  
செல்வி தன் நிலையை தன் தாயிடம் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் எடுபடவில்லை. தன் தம்பியை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் தன்னை உயிருடன் பார்க்க முடியாது என்று மிரட்டினாள் அவளது தாய்.  செல்வியால் எதுவும் செய்ய முடியவில்லை. அவளுக்குச் சாதகமாகப் பேச ஒருவரும் இல்லை. கடைசியில் அவள் தாயின் கனவு நனவானது. செல்வியின் கனவு தகர்ந்தது. தாயின் விருப்பப்படியே திருமணம் முடிந்தது.  
புகுந்த வீடோ கூட்டுக் குடும்பம். விடியற் காலை 4 மணிக்கு எழுந்து அனைவருக்கும் சமைத்து வைத்துவிட்டு, தோட்ட வேலைக்குச் செல்ல வேண்டும்.  வேலை ஆட்களுடன் நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டும். இரவு வீட்டுக்கு வந்து சமைத்து சாப்பிட்டுவிட்டு, அடுத்த நாள் காலை உணவுக்கு ஏற்பாடு செய்து, படுக்கப் போகும்போது இரவு 11 மணிக்குமேல் ஆகும்.  எல்லா வேலைகளையும் ஒரு வேலைக்காரியைப்போல் அவள் செய்தாலும், மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தனார் ஆகியோரின் ஏச்சையும் பேச்சையும் வாங்கிக்கொள்ள வேண்டும். ஏதாவது எதிர்த்து பேசினால் அடி விழும். அப்படி ஒரு அடிமை வாழ்க்கை.
திருமணத்திற்குப் பிறகு மேற்கொண்டு படிக்க வைப்பதாக உறுதி அளித்த கணவனே மேற்படிப்பு படிக்க தடை போட்டான்.  வாழ்க்கையே வெறுத்துப் போனது செல்விக்கு.
“தன்னைப்போல் லட்சக் கணக்கான பெண்கள் கிராமங்களில் துன்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  அவர்களுள் சிலர் தாங்க முடியாமல் தங்கள் வாழ்க்கையை தாங்களே முடித்துக் கொள்கிறார்கள். பெண் விடுதலை என்பதெல்லாம் மேடைப் பேச்சிலும், ஊடகங்களிலும் மட்டுமே பார்க்க முடியும். எந்த குடும்பத்தில் பெண்களுக்கு சுதந்திரம் இருக்கிறது” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு தேநீர் அருந்தினாள்.
“செல்வி, நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லையே?”
“கிராமத்துல எந்தக் கல்யாணத்தை பொண்ணோட விருப்பத்தைக் கேட்டு நடத்துறாங்க?  ஏதோ குடும்பத்துல இருக்கிறவங்க பார்த்து சொல்றவனுக்கு விதியேன்னு தலையை நீட்டறாங்க. அதல நான் மட்டும் என்ன விதி விலக்கா?”
“ஏன் செல்வி, விரக்தியா பேசற?”
“கல்யாணம் முடிந்து பத்து வருஷத்துக்கும் மேலாச்சி.  எட்டு வயசுல ஒரு பையன் இருக்கான். கல்யாணத்தைப்பத்தி இப்ப பேசி என்ன பயன்? விடு. வேற ஏதாச்சும் பேசு”
“பையன் பெயர் என்ன?”
“முத்தமிழரசு”
“ நல்ல தமிழ்ப் பெயர். சரி, உங்க வீட்டுக்காரர் பெயர்?”
“செல்வன்”
“செல்வி - செல்வன், பெயர் பொருத்தம் நல்லாத்தான் இருக்கு” என்று சிரித்தாள்.
செல்வியால் அந்த நகைச்சுவையை ரசிக்க முடியவில்லை.  காரணம் பெயரில்தான் பொருத்தம் இருக்கிறது.  ஆனால், நிஜ வாழ்க்கையில் அப்படி எதுவும் இல்லை.  பிறகு எப்படி இதை அவளால் ரசிக்க முடியும்?
“செல்வி, குரூப் 1, குரூப் 2 தேர்வு எழுது. இதைவிடப் பெரிய வேலை ஏதாச்சும் கிடைக்கும்”
இந்த வேலைக்கு போவதையே கணவர் உள்பட குடும்பத்தில் உள்ள எவருக்கும் பிடிக்கவில்லை. மனைவி தன்னைவிட அதிகம் படித்திருக்கிறாள் என்பதாலும், அரசு வேலைக்குப் போகிறாள் என்பதாலும் அவனுக்கு ஈகோ பிரச்சனை.  வேலைக்குப் போகாதே என்று அடிக்கடி சொல்கிறான்.
நாத்தனாருக்கும், மைத்துனருக்கும் இவள் வேலைக்குப் போவதைக் கண்டு பொறாமை. இதில் வேறு உயர் பதவிக்குப் போனால் அவ்வளவுதான்.  என்ன நடக்கும் என்று கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.
“சரி எழுதறேன்.  நாளையிலிருந்து பொங்கல் விடுமுறை. இரவு 9  மணி டிரெயினைப் பிடிக்கணும். நான் புறப்படட்டுமா?”
“இரு இரு, பொங்கலுக்கு உங்க பையனுக்கு ஒரு டிரஸ் எடுத்துத் தரேன்” என்று துணிக்கடைக்கு அழைத்தாள் கோமதி.
இதைக்கேட்ட செல்வி சிரித்தாள். 
“ஏன் சிரிக்கிற?”
அவள் எதற்காக சிரித்தாள் என்பது அவளுக்குத்தான் தெரியும்.
“ஒன்னுமில்லை.  துணிக் கடைக்குப் போயிட்டு வர நேரமில்லை. நான் ரெடியாகி சென்ட்ரலுக்குப் போகணும்.  கிளம்பட்டுமா?”
“ஒரு நிமிஷம் இரு” என்று தன் பையில் இருந்து இரண்டு ஐந்நூறு ரூபாய் தாள்களை  எடுத்து செல்வியிடம் கொடுத்து “உங்க பையனுக்கு நீயே ஒரு டிரஸ் வாங்கிக் கொடு” என்றாள்.
“வேண்டாம்” என்று எவ்வளவோ சொல்லியும் கோமதி விடவில்லை.  அவள் கையைப் பிடித்து உள்ளங்கையில் வைத்து திணித்தாள். வேறு வழியில்லாமல் அதைப் பெற்றுக்கொண்டாள் கவிதா.
தன் பையில் இருந்த இரண்டாயிரம் ரூபாய் தாளோடு, இந்த இரண்டு ஐந்நூறு ரூபாய் தாள்களையும் வைத்தாள்.  மூன்றாயிரம் ரூபாய் ஆயிற்று.  
கோமதியிடம் விடைபெற்ற செல்வி,  மகிழ்ச்சியோடு விடுதியை நோக்கி வேகமாக நடந்தாள்.

கதையாசிரியர்:    
கடத்தூர். சி. சரவணன், எம்.., எம்.எல்..எஸ்
(நூலகர்கிளை நூலகம், கடத்தூர்)
1/47, இந்திரா நகர், கடத்தூர் - அஞ்சல்
தருமபுரி மாவட்டம். 635 303. 

கைபேசி: 9442265816, 7305477137
மின்னஞ்சல்saravanan.c.lib@gmail.com   saravanan.c.kadathur@gmail.com 


Comments